Sunday, September 27, 2020

இனாம்குளத்தூரில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு: அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்! வைகோ அறிக்கை!

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் 2000ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது.

அந்த சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு நேற்று இரவு யாரோ மர்ம மனிதர்கள் காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. மாநிலத்திலும் அவர்களுக்கு அணுசரணையான ஆட்சி இருக்கிறது என்கிற துணிச்சலில் தமிழகத்தில் அண்மைக் காலமாக சில கையாலாகாத பேர்வழிகள்  இந்த அக்கிரமச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துக்கு கருத்து, விவாதத்துக்கு விவாதம் என்பதில் நம்பிக்கையில்லாத இந்த சமூக விரோதிகளை இனம் கண்டு காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

மேலும், நாட்டுக்கு உழைத்திட்ட தலைவர்களின் சிலைகளை அவமதிப்பவர்களைக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்.

இனாம்குளத்தூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து இருப்பதன் மூலம் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் காலூன்றி விட முடியாது. மாறாக மக்கள் மத்தியில் எதிர்வினையாற்றும் என்பதை மறந்து விடாதீர்கள். 

தந்தை பெரியார் தத்துவங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்.

இதுபோன்ற அருவருக்கத்தக்க நடவடிக்கைகளின் மூலம் தந்தை பெரியாரையோ, திராவிட இயக்கக் கட்டமைப்பையோ சிதைத்துவிட முடியாது என்பதை இனஎதிரிகளுக்கு எச்சரிக்க விரும்புகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
27.09.2020

No comments:

Post a Comment