Saturday, March 31, 2018

மதுரையிலிருந்து நியூட்ரினோ எதிர்த்து விழிபுணர்வு நடைபயணம்!

நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் சார்பில், அதன் தலைவர் வைகோ அவர்கள், நியூட்ரினோவால் ஏற்படும் பாதிப்பை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 31.03.2018 மதியம் மதுரை பழங்காநத்தத்தில் இருந்து விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டார்.

இந்த தொடக்க விழாவில், திரு.மு.க.ஸ்டாலின், திரு.திருமாவளவன், திரு.ஜவாஹிருல்லா, திரு.ஹென்றி திபேன் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை போராளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இதில் மு.க.ஸ்டாலின் மூவேந்தர் கொடியை வைகோ அவர்களிடம் வழங்க, வைகோ பெற்றுக்கொண்டார்.

மணியரசன் பேசும்போது, இன்று மதுரையில் வைகோ அறிமுகப்படுத்தி இருப்பதுதான் தமிழ் மரபுக்கொடி என்று புகழாரம் சூட்டினார்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் தான் வைகோவின் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம். கடமையை செய்து பலனை எதிர் பார்க்காமல் இருப்பவர் வைகோ. அஞ்சா நெஞ்சன் அழகர்சாமி இந்தி எதிர்ப்பு பயணம் போல், வைகோவின் பயணம் பத்தாவது நாள் பெரிய எழுச்சி ஏற்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் பேசினார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைபாளர் சிவகாசி ரவி நியூட்ரினோ திட்டத்தை தடுக்கவேண்டும் என பெட்ரோல் ஊற்றி தன்னை நெருப்பால் கொளுத்தினார். உடனே மதிமுக மாநில மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சத்தியகுமாரன் உள்ளிட்ட மதிமுகவினர் ரவியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ரவியுடனே மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு பயணமானார்கள்.

ரவி தீக்குளித்ததை தாங்கமுடியாமல் மேடையில் கதறி அழுதார் வைகோ. இதுபோன்ற தீக்குளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன், மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து இனி யாரும் இப்படி செய்யாதீர்கள் எனவும் வேண்டுகோள் வைத்தார். 90 சதவீத தீக்காயங்களுடன் இருப்பதாக தலைவர் வைகோ பேட்டியளித்தார். வைகோ அவர்கள் மருத்துவமனையில் ரவியை நலம் விசாரித்தார்.

அபோது வைகோ அவர்கள் கேட்டதற்கு, என் தலைவர் நாட்டுக்கு பாடுபடுகிறார்.
மக்களுக்கு புரியவில்லையே. தொண்டனாகிய நான் நியூட்ரினோவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏதாவது செய்ய வேண்டாமா. வேறு வழி தெரியவில்லை, தீக்குளித்தேன் என உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் நிலையிலும் உரத்த குரலில் சொன்னார் ரவி.

இந்நிலையில், நீதிபதி திருமதி சாமுண்டீஸ்வரியிடம், நியூட்ரினோ தமிழ்நாட்டுக்கு கேடு. மோடி அரசை கண்டிக்கிறேன். நியூட்ரினோ வேண்டாம் ரவி வாக்குமூலம் கொடுத்தார்.

வைகோ அவர்கள் நியூட்ரினோ எதிர்த்து பிரச்சார விழிப்புணர்வு நடைபயணத்தை தொண்டர்களுடன் தொடர்ந்தார். செக்காவூரணியில் வைகோ அவர்கள் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயண உரை நிகழ்த்தினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, March 30, 2018

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டக் களம்தான் தீர்வு- வைகோ அறிக்கை!

உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் அளித்தத் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தையே இடம்பெறவில்லை என்பதையும், நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த ஒரு திட்டம் (Scheme) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் சுட்டிக்காட்டினேன். ஆறு வார காலத்திற்குள் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்திட திட்டம் உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருப்பதும் கண்துடைப்பே. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப்போவது இல்லை என்று நான் கூறியதுதான் நடந்திருக்கின்றது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் வழங்கும் இறுதித் தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானதுதான். தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. நீரைத் திறக்க வேண்டும் என்று நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை செயல்படுத்திட மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டிய உச்சநீதிமன்றம், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், நடுவர் மன்றம் வழங்கிய நீர் பங்கீட்டில் 14.75 டி.எம்.சி. நீரை கர்நாடக மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, மத்திய பா.ஜ.க. அரசு தனது விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத பச்சைத் துரோகத்தைச் செய்தது.

உச்சநீதிமன்றம் 2016 இல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு கெடு விதித்தபோது, இவ்வாறு உத்தரவிட உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. நடுவர் மன்றம் தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று மோடி அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்பதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழக முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கலாமா? என்று விவாதிக்கப்பட்டதாக நாளேடுகளில் செய்திகள் வந்துள்ளன.

தமிழக அரசின் கவைக்கு உதவாத இதுபோன்ற நடவடிக்கைகள் ஒருபோதும் பயன் அளிக்கப்போவது இல்லை.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் காவிரிப் பிரச்சினையை விசாரிக்கும் வழக்காக ஆக்குவது ஒன்றுதான் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வழி ஏற்படும். தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து, அனைத்து வகையிலும பேரழிவை நோக்கித் தள்ளி வரும் மத்திய அரசுக்கு அதிமுக அரசு அடிபணிந்துக் கிடப்பதால்தான் டில்லி பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைத்து வருகிறது.

தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பிப்ரவரி 22 ஆம் தேதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அனைத்துக் கட்சித் தலைவர்களும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் புது டில்லியில் நேரடியாகச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வேண்டுகோள் விடுக்க தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் ஏழரைக் கோடி தமிழக மக்களின் ஒருமனதான தீர்மானம் ஆகும்.

தமிழக முதலமைச்சர் இதற்கான பிரதமர் சந்திப்பை உறுதி செய்ய எவ்வளவோ முயன்றும் பிரதமர் நரேந்திர மோடி இந்த நியாயமான கோரிக்கையை உதாசீனம் செய்து தமிழக மக்களை அவமானப்படுத்தினார். நரேந்திர மோடி அரசு தமிழக மக்களுக்கு ஒருகாலும் காவிரி பிரச்சினையில் நீதி வழங்காது என்பது திட்டவட்டமாக நிரூபணம் ஆகிவிட்டது. இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் எந்நாளும் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்.

காவிரியில் தமிழ்நாட்டின் மரபு உரிமையை நிலைநாட்ட தமிழகமே திரண்டு போராட்டக் களத்தை அமைப்பது மட்டுமே மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணியாக அமையும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 30-03-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, March 29, 2018

கம்பன் காவியம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

காரைக்குடி கம்பன் கழகத்தில் *கம்பன் காவியம்* எனும் தலைப்பில் 29-03-2018 மாலையில் இலக்கிய உரை நிகழ்த்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள். அவருக்கு நீதியரசர் லெட்சுமணன் அவர்கள் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்கள்.

இதில் தமிழ் இலக்கிய உணர்வாளர்கள், கழக நிர்வாகிகள், தமிழ் உணர்வாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கம்பன் காவியத்தை அறிந்துகொண்டனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

கவிச் சக்கரவர்த்தி திருக்கோவிலை பார்வயிட்ட வைகோ!

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கவிச் சக்கரவர்த்தி திருக்கோவிலை இன்று 29-03-2018 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பார்வையிட்டார். அதில் மதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, March 28, 2018

ம.நடராஜன் நினைவிடத்தில் வைகோ மலரஞ்சலி!

அவரது கல்லறை தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இன்று 28.03.2018 மாலை  மலரஞ்சலி செலுத்தினார். உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

கிருஷ்ணசாமி வாண்டையார் மகள் திருமண வரவேற்பில் வைகோ!

தஞ்சாவூர் திரு. பூண்டி துளசி வாண்டையார் அவர்களின் பெயர்த்தியும், காங்கிரஸ் தஞ்சை மாவட்ட தலைவர் திரு.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களின் அருமைத்திருமகளுமான பத்மாவதிபிரியதர்சினி_கார்த்திகேயன்ராஜன் ஆகியோரின் திருமண வரவேற்பு தஞ்சையில் நேற்று 27-03-2018 நடந்தது.

இதில் கழக நிர்வாகிகள்மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

காரைக்குடியில் கம்பன் காவியம் படைக்கிறார் வைகோ!

நற்றமிழ் நாவலர் வைகோ அவர்கள் வருகிற வியாழன் 29.03.2018 மாலை காரைக்குடி கம்பன் கழகத்தில் *கம்பன் காவியம்* எனும் தலைப்பில் இலக்கிய உரை நிகழ்த்துகிறார். 

கழக நிர்வாகிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கம்பனை பற்றி அறிய வாரீர்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, March 27, 2018

வைகோ நடத்திய கலிங்கப்பட்டி வடக்கத்தி அம்மன் கோவிலில் பட்டிமன்றம்!

இறை அவதாரங்களின் நோக்கம் அடியவர்களை காக்கவே, அதர்மங்களை அழிக்கவே என்னும் தலைப்பின் முனைவர் ஞானசம்பந்தன் அவர்கள் தலைமையில் கலிங்கப்பட்டி வடக்கத்தி அம்மன் கோவிலில் 27-03-2018 அன்று பட்டிமன்றம் நடந்தது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, March 26, 2018

அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் கா.இராசேந்திரன் இல்ல மணவிழாவில் வைகோ வாழ்த்து!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய மதிமுக செயலாளர் கா.இராசேந்திரன் அவர்களின் புதல்வன் பிரபாகரன்_இலக்கியரசி ஆகியோரின் திருமணத்தை 26-03-2018 காலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்தினார்.

இதில் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட கழக முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, March 25, 2018

தேசியலீக் கட்சியின் தலைவர் M.பஷீர்அகம்மது அவர்களின் மகன் திருமணத்தில் வைகோ வாழ்த்து!

சென்னை மாமல்லபுரத்தில் உள்ள கான்வ்வுலன்ஸ் மஹாலில் தேசியலீக் கட்சியின் தலைவர் M.பஷீர்அகம்மது அவர்களின் மகன் திருமணம் இன்று 25-03-2018 நடந்தது. இந்த திருமணத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள்.

நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் மல்லைசத்யா மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

மறுமலர்ச்சி தி.மு.க., மாணவர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

மறுமலர்ச்சி தி.மு.க., மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள்/துணை அமைப்பாளர்கள், மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை தலைமைக் கழகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1
திமுக வோடு தோழமை ஏற்படுத்திய கழகத்திற்கும்,
தலைவர் வைகோ அவர்களுக்கும் பாராட்டு

திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்கு நாலாத் திசைகளில் இருந்தும் வரும் ஆபத்துகளை உணர்ந்து, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கட்டிக் காத்த திராவிட இயக்க உணர்வுகள் பட்டுப் போகாமலும், கெட்டுப் போகாமலும் பாதுகாப்பதற்கு, தேர்தல் அரசியலைக் கடந்து, தொலைநோக்குப் பார்வையுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தோழமை ஏற்படுத்திய கழகத்திற்கும், தலைவர் வைகோ அவர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம்: 2
நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணத்தில்
150 மாணவர்கள் பங்கேற்பு!

நியூட்ரினோ நாசகாரத் திட்டத்தை எதிர்த்து, மார்ச் 31 மதுரையில் தொடங்கி, ஏப்ரல் 9 இல் தேனி மாவட்டம் கம்பம் சென்றடையும் தலைவர் வைகோ தலைமையிலான விழிப்புணர்வு நடைப்பயணத்தில், கழக மாணவர் அணி மற்றும் மாணவர் மன்றத்தின் சார்பில் 150 பேர் முழுமையாகப் பத்து நாட்களும் பங்கேற்பது என்று மாணவர் அணிக் கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம்: 3
மறுமலர்ச்சி தி.மு.க., 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி
25 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குதல்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவைச் சிறப்பிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மே 6 ஆம் தேதி நடைபெற உள்ள கழகக் கொடியேற்று விழா நிகழ்வுகளில், இயற்கை வாழ்வாதாரப் போராளி தலைவர் வைகோ அவர்களின்  எண்ணத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில், மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம்: 4
கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் - அண்ணா பேச்சுப் போட்டி
ரூபாய் பத்து இலட்சம் - தங்கப் பதக்கம் பரிசு

மார்ச் 6, ஈரோட்டில் நடந்த மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுக்குழு வகுத்த தீர்மானத்தின் அடிப்படையில், கழக மாணவர் அணி ‘பெரியார் - அண்ணா’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்துவது என்றும்; 

மாவட்ட அளவில் 22.7.2018 ஞாயிறு; 
மண்டல அளவில் 12.8.2018 ஞாயிறு; 
மாநில அளவில் 26.8.2018 ஞாயிறு 
ஆகிய நாள்களில் நடத்துவது என்றும்; 
மாவட்ட அளவில் வெற்றி பெறும் மூவருக்குத் தலா 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம்;  
மண்டல அளவில் வெற்றி பெறும் மூவருக்குத் தலா 15 ஆயிரம், 10 ஆயிரம், 7 ஆயிரம்;   
மாநில அளவில் முதல் பரிசு, ரூபாய் ஒரு இலட்சம், பெரியார் - அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கம்; 
இரண்டாம் பரிசு, ரூபாய் 50 ஆயிரம், பெரியார் - அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கம்;  
மூன்றாம் பரிசு, ரூபாய் 25 ஆயிரம், பெரியார் - அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிப் பதக்கம் உள்பட ரூபாய் பத்து இலட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்குவது என்றும், 

இந்தப் பேச்சுப் போட்டியில், தமிழகத்தில் உள்ள 2000 கல்லூரி மாணவர்களை நேரடியாகப் பங்கு பெறச் செய்வது என்றும், சுமார் இரண்டு இலட்சம் மாணவர்களிடம் பெரியார் -அண்ணா குறித்த தாக்கத்தை ஏற்படுத்துவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம்: 5
மாநில அளவிலான பேச்சுப் போட்டிக்கு
பரிசளிக்க இசைவு அளித்தவர்களுக்குப் பாராட்டு!

பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு ரூபாய் ஒரு இலட்சம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்குவதாக இசைவு தந்துள்ள கழகத்தின் சட்டத்துறைச் செயலாளரும், உயர்நிலைக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் அவர்களுக்கும்; 

இரண்டாம் பரிசு ரூபாய் 50 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்குவதாக இசைவு அளித்துள்ள இலக்கிய அணி மாநிலப் பொருளாளர் சாத்தூர் கண்ணன் அவர்களுக்கும்;

மூன்றாம் பரிசு ரூபாய் 25 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்குவதாக இசைவு அளித்துள்ள மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் வி.சேஷன் அவர்களுக்கும் கழக மாணவர் அணி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இதே போல மாவட்ட - மண்டல அளவில் நடைபெற உள்ள பேச்சுப் போட்டிகளுக்கு கழக நிர்வாகிகள் ஒத்துழைப்பு நல்குமாறும் மாணவர் அணி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம்: 6
மாணவர் அணி கலந்தாய்வுக் கூட்டங்கள்

‘பெரியார் - அண்ணா’ பேச்சுப் போட்டியை நடத்துவதற்கு ஆயத்தப்படுத்திடும் வகையில், மாணவர் அணிச் செயலாளர், மே மாதம் 2, 3, 4, 5, 8, 9, 10 ஆகிய தேதிகளில் மண்டலக் கூட்டங்களில் பங்கேற்பது என்றும், அந்தந்த மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்களின் சீரிய வழிகாட்டுதலோடு, மாவட்ட அமைப்பாளர்களின் துணையுடன் மே மாதம் 20, 21, 22, 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர அளவில் மாணவர் அணிக் கூட்டத்தை நடத்தி பேச்சுப் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான களப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம்: 7
திராவிட இயக்க அரசியல் பயிலரங்கம்

தந்தை பெரியார் சிலையை அப்புறப்படுத்த எத்தனிக்கும் இன எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகின்ற தலைவர் வைகோ அவர்களின் திராவிட இயக்க இன உணர்வை, இளைய தலைமுறையின் நெஞ்சத்தில் விதைத்திடும் வகையில், மறுமலர்ச்சி தி.மு.க. 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாகை, திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 11 மையங்களில் மாணவர் அணி சார்பில் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் 2ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு ஆண்டு முழுவதும் திராவிட இயக்க அரசியல் பயிலரங்கம் நடத்துவது என்றும்; 

ஒரு மையத்திற்கு 25 மாணவர்களுக்குக் குறையாமலும், 50 மாணவர்களுக்கு மிகாமலும் ஒவ்வொரு மாதமும் ஒரு தலைப்பின் கீழ் தேர்ந்த திராவிட இயக்கப் பயிற்றுநர்களைக் கொண்டு அரசியல் வகுப்பு நடத்துவது; 

பயிலரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பருவத்  தேர்வு நடத்தி, அதிக மதிப்பெண்கள் பெறுகின்ற மாணவர்களுக்கு, ‘திராவிட இயக்க இளம் பயிற்றுனர்’ என்னும் விருதையும், அடுத்த நிலையில் வருகின்றவர்களுக்கு  ‘திராவிட இயக்க அரசியல் மாணவர்’ என்னும் சான்றிதழையும் வழங்கி சிறப்பிப்பது என்றும்,

இந்தப் பயிலரங்கின் மூலம் ஆண்டுக்கு 500 திராவிட இயக்க ஆளுமைப் பண்பு மிக்க கல்லூரி மாணவர்களை உருவாக்குவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம்: 8
பெரியார் சிலை உடைக்கக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடு!

சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தந்தை பெரியார் சிலையை உடைத்து நொறுக்குவோம் என்று வன்முறையைத் தூண்டிய காவி பயங்கரவாதிகளின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறியதால், திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட அவலம் நடந்தேறியுள்ளது. ஆண்டாண்டுக் காலமாக சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, சமூக ஒற்றுமை காத்து வரும் தமிழகத்தில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் மத பயங்கரவாதிகளின் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

தீர்மானம்: 9
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்
துணை வேந்தர் நியமனத்தைத் திரும்பப் பெறுக!

தமிழ் மொழியை நீச பாஷை என்றும், சமஸ்கிருதத்தைத் தெய்வீக மொழி என்றும் பேசியதால் திமுக அரசால் கடும் கண்டனத்துக்கு ஆளாகி, 2009 இல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சூர்ய நாராயண சாஸ்திரியை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக நியமித்ததை கழக மாணவர் அணி வன்மையாகக் கண்டிக்கின்றது.

மத்திய பா.ஜ.க., அரசிடம் தாள்பணிந்து கிடக்கும் அதிமுக அரசு, இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு இணங்கிச் சென்று, ஆளுநரின் நியமனத்தை ஏற்பது தமிழ் இனத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும்.

எனவே, ஆளுநர் அறிவித்துள்ள துணைவேந்தர் நியமனத்தை ரத்துசெய்துவிட்டு, தேர்வுக்குழு பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழகப் பேராசிரியர்கள் மூன்று பேரில் ஒருவரை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 10
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் வரை
தொடர் போராட்டம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெறும் வரை ஒத்த கருத்துள்ள மாணவர் அமைப்புகளுடன் இணைந்து, மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் தொடர்ந்து போராடுவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகின்றது.

தீர்மானம்: 11
டெல்லியில் தமிழக மாணவர்கள் மர்ம மரணத்திற்கு
நீதி விசாரணை வேண்டும்!

வட இந்தியாவில் மருத்துவ மேற்படிப்புக்குச் செல்லும் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்படும்  இன ரீதியான பாகுபாட்டைக் கண்டிப்பதோடு, தமிழக மாணவர்களின் மர்ம மரணத்திற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

தீர்மானம்: 12
மொழிப்போர் தியாகிகள் கூட்டம் நடத்திய
நிர்வாகிகளுக்குப் பாராட்டு!

மாவட்டக் கழகச் செயலாளர்களின் சீரிய வழிகாட்டுதலோடு, அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தைச் சிறப்பாக நடத்திய மாணவர் அணி மாநிலத் துணைச்செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு இக்கூட்டம் தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றது என மதிமுக தலைமை நிலையம் இன்று 25-03-2018 அன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை