மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இந்தியா முழுவதும் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 216 பேர் நிரந்தரப் பணியாளர்களாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒப்பந்தத் தொகுப்பு ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று இருக்கிறதா? என்று கேட்கத் தூண்டுகிறது.
அதே போன்று தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களில் இயங்கி வரும் தகவல் தொடர்பு அலுவலகங்களளுக்கும், தனியார் கட்டடங்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள தகவல் பரிமாற்ற உயர் கோபுரத்துக்கான பிப்ரவரி மாத வாடகையும் வழங்கப்படாமல் இருப்பது மத்திய மோடி அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு சான்றாகும்.
பி.எஸ்.என். தகவல் தொடர்புத் துறை பிரைம் டைம் என்று சொல்லப்படுகின்ற வர்த்தக நேரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு இல்லாமல், அவசரத் தேவைக்குப் பயன்படாமல், தனியார் துறையை ஊக்குவிப்பதற்கு முடக்கி வைக்கப்பட்டு, எப்போதும் மக்களின் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே இருப்பது கண்கூடு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் பேன்று நடப்பு 2019 ஆம் ஆண்டு அறிக்கையில், தகவல் தொடர்புத்துறை 3,500 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்குவதை உறுதிப்படுத்துகிறது.
இந்திய இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையும், மத்திய, மாநில அரசு அலுவலகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்ற பொதுத்துறை தகவல் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நட்டத்தில் இயங்குவது, மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு நிர்வாக ரீதியாக தோற்றுப்போய் உள்ளதை படம்பிடித்துக் காட்டுகிறது.
பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மூலதனம் கொண்ட பி.எஸ்.என்.எல். துறையைச் சிக்கலாக்கி, தனியாரிடம் தாரை வார்க்கவே மோடி அரசு விரும்புகிறது என்பது தெளிவாகிறது.
எனவேதான் தனியார் தகவல்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி தாண்டி, 5ஜி தகவல் பரிவர்த்தகத்துக்கு முன்னேறிக் கொண்டு வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இன்னும் முழுமையாக 4ஜி சேவை வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவது தனியார் துறையை ஊக்குவிப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதுவெள்ளிடை மலை.
நமது வரிப் பணத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கியிலிருந்து லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் வழங்கி தனியார் துறையை ஊக்குவித்து வரும் மத்திய மோடி அரசு, அரசின் தகவல் தொடர்புத் துறையை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று நடைமுறைப்படுத்தாமல், மோடி அரசு அலட்சியப் போக்கோடு செயல்படுவது பி.எஸ்.என்.எல். ஊழியர்களை அவமதிக்கும் செயல் மட்டும் அன்று தொழிளார்களின் விரோதப் போக்கும் ஆகும்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாத குழுக்கள் அதிநவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை 3ஜி தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதால்தான் மும்பை, புல்வாமா போன்ற தாக்குதல்களை முன் அறியாமல் போனது.
எனவே எல்லா நிலைகளிலும் செயல் இழந்து, மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள மோடி தலைமையிலான மக்கள் விரோத, எதேச்சதிகார, காவி பயங்கரவாத பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது மட்டும்தான் ஒரே தீர்வு
பி.எஸ்.என்.எல்.-ஐ மீட்டெடுப்போம்! தொழிலாளர் விரோத மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப சபதம் ஏற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 12-03-2019 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment