இசை என்றாலே புகழ். அந்த இசைத்துறையில் புகழ்க்கொடி நாட்டி, இன்று நம்மை எல்லாம் கண்ணீரில் ஆழ்த்தி விடைபெற்றுள்ளார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
அவருடைய பாடல்கள், அவரது குரலில் கேட்கும்போது, அது நம்மை எங்கோ இழுத்துச் செல்லும்.
கோவா மாநிலத்தில் மங்கேஷ்கர் கிராமத்தில் பிறந்த லதா, 1942 ஆம் ஆண்டு, 13 ஆவது வயதில் பாடத் தொடங்கினார். இசைதான் அவரது மூச்சு. ஏறத்தாழ 80 ஆண்டுகளாகப் பாடினார் பாடினார் பாடிக்கொண்டே இருந்தார்.
இசைக்கு எல்லைகள் இல்லை, எந்தத் தடையும் இல்லை. எனவே, இந்தியாவின் அத்தனை மொழித் திரைப்படங்களிலும் அவர் பாடினார். அந்தக் காலத்தில், வானொலிகளில் தமிழ்நாடு முழுமையும் அவரது பாடல்கள் ஒலித்தன.
நான் ஒரு இசை ரசிகன். எத்தனையோ சோதனைகளுக்கு இடையில் எனக்கு ஆறுதலாக இருப்பது இசைதான். மாணவப் பருவத்தில் சென்னையில் எத்தனையோ ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்து இருக்கின்றேன். இந்திப் படங்களையும் பார்த்து இருக்கின்றேன். எனக்கு அந்த மொழி புரியாவிட்டாலும், லதா மங்கேஷ்கரின் பாடல்களும், அவரது இனிய குரலும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். உயிரோட்டமான குரல் அது. உணர்ச்சிகளின் கலவையாக ஒலித்தது.
அவர் தமிழிலும் பாடினார். வானரதம் திரைப்படத்தில், எந்தன் கண்ணாளன் கடல் நோக்கிப் போகின்றான் என்று அவர் பாடிய பாடலை இன்றைக்கும் யூடியூப் காணொளியில் பார்க்க முடிகின்றது.
அவர் பெற்ற விருதுகளைக் கணக்கிட முடியாது. இந்தியாவின் மிக உயரிய பாரத் ரத்னா விருதையும் பெற்றவர். ஆனால், அந்த விருதுகளை விட, தன் குரலால் ஏழை எளிய அடித்தட்டு மக்களுக்கு அவரது குரல் அளித்து வந்த ஆறுதல்தான் மிகப் பெரியது. அளவிட முடியாதது.
அவரது குடும்பமே இசைக்குடும்பம்தான். அவரது தங்கை ஆஷாவும் புகழ் பெற்ற பாடகியாகத் திகழ்கின்றார்.
கானக்குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது இனிய குரல் அடங்கி விடாது.
காற்றில், விண்வெளியில் கலந்து இருக்கின்ற அந்தக் குரல் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகளையும் கவரும்...அவர்களது நெஞ்சங்களில் ஊடுருவிப் பாயும் என்பது திண்ணம்.
திசை தெரியாத வாழ்க்கையில், இசைக்குயிலாக இடம் பிடித்து இருப்பவர் லதா மங்கேஷ்கர் ஆவார்.
இசைக்குயில் லதா மங்கேஷ்கர் புகழ், ஏழிசையாய், இசைப்பயனாய், என்றென்றும் நிலைத்து இருக்கும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.02.2022
No comments:
Post a Comment