Wednesday, September 30, 2020

குமரி மாவட்ட முதல் பெண் IPS செல்வி பிரவீணா அவர்களுக்கு வைகோ‌ எம்பி அலைபேசியில் வாழ்த்து! குமரி மாவட்ட மதிமுக நேரில் வாழ்த்து!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வைகோ எம்பி அவர்களின் சார்பாக 

IPS தேர்வில்  வெற்றிப்பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தின்  முதல் பெண்மணி  #செல்வி_பிரவீணா அவர்களை, இன்று இல்லத்தில் சென்று சந்தித்து  நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவரும், தென் குமரி கல்வி கழக செயலாளரும், குமரி  மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஆற்றல்மிகு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் S வெற்றிவேல் அவர்கள் சால்வை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

குமரி மதிமுக மாவட்ட துணை செயலாளர் கொற்றியோடு சுரேஷ் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பள்ளியாடி குமார்‌ உள்ளிட்ட குமரி மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

மேலும் தமிழர்களின் தாயகம் வைகோஅவர்கள் #செல்வி_பிரவீணா அவர்களிடம் அலைப்பேசியில் வாழ்த்து  கூறினார்கள்.

பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு! வைகோ அறிக்கை!

ஆண்டுக் கணக்கில் அறிவிப்புச் செய்து, பாபர் மசூதியை இடிப்பதற்கு மாதக் கணக்கில் நாடு முழுவதும் கர சேவகர்களைத் தயார் செய்து, காவல்துறையும், இராணுவமும் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க, திட்டமிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் கைகளில் கடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் சென்று பாபர் மசூதியைப் பட்டப் பகலில் இடித்து நொறுக்கினார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட அழிவுச் செயல்.

உச்சநீதிமன்றமும், திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்றுதான் குறிப்பிட்டது.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், திட்டமிட்டு இச்சம்பவம் நடக்கவில்லை என்று அனைவரையும் விடுதலை செய்திருப்பது நீதியின் அரண்களை இடித்ததற்குச் சமமாகும்.

நடுநிலையோடு இப்பிரச்சினையை அணுகுகின்றவர்களின் மனசாட்சி இந்தத் தீர்ப்பு அநீதியின் தீர்ப்பு என்றுதான் கூறும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
30.09.2020

அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றும் முடிவைக் கைவிடுக! புதிய பல்கலைக் கழகத்திற்கு அப்துல்கலாம் பெயரைச் சூட்டுக! வைகோ வலியுறுத்தல்!

உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த, உயர் சிறப்பு கல்வி நிறுவனம் (Institute of Eminence-IOE) என்னும் சிறப்புத் தகுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு 2017 இல் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி நிதி உதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு செய்யப்பட்டு, ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்னும் சிறப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணா பல்கலைக் கழகத்தை, மத்திய அரசு சிறப்புநிலை கல்வி நிறுவனம் என்கிற உயரிய சிறப்பை வழங்கிவிட்டு, பல்கலைக் கழகத்தின் தனித்துவமான அடையாளத்தை ஒழித்துக் கட்டவும் தீர்மானித்து இருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு துணை போவதன் மூலம் தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைத்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அண்ணா பல்கலைக் கழகத்தின் தனித்தன்மையைச் சிதைக்கும் வேலையில் இறங்கி உள்ளது.

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சட்டமன்றத்தில் உலகப்புகழ் பெற்ற பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான கிண்டி அண்ணா பல்கலைக் கழகம், நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்படும் என்று சட்ட முன்வரைவை நிறைவேற்றி இருக்கிறது. அதில் அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றினால் உலக அளவில் அதற்குரிய பெயரும், தரமும் குறைந்துவிடும். அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது. அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. அண்ணா பல்கலைக் கழகத்தைப் பிரித்தால் அதன் கீழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உரிய நிதி கிடைக்காது. மாணவர்கள் எந்தப் பல்கலையின் கீழ் தேர்ச்சி பெற்றார்கள் என்ற குழப்பம் நீடிக்கும் என்று அண்ணா பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர்கள் தமிழக ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் அவர்களுக்குக் கடிதம் எழுதி உள்ளனர்.

மேலும் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் கூட்டமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் நான்கு வளாகக் கல்லூரிகளும் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் தங்கள் தரத்தைச் சிறப்பாக பராமரிப்பதால்தான் உலக அளவில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அங்கீகாரம் உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரில் இதுவரை வெளியான ஆய்வுகளை அளவுகோலாக வைத்துதான் சிறந்த ஆய்வு மையத்துக்கான ‘ஹை இன்டக்ஸ்’ மதிப்பெண் வழங்கப்படும். பெயர் மாறினால் அந்த மதிப்பெண் பூஜ்யமாகிவிடும். தொடர் உழைப்பில் 41 ஆண்டுகள் உருவாக்கிய தரத்தை ஐந்தாண்டுகளில் மீட்டெடுக்க முடியாது. இதேபோல், பழைய மாணவர்கள் நிதி உதவி, தொழில் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மற்றும் பட்டம் அளிப்பு அங்கீகாரம் என அனைத்து நிர்வாகப் பணிகளும் கேள்விக்குறியாகும்.

தற்போதுள்ள சிண்டிகேட் முறை மாற்றப்பட்டு, நிர்வாகக் குழு அமைக்கப்படுகிறது. இதையடுத்து, துணைவேந்தர் பதவி இயக்குநர் என்று மாற்றப்படும். மேலும், இட ஒதுக்கீட்டுக்கான மதிப்பெண் வரையறை மற்றும் கல்விக் கட்டணம் உயரும் என்பதால் ஏழை மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். அண்ணா பல்கலைக் கழகம்தான் தமிழக மாணவர்களின் பொறியியல் கனவுக்கு உயிர் ஊட்டுகிறது. எனவே கல்வியாளர்கள் கருத்துகளைக் கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பல்கலைக் கழக பேராசிரியர் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.

தமிழக ஆளுநரும், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரும், அண்ணாவின் பெயரால் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின் தனித்துவத்தைச் சிதைக்கும் முயற்சிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதை ஏற்க முடியாது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றும் முடிவைக் கைவிட்டு, இணைப்புப் பொறியியல் கல்லூரிகளைப் புதிதாக உருவாக்கப்படும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்துடன் இணைத்து, இளைஞர்கள், மாணவர்களின் நெஞ்சில் எழுச்சி நாயகராக வீற்றிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பெயரைச் சூட்டுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
30.09.2020

மரபணு மாற்ற கத்தரி சாகுபடி; கள ஆய்வுக்கான அனுமதியைத் திருப்பப் பெறுக! வைகோ வலியுறுத்தல்!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் தெலுங்குதேசம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒய்.எஸ்.அவினேஷ் ரெட்டி, மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கும் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மரபணு மாற்ற கத்திரி சாகுபடி செய்வதற்கான கள ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றார்.

மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரியை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலும் (Indian Council for Agricultural Research - ICAR) தாவரவியல் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையமும் (National Botanical Research Institute) இணைந்து உருவாக்கியுள்ளன.

இவற்றுக்கு ஜனத் மற்றும் பி.எஸ்.எஸ்.-793 என்று பெயரிடப்பட்டுள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வகை பி.டி. கத்தரி விதைகளை கர்நாடகம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்குவங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய எட்டு மாநிலங்களில் பரிசோதனை செய்திட கள ஆய்வுக்கு மத்திய அரசும், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவும் அனுமதி அளித்துள்ளன.

நடப்பாண்டு 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரி கள ஆய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் கூறி உள்ளார். மஹிகோ எனும் மகாராஷ்டிரா ஹைபிரிட் சீட்ஸ் கார்ப்பரேஷன் (Mahyco) நிறுவனம் அமெரிக்காவின் மான்சாண்ட்டா நிறுவனத்துடன் இணைந்து மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விதையை 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியது.

பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringiensis -BT) என்னும் பாக்டீரியத்தின் மரபணுவைக் கொண்டு கத்தரிக்காயின் மரபணுவை மாற்றிப் புதிய விதை உருவாக்கப்பட்டது. இது பாக்டீரிய கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பி.டி. கத்தரி விதையை மதிப்பிடுவதற்கு 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் பி.டி. கத்தரிக்காய் சாகுபடி செய்வதற்கு ஏற்ப பரிந்துரை அளித்தது. இதன் அடிப்படையில் மத்திய மரபணு பொறியியல் ஒப்புதல் குழு (Genetic Engineering Approval Committee) 2009. அக்டோபர் 14 இல் அனுமதி அளித்தது.

பி.டி. கத்தரியின் தீமைகள் குறித்த விழிப்புணர்வால் கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், மன்மோகன்சிங் அரசு 2010 பிப்ரவரியில் பி.டி. கத்தரிக்கான அனுமதியை நிறுத்தி வைத்தது.

பின்னர் 2012 இல் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ் ஆச்சார்யா தலைமையிலான வேளாண்மைத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பி.டி. கத்தரி சாகுபடி செய்வதற்கான சாதக, பாதக அம்சங்களை ஆராயப் போதுமான சோதனைகள் நடத்தப்படவில்லை. இவற்றை அறிமுகம் செய்வதற்கான அனுமதிக் குழுவை, இத்தகைய விதைகளை உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்கள் கடுமையான நிர்பந்தம் அளித்துள்ளன. அத்துடன் இத்துறையின் அமைச்சரும் பி.டி.கத்தரிக்கு ஆதரவாக நிர்பந்தம் அளிப்பதாகவும் கூறியது. பி.டி. கத்தரி விதைகள் இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியது.

உச்சநீதிமன்றம் நியமித்த மரபணு மாற்ற ஒப்புதல் குழு உறுப்பினர் டாக்டர் பி.எம்.பார்கவா அளித்த அறிக்கையையும் நாடாளுமன்ற நிலைக்குழு தமது கருத்துக்கு ஆதாரமாக முன் வைத்தது. பார்கவா தனது அறிக்கையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவில் அறிமுகம் செய்திட ஒப்புதல் வழங்குமாறு தனக்குப் பல்வேறு தரப்பிலிருந்து நெருக்குதல் வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற எதிர்ப்புகளால் பின்வாங்கிய ஐ.மு.கூட்டணி அரசு, பி.டி. கத்தரிக்காய் சாகுபடிக்கான கள ஆய்வுகளை நிறுத்தி வைத்திருந்தது.

பி.டி. கத்தரிக்காய் மரபணு மாற்றப்பட்டு இருப்பதால், பூச்சிகள் தாக்காது. அதிக விளைச்சல் தரும் என்றெல்லாம் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் சூழலியல் நிபுணர்கள் பி.டி. கத்தரியினால் ஏற்படும் தீங்குகள், நோய்கள், அதிக தண்ணீர் உறிஞ்சுவது, காட்டமான பூச்சிக் கொல்லிகள் தேவைப்படுவது, புதிய வகை பூச்சிகள் உருவாவது, உயிரியல் சூழல் பாதிக்கப்படுவது என்று பட்டியலிட்டு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் மான்சாண்ட்டா நிறுவனம்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி, கத்தரி, கடுகு உள்ளிட்டவற்றின் விதைகளை ஆய்வின் மூலம் உருவாக்கி, உலக நாடுகளில் அவற்றை அறிமுகம் செய்து, அதற்கான சந்தையைப் பிடிக்குள் வைத்துக்கொள்ள முனைந்து உள்ளது.

இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 8 விழுக்காடு பங்கைக் கொண்டிருக்கும் கத்தரிக்காய் எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரும். இந்தியாவில் சுமார் 2500 வகை நாட்டுப்புற கத்தரி வகைகள் இருக்கின்றன. ஏழைகளின் காய் எனப்படும் கத்தரிக்காய் உற்பத்தியையும், சந்தையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடிக்கும் அமெரிக்க மான்சாண்ட்டா நிறுவனத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு துணை போவது இந்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

பி.டி. கத்தரி சாகுபடிக்கான கள ஆய்வுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு எக்காரணத்தை முன்னிட்டும் தமிழ்நாட்டில் மரபணு மாற்ற கத்தரியின் களப்பரிசோதனைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
29.09.2020

Monday, September 28, 2020

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்தை எதிர்த்து வைகோ எம்பி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இன்று 28.9.2020  மக்கள் தலைவர் வைகோ எம்பி தலைமையில்
வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் தோழமை கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மத்திய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினர்.

விவசாயிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Sunday, September 27, 2020

இனாம்குளத்தூரில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு: அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்! வைகோ அறிக்கை!

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் 2000ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது.

அந்த சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு நேற்று இரவு யாரோ மர்ம மனிதர்கள் காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. மாநிலத்திலும் அவர்களுக்கு அணுசரணையான ஆட்சி இருக்கிறது என்கிற துணிச்சலில் தமிழகத்தில் அண்மைக் காலமாக சில கையாலாகாத பேர்வழிகள்  இந்த அக்கிரமச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துக்கு கருத்து, விவாதத்துக்கு விவாதம் என்பதில் நம்பிக்கையில்லாத இந்த சமூக விரோதிகளை இனம் கண்டு காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

மேலும், நாட்டுக்கு உழைத்திட்ட தலைவர்களின் சிலைகளை அவமதிப்பவர்களைக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்.

இனாம்குளத்தூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து இருப்பதன் மூலம் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் காலூன்றி விட முடியாது. மாறாக மக்கள் மத்தியில் எதிர்வினையாற்றும் என்பதை மறந்து விடாதீர்கள். 

தந்தை பெரியார் தத்துவங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்.

இதுபோன்ற அருவருக்கத்தக்க நடவடிக்கைகளின் மூலம் தந்தை பெரியாரையோ, திராவிட இயக்கக் கட்டமைப்பையோ சிதைத்துவிட முடியாது என்பதை இனஎதிரிகளுக்கு எச்சரிக்க விரும்புகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
27.09.2020

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவு! வைகோ இரங்கல்!

முன்னாள் மத்திய அமைச்சரும், தலைசிறந்த நாடாளுமன்றவாதியுமான ஜஸ்வந்த் சிங் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராக மாநிலங்கள் அவையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். ஆணித்தரமான ஆதாரங்களோடு வாதங்களை எடுத்து வைப்பார். நான் அவரோடு மிகச் சிறந்த நட்பு கொண்டிருந்தேன். அவர் இந்தியக் கடற்படையில் சிறப்பாகப் பணியாற்றியவர். குளியல் அறையில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு, கடந்த சில ஆண்டுகளாகவே சுயநினைவு இன்றி இல்லத்தில் இருந்தவாரே சிகிச்சைப் பெற்று வந்தார்.

நான் டில்லி செல்லும்போதெல்லாம் அவரது வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்து வந்தேன். அவருடைய மறைவு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும், இந்தியப் பொதுவாழ்வுக்கும் இழப்பாகும்.

அவரது மறைவால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
27.09.2020

Saturday, September 26, 2020

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை!

அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று (25.09.2020) மின்னஞ்சலில் எழுதிய கடிதம்:

“சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ஆம் நாள் 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களுடைய படகு எண் ஐசூனு-கூசூ-02 ஆஆ 2029.

ரகு, லட்சுமணன், சிவகுமார், பாபு, பார்த்தி, கண்ணன், தேசப்பன், முருகன், எல். தேசப்பன் ஆகியோர், துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட  இரண்டு மணி நேரத்தில் அவர்களுடைய ஜிபிஎஸ் கருவி பழுதாகிவிட்டது. ஜூலை 28 ஆம் நாள் வரை தொடர்பில் இருந்தனர். ஆகஸ்டு 7 அன்று அவர்கள் கரைக்குத் திரும்பி இருக்கவேண்டும்.

ஆனால் அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் வேதனைக்கு உள்ளாயினர். 

53 நாட்கள் கழித்து செப்டம்பர் 13 அன்று அவர்கள் மியான்மர் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கிடைத்தது. உற்றார் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அவர்களை மீட்பதற்காக இந்திய அயல்உறவுத் துறை முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் கொரோனா முடக்கத்தின் காரணமாக அவர்கள் திரும்பி வர முடியவில்லை.

மியான்மர் கடற்படையினர் அவர்களை தங்கள் நாட்டில் தரை இறங்க விடவில்லை. படகிலேயே இருக்கும்படி கூறிவிட்டனர்.

எனவே அவர்கள் பல மாதங்களாக படகிலேயே இருக்கின்றனர். இதற்கு இடையில் பாபு என்ற மீனவரை ஏதோ பழுதுபார்ப்புப் பணிகளுக்காக  அனுப்பினோம். ஆனால் அவரைக் காணவில்லை என்று  மியான்மர் கடற்படையினர் கூறுகின்றனர். 

அவர்  படகுக்குத் திரும்பி வரவில்லை .

அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை  உயிரோடு இருக்கின்றாரா என்பதும் தெரியவில்லை. தங்கள் பாதுகாப்பில் இருக்கின்ற ஒருவரை  மியான்மர் கடற்படையினர்  பொறுப்பு அற்ற முறையில் நடத்தி இருக்கின்றனர். 53 நாட்களாக கடலில் தத்தளித்த போதிலும்  உயிருடன் மீண்டு வந்த மீனவர்களுள் ஒருவர்  கரையில்  இருந்த பொழுது காணாமல் போயிருக்கிறார் .

அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்து இருக்கின்றனர்.

இந்தப் பிரச்சனை குறித்து  வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

எனவே மேலும் தாமதம் இன்றி  மீனவர்கள் அனைவரையும்  சென்னைக்கு பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்; அதற்கான முயற்சிகளைத் தாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும்  அன்புடன் வேண்டுகின்றேன்.”

இவ்வாறு வைகோ இவர்கள் தமது மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
26.09.2020

விஜயகாந்த் நலம் பெற வேண்டும்-வைகோ!

பத்திரிகை செய்தி!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் - பழகுதற்கு இனிய பண்பாளர் உயர்திரு விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் மியாட் மருத்துவமனையில் கிசிச்சைபெற்று வருகிறார். அவர் முழுமையான உடல்நலம் பெற்று தொடர்ந்து பொதுப்பணியாற்ற விரும்புகிறேன்.*

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
24.09.2020

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு! வைகோ இரங்கல்!

தன் கானக் குரலால் கோடானு கோடி இதயங்களை ஈர்த்தவரும், 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தோடு நீண்ட நெடிய போராட்டம் நடத்தி, மறைந்துவிட்டார் என்ற செய்தி மனதை உலுக்குகிறது.

உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும், யாழ் மீட்டுவது போன்ற அவரது கானக் குரல் இன்னும் எவ்வளவு காலமானாலும் காற்றோடு கலந்திருக்கும். கேட்போரைக் காந்தமெனக் கவர்ந்திழுக்கும்.

திரைப்பட இசை உலகில் அழியாப் புகழோடு நிரந்தரமாக வாழ்வார்.

அந்தப் பாடல் இசை மேதையை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கணக்கற்ற அவரது ரசிகர்களுக்கும், அவரை உயிராய் நேசித்த கலை உலகப் பெருமக்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
25.09.2020

Monday, September 21, 2020

வேதாரண்யம் மா.மீனாட்சிசுந்தரம் மறைவு! வைகோ இரங்கல்!

வேதாரண்யம் மா.மீனாட்சிசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, திராவிட இயக்கக் கொள்கைகளின் பால் பற்றுக் கொண்டு, வேதாரண்யம் பகுதியில் திராவிட இயக்கத்தின் தளகர்த்தராகத் திகழ்ந்தார்.

சுயமரியாதை பகுத்தறிவுக் கருத்துகளில் ஊறியவர்; வாழ்நாள் முழுமையும் கருப்புத் துண்டு அணிந்தார்.

தி.மு.கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று பலமுறை சிறைவாசம் ஏற்றவர்.

அவர் மட்டும் அல்ல, அவரது அண்ணன் தம்பிகள் என அவரது குடும்பம் முழுமையுமே திராவிட இயக்கப் பற்றாளர்கள்தான்.

வேதாரண்யத்திற்கு என்னைப் பலமுறை அழைத்துச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார். 

அவர் மீது நான் மிகுந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்டு இருந்தேன்.

மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், வேதாரண்யம் நகர் மன்றத்தலைவர் கும்பகோணம் கூட்டுறவு வங்கித் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துப் பெருமை சேர்த்தார்.

அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் தி.மு.கழகத் தோழர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
21.09.2020

வேளாண் மசோதாவை எதிர்த்து, 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு. கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Saturday, September 19, 2020

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - உயர்நிலைக்குழுக் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் வருகிற  01.10.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு திருச்சி - 620 001. மெக்டோனால்ஸ் ரோடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரீஸ் ரெசிடென்ஸி-யில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
19.09.2020

Friday, September 18, 2020

ராணி பொறுப்பு ஆசிரியர் இராமகிருஷ்ணன் மறைவு. வைகோ இரங்கல்!

ராணி வார இதழின் பொறுப்பு ஆசிரியர் இராமகிருஷ்ணன் அவர்களின் தாயார் கடந்த வாரம் இயற்கை எய்திய நிலையில் ஊருக்குச் சென்ற அவர், நேற்று ஏழாம் நாள் நிகழ்வுகளில் பங்கேற்று இருந்தபோது திடீரென இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

எப்போதும் முகத்தில் புன்னகை தவழும் இராமகிருஷ்ணன், மிகச்சிறந்த பண்பாளர்.  பழகுகின்ற விதத்தில் எவரையும் எளிதில் ஈர்க்கக்கூடியவர். பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களோடு பழகி, அவர்களின் அன்பைப் பெற்றவர்.

என் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்தார். அவ்வப்போது வந்து சந்திப்பார். நடுநிலையோடு, என்னுடைய பல கட்டுரைகளை, ராணி வார இதழில் வெளியிட்டார். சிறந்த எழுத்தாளரான  அவர் எழுதிய கண்ணதாசன் கதை நூலுக்கு, தமிழக அரசின் விருது கிடைத்தபோது அவரைத் தொடர்பு கொண்டு பாராட்டினேன். அந்தப் புத்தகத்தால் அவர் நினைவு கூரப்படுவார். வணங்காமுடி என்ற பெயரில் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கின்றார்.

தமிழ் ஆர்வம் மிக்கவர். இளைஞர்களை, புதிய எழுத்தாளர்களை, எழுத்து உலகில் அறிமுகம் செய்வதில் ஆர்வம் மிக்கவர். வரலாற்றுப் பதிவுகளைத் தேடிப் பதிவு செய்தார். அரசியலில் நேர்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். காலத்திற்கு ஏற்ற வகையில், ராணி வார இதழின் வடிவமைப்பில் நிறைய மாறுதல்கள் செய்தார்.

ஒரு வழக்கமான பத்திரிகையாளராக இல்லாமல், நண்பராகப் பழகிய இராமகிருஷ்ணன் மறைவு வேதனை அளிக்கின்றது. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
 மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’ 
சென்னை - 8
18.09.2020

டாக்டர் கலாநிதி மறைவு. வைகோ இரங்கல்!

1980,84 தேர்தல்களில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, மக்கள் அவை உறுப்பினராக இரண்டு முறை பொறுப்பு வகித்த டாக்டர் கலாநிதி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 

ஏழை எளிய மக்களுக்கு, தொண்டு உள்ளத்துடன் மருத்துவப் பணி செய்தார். அதனால், மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். நாடாளுமன்றத்தில் மிகச்சிறப்பாகப் பணி ஆற்றி, டாக்டர் கலைஞர், பேராசிரியரின் பாராட்டுகளைப் பெற்றார்.

தமிழ் மொழி மீதும், தமிழ் இனத்தின் மீதும், திராவிட இயக்கத்தின் மீதும், ஈடற்ற பற்றுக்கொண்டவர். ஈழத்தமிழர்களுக்காக அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, பலமுறை வந்து மருத்துவச் சோதனை செய்தார். மூன்று தமிழர்கள் தூக்குத் தண்டனை ரத்து செய்யக்கோரி நான்கு மகளிர் உண்ணாவிரதம் இருந்தபோதும், பலமுறை வந்து சோதனை செய்தார். 

என்மீது எல்லையற்ற அன்பு கொண்டு இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய நூலை, பேராசிரியர் தலைமையில் என்னை வெளியிடச் செய்தார். 

அண்மையில் அவரது துணைவியார் மறைந்த அதிர்ச்சி அவரைப் பாதித்து விட்டது. அவருடைய மறைவு, ஏழை, எளிய மக்களுக்கும், மருத்துவத் துறைக்கும் இழப்பு ஆகும். அவருடைய குடும்பத்தார், உற்றார்,உறவினர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
18.09.2020

மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும்.வைகோ கோரிக்கை!

திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்த பெரிய நகரம் மணப்பாறை.

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மணப்பாறை நகராட்சி, மணப்பாறை ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சியும் உள்ளது.

மணப்பாறை வட்டம், மருங்காபுரி வட்டம் என இரு வருவாய் வட்டங்கள் உள்ளன.

இந்தப் பகுதி ஆற்று நீர்ப் பாசனம் இல்லாத வறண்ட பகுதியாகும். வானம் பார்த்த பூமியாக இருப்பதால் பெரும்பாலும் மழை காலங்களில் மட்டுமே மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

கால்நடை வளர்ப்பும், பாரம்பரியம் மிக்க மணப்பாறை முறுக்குமே இவர்களுக்கான தொழில் வாய்ப்புகளாகும்.

ஆயிரக் கணக்கான இளைஞர்கள் உயர் கல்வி படிக்க வழியின்றி திருச்சி, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு கட்டட வேலைக்குச் செல்கின்றனர்.

முற்றிலும், பின்தங்கிய கிராம மக்கள் வாழும் இப்பகுதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் கடைக்கோடி கிராமத்திலிருந்து கிராமப்புற மாணவர்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றால் 90 கி.மீ. தூரமுள்ள திருச்சிக்குத் தான் செல்ல வேண்டும்.

மிகவும் பொருளாதாரச் சுழலில் பாதிக்கப்பட்டுள்ள கிராமப் புற மாணவர்கள் திருச்சிக்குச் செல்ல முடியாத வறிய நிலை உள்ளது.

ஆகவே, அவர்களின் கல்லூரிக் கனவு என்பது கானல் நீராகப் போகிறது.

மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மறுமலர்ச்சி திமுக தோழர்களால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மறுமலர்ச்சி திமுக தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்கள் மூலம் தமிழக முதல்வருக்கு செப்டம்பர்  13- ம் நாள் மின்னஞ்சலில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், மணப்பாறையில் அரசு கல்லூரி வேண்டும் என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வலியுறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து முகநூல், வாட்ச் ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மணப்பாறை தொகுதியைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பினரும் மணப்பாறைக்கு அரசு கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை அட்டையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் கடந்த ஐந்து நாட்களாக இந்தக் கோரிக்கை வலுத்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அமைதியான முறையில் போராடி வருகின்ற மணப்பாறை மக்களின் கோரிக்கைக்கு அரசு உடனடியாக செவிசாய்க்க வேண்டும்.

தமிழக அரசு மணப்பாறையில் உடனடியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அமைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
18.09.2020

Thursday, September 17, 2020

பெரியார் பிறந்த நாள் விழா!


பெரியார் பிறந்த நாள் தமிழ்நாடு முழுதும் விமரிசையாக கொண்டாடபடுகிறது.


தீண்டாமை ஒழிக்க பாடுபட்டவர் பெரியார். தென்னாட்டு பெர்னாட்சா பெரியார். ஆசியாவின் சாக்ரடீஷ் பெரியார்.

அச்சு ஊடகங்களுக்கு வரிக்குறைப்பு உண்டா? வைகோ கேள்விக்கு, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுத்துமூலம் விளக்கம்!

கேள்வி எண் 96

கீழ்காணும் கேள்விகளுக்கு அமைச்சர் விளக்கம் தருவாரா?

(அ) செய்தித்தாள்கள் அச்சிடுதல் மற்றும் விற்பனைத் தொழிலில் ஏற்பட்டுள்ள இழப்புகளைக் கவனத்தில் கொண்டு, சுங்க வரிக் குறைப்பு செயுமாறு கேட்டு அச்சு ஊடகங்களின் சார்பில், அரசுக்குக் கோரிக்கை வந்துள்ளதா?

(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசின் விளக்கம் என்ன?

(இ) வானொலிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைக் கவனத்தில் கொண்டு, உரிமக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுமா?

(ஈ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விளக்கம் தருக?

செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்து இருக்கின்ற விளக்கம்,

அ,ஆ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்

மார்ச், ஏப்ரல் மாதங்களில், இந்திய அச்சு ஊடகக் குழுமங்களிடம் இருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

வருவாய் இழப்பு காரணமாக, அச்சு ஊடகங்கள் எதிர்கொண்டு இருக்கின்ற கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு 5 விழுக்காடு அடிப்படை சுங்க வரியை நீக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார்கள்.

இதுகுறித்து, நிதி அமைச்சகத்துடன் கலந்து பேசி, உரிய முடிவு எடுக்கப்படும்.

இ, ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்

கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தனியார் பண்பலை வானொலிகளுக்கு, 2020/21 ஆம் ஆண்டுக்கான, முதல் மூன்று மாத கால உரிமத் தொகைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
17.09.2020

தந்தை பெரியார் சிலைக்கு 142 ஆவது பிறந்தநாளில் வைகோ மரியாதை!


பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 142 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை நிலையம் தாயகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.


தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
17.09.2020

வரலாற்றுத் திரிபில் மத்திய அரசின் அடுத்தக் கட்ட முயற்சி!வைகோ கண்டனம்!

சமஸ்கிருத மொழியே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றும், ஆரியர்களே இந்தியாவின் தொல்குடி மக்களின் பூர்வீகத்தினர் என்றும், வரலாற்றைத் திரித்துக் கூறும் சங்பரிவார் கூட்டத்திற்கு துணை நிற்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இம்முயற்சியில் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

12,000ஆண்டுகளுக்கு முன்பான இந்திய கலாச்சாரத்தின் தொன்மையான வரலாற்றினை ஆய்வு செய்து நிறுவுவதற்காக, 16 உறுப்பினர்களைக் கொண்ட கலாச்சார நிபுணர்குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளதாக மத்திய கலாச்சார - சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 

இந்தியத் தொல்பொருள் துறைத் தலைவர் கே.என்.தீட்சித், டாக்டர் ஆர்.எல்.பிஷ்த், டாக்டர் பி.ஆர்.மணி, பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, டாக்டர் ரமேஷ்குமார் பாண்டே, பேராசிரியர் மக்கன்லால், டாக்டர் ஜி.என்.ஸ்ரீவத்ஷவ, நீதிபதி முகுந்த்காந்த் சர்மா, பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, பேராசிரியர் ஆர்.சி.சர்மா, பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டாக்டர் பல்ராம்சுக்லா, பேராசிரியர் ஆஷாத் கௌசிக், பண்டிட் எம்.ஆர்.சர்மா, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், தொல்பொருள் ஆய்வுத் துறை ஆகியவைகளின் இரண்டு பிரதிநிதிகள் ஆகியோர்களை இக்குழுவின் உறுப்பினர்களாகவும் நடுவண் அரசு அறிவித்துள்ளது. 

இந்திய வரலாற்றின் கலை, நாகரிகம், பண்பாடு குறித்து ஆய்வு செய்வது என்றால், அனைத்து மாநில அறிஞர்களையும் இந்தக் குழுவில் இடம் பெறச் செய்திட வேண்டும். வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்கள், தொல்லியல் நிபுணர்கள், செம்மொழி தகுதி பெற்ற சான்றோர்கள்என பலரையும் இக்குழுவில் இணைத்திட வேண்டும். 

நாடு முழுக்க உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்று ஆய்வு செய்தால், ஆய்வின் முடிவு முறையாகவும், முழுமையாகவும் இருக்கும். 

ஆனால் மைய அரசு நியமித்துள்ள இக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. 

மேற்கு வங்கம், கிழக்கு இந்திய பகுதிகளில் இருந்தும் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே கொள்கை என வெளிப்படையாகவே வேத கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையான கண்டனத்துக்கு உரியது. நாடு முழுக்க உள்ள அனைத்துக் கட்சியினரும் தங்களின் நாகரிக பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய முழு வீச்சில் செயல்பட முன்வர வேண்டுமாறு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். 

வைகோ 
பொதுச் செயலாளர், 
மறுமலர்ச்சி தி.மு.க., 
 ‘தாயகம்’ 
சென்னை – 8 17.09.2020

Tuesday, September 15, 2020

மதிமுக இணையவழி மாநாடு!

மறுமலர்ச்சி திமுகவின் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் காணொளி மாநாடு!

Time: Sep 15, 2020 காலை 11:00 மணிக்கு 

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82056223001

Meeting ID: 820 5622 3001

மேலே உள்ள லிங் அல்லது ஐடி மூலம் இணைவீர்.

மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, September 14, 2020

மதிமுக மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்துகொள்வீர்-வைகோ எம்பி அழைப்பு!

மறுமலர்ச்சி திமுக நடத்தும் 
பேரறிஞர் அண்ணா 112 ஆவது பிறந்தநாள் விழா..

காணொளியில்..
செப்டம்பர் 15 ,செவ்வாய்
நண்பகல் 11.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை...

மறுமலர்ச்சி பாசறை வீரர்களே
தயாராவீர்..!.

Zoom  Id :  82056223001

நேரலை: Mathimugam Facebook  & YouTube

#MDMK
#Vaiko
#Anna
#Periyar

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கவேல் மறைவு. வைகோ இரங்கல்!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தளகர்த்தர்களில் ஒருவரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.தங்கவேல் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, மிகுந்த வேதனை அடைந்தேன்.

நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்தவர் அவர். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்தவர் அவர். அனைத்துக் கட்சியினரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர்.

திருப்பூர், கோவை உள்ளிட்ட பிரிக்கப்படாத கோவை மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.

அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், தமிழ்நாட்டின் பொதுவாழ்வுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.09.2020

Saturday, September 12, 2020

ஊடகயியலாளர் சுதாங்கன் மறைவுக்கு வைகோ இரங்கல்!

சிறந்த பத்திரிகையாளரும், தொலைக்காட்சி ஊடக இயலாளருமான எனது இனிய நண்பர் சுதாங்கன் இயற்கை எய்தினார் என்ற செய்தி, தாங்க இயலாத அதிர்ச்சியையும், துயரத்தையும் தந்தது.
 
திருவைகுண்டம் அருகே தென்திருப்பேரை வைணவத் திருத்தலத்தில் பிறந்தவர்.  

எண்பதுகளின் தொடக்கத்தில், அவர் ஆனந்த விகடனில் செய்தியாளராக இருந்தபோது, தில்லியில் என் இல்லத்தில் சில நாள்கள் தங்கி இருந்தார். அவர்தான், டைகர் ஆஃப் பார்லிமெண்ட் என்று என்னைப் பற்றி ஒரு கட்டுரையும் எழுதினார்.
 
நட்புக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுப்பவர். மிகச்சிறந்த எழுத்தாளர். மனதில் பட்ட கருத்துகளை, துணிச்சலாகவும், தயக்கம் இன்றியும் சொல்வார். எல்லாப் பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, கேள்விகள் தொடுக்கவும், விடைகள் விடுக்கவும் ஆற்றல் வாய்ந்தவர் ஆவார்.
 
இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய அவர் மறைந்தார் என்பதை நினைத்தாலே நெஞ்சம் வேதனை அடைகின்றது. அவரது மறைவு, பத்திரிகைத் துறைக்கு, ஊடகத் துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்.
 
அவரை இழந்து துன்பத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
வைகோ,
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
தாயகம்,
சென்னை 8
12 செப்டெம்பர் 2020

NEET தற்கொலைகள்; மத்திய அரசே காரணம்! வைகோ கண்டனம்!

மத்திய பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்புக் காரணமாக தமிழ்நாட்டில் மாணவ - மாணவிகள் தொடர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கின்றது. 

அரியலூர் மாவட்டம்-செந்துறை அருகே இலந்தங்குழி ஊரைச் சேர்ந்த 19 வயது விக்னேஷ் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு நீட் தேர்வு பயத்தால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்தது.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள், இன்று மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நாளை நீட் தேர்வு எழுத ஆயத்தமாகிக் கொண்டு இருந்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியபோது, தேர்ச்சி பெற முடியாததால், இந்த ஆண்டும் அதே நிலை ஏற்படுமானால் குடும்பத்தினர் ஏமாற்றம் அடைவார்கள் என்ற அச்சத்தால், கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தி, நெஞ்சைப் பிளக்கின்றது.

கொரோனா காலத்திலும் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தியே தீருவோம் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது. உச்சநீதிமன்றமும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும், திட்டமிட்டபடி செப்டம்பர் 13 அன்று நீட் தேர்வை நடத்துவதற்குத் தடை இல்லை என்று தீர்ப்பு அளித்து விட்டது. இதனால் தமிழகத்தில் இரண்டு அப்பாவி மாணவர்கள் உயிர் பறிபோய் விட்டது.

2017 இல் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால், அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை உலுக்கியது. அதைப் போல, 2018 இல் விழுப்புரம் மாவட்டம் - செஞ்சியை அடுத்த பெரவளூர் பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி திருவள்ளூர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்து ஓட்டுநர் கண்ணன் என்பவரது மகள் சுபஸ்ரீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி என்ற மாணவியும்  2018 இல் தற்கொலை செய்துகொண்டனர்.

2019 இல் நடந்த நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மோனிசா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். அதே போல, தஞ்சை மாவட்டம் - பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா, நீட் தேர்வில் தோல்வி அடைந்த மன வேதனையில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். 

கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கிடசாமி சாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இரவிச்சந்திரன் என்பவரது மகள் சுப ஸ்ரீ இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். செப்டம்பர் 13 அன்று நீட் தேர்வு நடத்துவது உறுதி என்று மத்திய அரசு தான்தோன்றித்தனமாக அறிவித்ததால், மனஉளைச்சல் ஏற்பட்டு, மாணவி சுபஸ்ரீ கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய பா.ஜ.க. அரசு, பிடிவாதமாக இருப்பதால், இன்னும் எத்தனை பேரின் உயிர்களை காவு வாங்கப் போகின்றார்களே?

சாதாரண ஏழை, எளிய, பின்தங்கிய பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் 12 ஆம் வகுப்புத் தேர்வில் எவ்வளவு அதிக மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும், நீட் தேர்வால் வடிகட்டப்பட்டு, அவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது.

மத்திய அரசின் இக்கொடூரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கத் தமிழக அரசு ஆயத்தமாக  இல்லை. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால்தான் இதுபோன்ற உயிர்ப் பலிகள் தடுக்கப்படுவதுடன், சமூக நீதியையும் நிலை நாட்ட முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
12.09.2020

Thursday, September 10, 2020

ஜப்பானில் இறந்த நாங்குநேரி ஆனிகுளம் மாதவன் உடல், பத்து நாள்களில் வந்து சேரும். வைகோவுக்கு அயல் உறவுத்துறை தகவல்!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் பாப்பான்குளம் அருகில் உள்ள ஆனிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்ற இளைஞர், ஜப்பான் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். திடீரென அவர் இறந்து விட்டார் என, குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருந்தனர். 

மறுமலர்ச்சி தி.மு.க. தென்காசி மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், எழுத்தாளர் மதுரா,  மின்னல் முகமது அலி ஆகியோர், பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து, அயல் உறவு அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்திற்கு, வைகோ கொண்டு சென்றார். அவரது அலுவலக துணைச் செயலாளருடன் அலைபேசியில் பேசினார். 

இது தொடர்பாக, ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தாம் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் இதுகுறித்து ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளோம், விரைவில் உடல் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்து இருப்பதாகவும், அயல் உறவு அமைச்சகத் துணைச் செயலாளர், வைகோவுக்கு மின் அஞ்சல் எழுதி உள்ளார். 

ஜப்பானில் உள்ள தமிழ் அன்பர்கள் மூலமாகவும் வைகோ விசாரித்தார்.

மாதவன் தற்கொலை செய்துகொண்டு இருப்பதாகத் தெரிய வருகிறது என்றும், வருகின்ற 14 ஆம் தேதி, மாதவன் உடல் கூறு சோதனை, கொரோனா சோதனை நடைபெற இருப்பதாகவும், அந்தச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றவுடன், இந்திய அயல் உறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்றும், இம்மாதம் 18 ஆம் தேதிக்கு மேல், மாதவன் உடல் சொந்த ஊருக்கு வந்து சேருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், திரு கிருஷ்ணன் என்பவர் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாகவும், அவர்கள் வைகோவிடம் தெரிவித்தனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
10.09.2020

தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு! வைகோ கடும் கண்டனம்!

மத்திய பா.ஜ.க. அரசு உருவாக்கியுள்ள புதிய கல்விக் கொள்கை பிற்போக்குத்தனமான இந்துத்துவ சனாதன கோட்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இந்தி, சமஸ்கிருத மொழிகளை தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை வரையில் திணிப்பதற்கு தேசியக் கல்விக் கொள்கை -2020 வழி செய்கிறது என்பதால், கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்படும் என்று ஒப்புக்காக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு, பா.ஜ.க. அரசின் இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு துணைபோய்க்கொண்டு இருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சமஸ்கிருதம் படிக்க மத்திய அரசு உதவித்தொகை வழங்குவதாகவும், தகுதியுள்ள மாணவர்கள் பட்டியல் தயாரித்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான இரண்டு படிவங்களை நிரப்பி, செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசின் உத்தரவை ஏற்று, அதனை அப்படியே நிறைவேற்றத் துடிக்கிற அ.தி.மு.க. அரசு, புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள கல்வித் திட்டங்களை வெளிப்படையாகவே நிறைவேற்ற முனைந்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

ஊக்கத்தொகை என்ற பெயரில் நிதி உதவி செய்து, தமிழக அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை புகுத்த நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழ்நாடு அரசு இசைவு அளித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
10.09.2020

Tuesday, September 8, 2020

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு. வைகோ கண்டனம்!

மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசு அலுவலகக் கோப்புகள், கடிதத் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியில் இருப்பதை இந்தி மொழிப் பிரிவு கவனிக்க வேண்டும்.

மத்திய அரசின் இந்த உத்தரவுப்படி சென்னையில் உள்ள பொருட்கள் மற்றும் சேவை வரி ஆணையர் தலைமை அலுவலகத்தில் இந்திப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தப் பிரிவில் உதவி ஆணையராக தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பாலமுருகன் என்பவரும், கண்காணிப்பாளராக சுகுமார் என்பவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஆய்வாளர் ஒருவரும், வரி உதவியாளர் ஒருவரும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தி மொழி அறியாத ஆணையரும், கண்காணிப்பாளரும் ஆய்வாளர் உதவியுடன் இந்தி கோப்புகளில் உள்ளவற்றை அறிந்து கையொப்பமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தி மொழி அறிந்த ஆய்வாளர் ரஞ்சன் தய்யா என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போது தமிழை தாய் மொழியாகக் கொண்ட விஜயகுமார் என்பவர் ஆய்வாளர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜி.எஸ்.டி ஆணையர் தலைமை அலுவலகத்தில் உள்ள இந்தி மொழிப் பிரிவில் பொறுப்பிலுள்ள மூவரும் இந்தி எழுதப்படிக்க தெரியாதவர்கள் ஆவர்.

இதே ஆணையர் அலுவலகத்தில் வட நாட்டைச் சேர்ந்த பலர் பணியில் இருக்கும் போது அவர்களை இந்தி பிரிவில் நியமனம் செய்யாமல், இந்தி தெரியாத தமிழர்களை நியமனம் செய்து இருப்பது பாஜக அரசின் திட்டமிட்ட இந்தி மொழித் திணிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து உதவி ஆணையர் பாலமுருகன், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் தலைவருக்கு எழுதியுள்ள புகார் கடிதத்தின் மூலம், பாஜக அரசு தமிழர்கள் மீது இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டும் வெறித்தனம் வெளிப்பட்டுள்ளது. இது மிகவும் கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழரான உதவி ஆணையர் பாலமுருகன் புகார் தெரிவித்துள்ளதால், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து மிரட்ட முனையாமல், கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு உணர வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆட்சி மொழி என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழ் தேசிய பேரியக்கத்  தலைவர் திரு மணியரசன் அவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய நீர்வளத் துறை  அமைச்சகத்துக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி விளக்கம் கேட்டு எழுதிய மடலுக்கு இந்தி மொழியிலேயே பதில் அனுப்பியிருக்கிறார்கள்.

இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கும் பாஜக அரசின் இத்தகைய மோசமான நடவடிக்கைகள் தமிழர்களை மேலும் மேலும் கொதிப்படையச் செய்கிறது என்பதை இந்தி ஆதிக்கவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழகம் பாஜக அரசுக்கு புரியவைக்கும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
08.09.2020

Monday, September 7, 2020

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை உடலுக்கு வைகோ எம்பி இறுதி மரியாதை!

மதிமுக துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரை அவர்கள் செப் 4 ஆம் நாள் மறைந்தார். அவரது உடல் இன்று 7-9-2020 நாசரேத் கல்லறை தோட்டத்தில் நல் அடக்கம் செய்யப்பட்டது.

மதிமுக பொது‌ச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் இன்று காலை 9.30 மணி அளவில் நாசரேத் துரை அவர்களின் பொன்னுடல் மீது மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து கண்ணீர் மல்க புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.

அருகில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்று கண்ணீர் சிந்தியவாறு அன்னாரின் சிறப்புகளை
விவரித்து இரங்கல் உரை ஆற்றினார். தொடர்ந்து அவரது உடல் அடக்கம் ‌செய்யப்பட்டது.

நாசரேத் துரை அவர்கள் மறைவில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்ட கழகத்தினர், குடும்பத்தினர், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

நாசரேத் துரை மறைவு; வைர மணித் தூண் சாய்ந்தது. வைகோ வேதனை!

பேரிடி தலையில் விழுந்துவிட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், என் உயிரினும் மேலான பாசச் சகோதரர் நாசரேத் துரை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் வேதனையில் துடி துடித்துப் போனேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கொள்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் அண்ணன் நாசரேத் துரைராஜ் அவர்கள்.

சின்னஞ்சிறு பருவத்தில் இருந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புத் தம்பியாக நாசரேத் பகுதியில் அண்ணாவின் இயக்கத்தைக் கட்டிக் காத்தவர். நாசரேத் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர். நாசரேத் நகர வங்கித் தலைவராக இருந்தவர். தென்னிந்திய திருச்சபையில் திருநெல்வேலி, தூத்துக்குடி டயோசிசனில் சிறப்பு உறுப்பினராக 11 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

கொரோனா முடக்கத்திற்கு முன்பு அவரது இல்லத்திற்குச் சென்று, அண்ணன் நாசரேத் துரை அவர்களைச் சந்தித்து, நீண்ட நேரம் உரையாடிவிட்டு வந்தேன்.

அவரது சகோதரியும், அவரது மூன்று புதல்வியரும் அமெரிக்காவில் இருக்கின்றார்கள். 1984 இல் நான் முதன் முதலாக அமெரிக்கா சென்றபோது, இருபதுக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட மாளிகை போன்ற அவரது அக்கா வீட்டில்தான் தங்கினேன். அந்த வீட்டிற்கு டாக்டர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சென்று இருக்கின்றனர். ஐயா தினகரன் கே.பி.கே. அவர்கள் பல நாள் அந்த வீட்டில் தங்கி இருந்தார். 

அந்தக் குடும்பத்தினர் பொழிகின்ற பாசத்தைச் சொற்களால் வர்ணிக்க முடியாது. அவ்வளவு அன்பான குடும்பம். அண்ணன் நாசரேத் துரை அவர்கள் துணைவியாரும், அவரைப் போலவே அன்பும் பரிவும் காட்டுவார்.

நியூயார்க் நகரின் ஐ.நா.மன்றக் கட்டடத்தின் எதிரே பறக்கின்ற பன்னாட்டுக் கொடிகளைப் பார்த்துவிட்டு, தமிழனுக்கென்று ஒரு கொடி இங்கே பறக்கவில்லையே? என்று தன் ஏக்கத்தைச் சொல்வார்.

1993 ஆம் ஆண்டில் இருந்து எனக்கு உடன்பிறவாத அண்ணனாகவே இருந்தார். தனக்கென்று எதையும் நாட மாட்டார். சிறிது காலமாக உடல்நலம் இல்லாததால், அவரால் அதிகம் பயணம் செய்ய முடியவில்லை. நான் நெல்லை, தூத்துக்குடி செல்லும்போதெல்லாம் நாசரேத்துக்குச் சென்று அவரோடு உரையாடி மகிழ்ந்து வருவேன். இனி எங்கு பார்க்கப் போகிறேன் அவரின் திருமுகத்தை; இனி என்று பேசப் போகிறேன் அவரோடு. எல்லாம் போய் விட்டதே!

கடந்த 27 ஆண்டுகளில் என்னுடைய கருத்துக்கு மாறாக ஒரு கருத்தையும் அவர் என்னிடம் பேசியது இல்லையே! அப்படியே ஏற்றுக்கொண்டு எனக்குக் காவல் அரணாக, விழி காக்கும் இமையாக, உயிருக்கு உயிராக அன்றோ நேசத்தைக் கொட்டினார்.

அவருடைய அன்னையார் உயிரோடு இருந்த காலங்களில் அவரது வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் எனக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்.

மிடுக்கான தோற்றம், அன்பைப் பொழியும் கண்கள், எல்லோரையும் அரவணைக்கும் பாங்கு கொண்ட, நாசரேத் வட்டாரத்தில் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட அந்த வைர மணிவிளக்கு அணைந்துவிட்டதே! உரம் மிக்க கொள்கைத்தூண் சாய்ந்துவிட்டதே! கழகக் கண்மணிகளுக்கு எதைச் சொல்லித் தேற்றுவேன்? 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் அழியாத புகழ்மணியாய், ஒளி விளக்காய் என்றும் அண்ணன் நாசரேத் துரை நிலைத்து இருப்பார்.

உடைந்து சுக்கல் சுக்கலாகிப் போன உள்ளத்தோடு, அவரது துணைவியாருக்கும், புதல்வியருக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகளை இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
04.09.2020

Friday, September 4, 2020

நாட்டின் எதிர்காலத்திற்கு வித்திடுவது ஆசிரியர் பணி! வைகோ வாழ்த்து!

நாட்டின் உயர்வுக்கும்; சமூகத்தின் மேன்மைக்கும் அடித்தளமாகத் திகழ்வது கல்வியைப் புகட்டும்  ஆசிரியர்கள்தான். 

ஆசிரியர் பணியின் மதிப்பு என்பது ஆழ்கடலைப் போன்று அளவிட முடியாதது. நாட்டின் எதிர்கால செல்வங்களான இளம் பிஞ்சுகளை, மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரையில் கல்வி புகட்டி, வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை ஊட்டி வளர்த்து, தீயாக சீலர்களாக அர்ப்பணிப்புடன் பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள்.

கல்வி மட்டுமே அனைவரையும் கரை சேர்க்கும். எனவேதான் ஆசிரியர் சமூகத்திற்கு  மிகுந்த மதிப்பும், மரியாதையும் அளிப்பதில் மக்கள் பேரூவகை கொள்கின்றனர்.

அப்படிப்பட்ட ஆசிரியர் பணியிலிருந்து தனது அறிவு, ஆற்றல், உழைப்பால் இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த செப்டம்பர் 5ஆம் நாளை, 1962 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

மாறிவரும் உலகமயச் சூழலில், கல்வி வணிகப் பொருளாக ஆக்கப்பட்டு வரும் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது.

சமூக மறுமலர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் வித்திடும் சிறந்த பணி ஆசிரியர் பணி.

பல இன்னல்களைத் தாங்கி, தன்னலம் பேணாமல் பணியாற்றி, சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
04.09.2020