Sunday, March 11, 2018

மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றுவதைத் தடுக்க வாரீர்! வைகோ அழைப்பு!

சென்னை மாநகரத்தில், வண்ணார்பேட்டையில், சென்னை 21, மண்டலம் 5, வார்டு 53 ல், மூலக்கொத்தளம் பகுதியில், 20 ஏக்கர் பரப்பில் உள்ள மயானத்தில், உயிர் இழந்தோரின் உடல்கள், கடந்த 120 ஆண்டுகளாக எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வருகின்றது.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் விடியலுக்காகவும், செந்தமிழ் மொழியின் தனித்தன்மையை, உரிமையைப் பாதுகாக்கவும், சமூக நீதியைக் காக்கவும், சமதர்ம சமுதாயம் காணவும் போராடிய மாவீரர்களின் உடல்கள், இந்த மயானத்தில்தான் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்துள்ளன.

இந்தி எதிர்ப்பு முதல் போரில் சிறை சென்று மடிந்த வீரத் தியாகிகள் தாளமுத்து, நடராசன் இருவரின் நல்லுடல்களும் இங்குதான் எரிக்கப்பட்டன. இராஜா சர் முத்தையச் செட்டியாரும், மேயர் பாசுதேவும், அவ்வுடல்களைச் சுமந்து வந்தனர். பேரறிஞர் அண்ணா அவர்கள், மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரிகின்ற நெருப்பு, தமிழர்கள் நெஞ்சில் ஒருபோதும் அணையாது என்று உருக்கமாக உரை ஆற்றினார். தமிழ் மொழி உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய டாக்டர் தர்மாம்பாள் கல்லறையும் இங்குதான் உள்ளது.

ஈழத்தமிழ் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த, 2009 ஜனவரி 29 இல், தன் மேனியில் பெட்ரோலை ஊற்றித் தன் உடலைத் தீயின் நாக்குகளுக்கு அர்ப்பணித்த உத்தமத் தியாகி முத்துக்குமார், அவரது உயிர்த்தியாகத்தைச் சுட்டிக்காட்டி, தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி எரித்து உயிர் நீத்த அமரேசன் ஆகியோரது உடல்களும் இந்த மயானத்தில்தான் எரியூட்டப்பட்டன.

இப்படி, நூற்றாண்டுக்காலத் தமிழர்களின் தியாக வரலாற்றின் அடையாளச் சின்னம்தான் மூலக்கொத்தளம் சுடுகாடு ஆகும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், 1938 ல் தனது உரையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நடராசனுக்கும், நாடார் சமூகத்தில் பிறந்த தாளமுத்துவுக்கும் சிலைகள் எழுப்பி, நாம் வீர வணக்கம் செலுத்த வேண்டும் என்றார்.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த மூலக்கொத்தளம் மயானத்தைச் சுற்றி, இராமதாஸ் நகர், காத்படா நியூ லேபர் லைன், பாதாள பொன்னி அம்மன் கோவில் பகுதி, சிதம்பரம் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன்.

120 ஆண்டுகளாக மயான பூமியாக மக்கள் பயன்பாட்டில் உள்ள இடத்தில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் கட்டப்போவதாகத் தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதற்கான திட்ட அறிக்கையும் வரைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட தலித் மக்களை ஏமாற்றுவதற்காக, ஆதி திராவிட சமூகத்து மக்களுக்குக் குடியிருப்புகள் கட்டப்போவதாக, நரித்தந்திரத்தோடு அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை வகுத்த அதிகாரிகள், தங்கள் குடும்பத்துடன் மயானத்தில் வீடுகள் கட்டி வசிக்க முன்வருவார்களா? தமிழகத்தில் உள்ள இதர நகரங்கள், கிராமங்களில் சுடுகாடுகளில் வீடுகளைக் கட்டி மக்களைக் குடி அமர்த்த முடியுமா? எந்த ஊரிலாவது இதை அனுமதிப்பார்களா?

இது ஆதி திராவிட மக்களுக்குச் செய்கின்ற மிகப்பெரிய அநீதி ஆகும்.

இந்த மயானத்தைச் சுற்றிப் புதிதாக உருவாகி இருக்கின்ற அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர், இந்தச் சுடுகாட்டை அகற்றுவதற்காக, அதிகாரிகளைச் சரிக்கட்டி, ஏன் தமிழக அரசையும் சரிக்கட்டி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளனர்.

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும், இடுகாடுகளும், சுடுகாடுகளும் எந்தக் காலத்திலும் அகற்றப்படுவது இல்லை. லண்டனில் மக்கள் வசிக்கும் பகுதியில்தான் ஹைகேட் கல்லறைத் தோட்டம் இருக்கின்றது. மனிதகுல வரலாற்றில் மாபெரும் திருப்பத்தைத் தந்த கார்ல் மார்க்ஸ், ஜார்ஜ் எலியட் போன்ற கவிஞர்களின் கல்லறைகள் அங்கே உள்ளன. உலகில் ஒவ்வொரு கல்லறைத் தோட்டத்திற்கும் ஒரு நெடிய வரலாறு உள்ளது. இலங்கைத் தீவின் ஈழத்தமிழர் தாயகத்தில், தமிழ் ஈழத் தாயக உரிமைக்காக, வீரஞ்செறிந்த போர் புரிந்து, சிங்கள இராணுவத்தால் உயிர்ப்பலியான தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கல்லறைகளை, தியாக தீபம் திலீபன் உள்ளிட்டோரின் கல்லறை, மாவீரர் துயிலும் இல்லங்களை, கொலைகார சிங்கள இராஜபக்சே அரசு, இடித்துத் தரைமட்டம் ஆக்கியது.

செந்தமிழ் மொழிக்காக உயிர் நீத்த தாலமுத்து நடராசன் கல்லறையை, ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார், அமரேசன் கல்லறைகளை இடிக்க முயலும் தமிழக அரசுக்கும், விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலகங்களை இடித்த சிங்கள அரசுக்கும் என்ன வேறுபாடு?

தில்லியில் அமைந்துள்ள, இந்தி வெறி பிடித்த அரசு, தமிழர் பண்பாட்டின் அடித்தளத்தை அழிக்கும் உள்நோக்கத்தோடு, பல முனைகளிலும் தாக்குதல் தொடுத்து வருகின்ற வேளையில், தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அண்ணா தி.மு.க. அரசு, மத்திய அரசின் கைக்கூலியாகச் செயல்படுவதால்தான் மூலக் கொத்தளம் மயானத்தை இடித்து அகற்ற முடிவு செய்துள்ளது.

மூலக்கொத்தளம் சுடுகாட்டை இடித்து, குடியிருப்புகள் கட்டும் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல், உணர்ச்சிக் கொந்தளிப்பான அறப்போரைச் சந்திக்க நேரிடும். அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழ்நாடு அரசுதான் பொறுப்பு ஆகும்.

எனவே, மூலக்கொத்தளம் மயானத்தை அகற்ற விடாமல் தடுக்க, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்ச் 13 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று காலை பத்து மணி அளவில், வடசென்னை துறைமுகத்திற்கு எதிரே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில், அரசுக்கு விடும் முதல் எச்சரிக்கைகயாக அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்;

அரசியல் எல்லைகள் கடந்து, தமிழரின் தன்மானத்தைக் காக்கும் குறிக்கோளுடன் நடைபெறும் இந்த அறப்போராட்டத்தில், ஆளுங்கட்சி தவிர்த்த, தமிழ் உணர்வு கொண்ட அனைத்து அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வு அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்க வேண்டும் என மார்ச் 6 -ஆம் நாள், ஈரோட்டில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 26-ஆவது பொதுக்குழுவில் அழைப்பு கொடுத்தேன்.

பல்வேறு கட்சித் தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்பதாக ஒப்புதல் தந்துள்ளனர். இந்த அறப்போரில் பங்கேற்க வருமாறு இளைஞர்களை அழைக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 11-03-2018 வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment