Thursday, April 28, 2022

ஏப்ரல் 29: பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாடுக! வைகோ MP அறிக்கை!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று சங்கநாதம் எழுப்பிய, பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள்,

கெடல் எங்கே தமிழர் நலம்? அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க.
கடல் போலும் எழுக... கடல் முழக்கம் போல் கழறிடுக.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கநாதம் முழக்கியவர்.
நல்லுயிர் செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்
கல்வியில் என்னை வெல்ல நினைப்பதும் ஏன்? ஏன்?ஏன்?
என்றெல்லாம் கேட்டு, தமிழர்களுக்கு உணர்ச்சி ஊட்டி எழுச்சி பெறச் செய்தவர்.
அந்த எழுச்சியின் விளைவுதான், தமிழகத்தில் இன்று நாம் காணும் மறுமலர்ச்சி.
தமிழ் இயக்கம் என்கின்ற நூலில், பாவேந்தர் அவர்கள் பகர்ந்த வைர வரிகளாக, இன்றைக்கும் நம் நெஞ்சில் உணர்ச்சி ஊட்டக் கூடியதாக அமைந்த சொற்கள் ஒவ்வொன்றும், தமிழுக்குப் பாவேந்தர் சூட்டிய மணி ஆரம் ஆகவும், தமிழர் எழுச்சிக்கு அவர் இட்ட வித்து ஆகவும் அமைந்து உள்ளது.
பாவேந்தர் பாரதி தாசன் அவர்களுடைய பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, எதிர்பாராத முத்தம் இப்படி எண்ணற்ற காவியங்கள், என்றென்றும் நின்று நிலவி, தமிழர்க்கு எழுச்சியையும், உணர்ச்சியையும், உள்ளக் கிளர்ச்சியையும், தந்து கொண்டே இருக்கும்.
தந்தை பெரியார் அவர்களால், சிந்தை இனிக்கும் செந்தமிழ்க் கவிஞராகப் பாவேந்தர் போற்றப்பட்டார்.
ஏ தாழ்ந்த தமிழகமே என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டம் அளிப்பு விழாவில் பேசிய பேரறிஞர் அண்ணா அவர்கள், பாவேந்தர் வரிகளாலேயே, தமிழகத்தை எழுச்சி பெறச் செய்வதற்கான கருத்துகளைத் தந்தார்.
பாவேந்தர், அனைத்து நிலைகளிலும் இந்தியை எதிர்த்தார். அந்த உணர்வோடுதான், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்.. நீ தேடி வந்த பேடி இருக்கும் நாடு இது அல்ல என்று முழங்கினார்.
பாவேந்தர் தம் வாழ்நாள் எல்லாம் தமிழுக்காகப் போராடினார். அவரது பிறந்த நாளை, தமிழர் எழுச்சி நாளாகக் கொண்டாட வேண்டும் என்று, அண்மையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்வில், ஆசிரியர் வீரமணி அவர்கள், அருமையான கோரிக்கையை, முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்பு வைத்தார்.
யாரும் கேட்காமலேயே, தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாள் ஆகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் ஆகவும் அறிவித்து, அரசு ஊழியர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து வரலாறு படைத்த முதல்வர் அவர்கள், ஆசிரியர் வீரமணி அவர்களின் கோரிக்கையை ஏற்று, பாவேந்தர் பாரதி தாசன் பிறந்த நாளைக் கொண்டாடுவதும், அந்த எழுச்சியின் அடிப்படையில், எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்... இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே என்று உறுதி பூணுவதும், காலத்தின் கட்டாயமாக உள்ளது.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.04.2022

No comments:

Post a Comment