Wednesday, September 30, 2020

அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றும் முடிவைக் கைவிடுக! புதிய பல்கலைக் கழகத்திற்கு அப்துல்கலாம் பெயரைச் சூட்டுக! வைகோ வலியுறுத்தல்!

உயர் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த, உயர் சிறப்பு கல்வி நிறுவனம் (Institute of Eminence-IOE) என்னும் சிறப்புத் தகுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு 2017 இல் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி நிதி உதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு செய்யப்பட்டு, ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்னும் சிறப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணா பல்கலைக் கழகத்தை, மத்திய அரசு சிறப்புநிலை கல்வி நிறுவனம் என்கிற உயரிய சிறப்பை வழங்கிவிட்டு, பல்கலைக் கழகத்தின் தனித்துவமான அடையாளத்தை ஒழித்துக் கட்டவும் தீர்மானித்து இருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு துணை போவதன் மூலம் தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைத்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அண்ணா பல்கலைக் கழகத்தின் தனித்தன்மையைச் சிதைக்கும் வேலையில் இறங்கி உள்ளது.

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சட்டமன்றத்தில் உலகப்புகழ் பெற்ற பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான கிண்டி அண்ணா பல்கலைக் கழகம், நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்படும் என்று சட்ட முன்வரைவை நிறைவேற்றி இருக்கிறது. அதில் அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றினால் உலக அளவில் அதற்குரிய பெயரும், தரமும் குறைந்துவிடும். அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது. அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. அண்ணா பல்கலைக் கழகத்தைப் பிரித்தால் அதன் கீழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு உரிய நிதி கிடைக்காது. மாணவர்கள் எந்தப் பல்கலையின் கீழ் தேர்ச்சி பெற்றார்கள் என்ற குழப்பம் நீடிக்கும் என்று அண்ணா பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர்கள் தமிழக ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் அவர்களுக்குக் கடிதம் எழுதி உள்ளனர்.

மேலும் அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் கூட்டமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் நான்கு வளாகக் கல்லூரிகளும் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் தங்கள் தரத்தைச் சிறப்பாக பராமரிப்பதால்தான் உலக அளவில் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அங்கீகாரம் உள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரில் இதுவரை வெளியான ஆய்வுகளை அளவுகோலாக வைத்துதான் சிறந்த ஆய்வு மையத்துக்கான ‘ஹை இன்டக்ஸ்’ மதிப்பெண் வழங்கப்படும். பெயர் மாறினால் அந்த மதிப்பெண் பூஜ்யமாகிவிடும். தொடர் உழைப்பில் 41 ஆண்டுகள் உருவாக்கிய தரத்தை ஐந்தாண்டுகளில் மீட்டெடுக்க முடியாது. இதேபோல், பழைய மாணவர்கள் நிதி உதவி, தொழில் நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மற்றும் பட்டம் அளிப்பு அங்கீகாரம் என அனைத்து நிர்வாகப் பணிகளும் கேள்விக்குறியாகும்.

தற்போதுள்ள சிண்டிகேட் முறை மாற்றப்பட்டு, நிர்வாகக் குழு அமைக்கப்படுகிறது. இதையடுத்து, துணைவேந்தர் பதவி இயக்குநர் என்று மாற்றப்படும். மேலும், இட ஒதுக்கீட்டுக்கான மதிப்பெண் வரையறை மற்றும் கல்விக் கட்டணம் உயரும் என்பதால் ஏழை மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். அண்ணா பல்கலைக் கழகம்தான் தமிழக மாணவர்களின் பொறியியல் கனவுக்கு உயிர் ஊட்டுகிறது. எனவே கல்வியாளர்கள் கருத்துகளைக் கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பல்கலைக் கழக பேராசிரியர் கூட்டமைப்பு தெரிவித்து இருக்கிறது.

தமிழக ஆளுநரும், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரும், அண்ணாவின் பெயரால் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தின் தனித்துவத்தைச் சிதைக்கும் முயற்சிக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதை ஏற்க முடியாது.

அண்ணா பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்றும் முடிவைக் கைவிட்டு, இணைப்புப் பொறியியல் கல்லூரிகளைப் புதிதாக உருவாக்கப்படும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்துடன் இணைத்து, இளைஞர்கள், மாணவர்களின் நெஞ்சில் எழுச்சி நாயகராக வீற்றிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பெயரைச் சூட்டுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
30.09.2020

No comments:

Post a Comment