வேதாரண்யம் மா.மீனாட்சிசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, திராவிட இயக்கக் கொள்கைகளின் பால் பற்றுக் கொண்டு, வேதாரண்யம் பகுதியில் திராவிட இயக்கத்தின் தளகர்த்தராகத் திகழ்ந்தார்.
சுயமரியாதை பகுத்தறிவுக் கருத்துகளில் ஊறியவர்; வாழ்நாள் முழுமையும் கருப்புத் துண்டு அணிந்தார்.
தி.மு.கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று பலமுறை சிறைவாசம் ஏற்றவர்.
அவர் மட்டும் அல்ல, அவரது அண்ணன் தம்பிகள் என அவரது குடும்பம் முழுமையுமே திராவிட இயக்கப் பற்றாளர்கள்தான்.
வேதாரண்யத்திற்கு என்னைப் பலமுறை அழைத்துச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார்.
அவர் மீது நான் மிகுந்த அன்பும் பற்றும் பாசமும் கொண்டு இருந்தேன்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், வேதாரண்யம் நகர் மன்றத்தலைவர் கும்பகோணம் கூட்டுறவு வங்கித் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துப் பெருமை சேர்த்தார்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் தி.மு.கழகத் தோழர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
21.09.2020
No comments:
Post a Comment