Saturday, February 12, 2022

இலக்கிய உலகில் பொன்விழா - கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு அலைபேசி மூலம் துரை வைகோ வாழ்த்து!

இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் தேனி மாவட்டத்தில் வடுகப்பட்டி எனும் சிற்றூரில் பிறந்த அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் நிறைகின்றன.

இலக்கியப்பணியில் பொன்விழா கண்ட கவிஞரை வாழ்த்தி மகிழ்ந்தேன்.

அவரது முதல் கவிதைநூலான 'வைகறை மேகங்கள் கவியரசு கண்ணதாசன் அவர்களின் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது. அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இராண்டாம் ஆண்டு மாணவர்.

இந்த 50 ஆண்டுகளில் அவர் 38 நூல்களும் 7500 பாடல்களும் எழுதியிருக்கிறார்.

அந்த விழாவின் தொடக்க நிகழ்வாக 'வைரமுத்து இலக்கியம் 50'என்ற இலட்சினையைத் முதலமைச்சர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று வெளியிட்டார்கள்.

28 வயதிலேயே 'இதுவரை நான்'என்ற சுயசரிதை எழுதியவர் வைரமுத்து.

கருவாச்சி காவியம் -வைரமுத்து கவிதைகள் மூன்றாம் உலகப் போர் - தண்ணீர் தேசம் கொஞ்சம் தேநீர் நிறைய வானம்- திருத்தி எழுதிய தீர்ப்புகள்-வைரமுத்து சிறுகதைகள் - பெய்யெனப் பெய்யும் மழை என்று வைரமுத்துவின் படைப்புலகம் வான்புகழ் கொண்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட 'தமிழாற்றுப்படை' நூல் மூன்றே மாதங்களின் பத்துப்பதிப்புகள் கண்டு தமிழ்ப் பதிப்புலகில் சாதனை படைத்திருக்கிறது.

திரைப்படப் பாடலாசிரியருக்கென்று 7 முறை தேசிய விருது பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள்தான். சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருதினையும் 6 முறை பெற்று இருக்கிறார்.

2003இல் 'சாகித்யஅகாடமி' விருது பெற்ற இவரது 'கள்ளிக்காட்டு இதிகாசம் 23 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாட்டின் சிறந்த புத்தகத்துக்கான 'ஃபிக்கி' விருதுக்குத் தேர்வு பெற்றது.

இலக்கியத்தின் பங்களிப்பிற்காக இந்தியாவின் உயர்ந்த விருதுகளான 'பத்மஸ்ரீ' மற்றும் 'பத்ம பூஷண்' விருதும், பாரதிய பாஷா பரிஷித் அமைப்பின் 'சாதனாசம்மான்' விருதும் பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் இவரைக் 'கவிசாம்ராட்' என்று அழைத்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் 'காப்பியக் கவிஞர்' என்று கூறி சிறப்பித்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் 'கவிப்பேரரசு' என்று பட்டம் அளித்து சிறப்பித்தார்கள். தலைவர் வைகோ அவர்கள் இலக்கிய சிகரம் என்று பாராட்டி மகிழ்ந்தார்.

இவருடைய படைப்புகள் ஆங்கிலம் - இந்தி-தெலுங்கு கன்னடம் - மலையாளம் -உருது-வங்காளம் - ரஷ்யன் - நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவிதை - நாவல் - சிறுகதை - திரைப்பாட்டு - ஆராய்ச்சிக் கட்டுரை - திரை உரையாடல் - பயணக் கட்டுரை - சரிதை - சுயசரிதை என்று இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் இவரது பயணம் நீண்டு கொண்டேயிருக்கிறது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் இலக்கியப்பயணம் இன்னும் பவளவிழா, வைரவிழா, நூற்றாண்டு விழா காண வாழ்த்துகிறேன்..

துரை வைகோ
தலைமைக் கழக செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.02.2022

No comments:

Post a Comment