Thursday, April 30, 2020

சோதனைகளைக் கடந்து வெற்றியை ஈட்டட்டும் தொழிலாளர் வர்க்கம்! வைகோ மே நாள் வாழ்த்து!


முதலாளித்துவ தொழில்கள் வேகமாக வளர்ச்சி அடைந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொழிலாளர்கள் 14 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பணிபுரிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இத்தகைய உழைப்புச் சுரண்டலை எதிர்த்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தொழிலாளர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. 1836 இல் இங்கிலாந்தில் தோன்றிய ‘சாசன இயக்கம்’ உலகின் பெருந்திரள் தொழிலாளர்கள் கொண்ட முதன்மையான அரசியல் இயக்கமாக வளர்ந்தது. சாசன இயக்கத்தின் முக்கியக் கோரிக்கையாக 10 மணி நேர வேலை முன்வைக்கப்பட்டது. 1842 ஆம் ஆண்டில் சாசன இயக்கம் சார்பில் அறைகூவல் விடுத்த பொது வேலை நிறுத்தம், அடக்குமுறை மூலம் தோல்வி கண்டது பிரிட்டனில்.


ஆனால், நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த தொழிலாளர் போராட்டம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியது. 1850களில் காரல் மார்க்ஸ் சாசன இயக்கத்திற்கு வழிகாட்டியாக அமைந்தார்.

ஆஸ்திரேலியா தொழிலாளர் போராட்டத்தின் விளைவாக மெல்போர்ன் விக்டோரியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் 8 மணி நேரம் கோரிக்கையை முன்வைத்து உலகிலேயே முதன் முதலில் வெற்றி கண்டனர்.

சர்வதேச தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் இணைந்து ‘முதல் அகிலம்’ எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பை 1864 இல் ஏற்படுத்தினர். உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளின் தொழிலாளர் பிரதிநிதிகள் கூடிய முதலாம் அகிலத்தின் மாநாடு 1850 களில் ஜெனிவாவில் நடந்தபோது, உரையாற்றிய காரல்மார்க்ஸ், 8 மணி நேரம் வேலை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்குக் குரல் எழுப்பினார்.

இதனால் ஊக்கம் பெற்ற அமெரிக்க தொழிலாளர் இயக்கங்கள் 1866 இல் ஒன்றிணைந்து, ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பை’ உருவாக்கி, 8 மணி நேரம் வேலைக் கோரிக்கையை முன் வைத்தன.

1886 மே 1 இல் அமெரிக்காவில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது. இந்த நிகழ்வுதான் மே தினம், ‘தொழிலாளர் தின’மாக ஆவதற்கு அடித்தளம் அமைத்தது.

1886 மே முதல் நாளில் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் விடுத்த வேலை நிறுத்த அறைகூவலில் 4 இலட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிலாளர் வர்க்கத்தின் ஆர்ப்பாட்டம், பேரணிகளால் அமெரிக்கா குலுங்கியது. 1886 மே 3 இல் தொழிலாளர்களின் பேரணியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் பலியானார்கள்.

மறுநாள் மே 4 இல் சிகாகோ நகரில் ‘ஹே மார்க்கெட்’ திடலில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காவல்துறை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தித் தாக்கியது. தொழிலாளர்கள் ரத்தம் ‘ஹே மார்க்கெட்’ திடலை நனைத்தது.

தொழிலாளர் போராட்டத்தைத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட தொழிலாளர் தலைவர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிஸ்சர் ஆகிய நால்வரும் 1887 நவம்பர் 11 இல் தூக்கிலிடப்பட்டனர்.

நவம்பர் 13, 1887 இல் நடந்த தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 இலட்சம் தொழிலாளர்கள் திரண்டனர்.

1889 ஜூலை 14 இல் பாரீஸ் நகரில் கூடிய சர்வதேச தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாநாட்டில் 8 மணி நேர வேலை போரட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், 1890 மே முதல் நாளை ‘சர்வதேச தொழிலாளர் நாளாக’க் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

எட்டு மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்காக இரத்தம் சிந்திய தொழிலாளர்களுக்கு, உயிரிழந்த தியாகிகளுக்கு மே நாளில் வீரவணக்கம் செலுத்துவோம்.

இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக பறித்து வரும் பா.ஜ.க. அரசின் கொடுமையை எதிர்த்துப் போராடுவோம்!

கொரோனா கொடிய பேரிடரால் இந்தியாவில் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்று பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தெரிவித்து இருக்கின்றது. வேலை வாய்ப்பை இழந்து வாடும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் துயரத்தைப் போக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

சோதனைகளைக் கடந்து, வெற்றிகளை ஈட்ட தொழிலாளர் வர்க்கத்திற்கு மே நாள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 30-04-2020 தெரிவித்துள்ளார்,

கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதா? வைகோ கண்டனம்!

அரியானா மத்தியப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில், பல்கலைக் கழக மானியக் குழு (யூ.ஜி.சி), கொரோனா பேரிடரால் தள்ளி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளைத் தொடங்குவது குறித்தும், அடுத்த கல்வி ஆண்டிற்கான பாடங்களைத் தொடங்குவது குறித்தும் ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.
இக்குழு அளித்திருக்கும் பரிந்துரைகளில், மருத்துவப் படிப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) போன்று, கலை அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்பதும் இடம்பெற்று இருக்கிறது.
இதே கருத்தை, கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் முன்வைத்தபோது, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. நானும் கண்டித்து அறிக்கை தந்தேன்.
கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரும் கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை முடக்கிப் போடும் வகையில், நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வது அநீதியாகும். இது கண்டனத்துக்கு உரியது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் பயிலும் வாய்ப்பற்ற பின்தங்கிய, பட்டியல் இனச் சமூக மாணவர்கள் மற்றும் அனைத்துச் சமூகங்களையும் சார்ந்த மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளைத்தான் நம்பி உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் நுழைவுத் தேர்வைப் புகுத்துவது சமூக நீதிக்கும் எதிரானது ஆகும்.
எனவே மத்திய பா.ஜ.க. அரசு, கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தச் செய்யப்பட்டு இருக்கும் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 30-04-2020 தெரிவித்துள்ளார்.

Wednesday, April 29, 2020

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைக்கு ‘சமாதி’ எழுப்பும் பா.ஜ.க. அரசு! வைகோ கண்டனம்!

காவிரி ஆற்று நீர் பங்கீட்டு சிக்கல் குறித்து 17 ஆண்டுகளுக்கு மேலாக விசாரித்து வந்த காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மிகத் தெளிவான வழிகாட்டு விதிகளை வகுத்திருந்தது.
பக்ரா - பியாஸ் மேலாண்மை ஆணையத்தை முன்மாதிரியாகக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் உத்தரவிட்டது. 6 ஆண்டுகள் காலதாமதமாக 2013 பிப்ரவரி 19 இல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டாலும் அதனைச் செயல்படுத்த முன்வரவில்லை.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 16, 2018 இல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பின்னர் 2018 மே மாதம் காவிரி மேலாண்மை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைத்தது.
மத்திய பா.ஜ.க. அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகத்தின கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அணைகளிலிருந்து நீர் திறப்பு, நீர் இருப்பு மேலாண்மை ஆகியவற்றை மேற்கொள்ள உரிய அதிகாரம் அளிக்கப்படவில்லை. காவிரி நீரை பிரச்சினைக்குரிய மாநிலங்களுக்குகிடையே பகிர்ந்து அளிக்கும் அதிகாரமும் இல்லை என்பதை மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டபோதே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டிய கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளைச் செயல்படுத்த, மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட போதெல்லாம் கர்நாடக மாநிலம் மறுத்து வந்தது. நீர் திறப்பு பற்றிய மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் கேள்விக்குள்ளானதைக் கண்கூடாகப் பார்த்தோம்.
காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உப்புச் சப்பற்ற காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவைகளை அமைத்த மத்திய அரசு, தற்போது காவிரியில் தமிழகத்தின் உரிமையை ஆழக் குழிதோண்டிப் புதைத்து சமாதி எழுப்பும் வேலையில் இறங்கி இருக்கிறது.
காவிரி ஆணையத்தின் 5ஆவது கூட்டம், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ராஜேந்திரகுமார் தலைமையில், கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி டெல்லியில் நடந்தது. இதுவே காவிரி ஆணையத்தின் இறுதிக் கூட்டமாகக்கூட இருக்கலாம்.
ஏனெனில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகமான ஜல்சக்தித் துறை, காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய பா.ஜ.க. அரசு பறித்துவிட்டது.
நதிநீர் பங்கீட்டுச் சிக்கல்களுக்குத் தீர்வு காண அமைக்கப்பட்ட அனைத்துத் தீர்ப்பாயங்களையும் இணைத்து ஒரே தீர்ப்பாயம் அமைப்பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசின் முதல் நடவடிக்கையாக காவிரி மேலாண்மை ஆணையம் ஒழித்துக்கட்டப்பட்டு இருக்கின்றது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தவா சட்டம் 1956 மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் அலட்சியம் செய்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் ஏதேச்சாதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது.
காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தித் துறையில் இணைக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
கொரோனா பேரிடர் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் துயரங்களை ஏற்படுத்தி வரும் இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்கும் பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்கு எதிராக பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 29-04-2020 தெரிவித்துள்ளார்.

முடிதிருத்துநர்கள், சலவைத்தொழிலாளர்கள், அயல்நாடுகளில் சிக்கி இருப்போருக்கு உதவிகள் தேவை வைகோ அறிக்கை!

கடந்த ஒரு மாத கால முடக்கத்தால், ஏழை எளிய அடித்தட்டு மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாடி வதங்குகின்றனர்.
அதிலும் குறிப்பாக முடி திருத்துநர்கள், சலவைத் தொழிலாளர்கள், தலைச்சுமை வணிகர்கள், வேறு எந்தவிதமான வருமானத்திற்கும் வழி இல்லாமல் துயர நிலையில் இருக்கின்றனர். திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் சுருங்கி விட்டதால், படக்கலைஞர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கவில்லை. பகுதிநேர செய்தியாளர்கள் அமைப்புகளில் இல்லை என்பதால், செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் அவர்களுக்கு இல்லை.
மும்பை வீதிகளில் தலைச்சுமை வணிகம் செய்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொ-ரோனா தாக்கி இறந்து விட்டார்கள். அவர்களுடன் தங்கியிருந்த பலர், உரிய மருத்துவம், உணவு, தங்கும் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மலேசியாவிலும், வளைகுடா நாடுகளிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிக்கித் தவிக்கின்றார்கள். ஒவ்வொரு வேளை உணவும் அவர்களுக்குப் போராட்டம்தான். அங்குள்ள தமிழர்களின் உதவியோடு நாட்களைக் கடத்துகின்றார்கள். நாடு திரும்ப வழி இல்லை. நாளை வான்ஊர்திகள் பறந்தாலும் பயணச்சீட்டு வாங்குவதற்கு அவர்களிடம் காசு இல்லை.
இது போல பல்வேறு நாடுகளில் துன்பத்தில் தவித்த கேரள மாநிலத்தவர் திரும்பி வருவதற்கு கேரள அரசு எப்படி ஏற்பாடு செய்திருக்கிறதோ, அதைப் பின்பற்றியாவது தமிழர்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வருவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 29-04-2020 தெரிவித்துள்ளார்.

Tuesday, April 28, 2020

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, பி.எப்., ஈட்டிய விடுப்பு அரசாணைகளைத் திரும்பப் பெறுக! வைகோ வலியுறுத்தல்!

கொரோனா காரணமாக ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க, ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு, திரும்பப் பெற்றது. 48.34 இலட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65.26 இலட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 2021 ஆம் ஆண்டு ஜூலை வரை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு ஏப்ரல் 23 ஆம் தேதி அறிவித்தது. இந்நடவடிக்கை இலட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை பாதிக்கும் என்பதால், அகவிலைப்படி உயர்வை எப்போதும்போல அதிகரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
மத்திய பா.ஜ.க. அரசின் ‘அடியொற்றி’ தமிழகத்தில் ஆட்சி புரியும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத்துறை பணியாளர்கள் என சுமார் 12 இலட்சம் பேரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து, விடுப்பு ஊதியம் பெற்று வருகின்றனர். இந்த ஈட்டிய விடுப்பை இரு ஆண்டுகள் எடுக்காதவர்கள் அதைத் தங்களது ஒரு மாத அடிப்படை ஊதியமாக (ஆண்டுக்கு 15 நாள் ஊதியம்) பெற்றுக் கொள்ளலாம்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணை மூலம், ஈட்டிய விடுப்பு ஊதியம் தொடர்பான விண்ணப்பங்களும், நிலுவைத் தொகைத் தொடர்பான கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது. ஏற்கனவே ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் அளித்திட ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் அவை ரத்து செய்யப்படும். விண்ணப்பதாரரின் விடுப்பு கணக்கில் ஈட்டிய விடுப்பு நாட்களாகச் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் அகவிலைப்படி உயர்வு, 2021 ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்படும் எனவும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.9 விழுக்காட்டிலிருந்து, 7.1 விழுக்காடு என்று குறைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மருத்துவத்துறை, வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை பணியாளர்களும் அரசு நிர்வாகத்திற்கு முழு அளவில் ஒத்துழைப்பு நல்கி, அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் ஏதேச்சாதிகாரமாக சரண் விடுப்பை நிறுத்தி வைத்தல், அகவிலைப்படி உயர்வை ரத்து செய்தல், பி.எப். வட்டிக் குறைவு தொடர்பான அரசாணைகள் பிறப்பித்து இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. தமிழக அரசு இத்தகையை அரசாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 28-04-2020 தெரிவித்துள்ளார்.

கொரோனா துரித பரிசோதனைக் கருவிகளை அதிக விலைக்குக் கொள்முதல் செய்தது ஏன்? வைகோ கேள்வி!

கொரோனா பரிசோதனைகளை அதிக அளவில் மேற்கொண்டால்தான், வைரஸ் பரவல் குறித்த உண்மை நிலையை முழுமையாக அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் துரித பரிசோதனைக் கருவிகளை (Rapid Test Kits) சீனாவிலிருந்து மத்திய அரசு இறக்குமதி செய்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் துரித பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு பரிசோதனை நடத்தப்பட்டதில், கொரோனா சோதனை முடிவுகள் 5.4 விழுக்காடு மட்டுமே துல்லியமாக இருக்கிறது. இக்கருவிகள் தரமற்றவை என ராஜஸ்தான் மாநில அரசு புகார் தெரிவித்தது.
‘பி.சி.ஆர்.’ பரிசோதனையில் முறையில் ‘பாசிடிவ்’ என்று முடிவு வந்த 168 நோயாளிகளுக்கு துரித பரிசோதனைக் கருவியையக் கொண்டு சோதனை செய்ததில், ‘நெகடிவ்’ என்ற முடிவு வந்ததால், அதன் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. இதனையடுத்து ஏப்ரல் 21 ஆம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித பரிசோதனைக் கருவிகளை இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் பயன்படுத்தத் தடை விதித்தது.
ஏப்ரல் 23 ஆம் தேதி, ஐ.சி.எம்.ஆர். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பிறபொருள் எதிரி (ANTI BODY) உருவாவதைக் கண்டறியவே துரித பரிசோதனைக் கருவி பயன்படுத்தப்படுகிறது. கொரோனாவைக் கண்காணிக்க மட்டுமே இவற்றைப் பயன்படுத்தலாம். கொரோனாவைக் கண்டறிய ‘பி.சி.ஆர்.’ சோதனை அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் நேற்று, “சீனாவின் வோன்~போ நிறுவனத்திடம் இருந்து வாங்கிய ‘ரேபிட் டெஸ்ட்’ கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம்” என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
இந்நிலையில்தான், ஷான் பயோடெக் எனும் நிறுவனம் மூலம் ரூ.600 விலையில், 50 ஆயிரம் துரித பரிசோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கி இருக்கிறது. ஐ.சி.எம்.ஆர். உரிமம் பெறாத ஷான் பயோடெக் நிறுவனம், டெல்லி மெட்ரிக்ஸ் லேப்ஸ் எனும் நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்ஸை கொள்முதல் செய்து, அதனை தமிழக அரசுக்கு விற்பனை செய்திருக்கிறது.
ஆனால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித பரிசோதனைக் கருவியின் அடக்க விலை, இறக்குமதி வரி மற்றும் கூடுதல் செலவு உட்பட 245 ரூபாய்தான் என்பது டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கின் மூலம் அம்பலமாகி உள்ளது.
ரேர் மெட்டாபாலிக் லை~ப் சயின்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கும், மெட்ரிக்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனத்திற்கும் இடையிலான ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான வழக்கில்தான் இந்த உண்மை வெளிப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “ஒரு கிட் 245 ரூபாய்க்கு வாங்கும் பட்சத்தில் 400 ரூபாய்க்கு விற்பது, விற்பனையாளருக்குப் போதுமானதைவிட அதிகமான லாபம்தான். நாடு முழுவதும் அவசர சோதனைகளுக்காக குறிப்பாக உலகளாவிய தொற்று நோயின் தற்போதைய அசாதாரணமான சூழ்நிலையில், பொதுநலன் என்பது தனியார் லாபத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி. உட்பட ஒரு ரேபிட் டெஸ்ட் கிட் 400 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி அரசு, தனியார் முகவாண்மை மூலம் ரூ.245க்கு அல்லது டெல்லி உயர்நீதிமன்றம் கூறியவாறு 400 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட வேண்டிய துரித பரிசோதனைக் கருவிகளை, 600 ரூபாய்க்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்தது ஏன்?
கொரோனா கொள்ளை நோயால் நாளுக்கு நாள் மக்களின் துயரம் அதிகரித்துக்கொண்டு வரும் சூழலில், அரசுக் கருவூலத்திற்கு இழப்பை ஏற்படுத்துவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
கொரோனா பேரிடரால் அச்சமும், எதிர்கால வாழ்க்கை குறித்தும் மக்கள் கவலை கொண்டு தவிக்கின்ற நிலையில், ‘எல்லாம் நாங்களே’ என்று முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் இதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 28-04-2020 தெரிவித்துள்ளார்.

Monday, April 27, 2020

இறந்த உடல்களை இந்தியா கொண்டு வர வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடன் வைகோ அலைபேசி உரையாடல்!

கடந்த மார்ச் 17ஆம் நாள் துபாயில் மாரடைப்பால் இயற்கை எய்திய, விருதுநகர் மாவட்டம்- மகராஜபுரம் துரைராஜ் உடலை இந்தியா கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தடை குறித்து மறுமலர்ச்சி தி.மு. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அதன் பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை இரண்டு முறை தொடர்பு கொண்டு பேசினார். துரைராஜ் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மே ஒன்றாம் நாள் அவர் உடல் வந்து சேரும் என உறுதி அளித்து இருக்கின்றார்.
அதே போல அபுதாபியில் இருந்து தில்லிக்கு வந்து, திருப்பி அனுப்பப்பட்ட மூன்று உடல்களையும் இந்தியா கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இத்தகைய தடைகளை நீக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், அமைச்சர் அவர்கள் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டதற்கு வைகோ நன்றி தெரிவித்துக்கொண்டார் என்ற செய்தியை மதிமுக தலைமை நிலையம் தாயகம் 27-04-2020 வெளியிட்டுள்ளது.

Sunday, April 26, 2020

இந்தியாவுக்கு வந்த உடல்களைத் திருப்பி அனுப்பியது, ஈவு இரக்கம் அற்ற கொடுஞ்செயல் வைகோ கண்டனம்!

விருதுநகர் மாவட்டம், வத்திறாயிருப்பு துரைராஜ், மார்ச் மாதம் 17 ஆம் தேதி துபாயில் இயற்கை எய்தினார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக, துபாயில் உள்ள தமிழ் அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். அதில் தாமதம் ஏற்பட்டதால், எனக்குத் தகவல் தெரிவித்தனர். நான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கும், துபாய் இந்தியத் தூதரகத்துக்கும் தொடர்பு கொண்டேன். அடுத்த நாளே, உடலை அனுப்பி வைப்பதாகத் தகவல் வந்தது.
இதிகாட் வான் ஊர்தியின் சரக்கு வான் ஊர்தியில், துரைராஜ் உடல் சென்னைக்கு வருவதாகத் தகவல் தெரிவித்தனர். அதனால், மகராஜபுரத்தில் இருந்து துரைராஜ் உறவினர்கள், உடலைப் பெறுவதற்காக வேனில் புறப்பட்டு வந்தனர். அதற்கு வாடகையாக ரூ 35,000 பேசி இருந்தனர். திண்டிவனம் அருகில் அவர்கள் வந்துகொண்டு இருந்தபொழுது, துரைராஜ் உடல் இன்று வரவில்லை, இன்னும் இரண்டு நாள்கள் கழித்துத்தான் வரும் என்று சொன்னார்கள். எனவே, துரைராஜ் குடும்பத்தினர் சென்னை எழும்பூரில் இம்பீரியல் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்.
இதற்கு இடையில், மீண்டும் தொடர்புகொண்ட இதிகாட் வான்ஊர்தி நிறுவனத்தார், அடுத்த இரண்டாவது நாள் வரும் என்பதற்கும் உறுதி சொல்ல முடியாது எனத் தகவல் தெரிவித்தனர்.எனவே, துரைராஜ் குடும்பத்தார், நாங்கள் ஊருக்குச் செல்கிறோம், தகவல் கிடைத்தவுடன் வருகிறோம் எனக் கூறி விட்டுச் சென்றனர்.
இது தொடர்பாக, இதிகாட் வான் ஊர்தி நிறுவனத்திடம் மீண்டும் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, இந்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு புதிய ஆணை வந்துள்ளது. அதன்படி, மறு உத்தரவு வரும்வரை, இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாது என்று கூறி இருக்கின்றார்கள். இன்று மாலை மூன்று உடல்கள் வருவதாக இருந்தது. இரண்டு உடல்கள்தான் வந்தன. துரைராஜ் உடலை, இந்தியத் தூதரகம் மருத்துவமனையில் இருந்து விடுவித்து, துபாயில் இதிகாட் வான் ஊர்தி நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். ஆனால், துபாய் காவல்துறையில் இருந்து வர வேண்டிய ஒரு ஆவணம், உரிய நேரத்தில் கைக்கு வராததால், துரைராஜ் உடலை மட்டும் அனுப்பவில்லை விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில், துபாயில் இருந்து சென்னை வழியாக தில்லிக்கு வந்த, மாரடைப்பால் இறந்துபோன வட இந்தியத் தொழிலாளர்கள் கமலேஷ் பட், சஞ்சீவ் குமார், ஜக்சீர்சிங் ஆகிய மூன்று பேர்களது உடல்களை, தில்லி வான் ஊர்தி நிலையத்தில், வான் ஊர்தி நிலையத்தில் இருந்து இறக்க விடாமல், இந்திய அரசு திரும்பவும் துபாய்க்கு அனுப்பிய செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கின்றன.
தங்களது மனைவி, பிள்ளைகளை எதிர்கால நல்வாழ்விற்காக, அவர்களை விட்டுப்பிரிந்து, வளைகுடாவில் உள்ள வெப்ப நாடுகளில் தங்கள் உடலை உருக்கிப் பாடுபடுகின்றவர்கள், மாரடைப்பாலும், விபத்துகளாலும் திடீரென இறந்து விடுகின்றார்கள். அப்படி ஆண்டுதோறும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் இறந்து விடுகின்றார்கள். அவர்களுடைய குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகின்றது. தங்களது கணவன், தந்தையின் உடலைப் பார்க்க முடியாமல் அவர்களது குடும்பத்தார் அழுது புலம்புவது ஆறுதல் சொல்ல முடியாத பெருந்துயரம் ஆகும்.
இந்த நிலையில், துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்த மூன்று பேர்களது உடலைத் திருப்பி அனுப்பியது, ஈவு இரக்கம், மனிதாபிமானம் அற்ற கொடுஞ்செயல் ஆகும். அவர்கள் கொரோனா பாதிப்பில் இறக்கவில்லை. மூவருமே மாரடைப்பால் இயற்கை எய்தியவர்கள். அவர்களது உடலைத் திருப்பி அனுப்பியதற்காக, அமீரக அரசு, கண்டனம் தெரிவித்து இருக்கின்றது. இத்தகைய செயல், இந்தியாவில் இதுவே முதன்முறை ஆகும். இதிகாட் நிறுவனம், உடல்கள் திரும்பி வந்ததற்கான கட்டணத்தையும் கேட்பதாகச் செய்திகள் வந்துள்ளன.
இறந்தவர்களுக்கு வழங்க வேண்டிய இறுதி மரியாதையை இந்திய அரசு புறக்கணித்து, கேவலப்படுத்தி இருக்கின்றது. இந்திய அரசின் இந்தச் செயல், உலக அளவில் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கின்றது.
இத்தகைய தடை நடவடிக்கையை, இந்திய அரசு உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்துவதுடன், திருப்பி அனுப்பப்பட்ட மூன்று உடல்களையும், வத்றாயிருப்பு மகராஜபுரம் துரைராஜ் உடலையும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்தியாவுக்குக் கொண்டு வந்து, குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 26-04-2020 தெரிவித்துள்ளார்.

பந்தல் மற்றும் ஒலி-ஒளி அமைப்பு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குக! வைகோ அறிக்கை!

கொரோனா ஊரடங்கு காரணமாக இலட்சக்கணக்கான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் திருமண விழாக்கள், பள்ளி - கல்லூரி விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் அரசு விழாக்களுக்கு பந்தல் அமைப்பது, ஒலி-ஒளி பெருக்கி ஏற்பாடு செய்வது போன்ற பணிகளில் சுமார் 10 இலட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் வாடகைப் பாத்திரங்கள், மேடை அலங்காரம், வாடகை நாற்காலிகள் ஏற்பாடு செய்தல் போன்ற சிறுதொழில் சார்ந்தவர்களும் அடங்குவர்.
கொரோனா பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மேற்கண்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதுடன், இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவித் தொகை, பொதுப்பங்கீட்டுக் கடைகள் மூலம் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை தமிழக அரசு வழங்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 26-04-2020 தெரிவித்துள்ளார்.

Saturday, April 25, 2020

ஒழுங்குநடவடிக்கை தலைமைக்கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சிதிராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் எஸ்.மோசஸ் மனோகர் (திருஞானபுரம், கன்னியாகுமரிமாவட்டம்) அவர் வகித்து வரும் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார் என தலமை கழகம் தாயகம் 25-04-2020 அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயி தற்கொலை; தமிழக அரசே பொறுப்பு! வைகோ அறிக்கை!

விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து, மின்சாரம் கொண்டுசெல்வதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துத் தொடர்ந்து அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உயர்மின் கோபுரம் அமைக்கக் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு 2013 ஆம் ஆண்டு புதிய நில எடுப்புச் சட்டப்படி, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடி வருகின்றனர்.
ஜனவரி 21, 28, 30 மற்றும் பிப்ரவரி 29 ஆகிய நாட்களில் விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அதன்பின்னர் மார்ச் 10 ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆடு, மாடுகளுடன் முற்றுகையிடுவோம் என்று விவசாய சங்கக் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மார்ச் 9 ஆம் தேதி, விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து, உயர்மின் கோபுரம் அமைத்திட கையப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்நிலையில், கொரோனா கொள்ளை நோய் துயரில் மக்கள் நொறுங்கி உள்ள நேரத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு மத்திய அரசின் பவர்கிரீட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் .
விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவிட்டு, காவல்துறை அடக்குமுறை தர்பாரை ஏவிவிடுகிற எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஏப்ரல் 21 ஆம் தேதி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன்.
தன்னுடைய விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரத்திற்கு இழப்பீடு தராததால், மன உளைச்சல் அடைந்த 75 வயது விவசாயி ராமசாமி, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உயர்மின் அழுத்தக் கோபுரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தி இன்று காலையில் தெரியவந்துள்ளது.
விவசாயி ராமசாமி இறப்பிற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அக்குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
உயிரிழந்த விவசாயி ராமசாமி குடும்பத்திற்கு ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி, உரிய முறையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கருத்தொன்றுமையை உருவாக்கி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 25-04-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, April 23, 2020

வேலை இழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் மூலம் உதவிக் கரம் நீட்டுக! பிரதமருக்கு வைகோ கடிதம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் வருமாறு:-
உயர்திரு நரேந்திர மோடி அவர்களுக்கு,
வணக்கம்.
பொருள்: வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு ‘அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் உதவி வழங்கக் கோருதல்:-
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழலில், ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அவற்றுக்குத் தீர்வு காண மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய சில கருத்துகளை தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொள்ளை நோய் கோவிட்-19 காரணமாக எதிர்பாராத வகையில் 24.03.2020 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் அனைத்துத் தொழிலகங்களும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும், அவற்றின் பணியாளர்களுக்கு ஊதியம், உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்டவற்றை மனிதநேய அடிப்படையில் செய்துதர வேண்டிய பொறுப்பும், கடமையும் நிர்வாகத்திற்கு இருக்கிறது என்று இந்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பு காரணமாக தொடர்ந்து பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலைமை ஏற்பட்டு, நிறுவனங்கள் தவிக்கின்றன.
ஊரடங்கு காரணமாக சுமார் 9 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் எனத் தகவல்கள் கூறுகின்றன.
தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலை தொடர்ந்தால், அக்குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி, வறுமையின் கோரப் பிடியில் சிக்கிவிடும் துயரச் சூழல் உருவாகும்.
மாநில அரசுகள் தங்களது நிதி ஆதாரங்களைக் கொண்டு சொற்பமான அளவில்தான் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றன.
ஏழைத் தொழிலாளர் குடும்பங்கள் வருவாய் இழப்பின் விளைவாக பட்டினியால் வாடும் ஆபத்து உருவானால், மிகப்பெரிய சமூகக் கொந்தளிப்புக்கு வழிவகுத்துவிடும்.
எனவே இதுபோன்ற நெருக்கடிகளுக்கு அரசாங்கம் தீர்வு காண கீழ்காணும் பரிந்துரைகளை முன் வைக்கிறேன்.
1. தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தில் (ESIC) பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், திடீரென்று வேலை இழக்க நேரிட்டால் ‘அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா (Atal Bimit Vyakti Kalyan Yojana)’ திட்டத்தின் கீழ் அவர்கள் கடைசியாக பெற்றுவந்த ஊதியத்தின் 25 விழுக்காடு மூன்று மாதத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இதனை 50 விழுக்காடாக உயர்த்தி வழங்க ஆவன செய்ய வேண்டும்.
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தில் 3.19 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில் உள்ள நிதி மூலதனம் ரூ.91444 கோடியில், ரூ.23151 கோடி இருப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2. தொழிலாளர்கள். தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை இரண்டு மாதங்களாகக் குறைக்க வேண்டும்.
3. தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் இச்சலுகையை வாழ்நாளில் ஒருமுறைதான் பயன்படுத்த முடியும் என்ற விதிமுறையைத் தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள கொள்ளை நோயைக் கருத்தில் கொண்டு நீக்க வேண்டும்.
4. தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் ‘அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் வேலை இழப்புக்கான சலுகைகளை தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் வழங்க முடியாத நிலை இருந்தால், நிலைக்குழு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் ஆகியவற்றின் மூலம் ‘சிறப்புத் திட்டம்’ ஒன்றை வகுத்து, வேலை இழக்க நேரிட்ட தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள
வைகோ

வைகோ அவர்கள் இவ்வாறு தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என மதிமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 23-04-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 22, 2020

வைகோ முயற்சியால் துபாயில் இறந்த துரைராஜ் உடல் இன்று சென்னை வருகிறது!

விருதுநகர் மாவட்டம் - வத்திறாயிருப்பு வட்டம், மகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் (வயது 45), துபாயில் வேலை பார்த்து வந்தார்.
அவர் மார்ச் 17 ஆம் நாள் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடலை இந்தியா அனுப்புவதற்கான முயற்சிகளை அவர் வேலை செய்த நிறுவனம் மேற்கொண்டது. அங்குள்ள தமிழ் அமைப்புகள் உதவிய நிலையிலும், அவரது உடலை இந்தியா கொண்டு வர முடியவில்லை.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தார். அடுத்த நாளே, தூதரக அதிகாரிகள், துபாயில் உள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, வைகோ அவர்கள் கடிதம் பற்றித் தெரிவித்து, துரைராஜ் உடலை, இந்தியா அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
அதன்படி, இன்று இரவு 10.45 மணிக்கு, எமிரேட்ஸ் வான் ஊர்தி மூலம், துரைராஜ் உடல், சென்னை வான் ஊர்தி நிலையத்திற்கு வந்து சேருகின்றது.
அவரது உடலைப் பெறுவதற்காக, உறவினர்கள் இன்று காலை வத்திறாயிருப்பில் இருந்து சென்னை பயணித்து வருகின்றனர். அவர்கள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள செய்தியில் 22-04-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, April 21, 2020

விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்காமல் உயர் மின் கோபுரப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதா? வைகோ கண்டனம்!

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து, உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் அறப்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. விவசாயிகளும், பொதுமக்களும் தங்கள் விளைநிலத்தைப் பாழாக்கும் உயர்மின் பாதை கோபுரங்கள் அமைத்ததைத் தடுத்து நிறுத்த அறப்போராட்டங்கள் நடத்தியபோது, எடப்பாடி பழனிச்சாமி அரசு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டது. ஆனால் கொங்குச் சீமை மக்கள் அடிபணியாமல் களத்தில் நின்று போராடி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு எந்தவிதமான இழப்பீடும் வழங்காமல், காவல்துறையை ஏவி அச்சுறுத்தி, உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை பவர் கிரீட் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடர்ந்தபோது, விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மக்களைத் திரட்டி பல கட்டங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜனவரி 21, 2020 அன்று பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.
2013 ஆம் ஆண்டு புதிய நில எடுப்புச் சட்டப்படி சந்தை மதிப்பில் நிலத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரிய விவசாயிகளின் கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு மீண்டும் ஜனவரி 28 இல் உயர் மின் பாதை பணிகளை தொடங்கியபோது, அதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களின் பெண்கள் தாலிக்கொடியை திருப்பூர் ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.
ஜனவரி 30, 2020 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திக் காத்திருப்புப் போராட்டத்தில் இறங்கினர். அப்போது மாவட்ட ஆட்சியர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் கோரிக்கைகளை பரிசீலிக்கக்கூடச் செய்யாமல், மீண்டும் திட்டப் பணிகளை தொடங்கியபோது தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பிப்ரவரி 29 ஆம் தேதி விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டது.
அதன் பின்னரும் தமிழக அரசு ‘கேளா காதினராக’ இருந்ததால் மார்ச் 10 ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் ஆடு, மாடுகளுடன் குடியnறும் போராட்டம் நடத்துவோம் என்று விவசாய சங்க கூட்டியக்கம் எச்சரித்தது. பின்னர் உடனடியாக மார்ச் 9 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உயர்மின் கோபுரம் அமைத்திட கையகப்படுத்திடும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் தொகையை நிர்ணயித்து வழங்கும் பொறுப்பு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் நாடு முழுவதும் கொரோனா கொள்ளை நோய் மக்களை அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறையச் செய்திடும் நிலையில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு மத்திய அரசின் பவர்கிரீட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூகத் தொற்று பரவி வரும் சூழலில் திருப்பூர் மாவட்டம்- தாராபுரம், பல்லடம் ஆகிய வட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு வட மாநிலத் தொழிலாளர்கள் நிலங்களுக்கு வந்தபோதுதான் மாவட்ட ஆட்சியர் அனுமதி ஆணை பற்றி தெரிய வந்திருக்கிறது.
சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்குவோம் என்று தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடித்து, உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 21-04-2020 தெரிவித்துள்ளார்.

சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல்! வைகோ கண்டனம்!

கொரோனா கொள்ளை நோய் பரவலைத் தடுக்க மார்ச் 24 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் நீடித்து வருகின்றது. நாடு முழுவதும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அச்சத்தை உருவாக்கி, கோடிக்கணக்கான ஏழை எளியோரின் வாழ்வாதாரங்களைப் பறித்துள்ள கொரோனாவிலிருந்து மீள்வது எப்போது என்ற வினாவுக்கு இன்னும் விடை தெரியவில்லை.
சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி இழந்துள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் ஒரு மாத காலமாக வேலையின்றி தவிக்கின்றனர். விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், மக்களைப் பாதுகாக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அவர்களை துயரப்படுகுழியில் தள்ளி வருவது கண்டனத்துக்கு உரியது.
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு சிறிது தளர்த்தப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 48 க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் தொடரும் என்றும், அதில் 26 சுங்கச் சாவடிகளில் 5 முதல்12 விழுக்காடு வரை கட்டணம் அதிகரிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 8.50 இலட்சம் சரக்கு வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது வழிப்பறி போல நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடி கட்டணக் கொள்ளை நிலையங்களை நிரந்தரமாக மூட வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்து வருவதை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை.
கொரோனா தொற்று நோய் மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. எதிர்காலம் பற்றிய கவலை அதிகரித்துள்ள நிலையில், சுங்கச் சாவடி கட்டணம் வசூல், கட்டணம் அதிகரிப்பு என மத்திய அரசு மக்களை வாட்டி வதைப்பதை ஏற்கவே முடியாது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூல் செய்வதை மத்திய அரசு உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 20-04-2020 தெரிவித்துள்ளார்.

Saturday, April 18, 2020

உயிர் காக்கும் மருத்துவர்களைக் காப்போம்! வைகோ அறிக்கை!உயிர் காக்கும் மருத்துவர்களைக் காப்போம்! வைகோ அறிக்கை!

கொரோனா எனும் கொடிய கொள்ளை நோயை எதிர்த்து உலகம் முழுவதும் மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.


கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், பசி நோக்காமல், கண் துஞ்சாமல் உயிரையே பணயம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் மனித சமூகத்திற்குச் சேவை அளித்து வருகிறார்கள்.

கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, சத்ருகன் பாஞ்வாணி என்ற மருத்துவர் சிகிச்சைப் பலன் இன்றி ஏப்ரல் 9 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

மேகாலாயா மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிர்ப் பலி ஆனவர், 69 வயது மருத்துவர் என்று அம்மாநில முதல்வர் கன்ராட் சங்மா தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சை அளித்து வரும் எட்டு மருத்துவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை கூறி இருக்கிறது.

கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த இரு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இருவருக்கும் சரியான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று புகார் வந்ததும், கோவை அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் நேற்று (17.04.2020) நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உயிரிழந்த இரண்டு மருத்துவர்கள் உடலை நல்லடக்கம் செய்வதற்குக்கூட நவநாகரீக மனித சமூகம் தடைகள் ஏற்படுத்தியுள்ள செய்தி வேதனை தருகிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் முப்பது ஆண்டுகளாக எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணராக சேவை செய்து வந்த மருத்துவர் லெட்சுமி நாராயண் ரெட்டி, கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏப்ரல் 5 ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரது உடலை எரியூட்டுவதற்காக சென்னை அம்பத்தூர் மின் மயானத்திற்குக் கொண்டு சென்றபோது, அங்கு உடலை எரியூட்ட அனுமதிக்க மாட்டோம் என்று மக்கள் கூடி நின்று எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார்கள்.

மருத்துவரின் குடும்பம் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டு தவிக்கும் நிலையில், மருத்துவர் லெட்சுமி நாராயண் ரெட்டியின் உடல் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்ய முடியாமல், இறந்த பின்னரும் அவரை அவமதித்து இருக்கின்றது இந்தக் கொடூர சமூகம்.

இதைப் போலவே இன்னொரு துயர நிகழ்வும் நம் நெஞ்சைப் பிளக்கிறது.

நீலகிரி மாவட்டம், தெங்குமரஹாடா எனும் மலை கிராமத்தில் அரசு மருத்துவராக பணியாற்றிய டாக்டர் ஜெயமோகன், கொரோனா சிறப்பு மருத்துவராகவும் பணியாற்றினார். உடல்நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறை எடுத்த அவர், காய்ச்சல் அறிகுறி இருந்ததால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகனின் மரணச் செய்தி கேட்டு துயரம் தாளாமல், மருத்துவர் ஜெயமோகனின் தாய் தற்கொலைக்கு முயன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டில் வசிக்கும் தமக்கையும் வரமுடியாத சூழல். ஜெயமோகனின் தந்தையும், நண்பர்களும் அவரது இறுதிச் சடங்கு நடத்த சொந்த ஊரான மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ரேயான் நகரில் ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

கொரோனா தொற்றால் டாக்டர் ஜெயமோகன் இறந்தார் என்று செய்தி பரவியதால், அவரது உடலை ஊருக்குள் எடுத்துவர மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மருத்துவர் ஜெயமோகன் டெங்கு காய்ச்சலால் இறந்தார் என்ற மருத்துவ அறிக்கையை ஊர் மக்களுக்குக் காட்டிய பிறகுதான், மருத்துவரின் உடல் வீட்டிற்கு கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டு, மின் மயானத்தில் எரியூட்டப்பட்டு உள்ளது.

மனிதநேயம் மரித்துப்போய்விட்ட இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடைபெறக் கூடாது.

மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு மத்திய - மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கொரோனா தடுப்புச் சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நலனில் மத்திய - மாநில அரசுள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வ-லியுறுத்துகிறேன் என மதிமுக செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

Tuesday, April 14, 2020

அம்பேத்கர் பிறந்தநாளில் வைகோ மலர் அஞ்சலி!

பாபா சாகேப் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது அண்ணா நகர் இல்லத்தில் 14-04-2020 அன்று அண்ணல் அம்பேத்கர் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

உடன் கழக துணை பொதுச் செயலாளர் வைகோ மற்றும் துரை வையாபுரி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Monday, April 13, 2020

தன்னார்வ தொண்டு செய்வதற்கு தடை போடும் தமிழக அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தாக்கல்!

கொரோனா கொள்ளை நோய் கொடூர பாதிப்பிலிருந்து கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் மட்டும் இயலாது.
அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பொதுநல ஆர்வலர்கள் மனிதாபிமானத்துடன் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், அவசரகால உதவிகள் ஆகியவற்றை நேரடியாகக் கொடுப்பதைத் தடுக்கும் நோக்கத்தோடு, நேற்றைய தினம் தமிழக அரசு ஒரு அறிவிப்பைச் செய்தது.
பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக தமிழக அரசு இன்று மழுப்பலான ஒரு அறிக்கையை வெளியிட்டு, அரசாங்கத்தின் மூலமாகத்தான் உதவ வேண்டும் என்ற நோக்கத்தையும் மறுபடியும் வெளிப்படுத்தி உள்ளது.
எனவே மேற்கூறிய நடவடிக்கைகளை இரத்து செய்யுமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், வருவாய்த் துறைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.
அத்துடன் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தானே வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றப் பதிவுத் துறையிடம் முறையிட்டுள்ளார்.
வழக்கு விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 13-04-2020 தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு மாத மின் கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டும். வைகோ கோரிக்கை!

ஊரடங்கு நீட்டித்து இருக்கின்ற நிலையில், தற்போது எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்கு, மத்திய மாநில அரசுகள் உடனடித் தீர்வு கண்டாக வேண்டும்.
வளைகுடா நாடுகளில் 2 கோடிக்கும் கூடுதலான இந்தியத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். அங்கே கொரோனா தாக்கத்தால், நமக்கும் முன்பாகவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இன்றுவரையிலும் எல்லோரும் முடங்கி இருக்கின்றார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனைகளில் சேர்க்க இடம் இல்லை. எனவே, வீட்டிலேயே வைத்துப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகின்றார்கள். அப்படிப் பல தொழிலாளர்கள் தங்களுடைய இருப்பிடங்களிலேயே இருக்கின்றார்கள். இதனால், மற்ற தொழிலாளர்களுக்கும் தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால், அவர்கள் அச்சத்தில் இருக்கின்றார்கள்.
குவைத் நாட்டின் வேண்டுகோளை ஏற்று, மருத்துவர்கள் குழுவை, இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அதுபோல, ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் மருத்துவர்கள் குழுவை அனுப்ப வேண்டும்.
அயல்நாடுகளுக்கு சுற்றுலா சென்ற பயணிகள், நாடு திரும்ப முடியவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த குறுகிய கால விசா முடிந்து போனதால், கூடுதலாகத் தங்கி இருக்கின்ற நாட்களுக்கு,, அந்த நாட்டுச் சட்டங்களின்படி, ஒவ்வொரு நாளும் அபராதம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அபராதத் தொகை, ஒரு நாளைக்கு, 2000 ரூபாய்க்கு மேல் ஆகின்றது. ஒட்டுமொத்தமாக ஒரு மாதத்திற்கு 50000 ஆயிரத்திற்கு மேல் கட்டினால்தான், அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகையைக் கட்டுவதற்கு அவர்களிடம் பணம் இல்லை.
நாடு முழுமையும் பொருட்கள் ஏற்றப்பட்ட 3.5 இலட்சம் சரக்கு லாரிகள், ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால், அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கின்றது. அன்றாடத் தேவைப் பொருட்கள் இருப்பு தீர்ந்து விட்டதால், சரக்கு லாரிகளை இயக்குவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிக் கடன்களைக் கட்ட, தவணை நீட்டிப்பை மத்திய அரசு அறிவித்தபோதிலும், தனியார் வங்கிகள் அதைப் பொருட்படுத்தாமல், மாதத் தவணையைப் பிடித்தம் செய்து கொண்டார்கள். கொரோனா காலத்திற்கான வட்டித் தள்ளுபடி குறித்து, மத்திய அரசு உரிய அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், தொழில்களை இயக்குவதற்கு அரசு பெருந்தொகையை நிதி உதவியாக அறிவித்து உள்ளன.
அதுபோல, தமிழ்நாட்டில், தொழில்கள் அனைத்தும் முடங்கி இருக்கின்றன. மின் கட்டணம் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் அன்றாட உணவுக்கும் உறுதி இல்லை. எனவே, தொழிற்சாலைகள், வீடுகள் அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு மாத மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

நாட்டுப்புறக் கிராமியக் கலைஞர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியங்களில் சில ஆயிரம் பேர்களே பதிவு பெற்று இருக்கின்றார்கள். அந்த வாரியங்களின் சார்பில் வழங்கப்பட்ட உதவித்தொகை அவர்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கின்றது. ஆனால், இலட்சக்கணக்கான கலைஞர்கள் பதிவுபெறாமல்இருக்கின்றார்கள். அவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 
வைகோ-- தெரிவித்துள்ளார்.

Sunday, April 12, 2020

மாநிலங்களுக்கே உரிமை! கடமை தவறிய மத்திய அரசு - வைகோ கடிதம்!

இமைப்பொழுதும் நீங்காது என்
இதயத் துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!

இந்தியா ஒரு நாடு அல்ல; டில்லியில் இருந்து கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்துவிட முடியாது என்பதை ‘கொரோனா வைரஸ்’ உணர்த்தி இருக்கிறது. ஏனெனில் கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கியவுடன் மத்திய அரசு, மாநில அரசுகளைத்தான் நாட வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறதே தவிர, மத்திய அரசு இமயம் முதல் குமரி வரை கொரோனா கிருமி தொற்று தடுப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

மாநில அரசுகள்தான் மக்களிடையே நேரடியாக இறங்கிப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளன என்பதுதான் யதார்த்தமான உண்மை.

இந்தியாவில் கொரோனா அறிகுறி தெரிய தொடங் கியதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் ‘மக்கள் ஊரடங்கு’ என்று பிரகடனம் செய்தார். அதன்பின்னர் 24 ஆம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்கள் இந்தியாவில் ஊரடங்கு என்று அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கு அறிவிப்புகளை வெளியிடும் வரையில் எந்த மாநில முதல்வர்களுக்கும் இது குறித்து உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை. மாநில அரசுகளின் கருத்தையும் மத்திய அரசு கேட்கவில்லை.

நவம்பர் 8, 2017 இல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பண மதிப்பு இழப்பு அறிவிப்பு வெளியிட்டதைப் போன்றுதான், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பையும் பிரதமர் அறிவித்தார்.

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கு மக்கள் வீட்டிலேயே தனித்து இருப்பதும், மக்கள் வெளி இடங்களுக்கு செல்வதைத் தடை செய்வதும், அத்தியா வசியத் தேவைகளுக்கு செல்லும்போது மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளி தேவை என்பதையும் அதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதுதான் ஒரே வழி. என்பதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம். கொரோனா சமூகப் பரவலைத் தடுப்பதற்கு ஊரடங்கு அவசியம் என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

ஆனால் 130 கோடி மக்கள் தொகை  கொண்ட இந்தியாவில் இதுபோன்ற தருணத்தில் முக்கியமான முடிவை மேற்கொள்ளும் போது மத்திய அரசு ஏகபோக அதிகாரம் உடையது போலவும், பேரரசின் மாமன்னர் போன்று பிரதமர் மாநில அரசுகளின் கருத்தறியாமல் அதிரடியாக அறிவிப்புகளைச் செய்வதும் மக்களாட்சிக் கோட்பாடு மற்றும் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானது ஆகும்.

அரசியல் சட்டத்தின் 7ஆவது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலில் பொது சுகாதாரம், மக்கள் நல்வாழ்வு என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அதே சமயம் மத்திய - மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில், எண் 29 இல் கீழ்க்காணும் விதி இணைக்கப்பட்டிருக்கிறது.

மனிதர், விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதிக்கக் கூடிய தொற்று நோய்கள் அல்லது அழிக்கும் கிருமிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பரவாமல் தடுத்தல்.

எனவே கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கை களை சட்டப்படி மேற்கொள்வதற்கு மத்திய அரசுக்கும் - மாநில அரசுகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்து இருக்கிறது.

மாநில அரசுகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து இது போன்ற கொள்ளை நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா மார்ச் 24 ஆம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, கொரோனா பாதித்தவர்களை அறிந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை இனம் கண்டு, பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும், மாநில - மாவட்ட அளவிலான குழுக்களுடன் விரைவுக் குழுக்களை அமைக்கவும் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட வர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் இனம் கண்டறிவதுடன், சந்தேகப்படும் நபர் மற்றும் உயர் பாதிப்பில் உள்ளவர் களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தலையாய கடமை எனவும், இதனை மாநில அளவில் சுகாதாரத் துறைச் செயலாளரும், மாவட்ட அளவில் ஆட்சியர்களும் நேரடியாகவும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் சுற்றறிக்கை கூறுகிறது.

கொரோனா சிகிச்சை அளிக்க பிரத்யோக மருத்துவமனைகளை உருவாக்கு வதுடன், நோயாளிகள் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் உறுதி செய்யப் பட வேண்டும். மேற்கண்ட பணிகள் அனைத்தையும் மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு, அது தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறையின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டு இருக்கிறது.

மத்திய அரசு ஒரு சுற்றறிக்கை மட்டும் அனுப்பிவிட்டு, கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் கடமையை மட்டும் மேற்கொண்டால் போதும். ஆனால் மாநில அரசுகளுக்குத்தான் முழுப் பொறுப்பும் இருக்கிறது.

ஏப்ரல் 2 ஆம் தேதி காலை 11 மணி அளவில், பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி னார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சவால்கள் மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, பாதிக்கப் பட்டோருக்கான மருத்துவ வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர், மாநில முதல்வர்களுடன் ஆலோசித்துள்ளார்.

ஊரடங்குக் காலம் முடிந்ததும், மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கையைத் தொடங்குவதில் தடுமாற்றம் இல்லாத நிலையை உருவாக்க குறைந்தபட்ச கொள்கையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். வரும் வாரங்கள் கொரோனாவுக்கான சோதனை, கொரோனா பாதித்தவருடன் தொடர் பில் இருந்தவர்கள், தனிமைப் படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதற்குத் தேவையான மருந்துகள், மருத்துவப் பொருள்கள் விநியோகத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியம். கொரோனா நோயாளி களுக்கான மருத்துவ மனைகள், மருத்துவ வசதிகள் இருப்பதை அனைத்து மாநிலங்களுக்கும் உறுதிப் படுத்த வேண்டும்.

மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயுஷ் மருத்துவர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமரின் வேண்டுகோள், கொரோனாவை முறியடிப்பதில் மாநில அரசுகளுக்குத்தான் அதிக பொறுப்பும் கடமையும் ஏன் சுமையும் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

ஒரே நாடு; ஒரே வரி என்று மத்திய அரசு ஜி.எஸ்.டி. எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரியை நடைமுறைக்குக் கொண்டு வந்த பின்னர், மாநிலங்களின் நிதி ஆதாரம் குறைந்துவிட்டது. பற்றாக்குறை பட்ஜெட் போடும் நிலையில் உள்ள மாநில அரசுகள் இதுபோன்ற சோதனை மிக்க காலங்களில் மத்திய அரசைச் சார்ந்துதான் இருக்க வேண்டிய சூழல் இருக்கின்றன.

இன்னமும் மாநிலங்கள் கையேந்தி நிற்க வேண்டியவையாகவும், மத்திய அரசு பெரிய மனசு வைத்து அள்ளித் தந்தால்தான் கணிசமான நிதி கிடைக்கும் என்ற நிலைமை நீடிப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும், மாநில கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் எதிரானது ஆகும்.

தமிழக அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசிடம் கேட்ட நிதி 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஆகும். இதில் முதலில் 9 ஆயிரம் கோடியும், பின்னர் 3200 கோடியும் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வெறும் 510 கோடி ரூபாய் மட்டும் மத்திய அரசு வழங்க முன் வந்திருக்கிறது.

பிரதமரின் கிஸான் சமான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகள் பயிர் சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்கள் வாங்க வழங்கப்படுகிறது.

தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு அறிக்கை 2012 -13 ன் படி, தமிழகத்தில் 32.44 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் இருந்தன. தற்போது 38 இலட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன, தமிழகத்தில் இதுவரை 38.88 இலட்சம் விவசாய பண்ணைக் குடும்பங்களின் விபரங்கள் திட்டத்திற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிதி, கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள பண்ணைக் குடும்பத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.

பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயி களின் ‘ஆதார்’ விபரம், வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப் படுகின்றன.

21 நாள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் 34.56 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு 692 கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கொரோனாவை எதிர் கொள்ள வெறும் 510 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது “யானைப் பசிக்குச் சோளப் பொரி” ஆகும்.

மத்தியில் குவித்து வைத்திருக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும் என்று வலுவான குரல் முதன் முதலில் தமிழகத்தில் இருந்துதான் பேரறிஞர் அண்ணா அவர்களால் எழுப்பப்பட்டது.

அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன், ‘மாநில சுயாட்சி’க் கொள்கைக்குச் செயல்வடிவம் தருவ தற்கும், மத்திய - மாநில உறவு குறித்துத் தெளிவான கருத்துகளை அறிந்து கொள்வதற்காக முன்னாள் தலைமை நீதிபதி ராஜமன்னார் அவர்கள் தலைமையில், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரா ரெட்டி, டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழுவை 22.09.1969 இல் அமைத்தார்.

ராஜமன்னார் குழு ஓராண்டு காலத்துக்கு மேல் ஆய்வுகளை மேற்கொண்டு 10.3.1971 அன்று தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையை மத்திய அரசின் பார்வைக்கு முதல்வர் கலைஞர் அனுப்பி வைத்தார். ராஜமன்னார் குழு அறிக்கைளைப் பெற்றுக் கொண்டு பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், முதல்வர் கலைஞருக்கு 22.6.1971 இல் எழுதிய மடலில், “இது குறித்து தமிழ்நாடு அரசின் கருத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974 ஏப்ரல் 16 அன்று மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் கலைஞர் அவர்கள் நீண்ட பேரூரை ஆற்றினார். சட்டமன்றத்தில் விவாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் 20, 1974 இல் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில சுயாட்சிச் சுடரை ஏற்றி வைத்து இந்தியாவுக்கு வழிகாட்டியது தமிழ்நாடு. அதனைத் தொடர்ந்துதான் மற்ற மாநிலங்களிலும் மாநில அரசு களுக்கு அதிகாரங்கள் வேண்டும் என்ற குரல் எழுந்ததது.

நாடு விடுதலை பெற்ற காலத்திலிருந்து கடந்த 72 ஆண்டுகளில் இன்னும் முழுமையான கூட்டாட்சி முறை இந்தியாவில் நடைமுறைக்கு வரவில்லை.

2014 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு நரேந்திர மோடி தலைமையில் அமைந்த பிறகு, மாநிலங்களின் உரிமைகள், அதிகாரங்கள் ஒவ்வொன்றும் பறிக்கப் பட்டுவிட்டன. டில்லி மத்திய அரசின் ‘காலனிகள்’ போன்று மாநிலங்கள் நடத்தப்படுகின்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

‘ஒரே நாடு; ஒரே அரசு’ என்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைச் செயல்படுத்தும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை கள் இருப்பதைப் பார்க்கிறோம்.

வலிமையான மத்திய அரசு இருக்க வேண்டும்; எல்லா அதிகாரங்களும் டில்லியில்தான் குவிந்து கிடக்க வேண்டும் என்று செயல்படுகின்ற பா.ஜ.க. அரசு, கொரோனா கொள்ளை நோய் போன்ற அசாதாரண மான சூழலை எதிர்கொள்ள மாநில அரசுகளைத்தான் நம்பி இருக்க வேண்டும், மத்திய நிர்வாக அமைப்பு எந்த விதத்திலும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்பதை தற்போதைய நிலையில் புரிந்து கொள்ள வேண்டும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவதற்கு ஆறு திங்களுக்கு முன்னால் 21.07.1968 இல் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் நடத்திய மாநில சுயாட்சிக் கருத்தரங்கில் கலந்து கொண்டார். இக் கருத்தரங்கில் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோரும் பங்கேற்றனர்.

மாநில சுயாட்சிக் கருத்தரங்கில் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுப்பிய முழக்கத்தை இன்றைக்கு இருக்கின்ற பா.ஜ.க. மத்திய அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது கடமை என்று கருதுகிறேன்.

இதோ அண்ணாவின் முழக்கம்,

“மத்திய அரசு பலமாக இருந்தது குப்த சாம்ராஜ்யத்தில். மத்திய அரசு பலமாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில். ஆனால் இன்று அந்தச் சாம்ராஜ்யங்கள் எங்கே?

சரிந்த சாம்ராஜ்யங்களோடு - இப்போது இருக்கின்ற சாம்ராஜ்யத்தை ஒப்பிடுவதற்கு உள்ளபடியே வருத்தப் படுகிறேன். அந்த சாம்ராஜ்ய வாதிகள் - தமது சாம்ராஜ்யங்களுக்கு அதிகமான வலிவு தேட முயற்சி செய்த ஒவ்வொரு நேரத்திலும் சரிவுதான்.

ஒளரங்கசிப் காலத்தில் இருந்த வலிமை யான மத்திய ஆட்சிக்கு ஒப்பான மத்திய அரசை சரித்திரத்தில் காண முடியாது. ஆனால் அந்தச் சாம்ராஜ்யம் என்ன ஆயிற்று? என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு இருக்கின்ற கவலைகள் எல்லாம் தூக்க முடியாத பாரத்தை மத்திய ஆட்சியினர் விரும்புகிறார்களே என்பதுதான். மத்திய அரசின் வலிவு என்பது, மாநிலங்கள் ஒவ்வொன்றின் தனித்தனி வலிவையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவுதான் என்றால் வாதத்திற்கு ஏற்றது; அரசியலுக்கு நல்லது; காலத்துக்கு உகந்தது.

ஆனால் மத்திய அரசுதான் எல்லா உரிமைகளையும், பலத்தையும் வைத்திருக்கும் மாநிலங்கள் தத்தித் தத்தி நடக்கும் அதிகாரங்கள்தான் வைத்து இருக்கும் என்றால், எதற்கும் பொருத்தம் உடையது அல்ல.

மாநில அதிகாரங்களை எல்லாம் எடுத்து மத்திய அரசு குவித்துக் கொள்வதால், மாநிலங்கள் பலகீனமடையும் என்பது மட்டுமல்ல, மத்திய அரசுக்கு என்று புதிய வலிவு எதுவும் ஏற்பட்டுவிடாது.

இன்றைய தினம் மாநில அரசுக்கு உள்ள கவலை என்ன? மக்களுக்கு சோறு போடுவது, வேலை வாய்ப்புத் தருவது, தொழில் நீதியை நிலைநாட்டுவது, சுகாதாரத்தைப் பேணுவது, கல்விச் செல்வத்தை வளர்ப்பது போன்ற எண்ணற்ற வேலையைச் செய்ய வேண்டியது மாநில அரசு.

ஆனால் மத்திய அரசின் வேலை என்ன?

நாடக மேடையிலே வருகிற இராஜா, மந்திரியை அழைத்து, “மந்திரி, நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?” என்று கேட்பானாம்! அதுபோல் மாதம் ஒரு முறை மாநில மந்திரிகளை, மத்திய மந்திரி டில்லியில் கூட்டி, “பள்ளிக் கூடங்களில் கல்வி எப்படி இருக்கிறது? காலரா நோய் தடுக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்பு தான் இருக்கிறதே தவிர, வேறு ஒன்று மில்லை.

மக்களின் சுக துக்கங்களோடு பின்னிப் பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல.”

பேரறிஞர் அண்ணா அவர்களின் உரையை இன்றைய மத்திய அரசின் நிலைப்பாட்டுடன் பொருத்திப் பார்த்தால், அண்ணாவின் ‘தீர்க்கத் தரிசனம்’ எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.

எனவே மோடி அரசு, ‘கொரோனா’ கொடூரத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்ற மாநில அரசுகளுக்கு உரிய அதிகாரங்கள் - உரிமைகளை அளித்து மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்பதை தெளிவுபட உணர வேண்டும்.

கண்மணிகளே, எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்! 

பாசமுடன்,
வைகோ
சங்கொலி, 17.04.2020

மனிதநேயமற்ற தமிழக அரசின் எதேச்சதிகாரமான நடவடிக்கை - வைகோ கண்டனம்!

நூறாண்டு காலத்தில் மக்கள் இதுவரை சந்தித்த கொள்ளை நோய்களுக்கு எல்லாம் உச்சகட்டமாக, கோவிட்-19 கொரோனா நாசகார நோய் மனித உயிர்களை உலகெங்கும் பலிவாங்கி வருகிறது. இதைத் தடுப்பதற்கோ, முழுமையாக குணப்படுத்துவதற்கோ உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோடானு கோடி மக்கள் விவரிக்க முடியாத துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று பரிதவித்து நிற்பதை எண்ணினால் இதயமே வெடிக்கிறது.

இந்நிலையில், அரசாங்கம் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் மூன்று அடி தூரத்திற்கு அப்பால் தள்ளி நிற்க வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்கிறது. ஒரு சிலர் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். ஆனால் அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், மனிதநேயம் உள்ளோர் பிறர் துன்பத்தில் பங்கெடுக்க விளைவோர் ஆங்காங்கு முறையாகப் பொருட்களையும், உணவையும் வழங்கி வருகின்றனர்.

இப்படி வழங்குவதில் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் எந்தக் குளறுபடியும் நடக்கவில்லை. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமலேயே மனிதாபிமான உதவிகள் செய்து வருகின்றனர். தமிழக அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையைத்தான் அவர்கள் செய்து வருகின்றனர். இத்தகைய உதவிகள் செய்வோரைக் கண்டு மகிழ்ந்து பாராட்ட வேண்டிய தமிழக அரசு, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும், மற்றவர்களும் இந்த மனிதநேயப் பணிகளைச் செய்து, மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறதே என்ற பொறாமைத் தீ உள்ளத்தில் எழுந்ததால், இன்று ஒரு அக்கிரமமான அறிவிப்பை தமிழக அரசு செய்திருக்கிறது.

தனிப்பட்டவர்களோ, தனிப்பட்ட அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொருளோ, பணமோ, உணவோ கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுப்பதாக இருந்தால் தமிழக அரசிடம்தான் தர வேண்டும் என்று இடிஅமீன் கட்டளையைப் பிறப்பித்து இருக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். 

பொதுமக்களுக்கு கொரோனா உதவிகளை பிறர் செய்த இடத்தில் எங்காவது ஒரு பிரச்சினை ஏற்பட்டதா? குழப்பம் ஏற்பட்டதா? தள்ளுமுள்ளு ஏற்பட்டதா? ஒன்றுமே கிடையாது. மிக முறையாக விநியோகிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இதனால் பயன்பெறுகிறார்கள்.

சந்தைகள், கடைகளில் பொருள்களை மக்கள் விலைக்கு வாங்குகின்ற இடத்தில்தான் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்பு, கோடானு கோடி தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு வைப்பதாகும்.

மக்கள் பொறுமை ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது. அதனை உணர்ந்து உடனடியாக இன்று பிற்பகலில் வெளியிட்ட அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், மனிதநேயம் உள்ளோர் உணவோ, பொருட்களோ வழங்குகின்ற இடத்தில் மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறையையும், அரசு அதிகாரிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில்  12-04-2020 தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் உரிமைப் பறிப்பு - வைகோ கண்டனம்!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், அனைத்து மாநிலங்களும் மிகக் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய கூடாது என்று மத்திய பாஜக அரசு தடை விதித்திருப்பது கண்டனத்துக்கு உரியது.

அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரங்கள் பட்டியலில், பொது சுகாதாரம் மக்கள் நல்வாழ்வு என்பவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது. கொரோனா தொற்று நோய் பாதிப்புகள் போன்ற சில அசாதாரணமான சூழ்நிலை ஏற்படும்போது மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுப்பட்டியலில் அதிகாரம் 29 இல் கூறப்பட்டுள்ளது. ஆனாலும்  மாநில அரசுகள் தான் மக்களிடையே நேரடியாக இறங்கி பணியாற்றும் கடமையையும் பொறுப்பையும் பெற்றிருக்கின்றன.

கொரோனா பரவலைத் தடுக்கத் தேவையான பாதுகாப்புச் சாதனங்கள், முகக் கவசங்கள், கை உறைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை மத்திய அரசுதான் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கும் என்று எதேச்சாதிகாரமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும் எம்பியுமான வைகோ தனது அறிக்கையில்  12-04-2020 தெரிவித்துள்ளார்.