Saturday, February 29, 2020

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க, வான்ஊர்தி அனுப்புங்கள் அயல்உறவுத்துறை அமைச்சருக்கு வைகோ கோரிக்கை!

900 இந்திய மீனவர்கள் ஈரான் நாட்டில் ஒதுங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர்களுள், 700 பேர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
ஈரான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நேரடி வான் ஊர்திகள் இல்லை என்பதால், அவர்களை மீட்கும் பணி தாமதம் அடைந்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான் ஊர்திகள் தொடர்பும் இல்லை.
கொரோனா எனப்படும் கொவைட் 19 நோய்த்தொற்று, ஈரான் நாட்டிலும் பரவி இருப்பதால், அங்கே அன்றாட உணவுப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்களுக்கும் போதுமான உணவு கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் அச்சமும், பதற்றமும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்களை உடனடியாக மீட்பதற்கு தனி வான் ஊர்தி அல்லது கப்பல் அனுப்பிட வேண்டும். சீனாவின் ஊஹான் மாநிலத்தில் சிக்கிய இந்தியர்களை, மிக விரைவாக மீட்டுக் கொண்டு வருவதற்கு, நமது அயல் உறவுத் துறை மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை. அதுபோல, ஈரானில் சிக்கி இருக்கின்ற இந்திய மீனவர்களையும் மீட்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
29.02.2020

Dear Mr Jaishankar,
Vanakkam.

I bring to your kind attention that around 900 Indian fishermen are stranded in Iran as all gulf countries have halted flights and there is no direct flight connectivity to India from Iran.
There are around 700 Tamil fishermen hailing from Kanyakumar district, Tamilnadu.
The highly contagious Corona virus Covid-19, rapidly rising infections in Iran and limited food supplies among the stranded fishermen are causing fear and anxiety among the stranded fishermen and their families, living in India.
I would request you to kindly intervene immediately and fly them back in a chartered flight or use a shipping vessel to evacuate the stranded fishermen.
The External Affairs Ministry had done a commendable role in evacuating our follow citizen from Wuhan Province in China and Yokohama (Japan) and am sure that you would do the right things to help similarly to the stranded fishermen in Iran.
With warm regards,
Yours sincerely,
Vaiko
Member of Parliament
Rajya Sabha

Friday, February 28, 2020

பொறியியல் கல்வியில், வேதியியல், கட்டாயப் பாடமாகத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை!

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதிப் பாடங்களுள் ஒன்றாக, வேதியியல் இடம் பெற்று இருக்கின்றது.

அண்மையில், இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ள சுற்று அறிக்கையில், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலை வகுப்பில் வேதியியல் படித்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; வேதியியல் மதிப்பு எண்களைக் கணக்கிட வேண்டியது இல்லை எனத் தெரிவித்து இருக்கின்றது. கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பு எண்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டால் போதும் என்றும் கூறி இருக்கின்றது. அதேபோல, பொறியியல் கல்விக்கான பாடங்களை மாணவர்களின் விருப்பத் தேர்வுக்கு விட்டுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு  உள்ளது.

இந்த அறிவிப்பு, கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மாணவர்களைக் கடுமையாகப் பாதிப்பதுடன், மேனிலைப்பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேதியியல் பயிற்றுவிக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வேலை வாய்ப்பினை இழக்கவும் வழிவகுத்து இருக்கின்றது.

பத்தாம் வகுப்புத் தேர்வில், 500 க்கு 400 க்கும் மேல் மதிப்பு எண் பெற்ற மாணவர்கள், மேனிலை முதலாம் ஆண்டில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே, ஆராய்ச்சி மேற்படிப்புகளுக்குத் தகுதி பெற்று, அதன்வழியாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு அறிய முடியும்.வேளாண்மைப்  பொறியியல், கட்டுமானம், வேதியியல் மற்றும் பல தொழில்நுட்பக் கல்விக்கு, மேனிலை வகுப்பில், வேதியியல் படித்து இருக்க வேண்டும். 

ஆனால், புதிய அறிவிப்பின்படி, மாணவர்கள், வேதியியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்து எடுப்பது கட்டாயம் அல்ல என்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது. இது, வேதியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெருந்தடையாக அமைந்து விடும். அதன்பிறகு, வேதியியல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள, வேற்று நாட்டு அறிஞர்களின் உதவியைத்தான் நாட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். 

துணித்தொழில், வண்ணப் பூச்சுகள், பிளாஸ்டிக், உரங்கள், வேளாண்மை,  தோல் பதனிடும் தொழில், சாயம் ஏற்றுதல், மருந்துகள், பெட்ரோல், மின்தகடுகள், சிமெண்ட், உணவு பதப்படுத்துதல், மண்ணியல் ஆய்வுகள், தரக் கட்டுப்பாடு ஆகிய முதன்மையான துறைகளில், வேதியியல் தொழில்நுட்ப அறிஞர்களின் பணி கட்டாயத் தேவை ஆகும்.

இன்று வேதியியல் அறிவு, அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் தேவையாக இருக்கின்றது. அறிவியல் தொடர்பான எந்தக் கல்விக்கும், தனித்திறன் கொண்ட வேதியியல் அறிஞர்கள் தேவை.

பொறியியல் பட்டதாரிகளைக் காட்டிலும், ஒரு வேதியியல் பட்டதாரி, இன்று எந்தத் துறையிலும் வேலைவாய்ப்புகளை மிக எளிதாகப் பெற முடியும். இந்நிலையில், வேதியியல் கட்டாயப் பாடம் அல்ல என்றால், திறன் குறைந்த மாணவர்கள், வேதியியல் தொடர்பு இல்லாத ஏதேனும் ஒரு பணிக்குள் தங்களை முடக்கிக் கொண்டு விடுவார்கள். 

வேதியியல் கட்டாயப் பாடம் என்பது, பொறியியல் கல்லூரிக்கான சேர்க்கைகளில் எந்தத் தடங்கலையும் ஏற்படுத்துவது இல்லை. ஆனால், வேதியியல் விருப்பப் பாடம் இல்லை என்றால், அதனால், கலைக்கல்லூரிகளும், பி.எஸ்சி வேதியியல் துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

எனவே, இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்குழு வெளியிட்டு இருக்கின்ற அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, பொறியியல் கல்விக்கான சேர்க்கைகளுக்கு, கணிதம், இயற்பியல், வேதியியலை, கட்டாயத் தேர்வுப் பாடங்களாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில்28-02-2020 தெரிவித்துள்ளார்.

Monday, February 24, 2020

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது; புதிய மருத்துவக் கல்லூரியை, கடலூரில்தான் தொடங்க வேண்டும்! வைகோ அறிக்கை!

தமிழகத்தின் பின்தங்கிய பகுதிகளுள் ஒன்றான, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், செட்டிநாட்டு அரசர் இராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் நிறுவப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இலட்சக்கணக்கான மாணவர்களைப் பயிற்றுவித்து, பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, உலக அளவில் தமிழகத்திற்கு மதிப்பைத் தேடித்தந்த கல்விக்குழுமம் ஆகும்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களை அழைத்துப் பேச வைத்துப் பெருமை சேர்த்து, மாணவர்கள் இடையே பகுத்தறிவுக் கொள்கைகள் வேர் ஊன்றச் செய்தது, திராவிட இயக்கத்தின் நாற்றங்காலாகத் திகழ்ந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான் என்றால் அது மிகை ஆகாது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகதத்தில் ஆற்றிய பல சொற்பொழிவுகள்தான், மாணவர்கள் இடையே அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது; மொழி உணர்வை விதைத்தது, மொழிப்பற்றை வளர்த்தது. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குக் களம் அமைத்ததும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தான்.
தமிழ் மொழியையும், தமிழ் இசையையும் வளர்ப்பதற்கு, அண்ணாமலை அரசரைப் போல் ஆதரவு அளித்தவர்கள் எவரும் இல்லை.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள்தான், இன்றைக்குத் தமிழக அரசியலில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக, பல்துறை விற்பன்னர்களாக மிளிர்கின்றார்கள். தமிழகம் முழுமையும் கல்லூரிகளில் பேராசிரியர்கள், முதல்வர்கள், துணைவேந்தர்கள் எனப் பொறுப்பு வகித்து, கல்வித்துறையை மேம்படுத்தி வருகின்றார்கள்.
உறவினர்கள் மற்றும் நகரத்தார் சமூகத்தவர் எல்லோரும், கல்லூரியை மதுரையில்தான் நிறுவ வேண்டும் என வலியுறுத்தியபோதிலும், அண்ணாமலை அரசர் அவர்கள், சிதம்பரத்தில் மீனாட்சி கல்லூரியை நிறுவினார். அதுவே, 1929 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக உருப்பெற்றது. அதன் விளைவாகவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் மேம்பட்டு இருக்கின்றார்கள். தமிழகத்தில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் பெருந்துணையாக இருந்தது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
பல்வேறு காரணங்களைக் கூறி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. அப்போது அங்கே 12582 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களுள், 5000 க்கும் மேற்பட்டவர்களைத் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பணி இடமாற்றம் செய்து விட்டனர்.
செட்டிநாட்டு அரசரின் பொறுப்பில் இருந்தபோது, பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட மானியம் ஆண்டுக்கு 60 கோடிதான். ஆனால், அப்போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஆண்டுக்கு 600 கோடி ரூபாய். எத்தனையோ சோதனைகளுக்கு இடையில் அந்தப் பல்கலைக்கழகத்தை நடத்தி வந்தார்கள்.
இப்போது, பல்லைக்கழக மானியக்குழு வழங்குகின்ற நிதி உதவி ஆண்டுக்கு ரூ 225கோடி. ஆயினும், வேலைவாய்ப்புகளைக் குறைத்து விட்டனர். இப்போது அங்கே 7100 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
அண்ணாமலை அரசருக்கு அடுத்து, பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகப் பொறுப்பு வகித்த இராஜா முத்தையா அவர்கள், பல்வேறு துறைகளைத் தொடங்கினார். அயல்நாடுகளில் இருந்தும் பேராசிரியர்களை வரவழைத்துப் பணியில் அமர்த்தினார். ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்ற அவரது கனவை, பின்னர் அவரது மகன் டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் இணைவேந்தராகப் பொறுப்பு வகித்த காலத்தில்,
1985 ஆம் ஆண்டு நிறைவேற்றினார்கள்.

தமிழகத்தின் மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாக ஆக்கினார்.
முதுகலைப் பட்ட வகுப்புகளையும் தொடங்கினார். இன்று,
அதிக அளவில் முதுகலை மாணவர்கள் அங்கேதான் படித்து வருகின்றனர்.
இராஜா சர் முத்தையா அவர்கள் பெயரால் இயங்கி வருகின்ற அந்த மருத்துவக் கல்லூரியையும் தமிழக அரசு எடுத்துக்கொண்டது.
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற கொள்கையைத் தமிழக அரசு வகுத்துச் செயல்பட்டு வருகின்றது.
அதன்படி, கடலூர் மாவட்டத்திலும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கப் போவதாக அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
அதற்காக, அங்கே ஏற்கனவே ஒருமுறை அடிக்கல் நாட்டப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும்,
மாவட்டத் தலைநகரங்களில்தான்,
அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி இருக்கின்றது.
ஆனால், கடலூர் மாவட்டத்தில் மட்டும்,
ஒரு வட்டத் தலைநகரான சிதம்பரத்தில் இயங்கி வருகின்ற இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப் போவதாக.
சட்டப்பேரவையில் அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி,
ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி, திருச்சியில் கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி என்ற பெயர்களில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பது போல்,

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியாகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
அதை மாற்றக் கூடாது.
மேலும், கடலூர் மாவட்டத்திற்கான புதிய மருத்துவக் கல்லூரியை, மாவட்டத் தலைநகரான கடலூரில்தான் தொடங்க வேண்டும். அதன்மூலம், கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.
அதற்கு மாறாக, செட்டிநாட்டு அரசரின் பெயரையும், புகழையும் மறைக்கின்ற முயற்சியை ஏற்றுக்கொள்ள இயலாது;
எந்தக் காரணத்தைக் கொண்டும், இராஜா முத்தையா அவர்களின் பெயரை நீக்கக்கூடாது என மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
அத்தகைய முடிவினை
அரசு மேற்கொண்டால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ அவர்கள் 24-02-2020 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sunday, February 23, 2020

பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் ரத்து: மறுமலர்ச்சி தி.மு.க. போராட்டத்திற்கு வெற்றி! வைகோ அறிக்கை!


கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petroleum, Chemicals and Petro Chemicals Investment Region - PCPIR) அமைப்பதற்கு 2017 ஜூலை 19 ஆம் தேதி தமிழக அரசு குறிப்பாணை (எண்.29) வெளியிட்டது. அதில் கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம் வட்டங்களிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களிலும் 318 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 57,500 ஏக்கர் விளைநிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, வேளாண்மைத் தொழிலே அழிந்துபோகும் என்பதால், பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்கும் குறிப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று 2017 ஜூலை 24 இல் நான் அறிக்கை வெளியிட்டேன்.

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி, 2017 ஜூலை 31 இல் கடலூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

காவிரிப் படுகை மாவட்டங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டவுடன், பிப்ரவரி 10 ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில், “வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவிப்பதற்கு உண்மையாக அக்கறை இருந்தால், 2017 ஜூலை 19 இல் பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 57,500 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட குறிப்பாணை எண்.29ஐ திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தினேன். மீண்டும் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும் சுட்டிக் காட்டி இருக்கிறேன்.

மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப்ரவரி 15 இல் நடந்தபோது, அதிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில், வேளாண் பாதுகாப்பு சிறப்பு மண்டலம் பற்றிய சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பிப்ரவரி 21 இல் வெளியிட்ட அறிக்கையிலும், பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு போட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் என்று சுட்டிக் காட்டினேன்.

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைய வெளியிட்ட குறிப்பாணையை தமிழக அரசு நேற்று இரத்து செய்திருப்பது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து குரல் எழுப்பியதற்கு கிடைத்த வெற்றி ஆகும்.

காவிரிப் படுகை மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்க வேண்டுமானால் 2018 அக்டோபர் 1ஆம் தேதி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் ஹைட்ரோ கார்பன் எடுக்க போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 23-02-2020 தெரிவித்துள்ளார்.

கிரிராஜ்சிங்கை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் வைகோ கோரிக்கை!

நடுவண் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மக்களுக்கு இடையே வெறுப்பை விதைத்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கின்ற வகையில் தொடர்ந்து பேசி வருகின்றார்.
இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகள்; இஸ்லாமியர்களுக்கு வாழ்க்கை நெறிகளைப் போதிப்பதற்காக, 1867 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, இன்றுவரையிலும் சிறப்பாகச் செயல்பட்டு புகழ்பெற்ற தியோபாண்ட் கல்வி நிறுவனம், ஹபீஸ் சயீத் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கி வருகின்றது; தில்லி சகீன்பாக் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் என்றெல்லாம் பேசியதற்காக, ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்,
இவரைப் போன்றவர்களின் வெறிப்பேச்சுகளால்தான் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றோம் என அமித் ஷா கூறி இருக்கின்றார்.
கிரிராஜ் சிங், பாஜக தலைவர்களைப் பொருட்படுத்துவதே இல்லை என, அவர்களுடைய கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான். பிகார் முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்கள்.
கிரிராஜ் சிங் கவனமாகவும் பொறுப்பாகவும் பேச வேண்டும் என, பாஜக தலைவர் நட்டா கூறிய ஒரு வார காலத்திற்குள், அதைக் கொஞ்சமும் பொருடபடுத்தாமல், மீண்டும் நச்சுக்கருத்துகளை விதைக்கின்றார்,
இந்திய விடுதலையின்போதே, முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி இருக்க வேண்டும், அப்படிச் செய்யாததன் விளைவை, இன்று நாம் சந்தித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று பேசி இருக்கின்றார்.
இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடா? என்பதை, அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.
1947 க்கு முன்பு, இந்தியா என்ற நாடே கிடையாது. இது இந்துக்கள் நாடு என்று சொல்வதற்கும் இடம் இல்லை. இந்தியா என்ற நாட்டுக்கான அரசு அமைப்புச் சட்டத்தை ஆக்கித் தந்த நம் முன்னோர்கள், இது இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் என பல மதங்கள், பல்வேறு பண்பாடுகள் நிலவுகின்ற நாடு என்பதை தெளிவுபட வரையறுத்துக் கூறி இருக்கின்றார்கள்.
நடுவண் அமைச்சராகப் பொறுப்பு ஏற்றபோது, அரசு அமைப்புச் சட்டத்தின் மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்ற கிரிராஜ் சிங்கை, நடுவண் அமைச்சர் பதவியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி நீக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 23-02-2020 தெரிவித்துள்ளார்.

Friday, February 21, 2020

வேளாண் பாதுகாப்பு மண்டலம் விசுவரூபம் எடுக்கும் கேள்விகள் வைகோ அறிக்கை!

காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட முன் வடிவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வட்டாரங்கள் மட்டுமே வேளாண் மண்டலம் என்ற வரையறையின் கீழ் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதும் இந்த சட்ட முன்வடிவில் இணைக்கப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், வேளாண்மை சாராத தொழில்கள், குறிப்பாக துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எ~கு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்காலை, அனுமனியம் உருக்காலை, எண்ணெய் மற்றும் நிலக்கரிப் படுகை, மீத்தேன் ஆலைகள், பாறைப் படிம எரிவாயு, ஹைட்ரோ கார்பன் வாயு எடுத்தல், வாயுக்களின் ஆய்வுகள், துளைத்தெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட ஆய்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.
2018 அக்டோபர் 1 ஆம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து தமிழக அரசு திட்டவட்டமாக, தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்காதது ஏன்? அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படாமல், வெறுமனே வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று சட்டம் இயற்றுவதால் ஆகப்போவது என்ன?
வேளாண் சாராத தொழில்கள் தொடங்க முடியாது என்றுள்ள பட்டியலில் பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயனம், சுத்திகரிப்புத் தொழில்கள் குறிப்பிடப்படவில்லையே அது ஏன்?
கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு ஜூலை 19 இல் தமிழக அரசு பிறப்பித்த குறிப்பாணை (எண்.29) இரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவிக்காதது ஏன்?
கடந்த ஆண்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா சென்றிருந்தபோது கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்தில் முதலீடு செய்வதற்கு ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வந்தாரே, அதை இரத்து செய்வோம் என்று அறிவிக்கத் தயாரா?
கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் புரந்தண்ட் சட்டர்ஜி தமிழக முதல்வரைச் சந்தித்துவிட்டு, கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்தில் 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப் போகிறேம் என்று அறிவித்துவிட்டுச் சென்றாரே? அதனை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி செய்தது மட்டுமல்ல, பெட்ரோலிய ரசாயன ஆலைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறி உள்ளாரே? அப்படியானால், கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் சேர்க்கப்படவில்லையா?
விசுவரூபமெடுக்கும் இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்குமா? என்று காவிரிப் படுகை மாவட்ட மக்கள் கேட்கிறார்கள்.
காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களும், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய இரசாயன ஆலைகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக தடை செய்தால் மட்டுமே வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவிப்பதும், சட்டம் இயற்றுவதும், செயல் வடிவம் பெறும். இல்லையேல், வெற்று ஆரவார அறிவிப்பாகப் போய்விடும் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 21-02-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, February 20, 2020

பொடா பூமிநாதன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

மதுரையில் 20.02.2020 நடைபெற்ற, மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொடா மு.பூமிநாதன் அவர்களின் சகோதரர், மதுரை 1 வது பகுதிக் கழகச் செயலாளர் இராமர் அவர்களின் மகள் ஜோதிமணி _ மணிகண்டன் திருமண விழாவில் பங்கேற்று கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திருநெல்வேலி புறநகர் திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகங்கள் திருத்தி அமைத்தல்! தலைமைக் கழக அறிவிப்பு!

திருநெல்வேலி புறநகர் மற்றும் திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகங்கள் நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி புறநகர் மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் என மூன்று மாவட்டக் கழகங்களாகக் கீழ்க்குறிப்பிட்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது.
திருநெல்வேலி புறநகர் மாவட்டம் :
திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகத்தில் அம்பாசமுத்திரம், நாங்குநேரி மற்றும் இராதாபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட நகர, ஒன்றியக் கழகங்கள் அடங்கும்.
திரு. உவரி எம்.ரைமண்ட் அவர்கள் திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகப் பொறுப்புக்குழுத் தலைவராகவும், விஜய அச்சம்பாடு வி.சஞ்சீவிகுமார், மறுகால்குறிச்சி செ.துரைசாமி, அம்பாசமுத்திரம் சு.முத்துசுவாமி, திருக்குறுங்குடி மு.மணிகண்டன், வீரவநல்லூர் திருமதி சு.வேலம்மாள், களக்காடு வா.வேலுமயில், திருவம்பலபுரம் டி.நாகூர் மீரான், பணகுடி மு.சங்கரகுமார் ஆகியோர் மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்.
திருநெல்வேலி மத்திய மாவட்டம் :
திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகத்தில் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட மாநகராட்சி மற்றும் ஒன்றியக் கழகங்கள் அடங்கும்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வந்த திரு. கே.எம்.ஏ.நிஜாம் அவர்கள் (முகவரி: 66-ஏ, தெற்கு பைபாஸ் ரோடு, சேவியர் காலனி, திருநெல்வேலி - 627 005; கைப்பேசி எண். 94420 - 18099) #திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
தென்காசி மாவட்டம் :
தென்காசி மாவட்டக் கழகத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகரக் கழகங்கள் அடங்கும்.
திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வந்த வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் (முகவரி: வைகோ இல்லம், எண். 6/130-ஏ, பிரதான சாலை, திருமலாபுரம் கிராமம், பனவடலிசத்திரம் (அஞ்சல்), சங்கரன் கோவில் (வட்டம்), தென்காசி மாவட்டம் - 627 953 ; கைப்பேசி எண். 94433 - 70232) அவர்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
அந்தந்த மாவட்ட எல்லைகளுக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் மேற்குறிப்பிட்டவாறு திருத்தி அமைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி புறநகர், திருநெல்வேலி மத்தியம் மற்றும் தென்காசி மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற தகவலை தலைமை கழகம் தாயகம் 20-02-2020 வெளியிட்டுள்ளது.

Wednesday, February 19, 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்தை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்த தமிழக தலைவர்கள்!

19-02-2020 குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் அவர்களை சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட இரண்டு கோடிக்கும் அதிகமான மக்களின் கையெழுத்துகள் அடங்கிய படிவங்களை திராவிட முன்னேற்ற கழகத்தின் மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், கழகப்பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ உள்ளிட்ட மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்.

சிவானந்த குருகுலம் ராஜாராம் மறைவு! வைகோ இரங்கல்!

செங்கல்பட்டு மாவட்டம் - காட்டாங்குளத்தூரில் 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிவானந்த குருகுலம் தலைவர் ராஜாராம் அவர்கள் நேற்று 18.02.2020 செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
உடல்நலம் குன்றி சென்னை தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருடன் கடந்த 15.02.2020 அன்று அலைபேசியில் பேசினேன்.
நீங்கள் செய்து வரும் மனிதநேயத் தொண்டு உங்களைப் பாதுகாக்கும். கூடிய விரைவில் நலம் பெறுவீர்கள். டில்லியிலிருந்து திரும்பிய பின் உங்களை வந்து சந்திக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
பெற்றோர் இல்லாத பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என ஆதரவற்றோர்களின் சரணாலயமாக சிவானந்த குருகுலம் திகழ்ந்தது. மனித மனங்களில் வறண்டு போன அன்பு, கருணையை ஆதரவற்றோர் மீது மடைமாற்றம் செய்து, அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுத்தவர் ராஜாராம்.
அவரது மனிதநேய சேவையைப் பாராட்டி, இந்திய அரசின் சார்பில், குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர்.நாராயணன் அவர்கள் பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தார். சிறந்த சமூகச் செயல்பாட்டாளராக விளங்கிய ராஜாராம் அவர்களுக்கு சமூகம் பல்வேறு விருதுகள் வழங்கி பாராட்டியது.
என் மீதும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் மாறாத அன்பு கொண்டவர் ராஜாராம். சிவானந்த குருகுலத்திற்குப் பலமுறை சென்று சென்று அவரிடமும், அங்கே இருக்கும் ஆதரவற்றோர்களிடமும் பேசி ஆறுதல் படுத்தியுள்ளேன். அது ஒரு உன்னதமான இளைப்பாறும் இடம்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்த டாக்டர் ராஜாராம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரின் இதய நேசிப்பிற்குரிய குருகுலத்தினருக்கும், ஆதரவற்றோர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 19-02-2020 தெரிவித்துள்ளார்.

Tuesday, February 18, 2020

கிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்! வைகோ கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக பன்னூறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். அதேபோல வெவ்வேறு மாதங்களில் அம்மன் கோவில் கொடை விழாக்களும் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடந்து வருகின்றன. உலகின் பல பகுதிகளுக்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் தத்தமது ஊர்களில் நடக்கும் இதுபோன்ற திருவிழாக்களில்தான் ஒன்று கூடி உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அளவளாவி மகிழ்கின்ற வாய்ப்பினைப் பெறுகின்றனர். உறவுகளை அழைத்து விருந்தோம்பல் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வாய்ப்புகளையும் இவ்விழாக்கள்தான் வழங்குகின்றன.
இத்தகைய கோவில் திருவிழாக்களை ஒட்டி, கிராமங்களில் அறிவார்ந்த பட்டிமன்றங்கள், சமயச் சொற்பொழிவுகள், ஆடல், பாடல், இசைக் கச்சேரிகள், வில்லிசை என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளை தத்தமது ஊரின் நிதி ஆதாரங்களுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து நடத்துகின்றனர்.
முன்பெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடப்பதுதான் வழக்கம். கிராமப்புற மக்களும் அதனையே விரும்புகின்றனர். இத்திருவிழாக்களில் மைய நிகழ்ச்சியாக விளங்கும் சாமக்கொடை என்ற இறை வழிபாட்டுச் சடங்குகள், இன்றும் நள்ளிரவில்தான் நடத்தப்படுகின்றன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இரவு 10 மணிக்கு மேல் திருக்கோவில் விழாக்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என காவல்துறை சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதைவிடக் கொடுமை, திருக்கோவில் பொறுப்பாளர்கள், ஊர் நாட்டாண்மைகள், கோவில் விழாக்களுக்கு அனுமதி பெறுவதற்காக காவல் நிலைய உதவி ஆய்வாளர், ஆய்வாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு ஒருவார காலத்திற்கு நடையாய் நடந்து திரிவதும், விழாவிற்கு காவலர்கள் பாதுகாப்பிற்கு வர, காவல்துறை நிர்ணயிக்கும் கட்டணத்தை வங்கிக் கிளைகளில் செலுத்தி (SBI) அதன் ரசீதுகளை (Chellan) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறைகளும் பெரும் சிரமங்களையும், கடுமையான மன உளைச்சலையும் விழா ஏற்ப்பாட்டாளர்களுக்கு தருகின்றன. இதனால் பல கிராமங்களில் திருவிழா ஏற்பாடுகளைச் செய்வதில் கூட சுணக்கம் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே பல நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இச்சிரமங்களை என் கவனத்திற்குக் கொண்டு வந்தவண்ணம் உள்ளனர்.
அனைத்து பொதுமக்களும் ஏதோ ஒரு வகையில் அரசுக்கு வரி செலுத்துகின்றனர். அப்படி வரி செலுத்தும் மக்கள் பன்னெடுங்காலமாக ஆண்டுக்கு ஒருமுறை நடத்துகின்ற தங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியான திருவிழாக்களுக்கு “மக்களின் நண்பன்” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் காவல்துறை தாமாகவே பங்கேற்று பாதுகாப்பு அளித்திட முன்வர வேண்டுமே அன்றி, கட்டணம் வசூலிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.
இப்பிரச்சினையில் நீதிமன்றத்தில் ஏதேனும் தடை ஆணைகள் இருப்பின் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை நேரடியாக அறிந்து தெளிந்து மேல்முறையீடு செய்து கிராமப்புற கோவில் திருவிழாக்கள் நள்ளிரவு வரை நடைபெற தக்க அனுமதி பெற ஆவன செய்திட வேண்டும்.
குறிப்பாக, ஒலிபெருக்கி பயன்படுத்திக் கொள்ளும் நேரத்தை இரவு 10 மணி வரை என்பதை குறைந்தபட்சம் அதிகாலை 2 மணி வரை என்ற வகையிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை சென்று காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்பதை அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளர் நிலையிலேயே அனுமதி வழங்கிடும் வகையிலும் நிபந்தனைகளை தளர்த்திட முன்வருவதோடு, காவல்துறை பாதுகாப்பிற்கு கட்டணம் செலுத்தும் நடைமுறையை முழுமையாக இரத்து செய்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 18-02-2020 தெரிவித்துள்ளார்.

Monday, February 17, 2020

என் பொதுவாழ்க்கையில் நீதிமன்றத்தில் எனக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி - வைகோ -

சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, வைகோ தொடுத்திருந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தலைமை நீதிபதி ஷாஹி, நீதிபதிகள் சுந்தரேசன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ அவர்கள் எடுத்துரை வாதம்:-
சீமைக் கருவேல மரம் சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேடானது. இதனுடைய வேர்கள் பூமிக்குள் வெகு ஆழத்திற்கு ஊடுருவி, பெருமளவு நீரை உறிஞ்சக் கூடியது. பிராண வாயுவை அதிகமாக உறிஞ்சிக் கொண்டு, கரியமல வாயுவை வெளிப்படுத்துகின்றது. எனவே இம்மரத்தில் பறவைகள் கூடு கட்டாது, ஆடு மாடுகள் நிழலுக்குக்கூட ஒதுங்காது.
ஆடு மாடுகள் சினைப் பிடித்தலை இம்மரம் தடுக்கின்றது. இதன் அருகில் வேறு செடி, கொடிகள் வளர முடியாது. எனவே இம்மரம் சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடான ஆபத்தாக இருந்து வருகின்றது.
எனவே இம்மரங்களை தமிழகத்திலிருந்து முற்றாக அகற்றக் கோரி வழக்குத் தொடுத்திருக்கின்றோம். பரப்புரைப் பயணங்களை மேற்கொண்டோம்.
பொதுமக்களும், விவசாயிகளும் பெருமளவில் ஆதரவு அளித்தனர். சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஆங்காங்கு மேற்கொண்டார். அகற்றுகின்ற பணியில் நீதிபதிகளும் பங்கேற்றார்கள். இப்பணிகளை மேற்கொள்வதற்கான மதுரை உயர்நீதிமன்றம் அமைத்த குழுவில், 150 வழக்கறிஞர்கள் ஆணையர்களாகச் செயல்பட்டனர்.
இம்மரங்களை முற்றாக அகற்றுவது குறித்து ஆய்வறிக்கை தருவதற்காக உயர்நீதிமன்றம் நியமித்த குழுவில் தமிழ்நாடு அரசு தலைமை வனக் காவலர் மற்றும் வனத்துறையின் இரண்டு உயர் அதிகாரிகள் இடம்பெற்று இருந்தனர். ஆனால் தமிழ்நாடு வனத்துறை எதிர்த்து வந்தது. இதன் அடிப்படையில் அந்தக் குழு அளித்த அறிக்கை ஒருதலைப்பட்சமானது; ஏற்கத்தக்கது அல்ல.
சீமைக் கருவேலம் என்கின்ற வேலிக் காத்தான் மரம் ஆப்பிரிக்கா கண்டத்தில் பிசாசு மரம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த வழக்கு குறித்து நான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்ற மனுவில், இம்மரம் குறித்து உலக நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளை எல்லாம் வைத்திருக்கின்றேன்.
இந்தியாவின் பல ஆராய்ச்சி நிறுவனங்ளுடைய முடிவுகளையும் வைத்திருக்கிறேன்,” என்று வைகோ குறிப்பிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி வைகோ அவர்கள் கையில் வைத்திருந்த ஆவணங்களைக் கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினார். அப்போது வைகோ சுற்றுச் சூழல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இந்தியாவில் சிறந்த நிறுவனம் நாக்பூரில் உள்ள நீரி அமைப்பாகும் (National Environmental Engineering Research Institute -NEERI).
ஏற்கனவே இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த அடிப்படையில், சீமைக் கருவேல மரங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்வதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என்று இந்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன் என்றார்.
வைகோ அவர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, சீமைக் கருவேல மரங்கள் குறித்து நீரி நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.
நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ அவர்கள், இது என் வாழ்நாளில் நீதிமன்றத்தில் கிடைத்த மாபெரும் வெற்றி. சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதற்கு ஒரு வழி ஏற்பட்டிருக்கின்றது.
அண்மைக் காலத்தில் நான் இவ்வளவு மகிழ்ச்சி அடைந்தது இல்லை. தமிழ்நாட்டு மண்ணிலிருநது சீமைக் கருவேல மரங்கள் அடியோடு அகற்றப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று குறிப்பிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையின்போது, சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர்கள் இரா.அருணாசலம், கோ.நன்மாறன், இரா.பிரியகுமார், ப.சுப்பிரமணி, இரா.செந்தில்செல்வன், தி.பாலாஜி, சங்கரன், வினோத்குமார், பிரபாகரன் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள், விரைவில் நாடு திரும்புவர் வைகோ அறிக்கை!

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி பூல்துரை (கடவுச்சீட்டு எண் N 0405562), மலையாங்குளம் கந்தசாமி (K 7500151) ஆகிய இருவரும், ஓமன் நாட்டில் சலாலா என்ற இடத்தில் உள்ள எலியா எலெக்ட்ரிகல் மற்றும் கட்டுமான நிறுவனத்தில் 2018 செப்டெம்பர் மாதம் மின்சார வேலைகளுக்காக பணியில் சேர்ந்தனர்.
2019 அக்டோபரில் தும்ரயாத் என்ற இடத்தில் கோழிக்கறி பதப்படுத்தும் அல் சபா நிறுவனப் பணிக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கு நிலவிய நாற்றம், இவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. உயர் மின் அழுத்தத்தில் பணிபுரிவதற்கான பாதுகாப்புக் கருவிகளும் இல்லை. இதுகுறித்துப் பொறியாளரிடம் புகார் தெரிவித்தும், எந்த மாற்றமும் இல்லை. எனவே, இவர்கள் தாங்களாகவே முந்தைய நிறுவனத்திற்குச் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கே இவர்களை பணியில் சேர்க்காமல், நவம்பர் 4 ஆம் நாளிட்ட பணிநீக்கச் சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதில் இவர்கள் கையெழுத்து இடவில்லை. வேலைக்கும் செல்ல முடியவில்லை. 9 ஆம் தேதி நிறுவனம் இவர்களை அழைத்து, பணி நீக்கச் சான்றிதழில் குறிப்பிட்டு உள்ளதுபோல், விசா மற்றும் பயிற்சிக் கட்டணத்தைக் கட்டிவிட்டு, ஊருக்குச் செல்லுங்கள்; இல்லை என்றால், 4 மாதங்கள் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். எங்களிடம் பணம் இல்லை; சம்பள பாக்கி, ஊருக்குச் செல்வதற்கான பயணச்சீட்டு கொடுங்கள் எனக் கேட்டு உள்ளனர். அதற்காக இவர்களை அடித்து உள்ளனர்.
இந்தப் பிரச்சினை குறித்து, 2020 ஜனவரி 8 ஆம் நாள், நான் அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மின் அஞ்சல் கடிதம் எழுதினேன். ஆவணங்களையும் இணைத்து அனுப்பி இருந்தேன். அதன்பிறகு, இந்தியத் தூதரகம் அழைத்து விசாரித்துள்ளது. நிறுவனத்தில் தங்களை அடித்தது குறித்து, இவர்கள் இருவரும் காணொளி பேசி, வலைதளத்தில் பரப்பி உள்ளனர். அதனால், அந்த நிறுவனம், இவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றது. இவர்களும் கடிதம் எழுதிக்கொடுத்துள்ளனர். அதன்பிறகும் காலதாமதம் ஏற்பட்டது.
எனவே, நான் மீண்டும் பிப்ரவரி 11 ஆம் நாள் அமைச்சருக்கு நினைவூட்டுக் கடிதம் எழுதினேன்.
அதற்கு, அமைச்சகத்தில் இருந்து எனக்கு அனுப்பி உள்ள விளக்கக் கடிதத்தில், அந்த நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க இந்தியத் தூதரகம் முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் நாடு திரும்புவார்கள் எனவும் தெரிவித்து உள்ளனர் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 17-02-2020  தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க, வைகோ கோரிக்கை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கக் கடிதம்!

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் 12 பிப்ரவரி 2020 அன்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் விபரம் வருமாறு:-
அன்புள்ள திரு வைகோ,
27.11.2019 அன்று, நாடாளுமன்ற மாநிலங்களை அவையின் சுழிய நேரத்தில், உச்சநீதிமன்றக் கிளையை, சென்னையில் நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தீர்கள். அதுகுறித்து சில கருத்துகளைத் தெரிவிக்க விழைகின்றேன்.
அரசு அமைப்புச் சட்டத்தின் 130 ஆவது பிரிவின்படி, உச்சநீதிமன்ற அமர்வு தில்லியில் நடைபெறலாம்; அல்லது காலத்திற்கு ஏற்ற வகையில், தலைமை நீதிபதி தீர்மானிக்கின்ற, குடியரசுத் தலைவர் இசைவு அளிக்கின்ற, வேறு இடங்களிலும் நடைபெறலாம்.
2. கடந்த காலங்களில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து, உச்சநீதிமன்றக் கிளையை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
3.சட்ட ஆணையத்தின் 229 ஆவது அறிக்கையின்படி, உச்சநீதிமன்றத்தின் சுற்று அமர்வுகள் (Cassation Benches), வடபகுதிகளுக்காக தில்லியிலும், தெற்குப் பகுதிக்கு சென்னை, ஹைதராபாத், கிழக்கில் கொல்கத்தா, மேற்கில் மும்பை ஆகிய இடங்களிலும் நடத்தலாம் என பரிந்துரை செய்து உள்ளது.
4. ஆனால், அதற்கு உச்சநீதிமன்றம் இசைவு அளிக்கவில்லை; பல்வேறு காலகட்டங்களில் நடுவண் அரசு வழக்குரைஞர்களிடம் (அட்டர்னி ஜெனரல்) கருத்துகள் கேட்கப்பட்டபோது, அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
36/2016 ரிட் மனு, தேசிய மேல் முறையீட்டு நீதிமன்றம் (National Court of Appeal) அமைக்க நீதிப் பேராணை கோரிய வழக்கில், 13.07.2016 அன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இந்தப் பிரச்சினையை அரசு அமைப்புச் சட்ட அமர்வின் விசாரணைக்குப் பரிந்துரை செய்து இருக்கின்றது. அந்த வழக்கு, தற்போது, உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது.
இவ்வாறு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்து உள்ளார் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 17-02-2020 தெரிவித்துள்ளார்.

சத்துணவுத் திட்டம், மனுதர்மத் திட்டம் ஆகின்றது! வைகோ கண்டனம்!

நீதிக்கட்சி அரசால் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, தியாகப் பெருஞ்சுடர் காமராசர் அவர்களால் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில், சத்துஉணவுத் திட்டமாக வளர்ச்சி பெற்றது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 24 பள்ளிகளில், 5785 மாணவர்களுக்கு மட்டும், காலை சத்து உணவு கொடுக்கும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நேற்று துவக்கி இருக்கின்றது.
ஆனால், இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தப்போவது இல்லை. அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை நடத்தி வருகின்ற இஸ்கான் என்ற இந்துத்துவ அமைப்பிடம் ஒப்படைத்து விட்டார்கள். அதற்காக, சென்னை மாநகரின் மையமான கிரீம்ஸ் சாலையில் 20000 சதுர அடி, பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடி நிலத்தை, அந்த அமைப்பிற்கு அடிமை அரசு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. இந்த இடங்களின் மதிப்பு, இன்றைய நிலையில் 500 கோடிக்கும் மேல் ஆகின்றது.
இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு எந்த முன்அறிவிப்பும் வெளியிடவில்லை. வேறு அமைப்புகள் விண்ணப்பம் தர எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை. எல்லாமே ரகசியமாகவே நடைபெற்று இருக்கின்றது. இது சட்டத்திற்கு எதிரானது. யாருடைய கட்டாயத்திற்கோ எடப்பாடி அரசு அடிபணிந்து இருக்கின்றது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 கோடி நிதி அளித்து இருக்கின்றார். இவ்வாறு அரசுப்பணத்தை ஒரு தனியார் அமைப்பிற்கு அள்ளிக்கொடுக்கும் அதிகாரம், ஆளுநருக்கு இருக்கின்றதா?
இலட்சக்கணக்கான சத்துஉணவுப் பணியாளர்களின் உழைப்பில் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இன்று இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டு இருக்கின்ற சத்து உணவுத் திட்டத்தை, முழுமையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கம்தான், இந்தப் புதிய திட்டம்.
இந்த இஸ்கான் அமைப்பு, ஏற்கனவே கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகின்ற சத்து உணவில், வெங்காயம், பூண்டு கலக்காத சாம்பாரைக் கொடுத்தது. அதனால் மாணவர்கள் சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. தமிழ்நாட்டில் சத்துஉணவில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. இஸ்கான் அமைப்பு சைவ உணவை வலியுறுத்துவது ஆகும். முன்னேறிய நாடுகளிள், பள்ளி மாணவர்களுக்கு இறைச்சியும் வழங்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த அமைப்பு, தமிழர்களின் உணவுப் பழக்கத்திற்கு எதிராகவே செயல்படும். எனவே, இனி சத்துஉணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துஉணவுத் திட்டம் ஆக இருக்காது; மனுதர்ம சத்துஉணவுத் திட்டம் ஆகி விடும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக எதிர்க்கின்றேன். மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில் 17-02-2020  தெரிவித்துள்ளார்.

Sunday, February 16, 2020

மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் கையெழுத்து இயக்கப் படிவங்களுடன் தோழமைக் கட்சித் தலைவர்கள்!

அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் படுகிறது.
அதனையொட்டி தோழமைக் கட்சித் தலைவர்கள் பத்திரிகை ஊடகங்களுக்கு விளக்கும் நிகழ்வு இன்று 16,02,2020 அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

Saturday, February 15, 2020

50 க்கு மேற்பட்டோர் மதிமுகவில் இணைவு!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தலைமையில், காரைக்கால் அம்பலவாணன் அவர்களின் ஏற்பாட்டில் புதுச்சேரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் 15-02-2020 ல் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தில் இணைந்தனர்.

வழக்கறிஞர் வை.குமார்-கோ.ராதாசெல்வம் ஆகியோர் திருமண வரவேற்பில் வைகோ வாழ்த்து!

கழக உறுப்பினர் வழக்கறிஞர் வை.குமார்-கோ.ராதாசெல்வம் திருமண நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ அவர்கள் கலந்து கொண்டு, மணமக்களுக்கு திருக்குறள் வழங்கி வாழ்த்து கூறினார்.

மதிமுக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினருக்கு வைகோ அஞ்சலி!

15-02-2020 காலை  காலை இயற்கை எய்திய மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்.பன்னீர் அவர்களுக்கு குடியாத்தத்தில் தலைவர் வைகோ புகழ் உரை நிகழ்த்தினார்.

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 15.02.2020 சனிக்கிழமை காலை, சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:
பாரதிய ஜனதா கட்சி அரசு, பதவி ஏற்றதிலிருந்து சமூக நீதி கோட்பாட்டைச் சிதைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீடு வழங்குவதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி வருவதை வேத வாக்காகக் கொண்டு செயல்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது.

சமூக நீதி தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் நடத்திய சமூக நீதிப் போராட்டங்களால் விளைந்த இடஒதுக்கீட்டு உரிமைக்கு வேட்டு வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு வழக்கில் பிப்ரவரி 7 ஆம் தேதி அளித்த தீர்ப்பு இருக்கிறது.

அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 16(4), 16(4ஏ), 15 (4) ஆகியவை செயல்படுத்தும் பிரிவுகள் (Enabling Provisions); இப்பிரிவுகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இவை அடிப்படை உரிமைகள் இல்லை என உச்சநீதிமன்றம் முகேஷ்குமார் (எதிர்) உத்தரகாண்ட் அரசு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஷ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த இத்தீர்ப்பு, பட்டியல் இன மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரின் உரிமையைப் பறிக்கும் வகையில் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அரசின் இணைச் செயலாளர்கள் பதவிக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை என்ற ஆணை, மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து பெறப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க மறுப்பு, ‘நீட்’ மற்றும் ‘நெக்ஸ்ட்’ தேர்வை கட்டாயமாக்கி, கிராமப்புற ஏழை பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தைச் சார்ந்தோர் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தடுப்பு போன்ற நடவடிக்கைகள் பாரதிய ஜனதா கட்சி அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்குகள் தொடருவதும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் எதிர்காலத்தில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன மக்களின் உரிமைகளை முற்றாக பறிகொடுக்கும் நிலைமையை உருவாக்கிவிடும்.

இந்த பேராபத்துகளைத் தடுத்து நிறுத்த, போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பிப்ரவரி 13 ஆம் தேதி பெரியார் திடலில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் விடுத்துள்ள அறைகூவல் தீர்மானத்தைச் செயல்படுத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும். சமூக நீதிக்கான போராட்டங்களில் எப்போதும் போல மறுமலர்ச்சி தி.மு.க.வின் பங்களிப்பு இருக்கும் என்று இக்கூட்டம் உறுதியளிக்கிறது.

தீர்மானம் 2:
பாரதிய ஜனதா கட்சி அரசு 2019, டிசம்பர் 10 ஆம் நாள் மக்களவையிலும், டிசம்பர் 11 ஆம் நாள் மாநிலங்களவையிலும் 1955 குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றிய சட்ட முன்வடிவுக்கு, 2019 டிசம்பர் 12 ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, குடியுரிமைச் சட்டத் திருத்தம் (Citizenship Amendment Act -CAA) நடைமுறைக்கு வந்துள்ளது.

“பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து எவ்வித ஆவணங்களுமின்றி டிசம்பர் 31, 2014க்கு முன்பாக இந்தியாவில் குடியேறியிருக்கும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைச் சட்ட விரோதக் குடியேறிகளாகக் கருதக் கூடாது. அவர்கள் மீது கடவுச் சீட்டுச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால், அவ்வழக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும்” என்று குடியுரிமைச் சட்டத் திருத்தம் கூறுகிறது.

மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும் பாகுபாடு செய்து குடியுரிமைச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாக உள்ளது.

பா.ஜ.க. அரசு நிறைவேற்றியிருக்கும் இச்சட்டத் திருத்தத்தில் மதச் சிறுபான்மையினர் என்றோ, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் என்றோ குறிப்பிடப்படவில்லை. இந்தச் சட்டத் திருத்தம் மத அடையாளத்தை மட்டுமே பேசுகிறது.

பாகிஸ்தானில் இந்துக்களைவிட அஹமதியா முஸ்லிம்கள்தான் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் மதச் சிறுபான்மையினர் ஆவர். பர்மிய இராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது இனப்படுகொலை நடத்தியிருப்பதும், சிங்கள பேரினவாத அரசு ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்திருப்பதும் உலகமே அறிந்ததாகும்.

இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுக் கொண்டுவரப்படும் இச்சட்டத் திருத்தம் “யூதர்களுக்கு இசுரேல் போல”, “இந்துக்களுக்கு இந்தியா” என்பதை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

அதற்கேற்ப இச்சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகள், வரம்புகளை எதிர்காலத்தில் மாற்றும் அதிகாரத்தையும் மத்திய அரசிற்கும் அளித்தே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

“இந்துக்கள் அல்லாதவர்கள், எந்தவொரு உரிமையினையும் சலுகைகளையும் கோராமல், இந்து தேசத்திற்குக் கீழ்படிந்து இந்த நாட்டில் வாழலாம்” என்று ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த குரு கோல்வால்கர் கூறியிருப்பதற்கு ஏற்ப ‘இந்து இந்தியா’வை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் இறுதி நோக்கமாகும். அதனை நோக்கிச் செல்லும் திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அடுத்த அடிதான் குடியுரிமைச் சட்டத் திருத்தம்.

நாடெங்கும் குடிமக்கள் பதிவேட்டினை (National Register of Citizens-NRC) நடைமுறைப்படுத்தவும், பா.ஜ.க. அரசு அறிவித்து இருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் பார்க்க முடியும்.

மேலும் இதற்காகவே தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register -NPR) ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

நாடெங்கும் அனைத்துத் தரப்பு மக்களும் பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கொந்தளித்துப் போராடி வரும் நிலையில், பா.ஜ.க. அரசு மக்கள் உணர்வுகளை அலட்சியப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். மூன்றும் திரிசூலம் போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் குத்திக் கிழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

எனவேதான், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வங்காள விரிகுடா கடலில் தூக்கி எறிய வேண்டும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாநிலங்கள் அவையில் முழக்கமிட்டார்.

இச்சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3:
காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரிப் படுகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகம், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் 2018, அக்டோபர் 1ஆம் தேதி வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறது.

சுற்றுச் சூழல் அனுமதி பெறாமலும், பொதுமக்கள் கருத்துக் கேட்காமலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்றும் பா.ஜ.க. அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை சுமார் 5099 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 324 கிணறுகளைத் தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் வேதாந்தா குழுமத்திற்கு மட்டும் 274 கிணறுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய பெட்ரோலியத்துறை போட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரத்து செய்யாமல், வேளாண்மைப் பாதுகாப்பு மண்டலம் என்று முதல்வர் கூறுவது மகா மோசடியாகும்.

மேலும் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலியம், இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petrolium Chemicals & Petrochemical Instrument Region -PCPIRs) அமைப்பதற்கு 2017 ஜூலை 19 ஆம் தேதி தமிழக அரசு குறிப்பு ஆணை (Notification) எண். 29 வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா சென்றிருந்தபோது,பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் நியூயார்க்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் தலைவர், தமிழக முதல்வரைச் சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்திருக்கிறார்.

தமிழக அரசு பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பாணையை ரத்து செய்யாமல், காவிரி காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக ஆக்குவோம் என்று கூறுவது வெற்று அறிவிப்பாகவே மறுமலர்ச்சி தி.மு.க. கருதுகிறது.

காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 2017 ஜூiலை 19 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணையையும் இரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:
மூன்று ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட அ.தி.மு.க. அரசு முன்வந்தது. அதிலும் முதல் கட்டமாக 27 மாவட்டங்களில் மட்டும் 2019 டிசம்பர் 9 இல் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்த தமிழக மக்களுக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாகை சூடிய மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த வெற்றியாளர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

காலதாமதம் இன்றி உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் மக்கள் சேவையில் முன்னணியில் உள்ள அரசுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் எல்.ஐ.சி. நிறுவனம் அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு சுமார் 3 இலட்சம் கோடி ரூபாய் வழங்கி இருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது எதிர்கால வாழ்க்கை குறித்து நாட்டு மக்களுக்குக் கவலையையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே மத்திய அரசு எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை முடிவை கைவிட வேண்டும்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வேத் துறை நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. இரயில்வே துறையைத் தனியார் மயமாக்குவது மக்கள் சேவை வணிகமயம் ஆவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த வளர்ச்சி முன்னேற்றத்தையும் பாதிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்றிருக்கும் ஊழல் முறைகேடுகள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற ஒரு கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும்போது, டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளை நம்பிக்கையுடன் எழுதுகின்றனர். ஆனால் இதிலும் கையூட்டு, ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பது தமிழக அரசின் நிர்வாக லட்சணத்தை அம்பலமாக்கி இருக்கின்றது.

ஆளும் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் நடைபெற்றுள்ள டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் குறித்து நியாயமான விசாரணை நடத்திட மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இன்னமும் கொந்தளிப்பு நீடிக்கிறது. பிப்ரவரி 14 ஆம் தேதி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இசுலாமிய இயக்கங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இசுலாமியப் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்துசெல்லுமாறு மிரட்டியுள்ளனர். அமைதி வழியில் முழக்கங்கள் எழுப்பிய 50 பெண்களை இழுத்துச் சென்று, காவல்துறை வாகனங்களில் ஏற்றியுள்ளனர். இதைக் கண்டித்த இசுலாமிய இயக்கத்தினர் மீது காவல்துறை கண்மூடித்தனமான தடியடி நடத்தியுள்ளது.

பெண்கள், முதியோர் என்றும் பாராமல் போராட்டக்காரர்களை காவல்துறையினர் பூட்ஸ் காலால் எட்டி உதைத்து தரதர என இழுத்துச் செல்லும் காட்சிகளைச் சமூக ஊடகங்களில் கண்டு கொந்தளித்து, நேற்று இரவு தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இசுலாமிய அமைப்பினர் மீதும் காவல்துறை தாக்குதல் நடத்தியுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டையில் காவல்துறை நடத்திய தடியடியில் படுகாயமுற்று 70 வயது முதியவர் அமீர் உயிரிழந்திருக்கிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாதி, சமய வேறுபாடின்றி போராடி வரும் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தமிழக அரசு காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

ஜனநாயகத்தில் இத்தகைய பாசிசப் போக்கை அனுமதிக்க முடியாது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகம் நாள்தோறும் போராட்டக் களத்தைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சுட்டிக்காட்டுகிறது.

Friday, February 14, 2020

தமிழகத்தின் கடன் சுமை 5 இலட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை குறித்து வைகோ கருத்து!

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27 விழுக்காடாக இருக்கும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 5 விழுக்காடு அளவுக்கு சரிந்துள்ள நிலையில், அதன் தாக்கம் மாநிலத்திலும் இருக்கும் என்பதே உண்மை நிலை ஆகும்.
கடந்த ஆண்டில் ரூ. 3 இலட்சத்து 97 ஆயிரத்து 400 கோடியாக இருந்த கடன், நடப்பு ஆண்டில் 4 இலட்சத்து 56 ஆயிரத்து 660 கோடியாக உயர்ந்துவிட்டது.
2011 ஆம் ஆண்டில் அ.இ.அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது, ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 610 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, சுமார் 5 இலட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் இந்த அரசின் சாதனை.
மத்திய வரி பங்கீட்டில் தமிழகம் பெரும் இழப்புக்கு ஆளாகி உள்ளது. மேலும் வருவாய் பற்றாக்குறை 22 ஆயிரத்து 226 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஆதாரம் எங்கே இருக்கிறது?
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த, சென்னையில் 2000 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்தும இடம், 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டும் திட்டம், நடைபாதைவாசிகளுக்கு 38 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் திட்டம் போன்றவை அறிவிப்போடு நின்றுவிட்ட நிலையில், இந்த வரவு செலவு திட்டத்தில் அறிவித்துள்ள திட்டங்களுக்கும் அதே கதிதான் ஏற்படும்.
காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பு வெறும் கானல் நீர் என்பது நிதி அறிக்கை மூலம் வெளிப்பட்டு இருக்கிறது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் மூலம் வேதாந்தா குழுமம், ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்ய அ.தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 2017, ஜூலை 19 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள குறிப்பாணை 29ன் படி, 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பாணையை திரும்பப் பெறாமல், வேளாண் மண்டலம் என்று வெற்று அறிவிப்பு வெளியிடுவது மோசடியாகும்.
வேளாண் தொழிலைப் பாதுகாக்கவும், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றவும், இந்த நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் இல்லை.
வேளாண் கடன்கள் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் வேளாண் விளைப் பொருளுக்கு விலை நிர்ணயம், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை போன்றவை குறித்து வரவு செலவு திட்டத்தில் எதுவும் இடம்பெறவில்லை.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து திட்டவட்டமான கருத்தை முன் வைக்காமல், நீட் தேர்வைத் திணித்தது போல புதிய கல்விக் கொள்கையையும் செயல்படுத்தஅ.இ.அ.தி.மு.க. அரசு முனைந்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் மூடப்பட்டு வரும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என்பதை அ.தி.மு.க. அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களோ, தொலைநோக்குப் பார்வையோ இல்லை.
மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் அ.இ.அ.தி.மு.க. அரசு உயர்த்தி வருகிறது. இதற்காகவே டாஸ்மாக் மதுக்கடைகள் மேலும் மேலும் திறக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2293 டாஸ்மாக் மதுக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.
2016 இல் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றபோது, டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற அறிவிப்பை எடப்பாடி அரசு குப்பைக் கூடையில் வீசி எறிந்துவிட்டது.
ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை எனும் பா.ஜ.க. அரசின் திட்டத்தை அறிவித்திருப்பது பொதுவிநியோக முறையையே சீர்குலைத்துவிடும்.
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம், அயலகத் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கை அமைத்தல், பணிபுரியும் பெண்களுக்கு 13 இடங்களில் அரசு விடுதிகள், கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி போன்ற வரவேற்கத்தக்க அறிவிப்புகள் தவிர, தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் மொத்தத்தில் ஏமாற்றமே அளிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ அவர்கள் 14-02-2020 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 13, 2020

வெற்றி நாயகன் எம். எஸ். கந்தசாமிக்கு வைகோ பாராட்டு விழா!

கடலூர் மாவட்டம் 22-வது மாவட்ட கவுன்சிலராக வெற்றி பெற்ற வெற்றி நாயகன் எம். எஸ். கந்தசாமி அவர்களுக்கு கடலூர் அருகில் உள்ள பாளையங்கோட்டையில் 13-02-2020 நடைபெற்ற பாரட்டு கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு பாரட்டு உரை நிகழ்த்தினர்

வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தலைவர் சால்வை அணிவித்தார்கள்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் கானல் நீரா? வைகோ அறிக்கை!

மத்திய பா.ஜ.க. அரசு, 2014 ஆம் ஆண்டிலிருந்தே காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த எட்டு ஆண்டு காலமாக மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, இத்தகைய நாசகாரத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் சோழ மண்டலத்தைப் பாதுகாக்க காவிரிப் பாசன விவசாயிகளும், பொதுமக்களும் இடையறாது போராடி வருகின்றனர்.

மக்கள் போராட்டங்களுக்கு அணு அளவும் மதிப்பளிக்காத பா.ஜ.க. அரசு, 2018 அக்டோபர் 1 ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டது.

மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை 5099 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில், மொத்தம் 324 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மற்றும் வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, 13 அப்பாவிகளை சுட்டுப் படுகொலை செய்ததற்குக் காரணமான வேதாந்தா குழுமம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட மத்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் சார்பில், மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதற்காகவே சுற்றுச் சூழல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவந்து, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இத்தகைய நாசகாரத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புத் தேவை இல்லை என்று எதேச்சாதிகாரமாக பா.ஜ.க. அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது.

இதுமட்டும் இல்லாமல், காவிரிப் படுகை பகுதியான கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு 2017 ஜூலை 19 இல் குறிப்பாணை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதலமைச்சர் அறிவித்து இருப்பது கானல் நீராகிப் போய்விடுமோ? என்ற கவலை எழுகிறது. ஏற்கனவே நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு என்ன கதி நேர்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

காவிரி தீரத்தை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முழுமையாகச் செயல்படுத்த வேண்டுமானால், வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் செய்திருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் இரத்துச் செய்ய தயாரா?

இந்தக் கேள்விக்கு விடை காணத்தான் பிப்ரவரி 11 ஆம் தேதி மாநிலங்கள் அவையில் ஹைட்ரோ கார்பன் பிரச்சினையை எழுப்ப முயன்றேன். ஆனால் அவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புன்னகை பூக்க அமர்ந்திருந்தார். அமைச்சரின் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன என்பதை நாம் உணர முடியாதவர்கள் அல்லர்.

எனவேதான் பா.ஜ.க. அரசைக் கண்டித்துவிட்டு அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தேன்.

காவிரிப் படுகை மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் திகழ வேண்டுமானால் வேதாந்தா, ஓ.என்.ஜி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை இரத்துச் செய்ய வேண்டும்.

காவிரிப் படுகையில், பெட்ரோலிய, இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த குறிப்பாணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ 13-02-2020 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.