Saturday, May 1, 2021

கொரோனா இரண்டாம் அலை; வைகோ MP வேண்டுகோள்!

கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை இந்தியாவில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை இல்லாத அளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மட்டும் நான்கு இலட்சத்தை தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை, இதுவரை உலகில் எந்த நாட்டிலும் இல்லை.

அதேபோல, சிகிச்சை பலன் இன்றி உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது, மக்களுக்குக் கடும் அச்சத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
தற்போது, தமிழகத்தில் மட்டும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகின்றவர்களின் தினசரி எண்ணிக்கை, இருபது ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. போதிய மருத்துவ வசதிகள், மருத்துவக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.
கொரோனா இரண்டாம் அலை பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதனைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பு, புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமர இருக்கின்ற தி.மு.க. அரசிற்கு முன் உள்ள பெரிய சவால் ஆகும்.
அதற்காக சில கருத்துகளை, தமிழக அரசுக்கு வேண்டுகோளாக முன் வைக்க விரும்புகின்றேன்.
1. அரசு மருத்துவமனைகளில் இதுவரை, போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி அமர்த்தப்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக, தேவைக்கும் குறைவான மருத்துவர்களே இருந்து வருகின்றார்கள். அவசர சிகிச்சைப் பிரிவில் மூன்று படுக்கைகளுக்கு தலா ஒரு செவிலியரும், சாதாரண வார்டுகளில் இருபது படுக்கைகள் கொண்ட பிரிவில் தலா இரண்டு செவிலியர்களும் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இந்த எண்ணிக்கையில் செவிலியர்கள் இல்லை.
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே உள்ள இந்த சூழலில் கூட, எவ்வளவு மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டிய தேவை உள்ளது என்பதை, தமிழக அரசு இதுவரை கணக்கிடவில்லை.
நேற்று முன்தினம், தமிழக அரசு 150 மருத்துவர்களை தற்காலிகமாக பணியில் அமர்த்தி இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது எனத் தெரியவில்லை.
ஆகவே, அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் தற்போதைய சூழலுக்கு ஏற்ற எண்ணிக்கையிலான மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு உடனே பணியில் அமர்த்த வேண்டும்.
அவர்களுக்கு உரிய குறைந்தபட்ச ஊதியத்தையும், கொரோனா காலத்தில் பணி ஆற்றுவதால் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் உரிய பாதுகாப்பு, இழப்பு ஈடு போன்ற வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை காலகட்டத்தில் பணியில் அமர்த்தப்படும் மருத்துவர்களுக்கு, மருத்துவப் பணிகள் தேர்வு ஆணையம் (Medical Services Recruitment Board) நடத்தும் அரசு மருத்துவர்கள் பணியிடங்கள் தேர்விற்கு, இப்போது 5 கூடுதல் மதிப்பு எண்களையும் (Bonus Mark) மூன்றாம் அலை ஏற்படும் போது 5 மதிப்பெண்களையும் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். தன்னார்வமாகப் பணி ஆற்ற வரும் மருத்துவர்களுக்கு இது ஊக்கம் அளிக்கக்கூடியதாக இருக்கும்.
2. தற்போது, பன்னோக்கு மற்றும் உயர் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள, 'செயற்கை சுவாசக் கருவியுடன்' (Ventilator) கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள் (Intensive care beds) மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. குறைந்தபட்சம், உயர் அழுத்த மூச்சுக்கருவிகள் (Non invasive ventilation) கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளையாவது ஒன்றிய தலைமை அரசு மருத்துவமனைகளில், உடனடியாக உருவாக்க வேண்டும். இதன்மூலம், நிறைய உயிர்களைக் காப்பாற்ற முடியும்.
3. தற்போதைய நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இதன் முடிவுகள் தெரிவதற்கு மூன்று நான்கு நாட்களுக்கும் மேல் கால தாமதம் ஆகின்றது.
குறைந்த விலையில் அரசு வழங்க முடியும்.
5. இந்தியா முழுமையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் (Critcal stage) உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்ற ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு அதிகமாக உள்ள நிலையில், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் வங்காள தேசத்தில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து வருகின்றது. அதைப் போல, தமிழக அரசும், ரெம்டெசிவிர் மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்ய வேண்டும்.
6. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கட்டாயம் 'முக கவசம்' (Mask) அணிய வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. முக கவசம் அணியாதவர்களுக்கு அரசு அபராதம் விதிக்கின்றது. ஆனால், எந்த வகையான முக கவசம் அணிய வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வு பொதுமக்களிடம் இல்லை. அரசும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. துணிகளால் ஆன முக கவசங்களை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் மெல்லிய துணி போன்ற முக கவசங்களின் வழியாக நுண்ணுயிர் கிருமிகள் எளிதாக ஊடுருவி விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே, எந்த வகையான முக கவசங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் உரிய, பாதுகாப்பான முக கவசங்களைத்தான் அணிந்து உள்ளார்களா என்பதை, காவல்துறையின் மூலம் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளை, புதிய அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.
பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8

No comments:

Post a Comment