Monday, February 7, 2022

நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்கத்தக்கது அல்ல! வைகோ அறிக்கை!

மருத்துவப் படிப்புகளுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ‘நீட்’ நடத்துவதிலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2021 செப்டம்பர் 13 ஆம் நாள் சட்ட முன்வரைவு நிறைவேற்றி, ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல், நான்கு மாத காலமாக நிறுத்தி வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்.

கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிராக இருப்பதால் நீட் விலக்கு சட்ட முன்வரைவை திருப்பி அனுப்பி இருப்பதாக ஆளுநர் குறிப்பிட்டு இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

உண்மையில் நீட் தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற முடியாத நிலையைத்தான் உருவாக்கி இருக்கிறது. ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத வகையில் சமூக நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்று ஆளுநர் கூறுவதையும் ஏற்க முடியாது.

2016 மே 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் நீட் தொடர்பாக அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பது என்ன?

“நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் மூலம் பொது நுழைவுத் தேர்வு என்ற ‘நீட்’ நடைமுறைக்கு வருமானால், அதன் விளைவாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடையே மாறுபட்ட நிலைப்பாடு வருமானால், அத்தகைய முரண்பாடு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 254-ன் படித் தீர்த்துக் கொள்ளலாம்.

எந்த அடிப்படையிலும் மருத்துவ மாணவர் சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியன மாநில அரசிடமிருந்து கரைந்துபோகவில்லை.”

மேற்கண்ட தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம்தான் நீட் தேர்வை கட்டாயமாக்கியது என்று தொடர்ந்து கூறப்படுகின்ற கூற்று பொய்யானது என்பது தெளிவாகிறது.

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு அரசியல் சட்டப் பிரிவு 200 இன் படி மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். ஆளுநர் திருப்பி அனுப்பினால் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 201இன் படி மாநில சட்டமன்றம் ஆளுநருக்கு பரிசீலனை செய்யுமாறு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பலாம். அவ்வாறு மீண்டும் ஆளுநருக்கு சட்ட முன்வரைவு அனுப்பப்பட்டால், அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பியே ஆகவேண்டும்.

எனவே தமிழக அரசு மீண்டும் சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் சட்ட முன்வரைவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.02.2022

No comments:

Post a Comment