Thursday, February 24, 2022

தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு!

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அண்ணன் ஸ்டாலின் அவர்களை திமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை சந்தித்தேன்.
    
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு  வென்று உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பிரதிநிதிகளின் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும் கழகத்தின் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன்.

அன்புடன்
துரை வைகோ
தலைமை கழக செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
23.02.2022.

தலைமைக் கழக அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றிபெற்றவர்கள் விவரம்

சென்னை பெருநகர மாநகராட்சி
வார்டு எண். 35- சு.ஜீவன்
வார்டு எண். 139- சைதை ப.சுப்பிரமணி

தாம்பரம் மாநகராட்சி
வார்டு எண். 26- புஸீரா பானு நாசர்

ஆவடி மாநராட்சி
வார்டு எண். 11- பரிமளா சுப்பிரமணி
வார்டு எண். 23- எஸ். சூர்யகுமார்
வார்டு எண். 48- ஆர். கார்த்திக் காமேஷ்

மதுரை மாநகராட்சி
வார்டு எண். 44- தமிழ்ச்செல்வி காளிமுத்து
வார்டு எண். 52- வழக்கறிஞர் செ.பாஸ்கரன்
வார்டு எண். 100- முத்துலெட்சுமி அய்யனார்

திருப்பூர் மாநகராட்சி
வார்டு எண். 24 - ஆர். நாகராஜ்
வார்டு எண். 43 - சாந்தாமணி
வார்டு எண். 20 - சு.குமார்

கோவை மாநகராட்சி
வார்டு எண். 14-   சித்ரா தங்கவேல்
வார்டு எண். 26- சித்ரா வெள்ளிங்கிரி
வார்டு எண். 55-  அன்பு என்கிற தர்மராஜ்

ஈரோடு மாநகராட்சி
வார்டு எண். 22- வனிதாமணி ஜெயக்குமார்

திருச்சி மாநகராட்சி
வார்டு எண். 5- அப்பீஸ் சு.முத்துக்குமார்
வார்டு எண். 30- கதிஜா ஜீபேர்
சிவகாசி மாநகராட்சி
வார்டு எண் : 39- ஆர். சீனிவாச ராகவன் (எ) ராஜேஷ்

திண்டுக்கல் மாநகராட்சி
வார்டு எண். 48- ஜெ. காயத்ரி

நாகர்கோவில் மாநகராட்சி
வார்டு எண். 5- எஸ்.வி. உதயகுமார்

தூத்துக்குடி மாநகராட்சி
வார்டு எண். 28- ஏ. ராமு அம்மாள்

கும்பகோணம் மாநகராட்சி 
வார்டு எண் 23- பிரதீபா சரவணன்

திருநெல்வேலி மாநகராட்சி
வார்டு எண். 41- சங்கீதா ராதாசங்கர்

தஞ்சாவூர் மாநகராட்சி
வார்டு எண். 03- சுகந்தி துரைசிங்கம்

தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் நகராட்சி
வார்டு எண். 21- கோமதி ஆறுமுகச்சாமி
வார்டு எண். 23- ராஜேஸ்வரி இசக்கியப்பன்

புளியங்குடி நகராட்சி
வார்டு எண். 17- செந்தாமரை புளியங்குடி பழனிச்சாமி

தென்காசி நகராட்சி
வார்டு எண். 1- வசந்தி வெங்கடேஸ்வரன்

திருவேங்கடம் பேரூராட்சி
வார்டு எண். 01- மாரியம்மாள் கணேசன்
வார்டு எண். 11- முருகேஸ்வரி சுரேஷ்
வார்டு எண். 14- வெ. லதா
வார்டு எண். 15- இராதா ருக்குமணி கணபதி

செங்கல்பட்டு மாவட்டம்
மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி
வார்டு எண். 14- துர்கா
திருப்போரூர் பேரூராட்சி
வார்டு எண். 6- பூ. லோகநாதன்
மாங்காடு நகராட்சி
வார்டு எண். 6- சுமதி முருகன்
வார்டு எண். 9- பி. முருகன்

விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் நகராட்சி
வார்டு எண் : 1- ப. சுப்புலட்சுமி
வார்டு எண் : 4- பி.ஏ.பி.எஸ்.கணேஷ்குமார்

திருவில்லிபுத்தூர் நகராட்சி
வார்டு எண் : 9- என். முரளி
அருப்புக்கோட்டை நகராட்சி
வார்டு எண் : 1- தனலட்சுமி

திண்டுக்கல் மாவட்டம்
கொடைக்கானல் நகராட்சி
வார்டு எண். 16- தா. நஜீமா  பானு
பாளையம் பேரூராட்சி
வார்டு எண். 04- வி. லதா

திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி நகராட்சி
வார்டு எண். 25- அ.நாசீர்கான்
திருப்பத்தூர் நகராட்சி
வார்டு எண். 17- டி.சரவணன்

கரூர் மாவட்டம்
குளித்தலை நகராட்சி
வார்டு எண் : 23- கே. கணேசன்

தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி நகராட்சி
வார்டு எண். 11- ஆர்.எஸ். ரமேஷ்
வார்டு எண். 15- சி. மணிமாலா
விளாத்திகுளம் பேரூராட்சி
வார்டு எண். 2 - எம். குறிஞ்சி
புதூர் பேரூராட்சி
வார்டு எண். 15 - ஏ. வனிதா
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி
வார்டு எண். 17- சோம. வள்ளிமுத்து

திருவள்ளூர் மாவட்டம்
திருநின்றவூர் நகராட்சி
வார்டு எண். 19- திலகா பாபு
திருமழிசை பேரூராட்சி
வார்டு எண். 2- மஞ்சுளா பாஸ்கர்

நாமக்கல் மாவட்டம்
பள்ளிபாளையம் நகராட்சி
வார்டு எண். 6- கே. சிவம்
வெங்கரை பேரூராட்சி
வார்டு எண். 2- டி. மதிவாணன்

தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டை நகராட்சி
வார்டு எண். 27 - ஜெயபாரதி விசுவநாதன்
ஆடுதுறை பேரூராட்சி 
வார்டு எண். 3- இரா.சரவணன்
திருவிடைமருதூர் பேரூராட்சி 
வார்டு எண். 2- பானுப்பிரியா சுரேஷ்
வார்டு எண். 14- அபிநயாஸ்ரீ ஜெய்சன்
மெலட்டூர் பேரூராட்சி 
வார்டு எண். 10- விஜயலெட்சுமி கண்ணதாசன்

ஈரோடு மாவட்டம்
அரச்சலூர் பேரூராட்சி
வார்டு எண். 1- ச.துளசிமணி
அவல்பூந்துறை பேரூராட்சி
வார்டு எண். 5- லோ.சோமசுந்தரம்
சென்னசமுத்திரம் பேரூராட்சி
வார்டு எண். 2- ச.சாந்தி
வார்டு எண். 8- கு.பத்மா
வார்டு எண். 10- செ.பெரியசாமி

மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை நகராட்சி
வார்டு எண். 2- ச. கணேசன்
சீர்காழி நகராட்சி
வார்டு எண். 21- முழுமதி இமயவரம்பன்

நாகப்பட்டினம் மாவட்டம்
கீழ்வேளூர் பேரூராட்சி
வார்டு எண். 2- அகிலா ரவி
வார்டு எண். 8- காந்திமதி ஸ்ரீதரன்

கள்ளக்குறிச்சி மாவட்டம்
உளுந்தூர்பேட்டை நகராட்சி
வார்டு எண். 13- க. ஜெயசங்கர்

காஞ்சிபுரம் மாவட்டம்
வாலாஜாபாத் பேரூராட்சி
வார்டு எண். 10- டி.சிவசங்கரி

திருவண்ணாமலை  மாவட்டம்
ஆரணி நகராட்சி
வார்டு எண். 19- சி. உஷாராணி
வார்டு எண். 22- ம. கீதா
திருவண்ணாமலை நகராட்சி
வார்டு எண். 4- ராணி முருகன்
புதுப்பாளையம் பேரூராட்சி
வார்டு எண். 12- ஏ.சுதாகர்

தேனி மாவட்டம்
சின்னமனூர் நகராட்சி
வார்டு எண். 11- வேலுத்தாய் பாலமுருகன்
வீரபாண்டி பேரூராட்சி
வார்டு எண். 3- சி.வசந்தராஜ்
கெங்குவார்பட்டி பேரூராட்சி
வார்டு எண். 8- ப. பவானி

திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம் நகராட்சி
வார்டு எண். 16- எம்.முத்துலட்சுமி
பத்தமடை பேரூராட்சி
வார்டு எண். 9- ஏ.எம். பீரம்மாள் பீவி
திருக்குறுங்குடி பேரூராட்சி
வார்டு எண். 7- ஆ. சீதா

திருச்சி மாவட்டம்
முசிறி நகராட்சி
வார்டு எண். 15- சசிகலா இளங்கோவன்
துவாக்குடி நகராட்சி
வார்டு எண். 3- மோகன் பெரியகருப்பன்
கூத்தையப்பர் பேரூராட்சி
வார்டு எண். 2- உண்ணாமலை மாரிமுத்து
மண்ணச்சநல்லூர் பேரூராட்சி
வார்டு எண். 6- எஸ். ஜீவா
கண்ணனூர் பேரூராட்சி
வார்டு எண். 4- இரா. கலைவாணி

வேலூர் மாவட்டம்
குடியாத்தம் நகராட்சி
வார்டு எண். 23- ஆட்டோ பி.மோகன்

அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்கள்
ஜெயங்கொண்டம் நகராட்சி
வார்டு எண். 7- பு. அலமேலு மங்கை
லெப்பைக்குடிக்காடி பேரூராட்சி
வார்டு எண். 1 - ரஃப்யூதீன்

கன்னியாகுமரி மாவட்டம்
ரீத்தாபுரம் பேரூராட்சி
வார்டு எண். 8 - எச். ஜெயக்குமார்

புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி நகராட்சி
வார்டு எண். 4- மகேஸ்வரி
வார்டு எண். 15- ரே. காசிலிங்கம்
வார்டு எண். 26- க. லதா

இராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடி நகராட்சி
வார்டு எண். 23- பாக்கியராஜ்
வார்டு எண். 33- கே.ஏ.எம். குணா (எ) குணசேகரன்

கடலூர் மாவட்டம்
நெல்லிக்குப்பம் நகராட்சி
வார்டு எண். 24 - கு.ராணி

கோவை மாவட்டம்
பொள்ளாச்சி நகராட்சி
வார்டு எண். 15- அ.சையத் யூசுப்
இருகூர் பேரூராட்சி
வார்டு எண். 14- இ.கே.சந்திரசேகரன்
சூலூர் பேரூராட்சி
வார்டு எண். 2- சூ.பெ. கருணாநிதி
பள்ளபாளையம் பேரூராட்சி
வார்டு எண். 2 - அசோக்
காரமடை பேரூராட்சி
வார்டு எண். 16- கவிதா நடராஜன்
தாளியூர் பேரூராட்சி
வார்டு எண். 13- அமுதா

திருப்பூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டை நகராட்சி
வார்டு எண். 28- சீ.ராம்தாஸ்
பல்லடம் நகராட்சி
வார்டு எண். 13- இ.நர்மதா
சங்கராமநல்லூர் பேரூராட்சி
வார்டு எண். 2- ர. மீனாட்சி
வார்டு எண். 11- செ.ராதாமணி
மடத்துக்குளம் பேரூராட்சி
வார்டு எண். 11- சிவமணி சக்தி

சிவகங்கை மாவட்டம்
காரைக்குடி நகராட்சி
வார்டு எண். 14- பசும்பொன் மனோகரன்

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
23.02.2022

Wednesday, February 23, 2022

நல்லாட்சிக்கு மக்கள் அளித்த நற்சான்று! வைகோ MP அறிக்கை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சிக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம்தான் அடிப்படைக் காரணம் ஆகும்.

ஆட்சிப் பொறுப்பேற்ற 8 மாத காலத்திற்குள் தேர்தல் வாக்குறுதிகளில் 80 விழுக்காட்டை நிறைவேற்றிக் காட்டி திமுக அரசு சாதனை படைத்து இருக்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில சுயாட்சிக் கோட்பாடு நிலை பெறவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முயற்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலம் தமிழக மக்கள் அளித்துள்ள பேராதரவு பறைசாற்றப்பட்டு இருக்கிறது. வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி.

தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் தளபதி மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் அரசியல் பயணத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மேலும் ஊக்கமாக அமையும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டி உள்ள திமுக தலைமையிலான கூட்டணி மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
23.02.2022

Saturday, February 19, 2022

நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை என அறிவித்த, முதல்வரைப் பாராட்டுகிறேன். வைகோ MP அறிக்கை!

தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில், பல்லாயிரக்கணக்கான டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, தரைக்கு உள்ளே 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் நீளவாட்டிலும், குறுக்குவாட்டிலும், சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் உள்ள இரண்டு குகைகளைக் குடைந்து, அங்கே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சித்து வருகின்றது. 

உலகின் மறுபக்கத்தில் உள்ள அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள செர்பி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து, நியூட்ரான் துகள்கள், சுமார் 13 கிலோ மீட்டர்களைக் கடந்து, பொட்டிப்புரத்தில் அமைக்கத் திட்டமிடும் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். அங்கே, 50 ஆயிரம் டன் எடையுள்ள காந்தக் கல்லைப் பதித்து ஆய்வு நடத்தும் திட்டம் இது. 

அதற்காக, வெடிமருந்து வைத்து பாறைகளை உடைப்பதால் ஏற்படும் அதிர்வுகளால், 30 கி.மீ தொலைவில் உள்ள இடுக்கி அணை, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்படும். நிலம், நீர், காற்று மண்டலத்துக்கும் பெரும் தீங்கு ஏற்படும். விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். வெளியாகும் தூசுப் படலத்தால் சுவாச நோய்கள் ஏற்படும். 

மேலும், இந்தச் சுரங்கங்களில் அணுக்கழிவுகளைக் கொட்டுவதற்கும் திட்டமிட்டு இருக்கின்றார்கள். 

முதலில் இந்தத் திட்டத்தை அசாம் மாநிலத்தில் அமைக்க முற்பட்டார்கள். அங்கே எதிர்ப்பு ஏற்பட்டதால், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் அமைக்க முயன்றார்கள். அங்கேயும் மக்கள் எதிர்த்ததால், தேவாரம் பொட்டிப்புரத்தில் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது.

ஆனால், தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கருத்தைக் கேட்கவும் இல்லை; இரண்டு கிலோ மீட்டர் அருகாமையில் கேரள எல்லை தொடங்குகின்றது; கேரள மாநில அரசின் ஒப்புதலையும் ஒன்றிய அரசு கேட்கவில்லை.

இங்கே வெட்டி எடுக்கப்படுகின்ற கிரானைட் கற்கள் மூலம் சில பகாசுர நிறுவனங்கள் கோடி கோடியாகக் கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அரசாங்கத்தைத் திருப்திப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்திற்கு 1500 கோடி அனுமதி வழங்கி உள்ளார்.

இமயமலைப் பாறைகள் உறுதித் தன்மை அற்றவை. எனவேதான், அங்கே அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலைப் பாறைகள் உறுதியான கருங்கற்கள் ஆகும், அதனால்தான், மேற்குத் தொடர்ச்சி மலைகளை, உலகின் பழமையான வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாக, ஐ.நா.மன்றம் அறிவித்துள்ளது. அதனால், இம்மலைத் தொடரில் எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பது யுனெஸ்கோ விதி ஆகும்.

எனவே, நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த வழக்கில், 2015, மார்ச்சு 26 ஆம் தேதி,  உயர்நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்தது.

பூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழல் அமைப்பு, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, இன்று(17.02.2022) விசாரணைக்கு வந்த போது, நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை இரத்துச் செய்யுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்து இருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் அளிப்பது இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
17.02.2022

Sunday, February 13, 2022

கொங்கு மண்டலத்தின் கழக காவலரை இழந்தேன்! வைகோ MP இரங்கல்!

கழகத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர் ,அண்ணன் நாமக்கல் டி.என்.குருசாமி அவர்கள் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

கொங்கு மண்டலத்தில் கழக காவலரை இழந்து தவிக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேலத்து சிங்கம் அண்ணன் வீரபாண்டியார் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அண்ணன் டி.என்.ஜி அவர்கள், ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டார்.

அந்தக் காலத்திலேயே என் மீது அளவிடற்கரிய பாசம் கொண்டிருந்தார். மதிமுக மலர்ந்த போது நாமக்கல் மாவட்டத் துணைசெயலாளரானார். பின்னர் 1997 இல் மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று கழகப்பாசறையைக் கட்டிக் காத்தார்.

உயர்நிலைக் குழு உறுப்பினராக கழகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எனக்கு துணையாக இருந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற திராவிட இயக்கத் தலைவராக விளங்கிய அண்ணன் டி.என்.ஜி. அவர்கள் பொதுப்பணிகளிலும் சிறந்து விளங்கினார்.

கனரக வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர், நிதி நிறுவன சங்கத் தலைவர், பன்னாட்டு அரிமா சங்க செயல்பாட்டாளர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிய பெருமை அவருக்கு உண்டு.

கழகத் தொண்டர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் டி.என்.ஜி. அமைதியே உருவானவர். அவர் அதிர்ந்துப் பேசி நாம் பார்த்தது இல்லை.

சில மாதங்களுக்கு முன் உடல் நலம் குன்றியதால் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் கடமை ஆற்ற முடியவில்லை. எனவே மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து இளைஞர்கள் இருவரைத் தேர்வு செய்து, மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அண்ணன் டி.என்.குருசாமி அவர்கள் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத்தின் கண்ணின் மணிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.02.2022

Saturday, February 12, 2022

இலக்கிய உலகில் பொன்விழா - கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு அலைபேசி மூலம் துரை வைகோ வாழ்த்து!

இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் தேனி மாவட்டத்தில் வடுகப்பட்டி எனும் சிற்றூரில் பிறந்த அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் நிறைகின்றன.

இலக்கியப்பணியில் பொன்விழா கண்ட கவிஞரை வாழ்த்தி மகிழ்ந்தேன்.

அவரது முதல் கவிதைநூலான 'வைகறை மேகங்கள் கவியரசு கண்ணதாசன் அவர்களின் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது. அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இராண்டாம் ஆண்டு மாணவர்.

இந்த 50 ஆண்டுகளில் அவர் 38 நூல்களும் 7500 பாடல்களும் எழுதியிருக்கிறார்.

அந்த விழாவின் தொடக்க நிகழ்வாக 'வைரமுத்து இலக்கியம் 50'என்ற இலட்சினையைத் முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று வெளியிட்டார்கள்.

28 வயதிலேயே 'இதுவரை நான்'என்ற சுயசரிதை எழுதியவர் வைரமுத்து.

கருவாச்சி காவியம் -வைரமுத்து கவிதைகள் மூன்றாம் உலகப் போர் - தண்ணீர் தேசம் கொஞ்சம் தேநீர் நிறைய வானம்- திருத்தி எழுதிய தீர்ப்புகள்-வைரமுத்து சிறுகதைகள் - பெய்யெனப் பெய்யும் மழை என்று வைரமுத்துவின் படைப்புலகம் வான்புகழ் கொண்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட 'தமிழாற்றுப்படை' நூல் மூன்றே மாதங்களின் பத்துப்பதிப்புகள் கண்டு தமிழ்ப் பதிப்புலகில் சாதனை படைத்திருக்கிறது.

திரைப்படப் பாடலாசிரியருக்கென்று 7 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள்தான். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதினையும் 6 முறை பெற்று இருக்கிறார்.

2003இல் 'சாகித்யஅகாடமி' விருது பெற்ற இவரது 'கள்ளிக்காட்டு இதிகாசம் 23 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாட்டின் சிறந்த புத்தகத்துக்கான 'ஃபிக்கி' விருதுக்குத் தேர்வு பெற்றது.

இலக்கியத்தின் பங்களிப்பிற்காக இந்தியாவின் உயர்ந்த விருதுகளான 'பத்மஸ்ரீ' மற்றும் 'பத்ம பூஷண்' விருதும், பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் 'சாதனாசம்மான்' விருதும் பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் இவரைக் 'கவிசாம்ராட்' என்று அழைத்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் 'காப்பியக் கவிஞர்' என்று கூறி சிறப்பித்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் 'கவிப்பேரரசு' என்று பட்டம் அளித்து சிறப்பித்தார்கள். தலைவர் வைகோ அவர்கள் இலக்கிய சிகரம் என்று பாராட்டி மகிழ்ந்தார்.

இவருடைய படைப்புகள் ஆங்கிலம் - இந்தி-தெலுங்கு கன்னடம் - மலையாளம் -உருது-வங்காளம் - ரஷ்யன் - நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவிதை - நாவல் - சிறுகதை - திரைப்பாட்டு - ஆராய்ச்சிக் கட்டுரை - திரை உரையாடல் - பயணக் கட்டுரை - சரிதை - சுயசரிதை என்று இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் இவரது பயணம் நீண்டு கொண்டேயிருக்கிறது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் இலக்கியப்பயணம் இன்னும் பவளவிழா, வைரவிழா, நூற்றாண்டு விழா காண வாழ்த்துகிறேன்..

துரை வைகோ
தலைமைக் கழக செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.02.2022

Friday, February 11, 2022

கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதா? வைகோ MP கண்டனம்!

கூடங்குளத்தில் இயங்கி வரும் அணுமின் உற்பத்தி நிலையத்தில் முதல் இரண்டு அலகுகளில் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டது. 3ஆவது மற்றும் 4ஆவது அலகுகள் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடக்கின்றன. மேலும் 5 மற்றும் 6 ஆவது அலகுகளுக்கும் இந்திய அணுசக்திக் கழகம் அனுமதி அளித்துள்ளது.

அணுமின் நிலையத்தில் உருவாகும் கதிரியக்க அபாயம் கொண்ட அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றவும், உரிய முறையில் சேமிக்கவும் இந்திய அணுசக்திக் கழகத்திடம் திட்டங்கள் இல்லை என்பதால் 2013 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அணுக் கழிவுகளை சேமித்து வைத்திட தொலைவில் ஒரு இடம் (Away From Reactor - AFR) மற்றும் அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ்நில கருவூல மையம் (Deep Geological Repository - DGR) ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு (AFR) 5 ஆண்டுகளில் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்திற்குள் தேசிய அணுமின் கழகம் இத்தகைய தொழில் நுட்பத்தை வடிவமைப்பதில் சிக்கல் எழுந்தால் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரியது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று 2018 ஆகஸ்ட் 24 இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக கூடங்குளம் அணுஉலை வளாகத்தினுள் ‘ஏ.எஃப்.ஆர்’ பாதுகாப்புக் கட்டமைப்பை அமைத்திட திட்டமிட்ட தேசிய அணுமின் கழகம், அதற்கான பணிகளைத் தொடங்கிட 2019 ஜூலை 10 ஆம் நாள் நெல்லை மாவட்டம், இராதாபுரத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

கூடங்குளம் அணு உலைகளையே நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் போராடி வரும் நிலையில், அணுஉலை வளாகத்தினுள்ளேயே அபாயகரமான அணுக் கழிவுகளைச் சேமித்து வைத்திட கட்டமைப்புகளை உருவாக்க (Away From Reactor - AFR, Spent Fuel Storage Facility - SFSF) தேசிய அணுமின் கழகம் 2021 டிசம்பரில் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை இணையம் மூலமாக தாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடங்குளம் அணுஉலை குறித்து நாடாளுமன்றத்தில் சிபிஎம் உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகளை முதலில் சில ஆண்டுகள் அணு உலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறு சுழற்சி மையத்திற்கு எடுத்துப் போகும்வரை அருகில் உள்ள மையத்தில் (AFR) வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் கூடங்குளம் போன்ற அணுஉலைகளிலிருந்து வரக்கூடிய அணுக் கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என்பதை அமைச்சர் ஜிதேந்திர சிங் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அணுக் கழிவுகளைச் சேமிக்க ஆழ்நில அணுக்கழிவு மையம் (DGR) தற்போது தேவைப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது ஆகும்.

கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்தினுள் அணுக்கழிவு மையத்தை அமைத்து, அதில் கூடங்குளம் மட்டுமின்றி, இந்தியாவில் செயல்பட்டு வரும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய பா.ஜக. அரசு முனைந்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஒன்றிய அரசின் இத்தகைய முயற்சிகளை முறியடிப்பதுடன், கூடங்குளத்தில் அணுஉலை 3ஆவது மற்றும் 4ஆவது அலகுகள் அமைத்திட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியையும் நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூடங்குளத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அணுஉலைக் கழிவுகளை கொண்டுபோய் சேமித்து  வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
11.02.2022

Thursday, February 10, 2022

உள்ளாட்சித் தேர்தல்:துரை வைகோ அவர்கள் பங்கேற்கும் மாவட்ட வாரியான கலந்தாய்வுக் கூட்டங்கள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் மாவட்ட வாரியாக  வேட்பாளர்கள் கலந்தாய்வு கூட்டங்களில் கலந்துகொள்கிறார். அதன் விவரம்:-

10.02.2022
மாலை - 5 மணி
இடம் -விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் கலந்தாய்வு கூட்டம்.

11 .02.2022
காலை 9:00-10:30
அரியலூர் மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை இல்ல  திருமணம்.

11:30 மணி -  இடம்-திருச்சி 
திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்களின் கலந்தாய்வு.

மாலை 4 மணி - இடம்-கலிங்கப்பட்டி
தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாநகர், நெல்லை புறநகர் மாவட்டங்களின் மாவட்ட கலந்தாய்வு.

மாலை 7:00 மணி -கோவில்பட்டியில் திருமண வரவேற்பு.

13.02.2022
காலை 10:00 மணி - இடம் - நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் கலந்தாய்வு.

மாலை 4 மணி - இடம்-மதுரை
மதுரை மாநகர், மதுரை புறநகர் வடக்கு, மதுரை புறநகர் தெற்கு மாவட்டங்களின் கலந்தாய்வு

14.02.2022
காலை 9 -10:30 - இடம்: இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட கலந்தாய்வு, ஒன்றிய செயலாளர் இல்ல திருமணம்.

மாலை 3:00 மணி - இடம்:திண்டுக்கல்
திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களின் கலந்தாய்வு

15.02.2022
காலை-11:00 மணி இடம்-திருப்பூர்
திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் மாவட்டங்களின் கலந்தாய்வு.

மாலை: 3:00 மணி - இடம்: கோவை
கோவை மாநகர், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு மாவட்டங்களின் கலந்தாய்வு.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
10.02.2022

முதல்வரின் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பிற்கு மறுமலர்ச்சி திமுக ஆதரவு!

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வரும்  - திமுக தலைவருமான மாண்புமிகு தளபதி மு. க.°டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அமைப்பில் இணைந்திட முன்வருமாறு 37 கட்சிகளின் தலைவர்களுக்கு, கடிதம் வாயிலாக அவர் அழைப்பு விடுத்துள்ளார் .

இந்த வரிசையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு அழைப்பு விடுத்து  தளபதி மு.க.°டாலின் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார் .

இதை ஏற்று, அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாக, கழகத்தின் தேர்தல் பணிச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி அந்தரிதா° அவர்கள் செயல்படுவார் என அறிவித்து, முதல்வரின் முயற்சிகளுக்கு வரவேற்பையும், வாழ்த்தையும் தெரிவித்து பொதுச்செயலாளர் அவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

*ஆவடி அந்தரிதாஸ்* அவர்களைப் பற்றிய குறிப்புகள்:-

வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ் அவர்கள், கழக தேர்தல் பணிச் செயலாளர், மறுமலர்ச்சி   தொழிலாளர் முன்னணி மாநிலத் தலைவர், திருவள்ளூர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இடம் பெற்றுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் கழகத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். HVF, ICF, MRF, SRF, ஸ்ரீராம் நிதி நிறுவனம், Ti Diamond Chains ஆகிய தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்று,  நிர்வாக பொறுப்பில் பணியாற்றி வருகிறார். 1996, 2001, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற  சட்டமன்ற தேர்தல்களிலும், 1996, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆவடி நகர்மன்ற தேர்தல்களிலும் கழகத்தின் சார்பில் போட்டியிட்டார். 15 க்கும்  மேற்பட்ட பொதுநல சங்கங்களில் சட்ட  ஆலோசகராகவும் இவர் பொறுப்பு வகிக்கிறார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
10.02.2022

Monday, February 7, 2022

லதாவின் குரல் விண்ணில் கலந்து இருக்கின்றது எந்தக் காலத்திலும் அவருக்கு அழிவு இல்லை. வைகோ புகழாரம்!

இசை என்றாலே புகழ். அந்த இசைத்துறையில் புகழ்க்கொடி நாட்டி, இன்று நம்மை எல்லாம் கண்ணீரில் ஆழ்த்தி விடைபெற்றுள்ளார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.

அவருடைய பாடல்கள், அவரது குரலில் கேட்கும்போது, அது நம்மை எங்கோ இழுத்துச் செல்லும்.

கோவா மாநிலத்தில் மங்கேஷ்கர் கிராமத்தில் பிறந்த லதா, 1942 ஆம் ஆண்டு, 13 ஆவது வயதில் பாடத் தொடங்கினார். இசைதான் அவரது மூச்சு. ஏறத்தாழ 80 ஆண்டுகளாகப் பாடினார் பாடினார் பாடிக்கொண்டே இருந்தார்.

இசைக்கு எல்லைகள் இல்லை, எந்தத் தடையும் இல்லை. எனவே, இந்தியாவின் அத்தனை மொழித் திரைப்படங்களிலும் அவர் பாடினார். அந்தக் காலத்தில், வானொலிகளில் தமிழ்நாடு முழுமையும் அவரது பாடல்கள் ஒலித்தன.

நான் ஒரு இசை ரசிகன். எத்தனையோ சோதனைகளுக்கு இடையில் எனக்கு ஆறுதலாக இருப்பது இசைதான். மாணவப் பருவத்தில் சென்னையில் எத்தனையோ ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்து இருக்கின்றேன். இந்திப் படங்களையும் பார்த்து இருக்கின்றேன். எனக்கு அந்த மொழி புரியாவிட்டாலும், லதா மங்கேஷ்கரின் பாடல்களும், அவரது இனிய குரலும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். உயிரோட்டமான குரல் அது. உணர்ச்சிகளின் கலவையாக ஒலித்தது.

அவர் தமிழிலும் பாடினார். வானரதம் திரைப்படத்தில், எந்தன் கண்ணாளன் கடல் நோக்கிப் போகின்றான் என்று அவர் பாடிய பாடலை இன்றைக்கும் யூடியூப் காணொளியில் பார்க்க முடிகின்றது.

அவர் பெற்ற விருதுகளைக் கணக்கிட முடியாது. இந்தியாவின் மிக உயரிய பாரத் ரத்னா விருதையும் பெற்றவர். ஆனால், அந்த விருதுகளை விட, தன் குரலால் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு அவரது குரல் அளித்து வந்த ஆறுதல்தான் மிகப் பெரியது. அளவிட முடியாதது.

அவரது குடும்பமே இசைக்குடும்பம்தான். அவரது தங்கை ஆஷாவும் புகழ் பெற்ற பாடகியாகத் திகழ்கின்றார்.

கானக்குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது இனிய குரல் அடங்கி விடாது.

காற்றில், விண்வெளியில் கலந்து இருக்கின்ற அந்தக் குரல் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளையும் கவரும்...அவர்களது நெஞ்சங்களில் ஊடுருவிப் பாயும் என்பது திண்ணம்.

திசை தெரியாத வாழ்க்கையில், இசைக்குயிலாக இடம் பிடித்து இருப்பவர் லதா மங்கேஷ்கர் ஆவார்.

இசைக்குயில் லதா மங்கேஷ்கர் புகழ், ஏழிசையாய், இசைப்பயனாய், என்றென்றும் நிலைத்து இருக்கும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.02.2022

நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல! வைகோ அறிக்கை!

மருத்துவப் படிப்புகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ நடத்துவதிலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2021 செப்டம்பர் 13 ஆம் நாள் சட்ட முன்வரைவு நிறைவேற்றி, ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல், நான்கு மாத காலமாக நிறுத்தி வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்.

கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிராக இருப்பதால் நீட் விலக்கு சட்ட முன்வரைவை திருப்பி அனுப்பி இருப்பதாக ஆளுநர் குறிப்பிட்டு இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

உண்மையில் நீட் தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற முடியாத நிலையைத்தான் உருவாக்கி இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத வகையில் சமூக நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்று ஆளுநர் கூறுவதையும் ஏற்க முடியாது.

2016 மே 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் நீட் தொடர்பாக அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது என்ன?

“நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் மூலம் பொது நுழைவுத் தேர்வு என்ற ‘நீட்’ நடைமுறைக்கு வருமானால், அதன் விளைவாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடையே மாறுபட்ட நிலைப்பாடு வருமானால், அத்தகைய முரண்பாடு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 254-ன் படித் தீர்த்துக் கொள்ளலாம்.

எந்த அடிப்படையிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியன மாநில அரசிடமிருந்து கரைந்துபோகவில்லை.”

மேற்கண்ட தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம்தான் நீட் தேர்வை கட்டாயமாக்கியது என்று தொடர்ந்து கூறப்படுகின்ற கூற்று பொய்யானது என்பது தெளிவாகிறது.

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு அரசியல் சட்டப் பிரிவு 200 இன் படி மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். ஆளுநர் திருப்பி அனுப்பினால் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 201இன் படி மாநில சட்டமன்றம் ஆளுநருக்கு பரிசீலனை செய்யுமாறு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பலாம். அவ்வாறு மீண்டும் ஆளுநருக்கு சட்ட முன்வரைவு அனுப்பப்பட்டால், அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பியே ஆகவேண்டும்.

எனவே தமிழக அரசு மீண்டும் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் சட்ட முன்வரைவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.02.2022

Tuesday, February 1, 2022

உள்ளாட்சியில் பம்பரம் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு "பம்பரம்" சின்னம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே மிஞ்சுகின்றது! வைகோ அறிக்கை!

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், 2022-23 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 விழுக்காடு வரை இருக்கும் என்று, பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுவதை நிறைவேற்றுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜி.டி.பி.) ஒரே நிலையில்தான் இருக்கின்றது. முந்தைய நிதி ஆண்டில் சேவைத் துறை வளர்ச்சி விகிதம் -8.4 விழுக்காடு அளவு படுபாதாளத்தில் இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் அதனை மீட்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

கொரோனா பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் அது தொடர்பான துறைகளின் வளர்ச்சி, பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டபடி 3.9 விழுக்காடு உயர்வதற்கு, நிதிநிலை அறிக்கையில் அதற்கு ஏற்ப திட்டங்கள் இல்லை.

இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) திட்டப்படி, 60 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த ஏழாண்டு கால பா.ஜ.க. அரசில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன என்பதுதான் உண்மை நிலை ஆகும். கொரோனா தொற்று பாதித்த கடந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், அனைத்துத் துறைகளிலும் இலட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்துள்ளது.

சுமார் 4.6 கோடி மக்கள் வறுமையில் உழல்வதாகவும், உலகப் பட்டினிக் குறியீட்டின் 116 நாடுகளில் இந்தியா 104-ஆவது இடத்தில் இருப்பதையும், புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 15 கோடி ஏழை மக்களின் வருவாய் 53 விழுக்காடு குறைந்து விட்டது. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் திட்டங்கள் இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் பெரிதும் வீழ்ச்சியடைந்த உற்பத்தித் தொழில் துறை மீண்டு எழுவதற்கு வழிவகை காணப்படவில்லை. ரூ. 10 இலட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் 80-சி என்ற வரிவிலக்கு உச்ச வரம்பு நீண்டகாலமாகவே ரூ. 1.5 இலட்சம் என்று இருப்பதை மாற்ற வேண்டும். பி.எப்., ஈ.எஸ்.ஐ., என பலவற்றிலும் உச்சவரம்புகள் மாற்றப்பட்டது போல் 80-சி திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி’ என்பதை நிலைநாட்ட, தொடர்ந்து முயற்சித்து வரும் மோடி அரசு, மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் உரிமைகளைப் பறிக்கவும், ‘ஒரே நாடு ஒரே ஆவணப் பதிவு’ திட்டத்தையும் கொண்டு வருகின்றது. நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்தும் முறை ஏற்கனவே மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் ‘ஒரு நாடு; ஒரு பதிவு முறை’ என்பதும் மாநில அதிகாரங்களைப் பறிப்பதற்கான முயற்சி ஆகும்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீட்டை மேம்படுத்த உதவி உள்ளதாகவும், நடப்பு ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வரி வசூல் ஒரு இலட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்ததாகவும் நிதி அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார். ஜி.எஸ்.டி. வரி நிதிப் பகிர்வு மாநிலங்களுக்கு பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். அதனை உறுதி செய்யாத ஒன்றிய அரசு வட்டி இல்லா நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கின்றது.

கடந்த ஏழு ஆண்டு காலமாக தமிழகத்தில் இரயில்வே துறையின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு சரியாக இல்லை. இந்த நிதி நிலை அறிக்கையிலும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
தாயகம்
சென்னை - 8
01.02.2022