Sunday, February 13, 2022

கொங்கு மண்டலத்தின் கழக காவலரை இழந்தேன்! வைகோ MP இரங்கல்!

கழகத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர் ,அண்ணன் நாமக்கல் டி.என்.குருசாமி அவர்கள் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

கொங்கு மண்டலத்தில் கழக காவலரை இழந்து தவிக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேலத்து சிங்கம் அண்ணன் வீரபாண்டியார் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அண்ணன் டி.என்.ஜி அவர்கள், ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டார்.

அந்தக் காலத்திலேயே என் மீது அளவிடற்கரிய பாசம் கொண்டிருந்தார். மதிமுக மலர்ந்த போது நாமக்கல் மாவட்டத் துணைசெயலாளரானார். பின்னர் 1997 இல் மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று கழகப்பாசறையைக் கட்டிக் காத்தார்.

உயர்நிலைக் குழு உறுப்பினராக கழகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எனக்கு துணையாக இருந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற திராவிட இயக்கத் தலைவராக விளங்கிய அண்ணன் டி.என்.ஜி. அவர்கள் பொதுப்பணிகளிலும் சிறந்து விளங்கினார்.

கனரக வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர், நிதி நிறுவன சங்கத் தலைவர், பன்னாட்டு அரிமா சங்க செயல்பாட்டாளர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கிய பெருமை அவருக்கு உண்டு.

கழகத் தொண்டர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் டி.என்.ஜி. அமைதியே உருவானவர். அவர் அதிர்ந்துப் பேசி நாம் பார்த்தது இல்லை.

சில மாதங்களுக்கு முன் உடல் நலம் குன்றியதால் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் கடமை ஆற்ற முடியவில்லை. எனவே மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து இளைஞர்கள் இருவரைத் தேர்வு செய்து, மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அண்ணன் டி.என்.குருசாமி அவர்கள் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத்தின் கண்ணின் மணிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.02.2022

No comments:

Post a Comment