Thursday, December 31, 2020

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்க! வைகோ வலியுறுத்தல்!

கொரோனா கொடும் துயரம் தொடங்கிய மார்ச்சு மாதத்திலிருந்து கடந்த பத்து மாதங்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 12.94 இலட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் சுமார் 80.81 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 

வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் இந்நிறுவனங்கள் கொரோனா பொது முடக்கத்தால் மூட வேண்டிய நிலை உருவானதால் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலை உருவானது. கடந்த செப்டம்பர் முதல் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் முழு வீச்சோடு இயங்க முடியாமல் தவித்து வருகின்றன. 

இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் விலை அதிகரித்து விட்டன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 32 % ; அலுமினியம் 26 % ; இயற்கை ரப்பர் 52 % ; காப்பர் 77 % என தாறுமாறாக மூலப் பொருட்கள் விலை ஏற்றத்தால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்கவோ உற்பத்தியைத் தொடங்கவோ முடியாமல் கைபிசைந்து நிற்கின்றன. 

பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் இத்தகைய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தமிழக அரசு, முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக வெற்று விளம்பரம் செய்து கொள்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.ஈ. ரகுநாதன் அரசின் கவனத்திற்குக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். 

அதில் 35 விழுக்காடு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதால் மத்திய, மாநில அரசுகளின் உடனடிக் கவனம் தேவைப்படுவதாகவும் இல்லையெனில் பொருளாதார நிலையில் மிகப் பெரிய இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும்; வேலையின்மையால் தொழிலாளர்களின் நிலைமை மோசமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் சொத்து வரி, தண்ணீர் வரி மற்றும் தொழில் வரி ஆகியவற்றை இரண்டு ஆண்டுகளுக்குத் தள்ளுபடி செய்ய வேண்டும்; ரூ. 100 கோடி வரையில் இங்குள்ள நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதுடன் கூடுதல் கடன் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்றும், நிலையான மின் கட்டணம் வசூலிப்பதை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சீராக இயங்கச் செய்யவும், தொழிலாளர்கள் வேலை இழப்பைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். 

வைகோ 

பொதுச் செயலாளர், 

மறுமலர்ச்சி தி.மு.க 

‘தாயகம்’ 

சென்னை - 8 31.12.2020

வைகோ எம்பி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!

ஆதி அந்தம் இல்லாத கால வெள்ளத்தில் எழுந்து விழும் அலைகளுள் ஒன்றாக எழுகிறது 2021 ஆம் ஆண்டு.

மத்தியில் ஆளுகின்ற நரேந்திர மோடி அரசு, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை ஏற்படுத்தி, நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைத்து, ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே வரி; ஒரே குடும்ப அட்டை; ஒரே வேளாண் மண்டலம் என்று எதேச்சதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கின்றது.
உழவர் பெருங்குடி மக்களுக்குப் பெரும் துரோகம் செய்து, வேளாண் சட்டங்கள் எனும் மூன்று நாசகாரச் சட்டங்களைக் கொண்டு வந்து கோடிக்கணக்கான விவசாயிகள் வாட்டி வதைக்கும், பனியிலும், குளிரிலும் தங்களை வருத்திக் கொண்டு போராடுகிற நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.
தமிழகத்தை கடந்த பத்தாண்டு காலமாக வரலாறு காணாத ஊழல் கொள்ளையின் மூலம் அண்ணா தி.மு.க. அரசு நாசம் செய்து வருகிறது. தமிழகத்திற்கு விடியலை ஏற்படுத்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் வர இருக்கிறது. ஊழல் ஆட்சி அகற்றப்படவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமையவும் உறுதி எடுத்துக்கொண்டு தமிழக மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
31.12.2020

Tuesday, December 29, 2020

விவசாயிகள் மீது காவல்துறை அடக்குமுறை! தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்!

விவசாயிகளின் வாழ்வைச் சீர்குலைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் தில்லியில், எரிமலைச் சீற்றத்தோடு விவசாயிகள் 33 நாட்களாகப் போராடி வருகின்றார்கள். இதுவரை 50 பேர் இறந்துவிட்டனர்; ஒரு வழக்கறிஞர் உட்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தை ஆதரித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில், இன்று 29.12. 2020 மாலை தஞ்சையில் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அதைத் தடுக்கும் நோக்குடன், பேரணிக்குப் புறப்பட்டு வருகின்ற விவசாயிகளை, ஆங்காங்கு காவல்துறை வழிமறித்துத் தடுத்துக் கைது செய்கின்றது. விவசாய சங்கத் தலைவர்களின் வீடுகளுக்குச் சென்று, தாய்மார்களை காவல்துறை அச்சுறுத்துகின்றது.
நேற்று 28.12.2020 அன்று, பெருமாநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளைக் கைது செய்து மண்டபங்களில் அடைத்துள்ளனர்.
சென்னை ஒய்எம்சிஏ திடலில், ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டித் திரட்டி வந்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கு உரிய உரிமை, உழுது பயிரிட்டு உணவுப் பொருள்களை விளைவித்து மக்களை வாழ வைக்கின்ற விவசாயிகளுக்கும் உண்டு. நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து தஞ்சைப் பேரணிக்குப் புறப்பட்டவர்களையும் கைது செய்து அடைத்துள்ளனர். இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களை ஏவுகின்ற தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, கைது செய்த விவசாயிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்; தஞ்சைப் பேரணியைத் தடுக்கும் முயற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகின்றேன்.
வினையை விதைத்து வினையை அறுவடை செய்ய வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
29.12.2020
1

Monday, December 28, 2020

குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்! வைகோ அறிக்கை!

தமிழகத்தில் அண்மைக்காலமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதை, அன்றாடம் பதிவு செய்யப்படுகின்ற போக்சோ வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது.
கொரோனா முடக்கத்தின் விளைவாக வருமானத்திற்கு வழி இல்லாத குடும்பங்களில், பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருக்கின்ற ஆண் பெண் குழந்தைகள், வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.
அடித்தட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு, அரசு நிதி உதவிகள் போதுமான அளவு கிடைக்கவில்லை.
இலட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்கள், இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே சென்று விட்டன.
இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த, குடும்பத்தினரே பின்னணியாக இருந்தார்கள் என்பதைப் படிக்ககின்ற வேளையில் கண்ணீர் துளிர்க்கின்றது.
நாட்டில் நிலவுகின்ற வறுமையின் கொடுமையை உணர முடிகின்றது.
அயனாவரத்தில் வாய் பேச முடியாத சிறுமிக்குக் கொடுமை இழைத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்; கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது.
ஏற்கனவே, காவல் நிலையங்கள், கொலைக்களங்கள் ஆகி இருக்கின்றன.
இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்ற ஒரு சில காவலர்களால், காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்றது.
எனவே, குற்றம் இழைக்கின்ற காவலர்கள், பாலியல் தரகர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அக்கறை கொண்டு, கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
28.12.2020

Sunday, December 27, 2020

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயம்! வைகோ கண்டனம்!

எடப்பாடி பழனிச்சாமி அரசு, இந்துத்துவ சனாதன சக்திகளின் கைப்பாவையாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரின் தலையீட்டீற்கு ஆதரவு வழங்கி வரும் அதி.மு.க. அரசு, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராயின் நூலின் ஒரு பகுதியை அகற்றியது.

சென்னை பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தத் துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சரவணனை துறைத் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்ற சங் பரிவார் முயற்சி மேற்கொண்டது. அதை ஏற்று ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் பாடத் திட்டத்தில் பகவத் கீதையை பாடமாக வைக்கவும், சமஸ்கிருத மொழியைத் திணிக்கவும் துணைவேந்தர் சூரப்பா முயன்றபோது, எடப்பாடி பழனிச்சாமி அரசு வேடிக்கை பார்த்தது.
மத்திய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்புக்கும், சமஸ்கிருதமயமாக்கலுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து வெண்சாமரம் வீசி வருகின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசும் இந்துத்துவ சனாதனக் கும்பலுக்கு துணைபோய் இருக்கின்றது.
பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் கல்வி தொலைக்காட்சியில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவி உடை தரித்து, அவருக்குக் காவி வண்ணம் பூசும் இழி செயலில் பள்ளிக் கல்வித் துறையும் இறங்கி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மனித சமத்துவத்தை வலியுறுத்திய திருவள்ளுவருக்கு, பிறப்பினில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மனுநீதிக் கும்பல் காவி வண்ணம் பூசுவதை இன உணர்வு கொண்ட தமிழ் மக்கள் சகிக்க முடியாது. உடனடியாக தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.12.2020

Saturday, December 26, 2020

தோழர் நல்லகண்ணு பிறந்த நாளில் வைகோ எம்பி வாழ்த்து!

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்களின் 96 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி அவர்கள், அவரது இல்லம் சென்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

உடன் மதிமுக மாவட்ட செயலாளர்கள், முன்னணி தலைவர்கள் இருந்தார்கள்.

பேரிடர் மீட்புப் பணியில் இறந்த மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ஒரு கோடி ஒருவருக்கு அரசு வேலை வழங்குக! வைகோ கோரிக்கை!

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அன்று, நிவர் புயல் தாக்கியபோது, காஞ்சிபுரம் அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மின் வயர்கள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், மின் நிலைய அதிகாரியான திரு சுந்தரராஜன், உதவிப் பொறியாளர் அவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 

அவசர வேலை என்பதால், பக்கத்து மின்நிலையத்தில் நிரந்தர ஊழியராகப் பணியாற்றும்  பாக்கியநாதன் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் தயாளன் ஆகிய இருவரையும் அலைபேசியில் அழைத்து மின் இணைப்பைச் சரி செய்யக் கூறி உள்ளார். ஆனால், அவர்களை அந்தப் பணிக்கு அனுப்பிய விவரத்தை, சக பணியாளர்களுக்கு, அவர் தெரிவிக்கவில்லை. 

அவர்கள் இருவரும், இரவு பதினொன்று முப்பது மணி அளவில், கையில் டார்ச் லைட்டுடன் மழைநீர் தேங்கி இருந்த பகுதிக்குச் சென்று, அறுந்து விழுந்து கிடந்த வயர்களைச் சுற்றிக் கொண்டு இருக்கும்போது, மின் நிலையத்திற்கு வந்த மற்றொரு பணியாளர், மின் இணைப்பைக் கொடுத்து விட்டார் 

இதனால் மின்சாரம் பாய்ந்து, பாக்கியநாதன், தயாளன் இருவரும் அந்த இடத்திலேயே இறந்து விட்டனர். உதவிப் பொறியாளர் சுந்தரராஜன் அவர்களின் கவனக் குறைவால், இரண்டு உயிர்கள் பறிபோய் விட்டன. அதனால், சுந்தரராஜன் உள்ளிட்ட நான்கு பேர்களை, தமிழக அரசு பணி இடை நீக்கம் செய்துள்ளது.

இறந்தவர்களின் உடற்கூறு ஆய்வு செய்து உடலை ஒப்படைக்கும்போது, இரண்டு குடும்பத்தினரிடமும் தலா 3 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கி உள்ளனர்.  

பாக்கியநாதன், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளகேட் மின் நிலையத்தில் வயர் மேனாகப் பணியாற்றி வருகின்றார். மாத ஊதியம் 35,662 பெற்று வந்துள்ளார். 

பணியின்போது இறந்த காவலர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் வழங்குகின்றது. எனவே, பேரிடர் மீட்புப் பணியின்போது இறந்த மின்வாரிய ஊழியர்கள் இருவருடைய குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் மறுவாழ்வு நிதியும், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகின்றேன். 

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
26.12.2020

Friday, December 25, 2020

கிராம சபை கூட்டங்களுக்கு தடை; எடப்பாடி அரசின் எதேச்சாதிகாரம்! வைகோ கடும் கண்டனம்!

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டுகோள் விடுத்து, பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகின்றன.

இக்கூட்டங்களில் மக்கள் அணி, அணியாக திரண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

தமிழக அரசின் நிர்வாக அலட்சியத்தால் ஊராட்சிப்பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், வீடு கட்டும் திட்டங்கள், சாலைப் பணிகள் போன்றவை பாதிக்கப்பட்டு உள்ளன.

திமுக முன்னின்று நடத்தும் கிராம சபை கூட்டங்கள் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

ஊராட்சி சட்ட விதிகளைக் காரணம் காட்டி, கிராமசபைக் கூட்டங்களை நடத்த தடை போடும் எடப்பாடி பழனிசாமி அரசு, சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியை பெற்றுத் தரவும், மாநில அரசின் நிதியை வழங்காமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதும் நியாயமா?

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதைத் தடுக்க கடந்த அக்டோபரில் இக்கூட்டங்களை நடத்த தடை போடப்பட்டது.

ஆனால் தடைகளைத் தகர்த்து  வெற்றிகரமாக கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

இப்பொழுதும் மக்கள் பெருந்திரள் பங்கேற்புடன் கிராமசபைக் கூட்டங்கள் நடப்பதை தடுக்க அதிமுக அரசால் போடப்படும் தடைகள் நொறுங்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
25.12.2020

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.பரமசிவன் மறைவு. தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வைகோ இரங்கல்!

தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து தமிழின, மொழி, பண்பாடு, மரபுகளைக் காப்பாற்றுவதற்கு ஆய்வுத் துறையில் வெளிச்சம் பாய்ச்சிய ஒளிச்சுடர் அணைந்தது.

தமிழர் வாழ்வியலில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிறப்புற்று விளங்கிய பண்பாட்டு மரபுகளை அசைக்கமுடியாத அழுத்தமான ஆவணங்கள் மூலம் ஆய்வு நூல்களை படைத்த பண்பாட்டுப் பேரறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக தாக்கியிருக்கிறது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் தமிழியல் துறை தலைவராக பணியாற்றியவர்.

பேராசிரியர், முனைவர் தொ.ப அவர்கள் பேராசிரியர் மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார், பேராசிரியர் நா.வானமாமலை ஆகியோரை முன்னோடியாக அவர் கருதினாலும் தமிழ் இலக்கியத்தையும், பண்பாட்டையும் ஆராய்ச்சி செய்வதற்கு புதிய முறையைப் பின்பற்றி முத்திரை பதித்தவர் ஆவார்.

தொ.ப .அவர்களின் ‘அழகர் கோவில் ஆய்வு’ நூல் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

புத்தகங்களில் இருந்தும், தத்துவங்களில் இருந்தும் வாதங்களை முன்வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில், தமிழ்நாட்டுத் தெருக்களில், கோவில் வாசல்களில், ஆற்றங்கரைகளில், திருவிழாக்களில், நாட்டார் தெய்வங்களின் முற்றங்களில் கள ஆய்வு செய்து, ஆய்வு உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தினார்.

அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும், சமயங்களின் அரசியல், விடுபூக்கள், பண்பாட்டு அசைவுகள், போன்ற ஆய்வு நூல்கள் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அவர் அளித்த கொடையாகும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் தோய்ந்து முன்னோடியாக திகழ்ந்தவர்.

மேலும் அவரது சங்க இலக்கிய ஆய்வுகளில் எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருள் என்பதோடு மட்டுமின்றி, அதன்மீது எழுப்பப்படும் ஆய்வுக் கேள்விகள், பயன்படுத்தும் சான்றுகள் ஆகியவற்றிலும் தமிழியல் ஆய்வுக்கான புதிய களங்களை உருவாக்கின.

திராவிட இயக்கத்தின் மீது தீராத பற்றுக் கொண்ட தொ.ப., தந்தை பெரியார் சிந்தனைகள், கொள்கைகள் , தமிழினத்தின் விடியலுக்கு எல்லா காலத்திற்கும் தேவைப்படுகின்றன என்பதை இறுதி மூச்சு அடங்கும் வரையில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

பார்ப்பனியம் விழுங்கி  செரிக்க முடியாத தந்தை பெரியார் கலக மரபு சிந்தனையாளர் என்று மிகச்சரியாகக் கணித்தவர் தொ.ப. அவர்கள்.

இந்துத்துவ சனாதன சக்திகள் நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க முனைந்துள்ள சூழலில் மதச்சார்பற்ற சக்திகளின் போராட்டத்திற்கு கருத்து வளம் சேர்த்தவர் தொ.ப.

“மதத்தின் பெயரால் ஏற்படும் பதற்றங்கள், ரத்தக் களறிகள், பிறவகை வன்முறைகள், அனைத்திலும் இந்து என்ற கருத்தியலே மையமாகத் திகழ்கிறது. எனவே பெரியாரியப் பார்வையில் இந்து என்ற சொல்லுக்கு அரசியல் சட்டம் நேரிடையான வரைவிலக்கணத்தைத் தரவேண்டும்.

அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும், நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும்” என்று வலுவாகக் குரல் எழுப்பி, இந்த மண்ணில் சமய நல்லிணக்கம் தழைக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் எழுப்பியவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்.

அவரது மறைவு தமிழினத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும், தமிழ் பண்பாட்டு ஆய்வு உலகுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.ப. அவர்களுக்கு மதிமுக வீர வணக்கத்தை செலுத்துகிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய நண்பர்கள், ஆய்வு மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
25.12.2020

சென்னை மாநகராட்சியின் அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்! வைகோ அறிக்கை!

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் என்ற பெயரில், சென்னை மாநகர மக்கள், இனி சொத்து வரியுடன் கூடுதலாக, குப்பை கொட்டக் கட்டணம் செலுத்த வேண்டும் என, மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. கொரோனா முடக்கத்தால் வருமானம் இன்றிப் பரிதவிக்கும் மக்கள் மீது, மேலும் ஒரு அடி விழுந்து இருக்கின்றது. 1000 பேருக்கு மேல் கூடுகின்ற நிகழ்ச்சிகளை நடத்துவோர், 20000 ரூபாய் கட்ட வேண்டும் என, கூட்டத்திற்கு ஏற்றவாறு பல வகையான கட்டணங்களையும் அறிவித்து இருக்கின்றார்கள். இதனால், அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல, திருமணம், கோவில் திருவிழா என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

இத்தகைய முடிவுகளை, மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநகராட்சி மன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், அண்ணா தி.மு.க. அரசு செய்த குழப்பங்களால், தமிழ்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட ஊர் ஆட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடத்தவில்லை. அடுத்த நான்கு மாதங்களில், சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில், இத்தகைய அறிவிப்பு தேவை அற்றது.

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே, அனைத்துத் தெருக்களிலும் கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான கார்கள், இலட்சக்கணக்கான இரு உருளை ஊர்திகள் பல ஆண்டுகளாகக் கிடக்கின்றன. அவற்றைச் சுற்றி குப்பைகள் குவிந்து, சிறுநீர் கழிப்பிடமாக, கொசுக்களின் பிறப்பிடமாக ஆகி இருக்கின்றது. ஆனால், அத்தகைய கழிவுகளையும், மலைபோல் குவியும் குப்பைகளையும் அகற்றுவதற்கு, போதிய நடவடிக்கைகளை சென்னை மாநராட்சி மேற்கொள்ளவில்லை. 

குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, இன்றுவரையிலும் சீருடைகள் வழங்கவில்லை. அமைச்சர்கள் பவனி வருகின்ற கடற்கரைச் சாலை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே, சீருடைகள் வழங்கி இருக்கின்றார்கள். மற்ற இடங்களில், பெண்கள் சேலை அணிந்துதான் குப்பைகளை அகற்றுகின்றார்கள்; அப்போது கிளம்பும் மணல் தூசுகள், அவர்களுடைய உடையில்தான் முழுமையாகப் படிகின்றது. மேலும், ஊர்திகள் மோதாமல் இருக்க அவர்கள் அணிந்து இருக்கின்ற ஒளிரும் பட்டைகளுக்கும் கூட, 100 ரூபாய் வாங்கிக்கொண்டுதான் கொடுத்து இருக்கின்றார்கள். 21 ஆம் நூற்றாண்டிலும்கூட, தூய்மைப்பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்காமல் இருப்பது வேதனைக்கு உரியது. எனவே, சென்னை மாநகரில் பணிபுரிகின்ற ஆண், பெண் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும், மாநகராட்சி உடனே சீருடைகள் வழங்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டண அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.12.2020

கிறிஸ்துமஸ் வாழ்த்து! வைகோ!

மனித குலத்திற்கு வெளிச்சமாக, கருணை வெள்ளமாகத் திகழும் இயேசு பெருமானின் போதனைகளை நினைவுகூர்ந்து, மன ஆறுதல் பெறவும், மகிழ்ச்சி அடையவும், உலகம் முழுமையும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

சாதி மதங்களின் பெயரால், வெறுப்பும் பகையும் வளர்ந்து, அதன் விளைவாக, கலவரங்களும், இரத்தக் களறிகளும் மனித சமுதாயத்துக்குப் பேரபாயமாக அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்ற நிலையில், மீட்பர் இயேசு மலையின் மேல் நின்று, அமுத மொழிகளாகப் பொழிந்த கருத்துகள், சுயநலமும் பேராசையும் அலைக்கழிக்கும் இன்றைய உலகத்திற்கு நல்வழி காட்டுகின்றன. 

“சாந்த குணம் உள்ளவர்களாக, நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்களாக, சிறுமைப்படுகின்றவர்களுக்கு இரக்கம் உள்ளவர்களாக, இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களாக, நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்களாக வாழ்கின்றவர்கள் பூமிக்கு உப்பாகவும், உலகத்துக்கு வெளிச்சமாகவும் இருப்பார்கள்” என்று அவர் சொன்னதை ஏற்று வாழ்ந்த உத்தமர்கள் அவற்றை மெய்யாக்கி இருக்கின்றார்கள்.

பிலாத்துவின் சபையில் இயேசு நிந்திக்கப்பட்டபோதும், சித்திரவதை செய்து சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியபோதும், அன்பின் சிகரமாகவே திகழ்ந்தார். சகிப்புத்தன்மைக்கும், இன்னா செய்யாமைக்கும், இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்த உயர்பண்புக்கும் அவரது வாழ்க்கையே சிறந்த எடுத்துக்காட்டு.

திராவிட மொழிகளின் ஒப்பு இலக்கணம் தந்த கால்டுவெல்; திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி ஆக்கம் செய்த ஜி.யு. போப்; தேம்பாவணி தந்த வீரமா முனிவர்; தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு; கடற்கரை வாழ் மக்களுக்குத் தொண்டு ஊழியம் புரிந்த புனித சேவியர் அடிகளார், திருச்சபை சேவை செய்து கொலையுண்டு மடிந்த தோமையார், ஜான் பிரிட்டோ உள்ளிட்ட இயேசு சபை அருட் தந்தையரும், போதகர்களும் ஆற்றிய அரும்பணிக்கு, தமிழ் இனம் நன்றிக்கடன்பட்டு இருக்கின்றது. 

சகோதரத்துவமும், மனித நேயமும், மக்கள் மனதில் மேலோங்க, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அனைவரும் உறுதி மேற்கொள்வோம். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.12.2020

Sunday, December 20, 2020

மாநில சட்ட துறை செயலாளருக்கு உற்சாக வரவேற்பு!

மதிமுக மாநில சட்ட துறை செயலாளர் வழக்கறிஞர் அமல் ராஜ் அவர்கள் இன்று 20-12-2020 குமரி மாவட்ட தக்கலை ஒன்றிய கழக கூட்டத்திற்கு வருகை தந்தார். அவரை குமரி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், மாநில ஆபத்து உதவிகள் அணி துணை செயலாளர் சுமேஷ் மற்றும் குமரி மாவட்ட நிர்வாகிகள் நாகர்கோவில் வைத்து வரவேற்றனர்.

Saturday, December 19, 2020

கோவில்பட்டியில் ரயில்களை நிறுத்த வேண்டும்; கூடுதல் தொடரிகளை இயக்க வேண்டும்; பெயர்களை மாற்றக் கூடாது. வைகோ அறிக்கை!

கொரோனா ஊரடங்குக்குப் பின்னர், ரயில்வே துறையினர், பாதிக்கும் குறைந்த அளவிலேயே ரயில்களை இயக்கி வருகின்றனர். அப்படி ஓடுகின்ற தொடரிகள், முன்பு வழக்கமாக நிற்கின்ற பெரிய தொடரி நிலையங்களில் கூட இப்போது நிற்காமல் ஓடுகின்றன. இதனால், தமிழகம் முழுமையும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான தீப்பெட்டி ஆலைகள், கடலை மிட்டாய், பட்டாசு, விவசாயம், நூற்பு ஆலைத் தொழில்கள் நிறைந்த பகுதி கோவில்பட்டி ஆகும். இவை தவிர, மத்திய மாநில அரசு அலுவலகங்கள், தனியார், அரசு கலைக்கல்லூரிகள், பொறிஇயல் கல்லூரிகளும் நிறைய உள்ளன. கோவில்பட்டி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள், இந்தியப் படையில் பணிபுரிகின்றார்கள். இவர்களும், மருத்துவத்திற்காக மதுரை, சென்னை, திருவனந்தபுரத்திற்குச் செல்கின்றவர்களும், போக்குவரத்திற்குத் தொடரிகளையே பெரிதும் சார்ந்து இருக்கின்றார்கள். தென் மாவட்டங்களில் ஒரு பெரிய இணைப்பு மையமாக கோவில்பட்டி திகழ்கின்றது.
எனவே, கோவில்பட்டி வழியாக நாள்தோறும் 27 பயணிகள் தொடரிகள் இரு வழிகளிலும் ஓடிக் கொண்டு இருந்தன. முன்பதிவின் மூலமாக, நாள்தோறும் ரூபாய் 4 இலட்சம் என ஆண்டுக்கு ரூபாய் பத்துக் கோடி, மதுரைக் கோட்டத்திற்கு வருவாய் பெற்றுத் தருவதால், கோவில்பட்டி நிலையம், ‘ஏ’ கிரேடு தகுதி பெற்று இருக்கின்றது.
ஆனால், இப்போது பாதித் தொடரிகள்தான் ஓடுகின்றன. அதிலும், நாகர்கோவில்-சென்னை விரைவுத் தொடரி எண் 06064, மதுரையில் இருந்து நாள்தோறும் இரவு 11 மணிக்குப் புறப்படும் புனலூர் விரைவுத் தொடரி எண் 06731, 06730, நாகர்கோவில் -கோவை விரைவுத் தொடரி எண் 02667, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் அதிவிரைவுத் தொடரி எண் 02633 ஆகியவை, கோவில்பட்டி நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.
மேலும், வாரந்தோறும் புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மட்டுமே ஓடுகின்ற, கன்னியாகுமரி- தில்லி நிஜாமுதீன் விரைவுத் தொடரி எண் 06012, வெள்ளிக்கிழமை மட்டும் ஓடுகின்ற நாகர்கோவில்-சென்னை வண்டி எண் 06064 ஆகிய தொடரிகளும் கோவில்பட்டி நிலையத்தில் நிற்பது இல்லை.
இதனால், ஏழை,எளிய, நடுத்தரப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுகுறித்து, தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். எனவே, மேற்கண்ட தொடரிகள் அனைத்தும், முன்பு போலவே கோவில்பட்டி நிலையத்தில் நின்று செல்ல, தெற்கு ரயில்வே உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் தற்போது விரைவு ரயில்களை மட்டுமே இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். பாசஞ்சர் வண்டிகளை ஓட்டுவது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், தமிழகம் முழுமையும் இலட்சக்கணக்கான மக்கள், அன்றாடம் பாசஞ்சர் ரயில்களைளைத்தான், தங்களுடைய தொழில், வேலைவாய்ப்புக்கு நம்பி இருக்கின்றனர். எனவே, பாசஞ்சர் ரயில்களையும் இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி என்ற பழந்தமிழ்ப் பெயர்களில் ஓடிக்கொண்டு இருந்த அத்தனைத் தொடரிகளின் பெயர்களையும் மறைத்து, சிறப்பு ரயில்கள் என ஒரே பெயரில் இயக்குகின்றார்கள்.
இப்படிப் பெயர்களை மாற்ற வேண்டிய தேவை என்ன? யாருடைய அழுத்தத்தின் பெயரில் மாற்றினார்கள்? இது தேவை அற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். தமிழக மக்களின் உணர்வுகளோடு தெற்கு ரயில்வே விளையாடக் கூடாது; வழக்கமான பெயர்களிலேயே தொடரிகளை இயக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
19.12.2020

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்றன! வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் வைகோ!

மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 18.12.2020 அன்று சென்னை -வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:-

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ~து ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டோம்என் பார்க்கும் நிலை
என்று உழவு அதிகாரத்தில் மூன்று பாடல்களைச் சொல்லி,
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து
என்று உழவர் பெருங்குடி மக்களுடைய உன்னதத்தைக் குறளோவியமாகத் தீட்டி, எழில்மிகு வள்ளுவர் கோட்டத்தை அமைத்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய கனவு நனவாகின்ற விதத்தில், வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில், அவரால் திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களுடைய சிலைக்கு அருகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று இருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உண்ணாநிலை அறப்போரின் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் - இன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் - நாளை கோடையில் மலரப் போகின்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய முதலமைச்சர் ஆருயிர்ச் சகோதரர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களே,
தாய்க் கழகத்திலிருந்து எங்களைப் பாராட்டுவதற்கு வந்து அமர்ந்திருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர் ஆருயிர் அண்ணன் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கங்களாகத் திகழுகின்ற கட்சிகளின் மதிப்புமிக்கத் தலைவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே, அன்புடைய தாய்மார்களே, அருமைப் பெரியோர்களே வீறுகொண்டு வந்திருக்கின்ற வாலிப வேங்கைகளே, ஜனநாயகத்தின் விழிகளாகச் செவிகளாகத் திகழ்கின்ற செய்தியாளர்களே, ஊடக ஒளிப்பதிவாளர்களே சிரம் தாழ்ந்த வணக்கம்.
“எங்களைத் தூக்கிலே தொங்க விடாதீர்கள். தூக்குக் கயிற்றை எங்கள் கழுத்திலே மாட்டாதீர்கள். எங்கள் கண்களில் கட்டப்பட்டு இருக்கின்ற கருப்புத் துணியை அவிழ்த்து விடுங்கள். நாங்கள் மடிகின்ற நேரத்தில் புன்னகை பூத்தவாறு இந்த மண்ணைப் பார்த்தவாறு மடிய விரும்புகின்றோம்.
நாங்கள் புரட்சிக்காரர்கள். நாங்கள் ஆயுதம் ஏந்திகள். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே எங்களை தூக்கிலிடாதீர்கள். எங்களின் மார்பை நோக்கிச் சுடுங்கள். உங்கள் துப்பாக்கி ரவைகள் எங்கள் மார்பை துளைத்துக் கொண்டு செல்லட்டும். எங்கள் பச்சை இரத்தம் இந்த மண்ணில் பரிமாறப்படட்டும்” என்று சொன்ன பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் வழி வந்த வீராதி வீரர்கள் பஞ்சாப் சிங்கங்களின் கர்ஜனையால் டெல்லியே நடுங்கிக் கொண்டு இருக்கக்கூடிய நிலையில், தலைநகர் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் துருட்டோ, “நாம் ஒரு குடும்பம். நமது நண்பர்கள் அங்கே போராடுகின்றார்கள். அவர்களை ஆதரிக்கின்றேன்” என்று கூறினார். இந்திய அரசு ஆட்சேபனை தெரிவித்தது. அதைக் குப்பையில் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் நான் ஆதரிக்கின்றேன் என்று கூறினார்.
ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அந்தோணியா கட்டரஸ், “இந்தியாவில் விவசாயிகள் போராடுகின்றார்கள். உரிமைகளுக்காகப் போராடுகின்றார்கள். உரிமைகளுக்காக யார் எங்கே போராடினாலும் அவர்களை ஆதரிக்க வேண்டியது நம்முடைய கடமை” என்று கூறினார்.
இதே நேரத்தில் டெல்லி போராட்டத்தை ஆதரித்து கலிபோர்னியா, சிட்னி, இலண்டன், கனடா நகரங்கள் என உலகத்தின் பல பகுதிகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் போராடுகின்றார்கள்.
இந்த டிசம்பர் 18 ஆம் நாள், இந்திய விடுதலை வரலாற்றில் மிக முக்கியமான நாள். ஐக்கிய மாகாணத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கசையடி கொடுக்கப்பட்டது. நைனிடால் சிறைச்சாலையில் இருந்த ஆசிய ஜோதி - மனிதருள் மாணிக்கம் பண்டித ஜவஹர்லால் நேரு இந்தச் செய்திகைக் கேள்விப்பட்டு, கசையடியை நிறுத்த வேண்டும் என்று நவம்பர் 1 ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார். நிறுத்தப்படவில்லை. இதனை அறிந்த நேரு, நான் உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கப் போகின்றேன் என்று மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் தொடங்கிய நாள்தான் 1930 டிசம்பர் 18.
மூன்று நாட்கள் உண்ணாவிரதம் முடிந்தபிறகு பிரிட்டிஷ் அரசு கசையடியை நிறுத்திக் கொண்டது என்பது வரலாறு.
“முதலமைச்சர் அவர்களே ஐந்து மாத காலத்திற்குப் பின்னர் நீங்கள் எங்கே இருக்கப் போகிறீர்கள்?” என்று பாலகிருஷ்ணன் கேட்டார். எதிரே இருந்த மக்கள் நீங்கள் சொன்னீர்கள், “புழலாக இருக்கலாம் அல்லது வேலூராக இருக்கலாம்” என்று.
ஆனால் முதலமைச்சரே ஒப்புக்கொண்டு விட்டார். நமது கூட்டணித் தலைவருக்கு வெற்றி. முதலமைச்சர் இன்றைக்கு என்ன பேசியிருக்கிறார் என்று ‘மாலை முரசு’ ஏட்டில் முதல் பக்கத்தில் வந்திருக்கின்றது. அவர் சொல்கிறார், “நான் மட்டும் முதலமைச்சர் அல்ல, மக்கள் எல்லோரும் முதலமைச்சர்கள்” என்று. ஐந்து மாத காலத்திற்குப் பின்னர் அவர் மக்களில் ஒருவராக இருந்து, நானும் முதலமைச்சர்தான் என்று சொல்லிக்கொள்வதற்கு ஏற்ற விதத்தில், நான் மட்டும் முதலமைச்சர் அல்ல, மக்கள் எல்லோரும் முதலமைச்சர்கள் என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.
மூன்று வேளாண் சட்டங்களை எப்படிக் கொண்டுவந்தார்கள் என்பதை எல்லோரும் விளக்கினார்கள். பேராசிரியர் ஜவாஹிருல்லா அழகாகச் சொன்னார். நெருக்கடி நிலை காலத்தில் கல்வித் துறையும், வனத் துறையும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் விவசாயம் எடுத்துச் செல்லப்படவில்லை. விவசாயம் மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், மாநிலப் பட்டியலில் இன்றும் இருக்கின்றது.
மாநிலப் பட்டியலில் இருக்கின்ற ஒரு பொருள் மீது எப்படி மூன்று சட்டங்களைக் கொண்டுவந்தீர்கள்?
ஐ.ஏ.எஸ். முன்னாள் அதிகாரிகள் 78 பேர் சேர்ந்து மிகத் திட்டவட்டமாக ஒரு அறிக்கை தந்திருக்கின்றார்கள். நாங்கள் அந்தச் சட்டங்களை வரி விடாமல் அலசி ஆராய்ந்து பார்த்தோம். கூட்டாட்சி தத்துவத்தின் குணாதிசயத்தையே குழிதோண்டிப் புதைக்கின்ற விதத்தில் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. கூட்டாட்சிக் கோட்டையின் செங்கல்கள் ஒவ்வொன்றாக உருவப்படுகின்றன. இந்த மூன்று சட்டங்களில் ஒன்று அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 இல் கொண்டுவரப்பட்டது. உருளைக் கிழங்கு, வெங்காயம், கோதுமை, நெல், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள் எல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்தது. இந்தப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தரும் கொள்கை நிலைநாட்டப்பட்டு இருந்தது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின் மூலம் இந்தப் பொருட்கள் எல்லாம் அதிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இன்றைக்கு அவை அத்தியாவசியப் பொருட்கள் கிடையாது. ஆகவே அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்க வேண்டியதும் இல்லை, அரசாங்கம் கொள்முதல் செய்ய வேண்டியதும் இல்லை.
இந்தக் கொடுமையான சட்டத்தைக் கொண்டுவந்த பா.ஜ.க. அரசுதான், அகில இந்திய அளவில் வேளாண்மை வணிக மண்டலம் என்ற இரண்டாவது சட்டத்தைக் கொண்டுவந்தது. பிற மாநிங்களில் மண்டிகள் என்று அழைக்கப்படுபவற்றை, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களாக டாக்டர் கலைஞர் அவர்கள் இங்கே உருவாக்கினார்கள். மக்களின் விளை பொருட்களைத் தீர்மானிக்கின்ற சந்தைகளாக உருவாக்கினார். இனி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் கிடையாது. அதை அகற்றுவதற்காகத்தான் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
வேளாண் உற்பத்திச் செலவு விலைக்கான ஆணையம், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து இருக்கின்ற விவசாய விளைபொருட்கள் பட்டியலிலிருந்து நெல், கோதுமை, சோளம், மக்காச் சோளம், ராகி, பார்லி, கம்பு உள்ளிட்ட எழு வகை உணவு தானியங்கள், ஏழு வகை எண்ணெய் வித்துகள், ஐந்து வகை பயிறு, பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, சணல், தேங்காய் நான்கு வகை வணிகப் பயிர்கள் என மொத்தம் 23 பொருட்களை நீக்கிவிட்டார்கள்.
வேளாண் நில ஒப்பந்த பண்ணைச் சட்டத்தின்படி இதற்கு முன்னர் இருந்த நிலையை மாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களே நேரடியாக வந்து ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். இந்த நிலத்தில், இத்தனை ஏக்கரில், இதுதான் சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு விதையும், உரமும் நாங்கள் தந்துவிடுகிறோம். பொருளை எங்களுக்குத்தான் தர வேண்டும். நாங்கள் நிர்ணயிக்கின்ற விலைக்குத்தான் தர வேண்டும். இதுதான் இந்தச் சட்டத்தில் இருக்கின்றது.
விலை உயர்ந்து இருக்கின்றது என்று விவசாயிகள் அதிக விலைக்கு விற்க முடியாது. ஒரு விவசாயி தன் நிலத்தில் என்ன பயிரிட வேண்டும் என்பதை அவன் தீர்மானிக்க முடியாது. பெரு வணிகர்கள், கொள்ளை லாபக்காரர்கள், அதானி, அம்பானி போன்ற பெரும் வர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு பகாசூரக் கம்பெனிகள் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்வார்கள்.
மிகுந்த முன்னெச்சரிக்கையோடும், திட்டத்தோடும் நரேந்திர மோடி செயல்பட்டு இருக்கின்றார். அதன் விளைவாகத்தான் அரியாணா மாநிலத்தில் இரயில்வே துறைக்கு என்று நிலத்தைக் கைப்பற்றி, அடிமாட்டு விலைக்கு அதை அதானி கம்பெனிக்கு விற்றார்கள். இலட்சக்கணக்கான டன் விளைபொருட்களைச் சேமித்து, பதுக்குவதற்காக, விலை ஏற்றத்தை ஏற்படுத்துவதற்காக அந்த இடத்தில் அவன் சேமிப்புக் கிடங்குகளை அமைத்துவிட்டான்.
அதுமட்டுமல்ல, பஞ்சாப் மாநிலத்தில் மோகோ என்கின்ற இடத்தில் 14 சேமிப்புக் கிடங்குகளை அதானி கம்பெனி அமைத்திருக்கின்றான். 8 இலட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் எடையுள்ள விளை பொருட்களை இந்தச் சேமிப்புக் கிடங்குகளில் வைக்க முடியும். இவை எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்டுவிட்டன.
விவசாயி பாடுபட்டு என்ன பலன்? கடனிலே பிறந்து, கடன் வாங்கி, கடனிலே வளர்ந்து, கடனிலேயே மடிகின்றான் விவசாயி.
நான் ஒரு விவசாயி என்கின்ற முறையில் பேசுகின்றேன். எனக்கு கலைப்பை பிடித்து உழவும் தெரியும், மாட்டு வண்டி பூட்டி வேகமாகச் செல்லவும் முடியும்.
நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்ததைப் பற்றி டி.ஆர். பாலு அவர்களும், தம்பி சிவா அவர்களும் மிக அழகாக எடுத்துரைத்தார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது என்றால், அதனை எதிர்த்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னாலும், வாக்கெடுப்பு நடத்தித்தான் ஆக வேண்டும்.
மக்களவையின் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்பினால், நிலைக்குழுவுக்கு அனுப்புவார்கள். மாநிலங்கள் அவையில் தெரிவுக் குழுவுக்கு அனுப்புவார்கள். இந்த முறை இருந்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதல் முறை இருந்தபோது, தெரிவுக் குழுக்களுக்கு அனுப்புகின்ற மசோதாக்களின் எண்ணிக்கை 60 சதவிகிதமாக இருந்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது அரசில், 71 சதவிகிதம் நிலைக் குழுக்களுக்கும், தெரிவுக் குழுக்களுக்கும் மசோதாக்கள் அனுப்பப்பட்டன.
ஆனால், 2014 இல் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததற்குப் பிறகு, அது 25 சதவிகிதமாகக் குறைந்தது.
இதன் பிறகு இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு மசோதாவைக்கூட நிலைக் குழுவுக்கும், தெரிவுக் குழுவுக்கும் அனுப்பவில்லை. ஆக ஜனநாயகத்தை அழிக்கின்றார்கள்; படுகொலை செய்கின்றார்கள்.
200 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியத்தில் பிரிட்டிஷ் படையில் இருந்த மகர் ராணுவ வீரர்கள் போர்க்களத்தில் போராடி வீரமரணம் அடைந்த 200ஆவது நினைவு நாள் பீமாகோரேகானில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்று மகர் ராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் பங்கேற்றனர். எல்கார் பரிஷத் நடத்திய அந்நிகழ்ச்சியில் இந்துத்துவ சனாதன சக்திகளை கண்டனம் செய்து உரையாற்றிய சிந்தனையாளர்களான கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ், கௌதம் நௌலகா போன்ற 80, 85 வயது தாண்டியவர்களை பொய் வழக்கில் கைது செய்து, ஈவு, இரக்கம் இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்.
விவசாயப் போராட்டக் களத்தில் இதுவரை 21 பேர் மடிந்திருக்கிறார்கள். ஆம்! அரவிந்த் கெஜ்ரிவால் ஆண் சிங்கம் அல்லவா? அவர் கிழித்து எறிந்திருக்கிறார். அவரைப் பாராட்டுகின்றேன். I Salute him. இதுவரை 21 பேர் மடிந்திருக்கிறார்கள் என்று அவர்தான் சொல்லி இருக்கிறார். இந்த உண்ணாவிரதப் பந்தலில் இருந்தவாறு 21 பேருக்கும் நாங்கள் வீரவணக்கம் செலுத்துகிறோம்.
பஞ்சாப்-க்கு, அரியாணா-வுக்குப் பக்கபலமாக, உத்திரப்பிரதேசத்திலிருந்து திக்காயத்தின் மகன் பத்து இலட்சம் பேரோடு திரண்டு வருகிறேன் என்று கூறினாராமே, அதைப் போல தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஜிப்ரால்டர் கோட்டையைப் போல தென்னகத்தில் தமிழகம் இருக்கின்றது.
இந்தப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. ஆம்! இருளுக்குப் பின்னால்தானே வெளிச்சம். கரிய இருட்டு வைகறைக்கு கட்டியம் கூறுகிறது என்பதைப் போல, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலைமையில் உதயசூரியன் உதித்து, தேர்தல் களத்தில் வெற்றி பெற்று, தளபதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வந்து, இந்தச் சட்டங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, விவசாயிகளைப் பாதுகாக்கின்ற முதலமைச்சராகத் திகழ்வார்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைக் கொண்டுவந்து, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி, ஏழாயிரம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரைப் போல, உழவர் பெருங்குடி மக்களைக் காப்பார். வெல்க உதயசூரியன்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.