Monday, May 29, 2017

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியினர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்-வைகோ கண்டனம்!

2009 ஆம் ஆண்டில் இலங்கைத் தீவின் முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு, ஆண்டுதோறும் அமைதி வழியில் நினைவேந்தல் வீர வணக்க நிகழ்ச்சி மெரினா கடற்கரையில், மே 17 இயக்கம் நடத்தி வந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக நான் அதில் பங்கேற்று இருக்கின்றேன். வழக்கம்போலவே, இந்த ஆண்டு மே 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் அத்தகைய நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த முயன்றபோது, தமிழகக் காவல்துறை தடுத்தது. அமைதி வழியில் நடத்த முயன்ற தமிழ் ஈழ உணர்வாளர்கள் காவல்துறையால் தாக்கப்பட்டனர்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏழு பேரும், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த 9 பேரும், காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், குதிரை கீழே தள்ளியது மட்டும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்பது போல மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் மீதும், தமிழர் விடியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் தோழர் அருண்குமார் உள்ளிட்ட நால்வர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்து, அடக்குமுறையை ஏவி இருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். இதில் தோழர் அருண்குமார் அவர்களுக்கு ஜூலை 3ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

தடுப்புக் காவல் சட்டம், மிசா சட்டம், தடா சட்டம், பொடா சட்டம், தேசப் பாதுகாப்புச் சட்டம் போன்ற ஜனநாயகத்தை அழிக்கின்ற கொடிய சட்டங்களைப் பயன்படுத்தி அரசுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்புவோரைக் கைது செய்து சிறையில் அடைத்து அரசுகள் பாசிச வெறியாட்டம் நடத்தி வந்துள்ளன. இந்திய அரசியல் சட்டம் உறுதி அளித்துள்ள பேச்சு உரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை நசுக்க இன்றைய தமிழக அரசு காவல்துறையைப் பயன்படுத்துவது அக்கிரமமான விபரீத நடவடிக்கை ஆகும்.

ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இலங்கைத் தீவில்கூட தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி இவ்வாண்டு நடைபெற்றது. ஆனால் தாய்த் தமிழத்தில் அத்தகைய நினைவேந்தல் நிகழ்ச்சிக்குக்கூட காவல்துறை அனுமதிக்காதது உலகத் தமிழர்களின் பார்வையில் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமையைத் தமிழகத்திற்கு ஏற்படுத்திவிட்டது.

தமிழ் உணர்வாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை, குறிப்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு இரத்து செய்து, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இன்றைய 29-05-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

குவைத் மதிமுக தமிழர் மறுமலர்ச்சி பேரவை_வைகோ பாசறையின் சார்பில் மதிமுக 24 ஆம் தொடக்க விழா!

மறுமலர்ச்சி திமு கழகத்தின் 24 ஆம்ஆண்டு தொடக்க விழாவும் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியும் 28-5-2017 அன்று மாலை மிர்காப் பாலிவுட் உணவகத்தில் பொறியாளர் தொம்பக்குளம் ச.மணிவாசகன் தலைவர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

நிழ்ச்சியில் மறுமலர்ச்சி திமு கழகத்தின் தோழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டார்கள்.

தாயகத்தில் இருந்து கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மல்லை சி.இ.சத்தியா அவர்கள் கைபேசியில் மூலம் நிகழ்ச்சிக்கு வாழ்த்தியிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய அனைவருக்கும், ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துக்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, May 28, 2017

கால்நடைகள் இறைச்சிக்காக விற்கவும், கோவில்களில் பலியிடவும் தடை! மத, சமூக நல்லிணக்கம் சீர்குலையும்-வைகோ கண்டனம்!

கால்நடைகள் இறைச்சிக்காக விற்கவும், கோவில்களில் பலியிடவும் தடை! மத, சமூக நல்லிணக்கம் சீர்குலையும்-வைகோ கண்டனம்!


மத்திய பா.ஜ.க. அரசு 1960 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது, வாங்குவது போன்றவற்றிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, ‘மிருகவதைத் தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017’ என்ற பெயரால் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி காளைகள், பசு மாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசு மாடு, கன்று, ஒட்டகம் போன்ற கால்நடைகளை சந்தைகளில் இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலக மாட்டிறைச்சி சந்தையில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியாதான் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க. அரசின் நடவடிக்கையால் நாட்டில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான இறைச்சி சந்தை பாதிக்கப்படும்.

பருவ மழை பொய்த்ததால், வேளாண்மைத் தொழில் நலிவடைந்து, விவசாயிகள் கால்நடைகளை பராமரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்கு கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்திருப்பது நியாயமானதல்ல.

கால்நடைகளை விற்பதற்காக சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டால் அவை இறைச்சிக்காக விற்பனை செய்யவில்லை என்று கால்நடைகளின் உரிமையாளரிடம் ஒப்புதல் கையெழுத்து பெறப்பட்ட விண்ணப்பத்தை உரிய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். சந்தையில் கால்நடை ஒன்றை விற்ற பின்பு, விற்பனை செய்ததற்கான ஆதாரத்தை 5 நகல்களாக தயாரித்து, கால்நடையை வாங்கியவர், விற்பனை செய்தவர், வட்ட அலுவலகம், மாவட்ட கால்நடை அதிகாரி மற்றும் கால்நடை சந்தைக் குழு ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும். கால்நடைகள் விற்பனை செய்யும்போது, கால்நடை சந்தை மேற்பார்வைக் குழுவின் அதிகாரிகள் கால்நடைகள் விவசாயத்துக்காக விற்கப்படுகின்றன என்று விற்பவரிடமும், வாங்குபவர் விவசாயிதான் என்பதையும் நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். மேலும் கால்நடைகளை விலைக்கு வாங்குபவர்கள் அவற்றை ஆறு மாதங்களுக்கு வேறு யாருக்கும் விற்பனை செய்யப்பட மாட்டாது என்ற உறுதியையும் அளிக்க வேண்டும்.

நடைமுறை சாத்தியமற்ற இத்தகைய விதிமுறைகள் மூலம் கால்நடைகள் விற்பனை செய்வதையே தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு முடிவுக்கு வந்திருப்பதைத்தான் இவை காட்டுகின்றன.

கோடிக்கணக்கான மக்களின் மத வழிபாட்டு உரிமையில் தலையிடும் வகையில் கோயில்களில் கால்நடைகளை பலியிடக்கூடாது என்றும், விதிகள் கொண்டுவரப்பட்டிருப்பது இந்துத்துவா சக்திகளின் உண்மையான நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டு காலத்தில் மாட்டிறைச்சி அரசியல், வன்முறைகளின் கோர தாண்டவம் உச்சத்திற்குப் போய்விட்டது. பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, பசுக்களை இறைச்சிக்காக வெட்டினாலோ, மாட்டிறைச்சியை வாகனம் மூலம் கொண்டு சென்றாலோ ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் - உனா மாவட்டதில் பசுக்களின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ‘கவ்ரக்ஷக்’ எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், தோலுக்காக பசுவை கொன்றதாக தலித் இளைஞர்களை கட்டி வைத்து கடுமையாக தாக்குதல் நடத்தினர். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்சோரில் பசு இறைச்சி வைத்திருந்ததாக இரு இஸ்லாமிய பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள தாத்திரியில் மாட்டிறைச்சி சமைத்ததாகக் கூறி முகமது அக்லக் என்பவரை இந்துத்துவா வெறிக் கும்பல் அடித்துக் கொன்றது. காஷ்மீர் மாநிலத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவரை மாட்டிறைச்சி விருந்து நடத்தியதாகக் கூறி, ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் காஷ்மீர் சட்டமன்றத்திலேயே அடித்து உதைத்தனர். இது போன்று நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வன்முறைகள் நடந்திருக்கின்றன.

சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் இந்துத்துவக் கூட்டத்தின் தாக்குதலுக்கு ஆளாகி வரும் நிலைமை இன்றும் தொடருகிறது.

இந்நிலையில், கால்நடைகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என்றும், கோவில்களில் பலியிடக்கூடாது என்றும் பா.ஜ.க. அரசு கொண்டுவந்திருக்கும் சட்டம் கடுமையான கண்டனத்துக்கு உரியது. இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிப்பதும், சிறு தெய்வங்கள், நாட்டார் கோவில் வழிபாடுகளில் முக்கிய இடம் பெறும் பலியிடுதலை தடுக்க முயற்சிப்பதும் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.

சகிப்பின்மையால் இந்தியாவின் மத, சமூக நல்லிணக்கம் புதை குழியில் சிக்கிவிடும் ஆபத்து நேரிடும். எனவே, ‘மிருகவதை தடுப்பு விதிகள் 2017’ என்ற தலைப்பில் கொண்டுவந்துள்ள அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 27-05-2017 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

தமிழக வீரர் அந்தோணியம்மாள் வைகோவுடன் சந்திப்பு!

தமிழக வீரர் அந்தோணியம்மாள் வைகோவுடன் சந்திப்பு!

மறுமலர்ச்சி திமுக பொதுச்யெலாளர் வைகோ அவர்களிடம் 26.05.2017 காலை சென்னை அண்ணாநகர் இல்லத்தில் கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அந்தோணியம்மாள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மொரீஷியஸ் நாட்டில் நடந்த கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அந்தோணியம்மாள் தமிழக அரசு சார்பில், கௌரவிக்கப்பட்டார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

சு.ஜீவன் இல்ல மணவிழாவில் வைகோ வாழ்த்து!

மதிமுக வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ஜீவன் அவர்கள் இல்லத் திருமண விழா இன்று 28-02-2017 சென்னையில் நடந்தது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்கள் ராஜசேகர் பிரியங்கா தம்பதிகளை வாழ்த்தி திருக்குறள் கொடுத்தார்.

பின்னர் மணமக்களை வாழ்த்தி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தினார்.

இதில் சென்னை மாடவ்வ கழக நிர்வாகிகள், கழக முன்னணி தலைவர்கள், மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Friday, May 26, 2017

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி மறைவுக்கு வைகோ அஞ்சலி!

தூத்துக்குடி மாவட்ட திமுக  செயலாளர் என்.பெரியசாமி மறைந்த செய்தி அறிந்து மறும்லர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்று மலர் மாலை வைதது அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது மனைவி, மகள்  கீதா ஜீவன், மகன் ஜெகன் ஆகியோருக்கு தனது ஆழ்ந்த வருத்தைத் தெரிவித்தார்.

ஆட்சிமன்றக்குழுச் செயலாளரும், திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி ஆகியோர் உடன் சென்றனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Thursday, May 25, 2017

நினைவேந்தலை தடுத்த பாஜக ஏவல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

மே 17 இயக்கம் இன்று 25-05-2017 மாலையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்களின் வேண்டுகோளின் படி, கழக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, MLF சார்பில் செயலாளர் ஜார்ஜ் மற்றும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்க என ஏராளமானோர் கலந்துகொண் ருக்கிறார்கள்.

மே 17 இயக்கம் சார்ந்த தோழர்களும், அதிகமான இயக்க தோழர்களும், அதிகமான தமிழ் உணர்வுள்ள கட்சி தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் அதிகமாக கலந்துகொண்டுள்ளர்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 தோழர்களை விடுதலை செய்ய முழக்கங்களை எழுப்பினார்கள்.

எங்கள் கடல் தமிழர் கடல், எங்களுக்கு நினைவேந்தல் நடத்த உரிமை உண்டு என்னும் முழக்கங்களையும், பாஜக கை கூலி அரசே தமிழர்களை தமிழர் உரிமைகளை அடகு வைக்காதே என முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி