Thursday, September 10, 2020

ஜப்பானில் இறந்த நாங்குநேரி ஆனிகுளம் மாதவன் உடல், பத்து நாள்களில் வந்து சேரும். வைகோவுக்கு அயல் உறவுத்துறை தகவல்!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் பாப்பான்குளம் அருகில் உள்ள ஆனிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் என்ற இளைஞர், ஜப்பான் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். திடீரென அவர் இறந்து விட்டார் என, குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருந்தனர். 

மறுமலர்ச்சி தி.மு.க. தென்காசி மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், எழுத்தாளர் மதுரா,  மின்னல் முகமது அலி ஆகியோர், பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து, அயல் உறவு அமைச்சர் ஜெய்சங்கர் கவனத்திற்கு, வைகோ கொண்டு சென்றார். அவரது அலுவலக துணைச் செயலாளருடன் அலைபேசியில் பேசினார். 

இது தொடர்பாக, ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தாம் தொடர்பு கொண்டதாகவும், அவர்கள் இதுகுறித்து ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளோம், விரைவில் உடல் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்து இருப்பதாகவும், அயல் உறவு அமைச்சகத் துணைச் செயலாளர், வைகோவுக்கு மின் அஞ்சல் எழுதி உள்ளார். 

ஜப்பானில் உள்ள தமிழ் அன்பர்கள் மூலமாகவும் வைகோ விசாரித்தார்.

மாதவன் தற்கொலை செய்துகொண்டு இருப்பதாகத் தெரிய வருகிறது என்றும், வருகின்ற 14 ஆம் தேதி, மாதவன் உடல் கூறு சோதனை, கொரோனா சோதனை நடைபெற இருப்பதாகவும், அந்தச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றவுடன், இந்திய அயல் உறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்றும், இம்மாதம் 18 ஆம் தேதிக்கு மேல், மாதவன் உடல் சொந்த ஊருக்கு வந்து சேருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், திரு கிருஷ்ணன் என்பவர் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாகவும், அவர்கள் வைகோவிடம் தெரிவித்தனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
10.09.2020

No comments:

Post a Comment