Saturday, February 19, 2022

நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை என அறிவித்த, முதல்வரைப் பாராட்டுகிறேன். வைகோ MP அறிக்கை!

தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில், பல்லாயிரக்கணக்கான டன் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, இலட்சக்கணக்கான டன் பாறைகளை வெட்டி எடுத்து, தரைக்கு உள்ளே 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் நீளவாட்டிலும், குறுக்குவாட்டிலும், சுமார் 3 கிலோ மீட்டர் நீளம் உள்ள இரண்டு குகைகளைக் குடைந்து, அங்கே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சித்து வருகின்றது. 

உலகின் மறுபக்கத்தில் உள்ள அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள செர்பி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து, நியூட்ரான் துகள்கள், சுமார் 13 கிலோ மீட்டர்களைக் கடந்து, பொட்டிப்புரத்தில் அமைக்கத் திட்டமிடும் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். அங்கே, 50 ஆயிரம் டன் எடையுள்ள காந்தக் கல்லைப் பதித்து ஆய்வு நடத்தும் திட்டம் இது. 

அதற்காக, வெடிமருந்து வைத்து பாறைகளை உடைப்பதால் ஏற்படும் அதிர்வுகளால், 30 கி.மீ தொலைவில் உள்ள இடுக்கி அணை, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்படும். நிலம், நீர், காற்று மண்டலத்துக்கும் பெரும் தீங்கு ஏற்படும். விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். வெளியாகும் தூசுப் படலத்தால் சுவாச நோய்கள் ஏற்படும். 

மேலும், இந்தச் சுரங்கங்களில் அணுக்கழிவுகளைக் கொட்டுவதற்கும் திட்டமிட்டு இருக்கின்றார்கள். 

முதலில் இந்தத் திட்டத்தை அசாம் மாநிலத்தில் அமைக்க முற்பட்டார்கள். அங்கே எதிர்ப்பு ஏற்பட்டதால், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் அமைக்க முயன்றார்கள். அங்கேயும் மக்கள் எதிர்த்ததால், தேவாரம் பொட்டிப்புரத்தில் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது.

ஆனால், தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கருத்தைக் கேட்கவும் இல்லை; இரண்டு கிலோ மீட்டர் அருகாமையில் கேரள எல்லை தொடங்குகின்றது; கேரள மாநில அரசின் ஒப்புதலையும் ஒன்றிய அரசு கேட்கவில்லை.

இங்கே வெட்டி எடுக்கப்படுகின்ற கிரானைட் கற்கள் மூலம் சில பகாசுர நிறுவனங்கள் கோடி கோடியாகக் கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அரசாங்கத்தைத் திருப்திப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்திற்கு 1500 கோடி அனுமதி வழங்கி உள்ளார்.

இமயமலைப் பாறைகள் உறுதித் தன்மை அற்றவை. எனவேதான், அங்கே அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. ஆனால், மேற்குத்தொடர்ச்சி மலைப் பாறைகள் உறுதியான கருங்கற்கள் ஆகும், அதனால்தான், மேற்குத் தொடர்ச்சி மலைகளை, உலகின் பழமையான வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாக, ஐ.நா.மன்றம் அறிவித்துள்ளது. அதனால், இம்மலைத் தொடரில் எந்தச் சேதத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்பது யுனெஸ்கோ விதி ஆகும்.

எனவே, நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த வழக்கில், 2015, மார்ச்சு 26 ஆம் தேதி,  உயர்நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்தது.

பூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழல் அமைப்பு, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, இன்று(17.02.2022) விசாரணைக்கு வந்த போது, நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை இரத்துச் செய்யுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்து இருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டிற்குக் கேடு விளைவிக்கும் நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் அளிப்பது இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ள முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
17.02.2022

No comments:

Post a Comment