Thursday, September 17, 2020

வரலாற்றுத் திரிபில் மத்திய அரசின் அடுத்தக் கட்ட முயற்சி!வைகோ கண்டனம்!

சமஸ்கிருத மொழியே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றும், ஆரியர்களே இந்தியாவின் தொல்குடி மக்களின் பூர்வீகத்தினர் என்றும், வரலாற்றைத் திரித்துக் கூறும் சங்பரிவார் கூட்டத்திற்கு துணை நிற்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இம்முயற்சியில் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

12,000ஆண்டுகளுக்கு முன்பான இந்திய கலாச்சாரத்தின் தொன்மையான வரலாற்றினை ஆய்வு செய்து நிறுவுவதற்காக, 16 உறுப்பினர்களைக் கொண்ட கலாச்சார நிபுணர்குழுவினை மத்திய அரசு அமைத்துள்ளதாக மத்திய கலாச்சார - சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 

இந்தியத் தொல்பொருள் துறைத் தலைவர் கே.என்.தீட்சித், டாக்டர் ஆர்.எல்.பிஷ்த், டாக்டர் பி.ஆர்.மணி, பேராசிரியர் சந்தோஷ் சுக்லா, டாக்டர் ரமேஷ்குமார் பாண்டே, பேராசிரியர் மக்கன்லால், டாக்டர் ஜி.என்.ஸ்ரீவத்ஷவ, நீதிபதி முகுந்த்காந்த் சர்மா, பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, பேராசிரியர் ஆர்.சி.சர்மா, பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டாக்டர் பல்ராம்சுக்லா, பேராசிரியர் ஆஷாத் கௌசிக், பண்டிட் எம்.ஆர்.சர்மா, மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம், தொல்பொருள் ஆய்வுத் துறை ஆகியவைகளின் இரண்டு பிரதிநிதிகள் ஆகியோர்களை இக்குழுவின் உறுப்பினர்களாகவும் நடுவண் அரசு அறிவித்துள்ளது. 

இந்திய வரலாற்றின் கலை, நாகரிகம், பண்பாடு குறித்து ஆய்வு செய்வது என்றால், அனைத்து மாநில அறிஞர்களையும் இந்தக் குழுவில் இடம் பெறச் செய்திட வேண்டும். வரலாற்று ஆய்வாளர்கள், அறிஞர்கள், தொல்லியல் நிபுணர்கள், செம்மொழி தகுதி பெற்ற சான்றோர்கள்என பலரையும் இக்குழுவில் இணைத்திட வேண்டும். 

நாடு முழுக்க உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்று ஆய்வு செய்தால், ஆய்வின் முடிவு முறையாகவும், முழுமையாகவும் இருக்கும். 

ஆனால் மைய அரசு நியமித்துள்ள இக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. 

மேற்கு வங்கம், கிழக்கு இந்திய பகுதிகளில் இருந்தும் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே கொள்கை என வெளிப்படையாகவே வேத கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையான கண்டனத்துக்கு உரியது. நாடு முழுக்க உள்ள அனைத்துக் கட்சியினரும் தங்களின் நாகரிக பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய முழு வீச்சில் செயல்பட முன்வர வேண்டுமாறு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். 

வைகோ 
பொதுச் செயலாளர், 
மறுமலர்ச்சி தி.மு.க., 
 ‘தாயகம்’ 
சென்னை – 8 17.09.2020

No comments:

Post a Comment