Monday, May 31, 2021

சீனாவின் பிடியில்இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம்; இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்து! வைகோ MP அறிக்கை!

ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் இலங்கையின் தென் பகுதியில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு அளித்து இருக்கின்றது.

சூயஸ் கால்வாய் அருகே மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், 36 ஆயிரம் கப்பல்களைக் கையாளும் வசதி கொண்டதாகும். இதில் 4 ஆயிரத்து 500 எண்ணெய் கப்பல்களும் அடங்கும். இந்தத் துறைமுகம் அந்த மார்க்கமாகச் செல்லக்கூடிய கப்பல்களுக்கு சுமார் மூன்று நாட்கள் பயண நேரத்தை குறைக்கக்கூடியது. இதனால் எரிபொருள் தேவையும் கணிசமாகக் குறையும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சீன நாடு இலங்கையிடம் இருந்து குத்தகைக்குப் பெற்று, இந்த மண்டலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டி, சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு 269 ஹெக்டேர் நிலத்தையும் கையகப்படுத்தி சீனாவுக்கு வழங்கிட இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.

சீனாவின் கனவுத் திட்டமான சீனாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள சாலைகளையும், துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் புதிய பட்டுப் பாதை என்று அழைக்கப்படும் புதிய வழிகளை உருவாக்கும் முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை’ திட்டத்திற்கு முக்கியத் துறைமுகமாக இருக்கும் என்பதால், இதன் மூலம் சீனாவின் இராணுவத் தளமாக இப்பகுதி மாறிவிடும் ஆபத்து உருவாகும் சூழல் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் நிலைமை ஏற்படும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கை அரசுக்குத் துணை நின்ற சீனா, தமிழ்நாட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்பகுதியைக் கைப்பற்றிக் கொள்வதும், அங்கே இராணுவத் துருப்புகளை நிறுத்தவும் துணிந்தால் தமிழ்நாட்டிற்கும் கேடு விளையும்.

எனவே ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
31.05.2021

Sunday, May 30, 2021

அமுதசுரபியாகிவிட்ட தமிழக அரசு. வைகோ MP பாராட்டு!

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெயரில் தலா ஐந்து இலட்சம் வைப்பீடு செய்யப்படும். குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அந்தத் தொகை குழந்தைக்கு வட்டியுடன் வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்க இடம் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.

கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுடன் இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அரசு காப்பகம் அல்லது விடுதியில் இல்லாமல் உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக மாதம் மூன்றாயிரம் உதவித் தொகை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும். ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா தொற்றால் பெற்றோரில் மற்றொருவரையும் இழந்த குழந்தைகளுக்கும் ஐந்து இலட்சம் ரூபாய் அவர்கள் பெயரில் வைப்பீடு செய்யப்படும்.

அரசு நலத்திட்டங்களில் இக்குழந்தைகளுக்கும் கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மணிமேகலை காப்பியத்தில், கையில் அமுத சுரபியுடன் காணார், கேளார், பேசார் போன்ற ஆதரவற்றவர்களுக்கு அள்ளி வழங்கியதைப் போல, தமிழக அரசே அமுதசுரபியாக ஆகிவிட்டது. மக்களுக்காகத்தான் அரசு என்பதை நிருபித்துள்ளது.

மனிதநேயத்தின் மறுபதிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.05.2021

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மறைவு! வைகோ MP இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பலி ஆனார் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது.

தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைப் போராளியாக பொதுவுடமை இயக்கத்தில் பணியாற்றியவர்;

பல ஆண்டுகளாகத் தொழிற்சங்க இயக்கத்திலும்,பெண்கள் இயக்கத்தைக் கட்டுவதிலும் பழுத்த அனுபவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.

ஐ.நா.மன்றத்தில் இந்தியாவுக்கான தூதுக்குழுவில் ஆய்வு உதவியாளராக பணியாற்றிய பின்னர் தாயகம் திரும்பியதும் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.

கீழ்வெண்மணிப் படுகொலைகள் நாட்டையே உலுக்கிய போது நேரில் அங்கு சென்று உண்மைகளைக் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது வாச்சாத்தியில் பழங்குடி மக்களும்,பெண்களும் காவல்துறை வன்முறைக்கு உள்ளான நிகழ்வுகளை நேரில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தினார்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்திய பட்டியலின, பழங்குடியினர் ஆணையத்தில் வாதாடி நீதியை நிலைநாட்டப் போராடினார்.

தோழர் மைதிலி சிவராமன் அவர்கள் பெண்களும் மதசார்பின்மையும், பெண்ணுரிமை, சமூகம்- ஒரு மறு பார்வை உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதி, சிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவராக இறுதி மூச்சு அடங்கும் வரையில் பொறுப்பிலிருந்து இயங்கிய மைதிலி சிவராமன் அவர்கள் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் பெண்ணுரிமை இயக்கத்திற்கும், சிபிஎம் கட்சித் தோழர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.05.2021

ஆ. இராசா வாழ்விணையர் மறைவு. வைகோ MP இரங்கல்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஆ.இராசா அவர்களின் வாழ்விணையர் திருமதி பரமேசுவரி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். திராவிட இயக்கத்தின் ஈடற்ற தளகர்த்தராக ஆ.இராசா அவர்கள் பொது வாழ்வில் சிகரங்களை எட்டுவதற்கு காரணமாக இருந்த இணையரை இழந்து இருக்கிறார்.

அரசியலில் சோதனைகள், வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அனைத்திலும் ஆ.இராசா அவர்களுக்கு தோன்றாத் துணையாக இருந்த அவரது வாழ்விணையர் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

மனைவியை இழந்து கண்ணீர் கடலில் தவிக்கும் ஆ.இராசா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
29.05.2021

Saturday, May 29, 2021

டி.எம். காளியண்ணன்; அனந்த கிருஷ்ணன் மறைவு. வைகோ இரங்கல்!

கொங்குச் சீமையின் மங்கா மணிவிளக்காகத் திகழ்ந்த பெரியவர், திரு காளியண்ணன் அவர்கள் மறைவுச் செய்தி அறிந்து வருந்துகின்றேன். 

காந்தி அடிகளின் அழைப்பை ஏற்று, விடுதலைப் போராட்டக் களத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் வரைவு நாடாளுமன்ற உறுப்பினராக இடம் பெற்றதுடன், மக்கள் அவையிலும், சட்டமன்றங்களிலும் தம்முடைய முத்திரையைப் பதித்தார். அவரது எளிய வாழ்க்கை, அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் பாடம் ஆகும். 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் அவர்களும் இயற்கை எய்தி விட்டார். அவருக்கு வயது 92. 

பொறிஇயல் கல்வித்துறையில், ஏழை, எளிய, சாமானிய மக்களின் சகாப்தத்தைத் தொடங்கி வைத்தவர் ஆவார். அவர் கொண்டு, ஒற்றைச் சாளர முறைச் சேர்க்கை, (Single Window System) என்பது, கல்வியின் தரத்திற்கும், மாணவர்களின் திறத்திற்கும், ஒரு அருமையான வடிகாலாக அமைந்தது. கடந்த 40 ஆண்டுகளாக, தமிழக மாணவர்கள், பொறிஇயல் கல்வியை மிகப்பரவலாகக் கற்று, இன்று உலகம் முழுமையும் கோலோச்சுகின்றனர்; அதுவும் அடித்தட்டு மக்கள், இந்தத் துறையில் பெற்று இருக்கின்ற வளர்ச்சி மிகப்பெரிது என்றால், அந்தப் பெருமையில் திரு அனந்தகிருஷ்ணன் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கணினியிலும், இணையதளங்களிலும் தமிழ் மொழியின் பயன்பாட்டுக்கு, அடித்தளம் அமைத்தார். கல்வித்துறையின் உட்கட்டமைப்பை ஒழுங்குற அமைத்துத் தந்த அவரது கல்வித்தொண்டு, தமிழ்நாட்டு வரலாற்றில் என்றைக்கும் நினைவு கூரப்படும்.

தமிழ்ச் சமூகத்தின் முன்னோடிகளுள் ஒருவர், 101 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்த பெரியவர் காளியண்ணன், பெருந்தகை அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
29.05.2021

Thursday, May 27, 2021

இலட்சத்தீவு மக்கள் மீது பா.ஜ.க அடக்குமுறை! வைகோ MP கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் சாதி மதவெறிக் கும்பல் வழிநடத்தும், பாரதிய ஜனதா கட்சி, ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்து நொறுக்க, சம்மட்டி கொண்டு தாக்கி வருகின்றது. நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற ஏழாம் ஆண்டு நிறைவை ஒட்டி, கடந்த ஆறு மாதங்களாக தில்லி வீதிகளில் அமர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்ற விவசாயிகளின் அழைப்பை ஏற்று, நாடு முழுமையும் கருப்புக்கொடி அறப்போர் நடைபெற்றது. அதற்கு ஆதரவு தெரிவித்து விடுத்த அறிக்கையில், பாஜக ஆட்சியின் கொடுமைகளைச் சுட்டிக் காட்டி இருந்தேன்.

இப்போது, நமக்கு அருகில் நிகழ்கின்ற அடுத்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்து இருக்கின்றது. 

கேரளத்திற்கு மேற்கே, அரபிக் கடலில், 32 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்ட இலட்சத்தீவு  இருக்கின்றது. மக்கள் தொகை ஒரு இலட்சத்திற்குள்தான். அவர்களுள் 99 விழுக்காட்டினர், பட்டியல் இனப் பழங்குடியினர். ஆனால், அவர்கள் முஸ்லிம்கள் என்பது, சங் பரிவார் கும்பலின் கண்களை உறுத்துகின்றது. 

இந்திய அரசு அமைப்புச் சட்டத்தின்படி, காஷ்மீரில் பிற மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது. ஆனால், பாஜக அரசு அந்தச் சட்டத்தைத் திருத்தி, காஷ்மீர் மாநிலத்தையும் இரண்டாகப் பிரித்து விட்டது. அதை எதிர்த்து மக்கள் வீதிக்கு வர முடியாதபடி, ஓராண்டுக்கும் மேலாக வீடுகளுக்கு உள்ளேயே அடைத்து வைத்துப் பட்டினி போட்டனர். அம்மாநிலத்தின் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் சிறையில் அடைத்தனர்.

அதேபோன்ற அடக்குமுறையை, இப்போது இலட்சத்தீவில் மேற்கொள்கின்றனர். 

இலட்சத்தீவுகளிலும், பிற மாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது. அந்த மாநில மக்கள், எளிமையான, இயற்கை வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அங்கே மது கிடையாது. குற்ற வழக்குகள் இல்லை. விவசாயம் செய்யும் நிலப்பரப்பு இல்லை என்பதால், மீன்பிடித்தலும், தேங்காய் வணிகமும்தான் முதன்மையான தொழில். மாட்டுக்கறிதான் முதன்மை உணவு. பள்ளி மாணவர்களுக்கான பகல் உணவிலும் கூட மாட்டுக்கறியே வழங்கப்பட்டு வந்தது.   

இலட்சத்தீவு, இந்திய ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி. ஆனால், துணைநிலை ஆளுநர் கிடையாது. தலைமைப் பொறுப்பில், (Administrator) தினேஷ் ஷர்மா இருந்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் இயற்கை எய்தினார். அடுத்து, பிரபுல் கோடா பட்டேல் என்பவரை, நரேந்திர மோடி அனுப்பி வைத்தார். அவர், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநில உள்துறை இணை  அமைச்சர் பொறுப்பு வகித்தவர். 

ஆர்எஸ்எஸ் கும்பல் பிறப்பித்த ஆணைகளை நிறைவேற்றத் தொடங்கினார். LDAR (Lakshadweep Development Authority Regulations) என்ற சட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி, லட்சத்தீவில் வசிக்கும் எவரையும் எந்த காரணமும் கூறாமல், நிலத்தில் இருந்து வெளியேற்றவோ அல்லது மாற்று இடத்தில் வசிக்கவோ உத்தரவிடலாம்.

குற்றம் புரிவோர் இல்லாத லட்சத்தீவில், PASA(Lakdhadweep Anti-Social Activity Regulations) என்ற சட்டத்தின் கீழ், எவரையும் காரணம் எதுவுமே இல்லாமல் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்கலாம்;

Draft Panchayat Notification என்ற பெயரில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் ஊர் ஆட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது; 

Lakshadweep Animal Preservation Regulations என்ற பெயரில் கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தின் திரை மறைவில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மாட்டுக்கறி வைத்து இருக்கவோ, பாதுகாக்கவோ, கொண்டு செல்லவோ கூடாது;  

மீறினால் மாட்டுக்கறி பறிமுதல் செய்யப்படுவதோடு, கைது செய்யப்பட்டு,10ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்; 1 லட்சம் ரூபாயில் இருந்து 5லட்சம் ரூபாய் வரை தண்டம் கட்ட வேண்டும்; 

இனி பள்ளிகளில் மாட்டுக்கறி கிடையாது; பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் ஊழியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள்  பணி நீக்கம்; 

38க்கு மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகின்றன; 

சுற்றுலா என்ற பெயரில் சாராயக்கடைகளைத் திறக்க ஆணை.

190க்கு மேற்பட்ட சுற்றுலா துறை ஊழியர்கள் பணி நீக்கம்; கடற்கரையின் அழகு கெட்டுப்போகிறது என்ற பெயரில்,மீனவர்கள் தங்களது வலைகள் உட்பட மீன் பிடி கருவிகளை பாதுகாக்கும் கூடங்கள் (Sheds) அனைத்தையும் பிய்த்து வீசி விட்டனர்;  

பவழப் பாறைகளையும், இயற்கையின் பேரழகையும் கொண்ட லட்சத்தீவின் கடற்கரையையும், நிலப்பரப்பையும், தனது நண்பர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தங்கத்தட்டில் வைத்து தாரை வார்த்து கொடுக்க நரேந்திர மோடியால் அனுப்பப்பட்ட, பிரபுல் கோடா படேல், அந்த வேலையை, மின்னல் வேகத்தில் செய்து வருகின்றார். பொறுப்பு ஏற்ற நான்கே மாதங்களுக்குள், இத்தனை அத்துமீறல்கள். 

நீண்ட நெடுங்காலமாக, லட்சத்தீவு மக்கள் தங்களது வணிகம் நடவடிக்கைகளை, கேரள மாநிலம் பேப்பூர் துறைமுகம் வழியாகவே செய்து வருகின்றனர்; இனி, கர்நாடகத்தின் மங்களூரு துறைமுகம் வழியேதான் நடக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டுள்ளார். இலட்சத்தீவு வணிகம் அனைத்தையும், கேரளாவில் இருந்து அப்படியே பாஜக ஆளும் கர்நாடகாவுக்கு கொண்டு சென்று விட வேண்டும்; இலட்சத்தீவு மக்களின் கேரள உறவையும் தொடர்புகளையும் துண்டித்து விட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

லட்சத்தீவு மக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் பிரபுல் படேல் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்து,  கேரள முதல்வர் பினறாயி விஜயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எளமரம் கரீம், ஆரிஃப் ஆகியோர், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி உள்ளனர். பிரபுல் கோடா படேலைத் திரும்ப அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

இலட்சத் தீவில், பாஜக நரேந்திர மோடி அரசு மேற்கொண்டு வருகின்ற அடக்குமுறையை,  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது; பிரபுல் கோடா படேலை உடனே திரும்பப் பெற வேண்டும் என, குடியரசுத் தலைவரை வலியுறுத்துகின்றோம்.  

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
27.05.2021

Wednesday, May 26, 2021

விருதுநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர் தமிழய்யா நாராயணசாமி மறைவு. வைகோ இரங்கல்!

விருதுநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர் தமிழய்யா நாராயணசாமி மறைந்தார் என்ற செய்தி கேட்ட வேளையில், இப்படித் துன்பங்கள் அடுக்கடுக்காக வருகின்றனவே என்று துடித்துப் போனேன்.

படிக்கின்ற காலத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிர பற்றுக் கொண்டவர். தமிழ் ஆசிரியராகப் பணி ஆற்றியதால், ‘தமிழ் ஐயா’ என்றுதான் அவரை அழைப்பார்கள். கடந்த 27 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டக் கழகத்திற்குத் தூணாகத் திகழ்ந்தார். கடந்த 15 ஆண்டுகளாக மாவட்டக் கழக அவைத் தலைவர் பொறுப்பு வகித்தார்.  

மாவட்ட இலக்கிய அணிச் செயலாளராகப் பணி ஆற்றினார். சில நூல்களையும் எழுதி வெளியிட்டு இருக்கின்றார். சாத்தூரில் வசித்து வந்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மிகவும் உடல்நலம் குறைந்தபோது, கோவை கே.ஜி. மருத்துவமனையில் சேர்த்து,  நலம் பெற ஏற்பாடு செய்தேன்.  ஆனால் இப்போது கொரோனா எனும் மரணக் கழுகு அவரைக் கொத்திக்கொண்டுப் போய்விட்டது.

அவரது மறைவு கழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். தயவு தாட்சன்யம் இல்லாமல் நியாயத்தை எடுத்து உரைப்பார். யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்? வாழ்க்கை நிலையானது அல்ல என்ற வள்ளுவரின் திருக்குறளை எண்ணி, மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.

அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது பிள்ளைகளுக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
26.05.2021

Monday, May 24, 2021

ம.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் மறைவு. வைகோ MP இரங்கல்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், ஆருயிர்ச் சகோதரர் துரை.பாலகிருஷ்ணன் அவர்கள், உடல் நலக் குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து பேரிடியாய் என் தலையில் விழுந்தது. உடைந்து நொறுங்கிப் போனேன். 27 ஆண்டுகளாக, எந்த சபலத்திற்கும், சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காமல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உயிருக்கும் மேலாக நேசித்துப் பணியாற்றி வந்தார்.

திராவிட இயக்க உணர்வாளர். இளைஞராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். துடிப்பான செயல்வீரர். அதனால்,  மக்களின் பேரன்பைப் பெற்று, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார்; தஞ்சாவூர் மாவட்டக் கவுன்சில் உறுப்பினர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் என பல தேர்தல்களில், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவர். வடக்கூர் தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடங்கிய நாள் முதல் தன்னை இணைத்துக் கொண்டார். எத்தனையோ சோதனைகளில், நெருக்கடியான காலகட்டங்களில் எனக்கு உறுதுணையாக பக்கபலமாக இருந்தார்.

கடந்த சில மாதங்களாவே உடல் நலக் குறைவுற்று சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவு, கழகத்திற்கு வந்துள்ள கண்ணீர்ச் சோதனை ஆகும். அவருடைய தொண்டுக்கும் அவர் ஆற்றிய பணிகளுக்காகவும் கட்சி கடமைப்பட்டு இருக்கின்றது. இந்தத் துயரத்தில் இருந்து நான் விடுபடுவதற்கு நீண்ட நாள்கள் ஆகும்.  சிரித்த முகத்தோடு, தொண்டர்களை அரவணைத்து அவர் ஆற்றி வந்த பணி மறக்க இயலாதது.

அவரது மறைவால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மறுமலர்ச்சி தி.மு.கழகக் கொடிகளை, மூன்று நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.05.2021

சி.பா. ஆதித்தனார் நினைவு நாள். வைகோ MP புகழ் வணக்கம்!

தமிழர் தந்தை ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களின் 40 ஆவது நினைவு நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், சென்னை அண்ணா நகரில் உள்ள தமது இல்லத்தில், ஆதித்தனார் படத்திற்கு மலர்கள் தூவி வணங்கினார்.

அதன்பிறகு அவர் கூறியதாவது....

தமிழர் தந்தை ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களின் 40 ஆவது நினைவுநாளில், அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்துகின்றோம். பத்திரிகை உலகில் வேறு எவரும் செய்ய முடியாத புரட்சியைச் செய்து காட்டினார். வழக்கறிஞராக, மிகப்பெரும் செல்வாக்கையும், செல்வத்தையும் சிங்கப்பூரில் பெற்றார்.

உயிர்  தமிழுக்கு.. உடல் மண்ணுக்கு.. என்று முழங்கி, அதன்படியே வாழ்ந்து காட்டினார். அந்தக் காலத்தில் முன்னேறிய சமூகத்தினரின் கைகளில் மட்டுமே செய்தித்தாள்கள் இருந்த நிலையை மாற்றி, தேநீர்க்கடைகளில் தினத்தந்தியைத் தவழச் செய்தார். மாடி வீட்டில் வசிப்பவர்கள் மட்டும் அன்றி, குடிசை வீட்டில் வசிப்போரும், ஏழை, எளிய பாட்டாளிகளும் நாள் இதழ்களைப் படிக்கப் பயிற்றுவித்தார்.

உலகச் செய்திகள் முதல் உள்ளூர்ச் செய்திகள் வரை சுவைபடத் தந்தார். அதனால், நாள்தோறும் பத்திரிகை படிக்க வேண்டும் என்ற நிலைமையைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவரே ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்கள்தான். அது மட்டும் அல்ல. தமிழ் மண்ணுக்கு உரிமைகள் வேண்டும் என்பதற்காக தனித்தமிழ் மாநாடு ஐம்பதுகளில் தஞ்சையில் நடத்தினார். அந்த மாநாட்டை அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்தான் தொடங்கி வைத்தார்கள். தமிழ் ஈழம் அமைய வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.

கவிஞர் காசி ஆனந்தன் போன்றவர்களை இணைத்துக்கொண்டு, அதை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார். ஈழத்தமிழருக்கு ஆதரவாக நின்றார். அவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்தார். தமிழ்நாட்டிலும் ஓர் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார். ஆனால், தாம் செய்த உதவிகள் எதையும் அவர் வெளிக்காட்டிக் கொண்டது இல்லை. அதை நான் நன்றாக அறிவேன்.

குற்றாலத்தில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எனது திருமணத்தில் ஐயா ஆதித்தனார் அவர்கள் பங்கேற்று வாழ்த்திச் சிறப்பித்தார்கள். காயாமொழியில் அவரது உருவச் சிலையைத் திறந்து வைக்கும் பெரும் பேறினை, ஐயா இராமச்சந்திர ஆதித்தனாரும், சிவந்தி ஆதித்தனாரும் எனக்கு வழங்கினார்கள்.

ஐயா அவர்களுடைய புகழ், தமிழ் மண்ணில் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’ 
சென்னை - 8 
24.05.2021

Sunday, May 23, 2021

The Family Man 2 இந்தித் தொடரை தடை செய்க! அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கடிதம்!

செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அன்புள்ள பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு வணக்கம்.

The Family Man 2 என்ற இந்தித் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்தக் கடிதத்தை எழுதி இருக்கின்றேன்.

இந்தி மொழியில் வெளியாகும் இந்தத் தொடரின் முன்னோட்டக்காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.

தமிழர்களை பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன்  தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.

ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக்காட்சிகள் இருக்கின்றன.

இத்தகையக்காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்தத் தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

The Family Man 2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
23.05.2021

Dear Shri Prakash Javadekar Ji,
Vanakkam!

This is regarding Lodging of complaint against the objectionable THE FAMILY MAN-2 Serial, (in Hindi) being telecast and immediate steps to be taken to ban release of the Film.

The Trailer of Serial, “The Family Man-2”  in Hindi language was recently released in the Social Media network, depicting Tamilians as terrorists and ISI Agents and having link with Pakistan.  Moreover, the sacrifices made by Tamil Eelam warriors were also wrongly shown as terrorist act.  Tamil speaking Actress Samandha was shown as a terrorist and having connection with Pakistani terrorists.   These descriptions have hurt the sentiments of Tamil people and Tamil culture and offensive against the Tamil communtiy.   The people of Tamil Nadu are raising serious objections over such act and are protesting against the Serial.

Therefore, it is urged that the Ministry of I & B should take immediate action to stop the release of THE FAMILY MAN-2,  in OTT, Amazon Premium etc.  Otherwise, the people of Tamil Nadu will react very seriously and the Government has to face the serious consequences.

Yours sincerely,
(VAIKO)

Shri Prakash Javadekar,
Hon’ble Minister of Information & Broadcasting
Government of India
New Delhi.

Copy to:  The Joint Secretary (P&A), Ministry of Information and Broadcasting, Government of India, Room No. 552, “A” Wing, Shastri Bhawan, New Delhi.

Saturday, May 22, 2021

தீப. நடராசன் மறைவு - வைகோ இரங்கல்!

பழுத்த இலக்கியவாதியும், ரசிக மணி டி.கே.சி. அவர்களின் செல்லப் பேரனுமான, திரு தீப நடராசன் என்ற சிதம்பரநாதன் (92) அவர்கள் இயற்கை எய்திய அறிந்து வருந்துகின்றேன். 

தென்காசியில், ‘ஜோதி பிரம்ம ஞான சங்கம்’ என்ற அமைப்பை, தமது இல்லத்தில் இரண்டாவது சனிக்கிழமைதோறும் நடத்தி வந்தார். அவரனைய இலக்கியவாதிகள், அங்கே கூடி, தங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். ரசிகமணியின் பாரம்பரியத்தை, இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் பங்கு ஆற்றினார். ‘தென்காசி திருவள்ளுவர் கழகம்’, ‘மூத்த குடிமக்கள் மன்றம்’ ஆகியவற்றில், முதன்மையாக வைத்துப் போற்றப்பட்டார். கி.ரா.வோடு, நெருங்கிய நட்பும், கடிதப் போக்குவரத்தும் கொண்டு, கடித இலக்கியக் களஞ்சியமாக, எழுதிக் குவித்துள்ளார். பழம்பெரும் பாரம்பரியத்தின் அடையாளமாக, தம்முடைய இல்லத்திற்கு ‘பஞ்சவடி’ எனப் பெயர் சூட்டி இருந்தார். 

தமிழ் அறிஞர் தீப. நடராசன் அவர்களது மறைவுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.05.2021

கொலைக் குற்ற வழக்கு பதிவு செய்க. வைகோ MP அறிக்கை!

தமிழ்நாட்டை உலுக்கிய அந்த நிகழ்வு நடந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆம்; நாளை மே 22. 2018 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், தூத்துக்குடியில் 13 அப்பாவித் தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவர்கள் செய்த தவறு என்ன? தூத்துக்குடி சுற்றுச் சூழலைக் கெடுக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, அறவழியில் அணிவகுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச்  சென்றதுதான். வழியில் அவர்களை மறித்த காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, வெறியாட்டம் ஆடினர். பொதுமக்களை நோக்கிச் சுட்டனர். ஜான்சி, ஸ்னோலின் என்ற இரு பெண்கள் உட்பட, 13 பேர் குண்டடிபட்டுச் செத்தனர். அவர்களுடைய மூளை தெறித்து மண்ணில் விழுந்தது.

தமிழ்நாட்டில் இதுவரை நடக்காத கொடுமை அது. ஸ்டெர்லைட் ஆலை முதலாளிக்கு, அண்ணா தி.மு.க. ஆட்சியாளர்கள் குற்றேவல் புரிந்ததன் விளைவாகத்தான் அந்த 13 உயிர்கள் பலியாகின. அவர்களைச் சுட்டுக்கொன்ற அந்தக் குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும்  இல்லை.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற அப்பாவி வணிகர்களை அடித்துக் கொன்ற காவல்துறையினர் மீது, கொலைக் குற்ற வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என நான் அறிக்கை விடுத்தேன். அதன்படியே, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். வழக்கு நடைபெறுகின்றது.

அதுபோல, ஸ்டெர்லைட் ஆலைக்காக, 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீதும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்ய வேண்டும். அப்பொழுதுதான், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்.

தூத்துக்குடி மண்ணையும் மக்களையும் காக்க, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி, தங்கள் இன்னுயிர்களை ஈந்த போராளிகளுக்கு, வீர வணக்கம் செலுத்துவோம்!

 வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
21.05.2021

அடுத்த தாக்குதல்: கருப்பு பூஞ்சைஆயத்தம் ஆவோம்! வைகோ அறிக்கை!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30000 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில், ஏற்கனவே கொரோனா தாக்கி,  மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை (மியூகோர் மைகோசிஸ்) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வருகின்றன. மராட்டிய மாநிலத்தில் 64 பேர் இறந்து விட்டார்கள்; தில்லி மற்றும் கர்நாடகாவிலும் தாக்கி இருக்கின்றது. இதன் அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி இருக்கின்றது. 

நேற்று கோவில்பட்டியில் இரண்டு பேர், கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல் வந்தது. ஏற்கனவே இனிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, கருப்பு பூஞ்சை உடனடியாகத் தொற்றுகின்றது. இது கண்கள், பற்கள் வழியாக குருதியில் கலந்து, உயிரைப் பறிக்கும் தன்மை உடையது. இந்த நோய்க்கு, Lipsomal Amphotericin B Injection மருந்தை, இந்தியா முழுமையும் பரிந்துரைக்கின்றார்கள். 

கொரோனா மருந்துகள், உயிர்க்காற்று உருளைகளுக்குக் கடுமையான தேவை ஏற்பட்டு இருப்பதுபோல, அடுத்து இந்த மருந்தும் தேவைப்படுகின்றது. எங்கே கிடைக்கும் என மக்கள் தேடுகின்றார்கள். 

எனவே, தமிழக அரசு, இதுகுறித்துக் கவனம் செலுத்தி, ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; இந்த மருந்து கிடைக்கும் இடங்கள், இருப்பு குறித்த தகவல்களை, தமிழக அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை இணையத்தில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

பொதுமக்கள், சமூக விலகலைக் கடைப்பிடித்து, வாய் மூக்கு மூடிகளை அணிந்து, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இல்லை என அறிவித்து விட்டார்கள். அதுபோல, அனைவரும் தடுப்பு ஊசி குத்திக் கொள்ளுங்கள்; அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரோனாவை ஒழிப்போம்!

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.05.2021

Tuesday, May 18, 2021

கரிசல் குயில் பறந்தது. கி.இரா. மறைவு! வைகோ MP இரங்கல்!

செந்தமிழை, செழுந்தமிழாய் செழிக்கச் செய்யும் கரிசல் காட்டு மண்ணில், இடைசெவலில் மலர்ந்த, ஒப்புவமை சொல்ல முடியாத புதுமையாளர், புரட்சியாளர் கி. இராஜநாராயணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

கோபல்ல கிராமம், கரிசல் காட்டுக் கடுதாசி, கோபல்லபுரத்து மக்கள் என, தமிழில் அதுவரை இல்லாத புதிய எழுத்து நடையை அறிமுகம் செய்து, வரலாற்றுச் செய்திகளை, சொல் புதிதாய், சுவை புதிதாய் எல்லோரும் படிக்கின்ற எளிய நடையில், கரிசல் மண்ணின் மக்களுடைய பேச்சு வழக்கில் நமக்குத் தந்த கி.இரா. அவர்கள் இலக்கியத் துறையில் பேராட்சி புரிந்தார். கரிசல் வட்டார வழக்குச் சொல் அகராதி ஆக்கித் தந்தார்.
உலகெங்கும் வாழும் இளம் இலக்கியவாதிகள், நாட்டுப்புறக் கலை ஆர்வம் கொண்டவர்கள் அத்தனைப் பேருக்கும் ஊக்கம் அளித்து ஆதரித்து வளர்த்து வந்தார். எழுத்தாளர்களுக்கு ஒரு செவிலித்தாயாகத் திகழ்ந்த அன்புப் பாசறை அவரது புதுவை இல்லம் ஆகும்.
சிந்தனையாளர்களை ஊக்கப்படுத்தி, ஆற்றுப்படுத்தி வாழ்ந்த கி.இரா போன்ற ஒரு மாமனிதரை, எங்கு தேடினாலும் கிடைக்காது. இன்று, எண்ணற்ற இளைஞர்கள், அவரது எழுத்து நடையைப் பின்பற்றி எழுதுகின்றனர். திரைப்படங்களை இயக்குகின்றனர்.
புதுவை பல்கலைக்கழகம், அவரை மதிப்புறு பேராசிரியர் ஆக ஏற்று, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரைப் பேணிப் பாதுகாத்து, அவருடைய வழிகாட்டுதலில், தமிழ் இலக்கியக் கருத்து அரங்குகளையும், பின் நவீனத்துவச் சிந்தனைகளையும், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்களிடம், அடுத்த நூற்றாண்டை நோக்கி அவர்களை இட்டுச் செல்லவும் ஆற்றியுள்ள பணி மகத்தானது.
ரசிகமணியின் தாக்கத்தோடும், பொக்கைவாய்ப் சிரிப்போடும், குழி விழுந்த கண்களில் பகலவனைப் போல ஒளிவீசும் பார்வையோடும் அவர் வாழ்ந்த நாள்கள் ஒவ்வொன்றும், தமிழுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கு உரம் ஊட்டியது. வரமாக வாய்த்தது.
முன்னோர் மரபையும், பின்வரும் உலகையும், இணைத்த மையப்புள்ளி கி.இரா. அவர்கள், நம் நெஞ்சங்களில் என்றென்றும், நிலைத்த புகழுடன் இருப்பார். தமிழ் என்று சொன்னாலே நமக்கு எப்படி உள்ளம் பூரிக்கின்றதோ, அதைப்போல, கி.இரா. என்கின்ற இரண்டு எழுத்துகள், தமிழ் உள்ளவரை, தமிழர்கள் உள்ளவரை, இலக்கியங்கள் உள்ளவரை, புன்னகை பூத்துக் குலுங்கும்.
கி.இராவுடன் எனது தொடர்பு, 50 ஆண்டுகளைக் கடந்தது. அவ்வப்போது அவரது நலம் விசாரித்துக் கொள்வேன். கி.இரா. அவர்களை ஆசிரியராகக் கொண்டு, கதைசொல்லி என்ற இலக்கிய இதழைத் தொடர்ந்து நடத்தி வருகின்ற கே.எஸ். இராதாகிருஷ்ணன், அவருக்கு நெருக்கமாகவும், தொடர்ந்து தொடர்பிலும் இருந்து வந்தார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கி.இரா. அவர்களுடைய 85 ஆவது பிறந்த நாளை, தலைநகர் சென்னையில் நடத்தி, அவரைச் சிறப்பித்தோம். நூற்றாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாட, தமிழ் இலக்கிய உலகம் ஆர்வத்துடன் காத்திருந்த வேளையில், அந்தக் கரிசல் குயில் பறந்து விட்டது.
கி.இரா.வை இழந்து வாடும் இலக்கிய ஆர்வலர்கள், அவரது கரிசல் இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனைப் பேருக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.05.2021

Monday, May 17, 2021

துளசி ஐயா வாண்டையார் மறைவு! வைகோ MP இரங்கல்!

பெருமதிப்பிற்கு உரிய பெருந்தகை துளசி ஐயா வாண்டையார் அவர்கள், இயற்கை எய்திய செய்தி அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தஞ்சைத் தரணியில், காங்கிரஸ் பேரியக்கத்தைத் தொடங்கித் தோள்கொடுத்து வளர்த்த முன்னோடிகளுள் ஒருவரான ஐயா அவர்கள், பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு நெருக்கமானவர். காந்தியின் தொண்டர்.
நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்தபோது, ஒருநாள் கூடத் தவறாமல், நாடாளுமன்றம் சென்று, நூற்றுக்கு நூறு வருகையைப் பதிவு செய்தவர்.
எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும், நேர்மையாகவும், தனித்தன்மையோடும் செய்து முத்திரை பதித்தவர். பெருநிலக்கிழார் என்றபோதிலும், எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.
ஏழை,எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு உழைத்தார்.
பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர் சேர்க்கையில், நன்கொடை எதுவும் வாங்கக்கூடாது என விதி வகுத்தார். தமது வருவாயின் பெரும்பகுதியை, அக்கல்லூரியின் வளர்ச்சிக்காகச் செலவிட்டார். பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றினார்.
பெருந்தமிழ் அறிஞரான ஐயா அவர்கள், எண்ணற்ற ஆய்வு நூல்களை, தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி இருக்கின்றார். அவருடன் இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று, அவரது திறன் ஆய்வு உரையைக் கேட்டு வியந்து இருக்கின்றேன். அவரது இல்லத்திற்குச் சென்று அவருடன் உணவு அருந்தி இருக்கின்றேன்.
என் மீது பற்றும் பாசமும் கொண்டு இருந்தார். என்னுடைய தம்பி மகன் திருமணத்தை ஐயா நடத்தி வைக்க வேண்டும் என்று நான் கேட்டபோது மறுக்காமல், கலிங்கப்பட்டிக்கு வந்து, தலைமை ஏற்று நடத்தி வைத்துச் சிறப்பித்தார்.
94 வயதான அவர், நூறாண்டு கடந்து வாழ்வார் என்று கருதி இருந்தேன். அவரது மறைவு, ஆற்ற இயலாதது. பழம்பெரும் தலைவர்களை,அண்மைக்காலமாக இழந்து கொண்டே வருகின்ற அதிர்ச்சியை, தாங்குவது அல்லாமல், வேறு வழி இன்றி, தவிக்கின்றது தமிழ்நாடு. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரால் பயன் பெற்றவர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
17.05.2021

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வைகோ MP புகழ்வணக்கம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ MP அவர்கள், இன்று 17-05-2021 காலையில் தமது அண்ணா நகர் இல்லத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தினார்.


தனித்தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என உறுதி பூண்டார்.


Sunday, May 16, 2021

மதிமுக வழக்குஉரைஞர் வேல்முருகன் மறைவு! வைகோ MP இரங்கல்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் செங்கல்பட்டு மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கு உரைஞர் சு. வேல்முருகன் அவர்கள், தன்னலம் இன்றி கழகத்திற்கு அரும்பாடுபட்டு உழைத்து வந்தார். எத்தகைய பணிகள் இருந்தாலும், சிரித்த முகத்தோடு செய்து முடிப்பார்.
விமான நிலையத்திற்கு நான் வரும்போதெல்லாம் வரவேற்க வருவார். மாவட்டத்தில் வழக்கு உரைஞர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை, தானே எடுத்துச் செய்வார்.
அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிரமப்படுகின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், நான் தொடர்பு கொண்டு, நேற்று இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து விட்டேன். ஆனால் பயன் இன்றி, இன்று காலையில் அவர் உயிர் இழந்தார் என்ற செய்தி, பேரிடியாய்த் தலையில் விழுந்தது. நான் நிலைகுலைந்து போனேன்.
அவரது மறைவு, கழகத்திற்கு, ஈடுசெய்ய முடியாத இழப்பு. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவரது துணைவியாருக்கும், அந்தக் குடும்பத்திற்கும், எந்தவிதத்திலும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல முடியாது. தாங்க முடியாத துயரத்துடன், வேல்முருகன் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கொரோனா இரண்டாவது அலை, இளைய வயதினரையும் தாக்கி உயிரைக் குடிக்கின்றது. எனவே, அனைத்துத் தரப்பினரும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசு விதித்து இருக்கின்ற கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு, கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.05.2021

Thursday, May 13, 2021

கொரொனா தடுப்பு பணிகள் பற்றி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்வைத்த கருத்துகள்!

கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், இன்று, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, மு.பூமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்வைத்த கருத்துகள்:
மாண்புமிகு முதல்வர் அவர்களே, அனைத்துக் கட்சித் தலைவர்களே, வணக்கம்.
இந்த அரசு நெருக்கடியான காலகட்டத்தில் பொறுப்பு ஏற்று இருக்கின்றது. உலகம் முழுமையும் இதுவரை 35 இலட்சம் பேரைப் பலிகொண்ட, கொரோனா பெருந்தொற்றுத் தாக்குதலில் இருந்து, மக்களைக் காப்பதே முழுமுதற் கடமை என, முதல்வர் அவர்கள் அறிவித்தார். அதற்கு ஏற்ப, தீவிரமான களப்பணிகளை முடுக்கி விட்டு இருக்கின்றார். அமைச்சர்கள் சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகின்றார்கள்.
கொரோனா மருத்துவப் பணிகளுக்காக, தாராளமாக நன்கொடை அளியுங்கள் என மாண்புமிகு முதல்வர் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கழகத்தின் சார்பில் பத்து இலட்சம் ரூபாய் நிதி தருவதாக அறிவித்தார்.
அதற்கான காசோலையை, நேற்று, தலைமைச் செயலகத்தில், தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் (நிதித்துறை) அவர்களிடம் நேரில் வழங்கினோம்.
கொரோனா தடுப்பிற்காக, சில கருத்துகளை முன்வைக்கின்றோம்.
1. கொரோனா தடுப்பு மருந்து போடுவது குறித்து, பொதுமக்களிடம் போதிய விழிப்பு உணர்வு இல்லை; ஆர்வம் இல்லை. மாறாக, தடுப்பு ஊசிகள் குறித்த தவறான கருத்துகளையும் பரப்பி விட்டார்கள். அதனால், சுணக்கம் நிலவியது.
கடந்த ஆண்டு, கொரோனா தாக்குதலின் தொடக்க காலத்தில், இத்தாலி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், நாள்தோறும் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள்.
ஆனால் இப்போது, இங்கிலாந்து, ~பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள், கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்தி விட்டன. அங்கே பள்ளிகள் இயங்கத் தொடங்கி விட்டன. கடைத்தெருக்கள், வணிக நிறுவனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. ஐரோப்பிய நாடுகளுக்கு உள்ளேயே சுற்றுலா தொடங்கி விட்டது.
இத்தகைய மாற்றத்திற்குக் காரணம், தடுப்பு ஊசிகள்தான்.
இரண்டு முறை தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள், வாய் மூக்கு மூடி அணியத் தேவை இல்லை என்று, அமெரிக்க அரசு அறிவித்து விட்டது.
எனவே, மேற்கண்ட நாடுகளைப்போல், தமிழ்நாட்டிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். தடுப்பு ஊசி ஒன்றே அதற்கு வழி என்பதை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். பெருமளவில் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
2. தடுப்பு ஊசிகள் குறித்து, சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களை அச்சம் கொள்ளச் செய்கின்ற காணொளிகளைத் தடை செய்ய வேண்டும். சமூக வலைதளப் பதிவுகளைக் கண்காணிக்க ஒரு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
3. தடுப்பு மருந்துக்கு, இணைய வழி முன்பதிவு என்பது, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு ஒரு தடையாக இருக்கின்றது. முன்பதிவு செய்யத் தெரியாமல் பலர் போடாமல் இருக்கின்றார்கள். ஒவ்வொரு பகுதியிலும் தடுப்பு மருந்து எங்கே போடுகின்றார்கள், எல்லோரும் வந்து போட்டுக் கொள்ளலாம், எந்தத் தடையும் இல்லை என்பதையும் விளம்பரப்படுத்த வேண்டும்,
4. ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க, 142 இடங்களில் ஆக்சிஜன் ஆக்கும் மையங்களை அரசு அமைத்து வருகின்றது. 15 ஆம் தேதி முதல் கூடுதல் ஆக்சிஜன் கிடைக்கும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்து இருக்கின்றது. இத்தகைய போர்க்கால நடவடிக்கையை வரவேற்றுப் பாராட்டுகின்றோம்.
4. ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் போதிய அளவில் கிடைப்பது இல்லை. அது உயிர் காக்கும் மருந்து அல்ல, மிகவும் தேவைப்பட்டால் அன்றி, மருத்துவர்கள் அதைப் பரிந்துரை செய்ய வேண்டாம் என்று கூறியதை, மக்கள் நல்வாழ்வுத் துறை பலமுறை செய்தியாக வெளியிட்டு இருக்கின்றது. இருப்பினும் அந்த மருந்துக்காக மக்கள் அலைகின்றார்கள்.
இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள், அயல்நாடுகளில் இருந்து மருந்துகள், ஆக்சிஜன் கருவிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட கருவிகளை நேரடியாக இறக்குமதி செய்ய, அறிவிக்கை வெளியிட்டு இருக்கின்றார்கள். அதுபோல, தமிழக அரசும் கொள்முதல் செய்வதை வரவேற்கின்றோம்.
5. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பெறுவோருக்கும், அரசு காப்பு ஈட்டுக் கட்டணம் செலுத்தும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றோம்.
கொரோனா சோதனைகளை அரசு இலவசமாகச் செய்கின்றது. ஆனால், தனியார் மருத்துவமனைகள் அதற்காக 1500 முதல் 2000 ரூபாய் வரை வாங்குகின்றார்கள். தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டவர்களிடம், ஒரு நாளைக்கு ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேலும் கட்டணக் கொள்ளை நடக்கின்றது.
எனவே, கொரோனா மருத்துவம் என்ற பெயரில், தனியார் மருத்துவமனைகள் கட்டணக் கொள்கை நடத்துவதைக் கடுமையாகக் கண்காணித்து, கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கு.சின்னப்பா பேசினார்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.05.2021

சீமான் தந்தை செந்தமிழன் மறைவுக்கு வைகோ MP இரங்கல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தாயைப் போற்றும் அதே நேரத்தில், தந்தை வழிக் குடி மரபைத்தான் நாம் பின்பற்றி வருகின்றோம். தந்தை வழியில் மரபுகளை அமைத்துக் கொள்வது நம்முடைய பண்பாடு. அந்த நிலையில், பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள திரு சீமான் அவர்களின் தந்தையின் மறைவு, அவருக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் பேரிழப்பு ஆகும். 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், செந்தமிழன் அவர்களுக்கு, புகழ் வணக்கம்!

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.05.2021

மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணி வழங்கிடுக! வைகோ அறிக்கை!

தமிழக மின்வாரியத்தில், கேங்மென் பணி இடங்களுக்கான தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பித்தவர்கள் சுமார் 90,000 பேர். எழுத்து மற்றும் உடல் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றவர்கள் 14,956 பேர். நீண்ட நாட்களாக வழக்குகளால் தாமதப்பட்டு வந்த நிலையில், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்றும், நீதிமன்றத் தீர்ப்பிற்கு உட்பட்டும், 9613 கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை, 22.02.2021 அன்று, முந்தைய அரசு, குழப்பமான சூழலில், இரவோடு இரவாக அவசர கதியில்   வழங்கியது.

அவர்களுள் 8500 பேர்  பணி ஏற்பு செய்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும், தங்களது சொந்த ஊர்களில், ஒப்பந்த முறையில் பணியாற்றி பயிற்சி  பெற்றவர்கள். முறையாக தேர்வுகளில் கலந்துகொண்டு, பணி நியமனம் பெற்றும், தற்போது நிம்மதி அற்ற நிலையில் இருக்கின்றார்கள்.பெரும்பாலானவர்களை, சொந்த மாவட்டங்களில் நியமிக்காமல் 300முதல் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  மாவட்டங்களில் நியமித்து இருக்கின்றார்கள். ஆனால், தங்கும் இட வசதி செய்து தரவில்லை. 

அவர்களுக்கு சம்பளம் ரூ.15000 என வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் பிடித்தம் போக மீதி சம்பளம் பெறுகின்றார்கள். புதிய இடங்களில், தங்கும் இடம் மற்றும் உணவிற்காகப்  பெரும் தொகை செலவு ஆகின்றது. மீதி உள்ள சொற்பத் தொகையில், குடும்பத்தை நடத்த இயலாத நிலையில் இருக்கின்றார்கள். விடுமுறையும் தருவது இல்லை. 

அனுபவம் இல்லாத இடங்களில் பணி அமர்த்தியதால், பணியில் சேர்ந்த இரண்டு மாதங்களுக்கு உள்ளாக மூன்று கேங்மேன் தொழிலாளர்கள் விபத்துகளில் இறந்து விட்டனர். இதனால், தொழிலாளர்களிடம் அச்ச உணர்வு ஏற்பட்டு உள்ளது. 

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மின்சாரம் என்பது அடிப்படைத் தேவை என்கின்ற நிலையில், நேரம் காலம் பார்க்காமல், தங்கள் உயிரைத் துச்சமென மதித்துப் பணியாற்றி வரும் கேங்மேன் தொழிலாளர்களை, சொந்த மாவட்டங்களில் பணியில் அமர்த்த வேண்டும்; வாரியப் பணியாளர்களுக்கு உரிய விடுப்பு மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும்; வாய்ப்புள்ள இடங்களில் வாரியக் குடியிருப்புகள் வழங்க வேண்டும்; கேங்மேன் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நேரம் வரையறை செய்திட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். 

மேற்கண்ட கோரிக்கைகளை, தமிழக முதல்வர் அவர்கள் நிறைவேற்றித் தருவதன் மூலம், கேங்மேன் பணியாளர்களது அச்ச உணர்வைப் போக்கி, பாதுகாப்புடன் பணியாற்றுவதற்குத் தகுந்த சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.05.2021

மே 17 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு ஏந்துவோம்: வீட்டில் இருந்தே வீர வணக்கம் செலுத்துவோம்! வைகோ அறிக்கை!

உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எழுந்த, தணிப்பரிய தாகமாம் தமிழ் ஈழத் தாயகம் என்கின்ற வேட்கையை வீழ்த்தி, வல்லரசு நாடுகள் சேர்ந்து, துடைத்து அழித்த முள்ளிவாய்க்கால், நம் நெஞ்சங்களில் ஆறாத வடுவாக இருக்கின்றது. குருதி கொப்பளிக்கும் இதயத்தில் எரிகின்ற வேதனையின் வெளிப்பாடாக, தமிழ் ஈழத் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் தோற்றுவிக்கப்பட்டது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு, தமிழ்நாட்டில் தஞ்சைத் தரணியிலும் ஓர் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டமைக்கப்பட்டது.

தமிழ் ஈழத்தில், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு யாரும் வரக்கூடாது; புகழ் வணக்கம் செலுத்தக் கூடாது என்று கருதுகின்ற சிங்களப் பேரினவாத அரசு அடக்குமுறையை மேற்கொண்டு இருக்கின்றது. வல்லாதிக்கத்தின் கோரக் காவலர்களை அங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிறுவிடக் கொண்டு வரப்பட்ட நினைவுக்கல்லை, இரவோடு இரவாக அகற்றிக் கொண்டு போய்விட்டனர். ஏற்கனவே இருந்த நினைவுத் தூணையும் இடித்து நொறுக்கி உள்ளனர்.  யாரையும் உள்ளே நுழைய விடாமல், மறித்து நிற்கின்றார்கள்.  

அடக்குமுறையால் இன உணர்வை ஒடுக்கி விட முனையும் சிங்களப் பேரினவாத அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, துருக்கி நாட்டில் அர்மீனியர்களைக் கொன்றது இனப்படுகொலைதான் என, உலக நாடுகள் இன்றைக்கு அறிவித்து இருக்கின்றன. அதுபோல, உங்களுடைய அடக்குமுறைக்கும் ஓர் எல்லை உண்டு. 
 
சில மாதங்களுக்கு முன்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூணை உடைத்தார்கள். உலக நாடுகள் கண்டனத்திற்குப் பிறகு மீண்டும் கட்டப்பட்டது. அதேபோல, இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசுக்கு, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைக் கைவிட வலியுறுத்த வேண்டும்.

ஐ.நா. மன்றம் அமைத்த குழு அளித்த அறிக்கையின்படி, முள்ளிவாய்க்காலில் மட்டும் 1.37 இலட்சம் தமிழர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இன்று அவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவும் தடை விதிக்கின்றார்கள்.  மே 17 ஆம் நாள், முள்ளிவாய்க்காலில் வேட்டை ஆடப்பட்ட தமிழ் இனக் கொழுந்துகளின் நினைவுகளை நமது நெஞ்சில் ஏந்துவோம்.  வழக்கமாக தாயகத்தில் கூடுவோம்; கொரோனா முடக்கம் காரணமாக, இந்த ஆண்டு அதற்கு வாய்ப்பு இல்லை; எனவே, நமது இல்லங்களில் இருந்தே, வீரவணக்கம் செலுத்துவோம். 

தமிழ்நாட்டில் ஒரு புதிய விடியல் தோன்றி இருக்கின்ற இந்த வேளையில், இன்று இல்லா விட்டால் நாளை அல்லது நாளை மறுநாள் அல்லது என்றேனும் ஓர் நாள், தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையோடு நம்முடைய பணிகளைத் தொடருவோம்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.05.2021

ஈகைத் திருநாள் - வைகோ எம்பி வாழ்த்து!

உலகியல்,சமயம் என இரண்டு நிலைகளிலும், மகத்தான வெற்றியை, ஒருசேரப் பெற்றவர் அண்ணலார் முகமது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

ஒன்றே குலம்...ஒருவன் மட்டுமே இறைவன் என அறிவித்து, இஸ்லாம் மார்க்கத்தை நிலை நிறுத்தினார். அவரது அரிய உழைப்பினால்,  அவரது பொன்மொழிகளால், உலக மக்கள் தொகையில், கிறித்துவத்திறகு அடுத்த நிலையில் இன்று இஸ்லாம் இருக்கின்றது.

கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் (கொடை), ஹஜ் புனிதப் பயணம் என்ற இந்த ஐம்பெருங் கடமைகளுள் ஒன்றான நோன்பினை, இஸ்லாமியக் கணக்கின் ஒன்பதாவது மாதமான ரமலானில் தோன்றும் பிறையைப் பார்த்துத் துவங்கி, பத்தாவது மாதமான ஸவ்வால் மாதப் பிறையைப் பார்த்து நோன்பை நிறைவு செய்கின்றார்கள். 

ரமலானின் ஒவ்வொரு நாளிலும் மகத்தான யுத்தங்கள், மாபெரும் வெற்றி நிறைந்த சரித்திரங்கள், பெருமை மிக்க வேதங்கள் பல இறங்கியதும், பெருமானார் (ஸல்) பங்கேற்ற பத்ருப் போர் வரை, ஏராளமான படிப்பினைகளும் உண்டு. 

புனித மாதம் விடைபெற்றுச் செல்லும் வேளையில், கொரோனா எனும் கொடிய நோயின் பிடியில் இருந்தும், அச்சத்தில் இருந்தும், உலக மக்கள் விடுதலை பெறவும், நலமாகவும், மன நிறைவுடனும் வாழ்ந்திடவும் இதயமாற வேண்டி, இனிய ஈத் பெருமான் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.05.2021

Wednesday, May 12, 2021

கொரோனா மருத்துவம்; ம.தி.மு.க. சார்பில் ரூபாய் பத்து இலட்சம் நிதி!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று தமிழக முதல்வருக்கு எழுதி உள்ள கடிதம்:

கொரோனா பெருந்தொற்று நோய் ஏற்படுத்தி இருக்கின்ற பாதிப்புகளை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசு மேற்கொள்கின்ற மக்கள் நல்வாழ்வு மருத்துவப் பணிகளுக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு தாங்கள் விடுத்து இருக்கின்ற அழைப்பை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,  ரூ 10,00,000 ( ரூபாய் பத்து இலட்சம்) நிதி வழங்குகின்றோம். அதற்கான காசு ஓலையை, இத்துடன் இணைத்து இருக்கின்றேன். கனரா வங்கி, தேனாம்பேட்டை கிளை, காசு ஓலை எண். 614331/12.05.2021

இவ்வாறு,வைகோ தமது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

காசு ஓலையை, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கு. சின்னப்பா அவர்கள், தலைமைச் செயலகத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதித்துறை) திரு கிருஷ்ணன் அவர்களிடம் இன்று பகல் ஒரு மணி அளவில், நேரில் வழங்கினார். 

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
12.05.2021

Sunday, May 9, 2021

மருத்துவர் சண்முகப்பிரியா மறைவு. வைகோ MP இரங்கல்!

மதுரையில் எட்டு மாத கர்ப்பிணியான சண்முகப்பிரியா என்ற மருத்துவர், கொரோனா தாக்கி இறந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றது. 

கடந்த ஓராண்டில், இவரைப்போன்ற  மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், முன்களப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்து விட்டனர். தற்போது, நாடு முழுமையும் இலட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு, தொற்று பரவி வருகின்றது. மருத்துவமனைகளில் கடும் நெருக்கடி நிலவுகின்றது.

எனவே, வேறு வழி இன்றி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு முடக்கம் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கின்றது. 

கொரோனாவைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு மேற்கொள்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்; சமூக விலகலைக் கடைப்பிடிப்போம்; வீட்டுக்கு உள்ளே இருக்கும்போதும் வாய்மூக்கு மூடி அணிந்திடுங்கள்; கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து கொரோனா பரவலைத் தடுப்போம். 

சண்முகப்பிரியா மறைவால், வேதனையில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
09.05.2021

Thursday, May 6, 2021

மதிமுகவின் 28 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தாயகத்தில் வைகோ எம்பி கொடியேற்றினார்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தலைமைக் கழகம் தாயகத்தில் கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கழக வண்ணமணிக் கொடியை ஏற்றி வைத்தார்கள்.

இதில் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட மாநில செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்‌.

Wednesday, May 5, 2021

கழகத்தை கொண்டாடுவோம், இணையத்தில் இணைவோம், ஒமான் மதிமுக!

கழகத்தை கொண்டாடுவோம், இணையத்தில் இணைவோம், ஒமான் மதிமுக!

மே-6; இலட்சியக் கொடி ஏற்றுங்கள். 28 ஆம் ஆண்டைக் கொண்டாடுங்கள்  என எங்கள் தலைவர் வைகோ MP அவர்கள் சொல்லியுள்ளார்.

கழகம் இவ்வளவு நாட்களாக முட்பாதையில் பயணப்பட்டது. இனி‌ மலர் பாதையில் பயணிக்க ஆயத்தப்படுவதை நினைத்து கழக கண்மணிளாகிய நாங்கள் மபம் மழுகிறோம்.

எங்கள் தாயகம் தமிழர் தாயமமாக இன்றளவும் இயங்கியது மட்டுமல்லாமல் இனிமேலும் தொடர்ந்து தமிழர் தாயகமாகவே பயணப்படும்.

தமிழ் நாட்டின்‌ ஊழியன் வைகோ என்று சொன்னவர் செய்து காண்பித்திருக்கிறார்‌

பமபரமாய் சுழன்று‌ கழக‌ வர்ண மணி கொடியை உயர்த்துவோம்.

இணைய‌ கண்மணிகள் நாங்கள் #MDMK28 என்று ட்ரெண்டிங்க் செய்து கழகத்தை உயர்த்தி பிடிக்க தயாராக இருக்கிறோம்.

வாழ்க தலைவர் வைகோ. வளர்க தமிழர் நலன்.

கழக அரவணைப்பில்,
மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை