தமிழ் இன உணர்வாளர், தமிழ்மண் பதிப்பகம் நிறுவனர், ஐயா இளவழகனார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.
தம் வாழ்நாள் முழுமையும் நூற்றுக் கணக்கான புத்தகங்களைப் பதிப்பித்து, தமிழுக்குத் தொண்டு செய்த செம்மல்.
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் 120 நூல்களாகத் தொகுக்கின்ற பெரும் பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார்.
முதல் கட்டமாக 65 நூல்களை ஆக்கினார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்த அந்த விழாவில் என்னையும் உரை ஆற்றச் செய்தார்.
அவர் ஆற்றிய அருந்தொண்டைப் போற்றினேன்; புகழ் ஆரம் சூட்டினேன். அடிக்கடி என் வீட்டுக்கு வந்து சந்தித்தார். அலைபேசியில் தொடர்பு கொண்டார். நானும் அவருக்கு உறுதுணையாக இருந்தேன்.
தமிழ்த் தொண்டே என் உயிர் என்று உழைத்து வாழ்ந்தவர் அய்யா இளவழகன்.
எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள மாட்டார். தமிழ்ஈழ விடுதலைப் போருக்கு அவருடைய தோட்டம் இடம் அளித்தது. முள்ளி வாய்க்கால் முற்றம் ஆக்கும் பணியில் உறுதுணையாக இருந்தார்.
பெயரையும் புகழையும் நாடாதவர். அயராத உழைப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
அவர் இந்த மண்ணில் இருந்து மறைந்தாலும் அவர் படைத்த நூல்களின் வழியாக ஆயிரமாயிரம் ஆண்டுகள் நினைவு கூரப்படுவார்.
அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழ்க, இளவழகனார் புகழ்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.05.2021
No comments:
Post a Comment