இரத்தச் சுழற்சியோடும் கலந்து விட்ட கண்ணின் மணிகளே!
சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும்
சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப்
போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும்
பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில்
வேகாத பொசுங்காத தத்துவம் நாம்;
வெங்கதிர் நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும்
ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்
அழியாத காவிரி நாம்; கங்கையும் நாம்!
மருதுபாண்டியரின் சிவகங்கைச் சீமைக் கவிஞர் மீராவின் பாடல் வரிகளை, ஆயிரக்கணக்கான மேடைகளில் முழங்கி இருக்கின்றேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சம் கவர்ந்த கவிஞர் மீராவின் கவிதை வரிகளுக்கு இலக்கணமாக விளங்குவது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதில், நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியும் பெரு மிதமும் ஏற்படுகின்றது.
1994 மே-6; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மலர்ந்த நாள்; 2021 இல், இருபத்து எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம்; காலத்தால் கரைக்க முடியாத கற்கோட்டையாகக் கழகத்தை நிலைநிறுத்தி இருக்கின்றோம்.
இலட்சியங்களும், கொள்கைகளும் அடிக்கற்களாக, இந்தத் திராவிட மணி மாளிகையைத் தாங்கிக் கொண்டு இருப்பதால், எந்தச் சூறாவளிக்கும், சோதனைக்கும் சாயாத சரித்திரமாக மறுமலர்ச்சி தி.மு.கழகம் தலைநிமிர்ந்து நிற்கின்றது;
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், கழகத்தின் அளப்பரிய பங்கு வரலாற்று ஏடுகளில் கல்வெட்டாய்ப் பதிந்து இருக் கின்றது;
“போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்;
நம் கடன் தமிழ் இனத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் பணி செய்து கிடப்பதே”
என்ற எண்ணத்துடன், கடந்த 27 ஆண்டு களாக மக்களுக்குத் தொண்டு ஆற்றி இருக்கின்றோம்.
மதிமுக உலகத் தமிழர் நெஞ்சில் கொலு வீற்றிருக்கும் பேரியக்கம்;
“இடும்பைக்கு இடும்பை படுப்பர் - இடும்பைக்கு
இடும்பை படா அதவர்” - குறள் (623)
துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.
தமிழர் மறை நூலாம் வள்ளுவரின் இந்தக் குறள், என் கண்ணின் மணிகளாம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் அரண்களாம் தொண்டர்களுக்குத்தான் பொருத்தம்.
ஏனெனில், 27 ஆண்டுகளாக தனித்துவப் பண்பு நலன்களுடன் தமிழகத்தில் எந்தச் சக்திக்கும் தலை வணங்காமல், பீடு நடை போடுவதற்கு, கழகத்தின் கண்ணின் மணிகளே காரணம்.
ஏழ்மையும் இல்லாமையும் துயரமும் சூழ்ந்த வாழ்வுதான் என்றாலும், மதிமுக எனும் இலட்சியச் சுடர் அணையாமல் காத்திடும் தீரர்கள் அல்லவா நீங்கள்; பேரறிஞர் அண்ணா ஊட்டிய குடும்பப் பாச உணர்ச்சி அல்லவா நம்மைப் பிணைத்து இருக்கின்றது;
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு, திருப்பரங் குன்றத்தில் 1961, ஜூலை திங்கள் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இந்த மாநாட்டில் பேருரை ஆற்றும்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் கீழ்வருமாறு குறிப்பிட்டார்கள்.
“நான் மிக மிகச் சாமான்யக் குடும்பத்தில் பிறந்தவன். எனது குடும்பப் பெருமையோ பண வலிமையையோ நம்பி என்னை நீங்கள் தலைவர் ஆக்கவில்லை. உங் களுடைய ஆற்றலினால்தான் நான் இந்த வலிவினைப் பெற்று இருக்கின்றேன்.
இலட்சக்கணக்கான தம்பிமார்களும், தங்கள் இதயத்தை என்னிடம் ஒப்படைத்து இருக்கின்றார்கள்; நீங்கள் காட்டும் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் ஈடாக உடல் வளம் எனக்கு இருக்குமா என்பதில் உறுதி இல்லை; ஆனால் உற்சாகம் பற்றிய ஐயம் குறுக்கிடவில்லை”
என்று சொன்னார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றையே நானும் கழகக் கண்மணி களுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன்.
ஏனெனில், எனக்கு என்று எந்த வலிமை இருந்தாலும், ஆற்றல் இருந்தாலும் அவை அனைத்தும் உங்களால் கிடைத்தது; உங்களால் நான்; உங்களுக்காகவே நான்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், காலத்தின் தேவையாக மலர்ந்த இயக்கம்; மண்ணின் மானம் காக்க, போராட்டக் களத்திலேயே நிற்கும் இயக்கம்.
மறுமலர்ச்சி திமுகவின் தேவையும், சேவையும் தமிழ் மக்களுக்கு, தமிழ் நாட்டிற்கு இன்னும் தேவைப்படுகின்றது. எனவே, ஆயிரம் காலத்துப் பயிராக இந்த மண்ணில் நின்று நிலைக்கும் இலட்சியப் பேரியக்கமாக நம் கழகத்தைத் தாங்கிப் பிடிக்க, வளரும் தலைமுறையை வார்ப் பிக்கும் கடமையைச் செய்வோம்.
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா காட்டிய இலட்சியப் பயணத்தில், வகுத்துக் கொண்ட தனிப்பாதையில் தடம் மாறாமல் செல்வோம்.
கழகத்தின் வரலாற்றில், 2017, டிசம்பர் 3 ஆம் நாள் நடந்த உயர்நிலைக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஆம்; இக்கூட்டத்தில்தான் கழகம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும், சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்தும் தீர்க்கமான முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்றினோம்.
அந்தத் தீர்மானத்தை மீண்டும் நினைவூட்டுகின்றேன்;
“தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டுக் காலமாக ஏற்பட்டுள்ள அரசியல் சூழல், தமிழகத்தின் எதிர்காலம் குறித்த கவலை யையும் நம்பிக்கை இன்மையையும் உருவாக்கி இருக்கின்றது;
அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்ட அ.இ.அ.தி.மு.க ஆட்சி, மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய பாரதிய ஜனதா அரசிடம் பலி கொடுத்துவிட்டு, டெல்லியின் தாள் பணிந்து கிடப்பதால், தமிழக மக்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகி உள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக, மாநில சுயாட்சி முழக்கத்தைத் தமிழ் மண்ணில் இருந்துதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுப்பினார்கள்.
பேரறிஞர் அண்ணாவின் அடியொற்றி, டாக்டர் கலைஞர் அவர்கள், தமிழக சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியதோடு, இந்தியாவின் பல்வேறு மாநிலத் தலை நகரங்களில் மாநிலத் தன்னாட்சி முழக்கம் எழக் காரணம் ஆனார்கள்.
ஆனால் இன்று, கூட்டு ஆட்சித் தத்து வத்துக்கு வேட்டு வைத்து, ஒற்றை ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்கத் தோடு, பாரதிய ஜனதா கட்சி தலைமை யிலான மத்திய அரசு செயல்பட்டு வருகின்றது.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு எனத் தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன; கூடங்குளம், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், கச்சத்தீவு, தமிழக மீனவர் நலன், நீட் தேர்வு, நவோதயா பள்ளிகள், இந்தித் திணிப்பு என அனைத்து முக்கியமான பிரச்சினைகளிலும், மத்திய பாரதிய ஜனதா அரசைத் தட்டிக் கேட்கும் துணிவு இல்லாத அண்ணா தி.மு.க. ஆட்சி, கை கட்டி வாய்பொத்தி அடிமைச் சேவகம் புரிகின்றது;
தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாடு, மரபு உரிமைகள் கேள்விக்குறி ஆகி விட்டன;
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிரான இந்துத்துவ மதவெறி சக்திகளின் ஆக்டோபÞ கரங்கள், தமிழகத்தை வளைக்கும் பேராபத்து சூழ்ந்து வருகின்றது;
அதிமுக அரசை இயக்கி வரும் மத்திய பாஜக அரசு, மறைமுகமாகக் கூட அல்ல; ஆளுநர் மூலம் நேரடியாகவே தமிழ் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றத் துடிக்கின்றது. பாஜக நடத்தி வரும் அரசியல் திருவிளையாடல்களுக்கு அதிமுக ஆட்சியாளர்கள் துணை போய்க் கொண்டு இருக்கிறார்கள்;
அரசியல் சட்ட நெறிகளைக் காலில் போட்டு மிதித்து, நாடாளுமன்ற மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளின் மீது பாரதிய ஜனதா கட்சி தாக்குதல் தொடுத்து வருவதை, மக்கள் ஆட்சியின் மீது அக்கறை கொண்ட சக்திகள் வேடிக்கை பார்க்க முடியாது;
இத்தகைய சூழலில், டிசம்பர் 21 ஆம் நாள் நடைபெற இருக்கின்ற இராதா கிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத் தேர்தல், முன் எப்பொழுதும் இல்லாத வகையில் முக்கியத்தும் பெறுகின்றது;
தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட அதிமுக அரசுக்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலம் பாடம் கற்பிக்க வேண்டிய உடனடித் தேவை எழுந்து உள்ளது;
இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, வருங்காலத் தமிழகத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அணுக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது;
மகத்தான தியாகத்தாலும், அளப்பரிய சாதனைகளாலும் ஒரு நூற்றாண்டுக் காலமாகக் கட்டி எழுப்பப்பட்ட இலட்சியக் கோட்டையாம் திராவிட இயக்கத்தைத் தகர்ப்பதற்கும் சிதைப்பதற்கும் கங்கணம் கட்டிக் கொண்டு, இந்துத்துவ சக்திகளும், திராவிட இயக்கத்தின் பரம எதிரிகளும், நாலாத் திசைகளில் இருந்தும் பலமுனைத் தாக்குதல் நடத்தும் சூழலில், திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய வரலாற்றுக் கடமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கின்றது;
எனவே, ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவது என்றும், வெற்றிக்காகப் பணியாற்றுவது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானிக் கின்றது”
2017, டிசம்பர் 3 ஆம் நாள் கழகத்தின் உயர்நிலைக்குழுவில் வடித்தெடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நம்முடைய அரசியல் நிலைப்பாட்டில் எள் முனை அளவு கூட இடறிவிடாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக செயற்பட்டு வந்து இருக்கின்றோம்.
2019 - நாடாளுமன்றத் தேர்தலிலும், தற்போது ஏப்ரல் 6, 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாம் எடுத்த கொள்கை வழித் தீர்மானத்தின்படி உறுதியாக நின்றோம்; அதற்காகவே தேர்தல் களத்தில் ‘அனைத்தையும்’ தாங்கிக் கொண்டோம்; ஆனால் துவண்டு விடவில்லை.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்று வரலாறு படைத்தது.
இந்தியா முழுவதும் பொங்கிப் பிரவாகம் எடுத்த இந்துத்துவ சக்திகள் உருவாக்கிய போலி பிம்ப மோடி அலை, தமிழ்நாட்டிற்கு உள்ளே நுழையவே முடியவில்லை;
அது போலவே, நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலிலும், திமுக தலைமை யிலான மதச்சார்பு அற்ற முற்போக்குக் கூட்டணி வெல்லப் போகின்றது;
இந்த மடல் அச்சாகி உங்கள் கைகளில் ‘சங்கொலி’ தவழ்கின்றபோது, தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைவர் ஆருயிர் சகோதரர் மு.க.Þடாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் சூழல் உருவாகி இருக்கும்;
மறுமலர்ச்சி திமுகழகம் சார்பில் களம் கண்ட அடலேறுகளான மல்லை சத்யா, புதூர் மு.பூமிநாதன், டாக்டர் சதன் திருமலைக்குமார், வழக்கறிஞர் கு.சின்னப்பா, டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், க.முத்துரத்தினம் ஆகிய அறுவரும், சட்டப்பேரவையில் இடம் பெற்று இருப்பார்கள்.
சட்டமன்றத் தேர்தலோடு நமது கடமை முடியவில்லை; இனிமேல்தான் கழகத் திற்கு அடுக்கடுக்கான பணிகள் காத்து இருக்கின்றன.
இந்தியாவை, ‘ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு’ என்று ஒரு குடைக்குள் கொண்டு வந்து தேசிய இனங்களின் உரிமைகளை அழித்து, எதேச்சதிகார ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் இந்துத்துவ சனாதனக் கூட்டத்தை முறியடிக்க வேண்டும். அந்த மாபெரும் கடமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கின்றது.
அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு, கழகப் பாசறையை வலிமைப்படுத்தும் பணிகள் குறித்துத் திட்டம் வகுத்து இருக்கின்றோம்.
கழகம் 28 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மே 6 ஆம் தேதி, எல்லா ஊர்களிலும் கழகத்தின் வண்ணமணிக் கொடியை உயர்த்துங்கள்; சட்டமன்றத் தேர்தல் வெற்றி எனும் இரட்டை மகிழ்ச்சியோடு மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுங்கள்; கொடிய கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை காட்டுத் தீயாகப் பரவி வரும் சூழலில், வாய் மூக்கு மூடிகளை அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கழகத்தின் 28 ஆம் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடுங்கள்.
வருங்காலம் நமக்கு வசந்த காலமாக அமைவதற்கு, 28 ஆம் ஆண்டு தொடக்கம், வாசலைத் திறக்கும்.
எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்
வைகோ
-சங்கொலி, 07.05.2021
No comments:
Post a Comment