மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு, இன்று 06.03.2019 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா நகர், விஜயஸ்ரீ மகாலில் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் எண். 1 :
இந்தியத் துணைக்கண்டத்தில் தனித்துவ அடையாளம் கொண்ட, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம், தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கின்ற சமூக, அரசியல், பொருளாதார மறுமலர்ச்சி, பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கதாகும்.
இந்தியத் துணைக்கண்டத்திற்கே வழிகாட்டுகின்ற சமூக நீதித் தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும் திராவிட இயக்கம்தான்.
திராவிட இயக்கத்தின் முதல் மூன்று தலைவர்களான டாக்டர் சி. நடேசனார், சர் பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் ஏற்றி வைத்த கொள்கைச் சுடரைப் பாதுகாத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்ற தலைவர்கள் காட்டிய இலட்சியப் பாதையில், திராவிட இயக்கத்தின் இன்னொரு பரிணாமமாகத் திகழ்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 25 ஆண்டுகளாகப் பீடுநடை போட்டு வருகின்றது.
தமிழ் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் காக்கவும், தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், நதிநீர் உரிமைகளை நிலைநாட்டவும், தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் ஏற்பட தமிழ் ஈழம் மலரவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபட்டு வருகின்றது.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைச் சிதைத்து, சாதி மத வெறியைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்தவும், தமிழகத்தில் கால் ஊன்றவும், திராவிட இயக்கத்திற்கு எதிரான சக்திகள், அண்மைக்காலமாக முனைப்புடன் இயங்கி வருகின்றன.
சனாதனக் கொள்கையைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தத் துடிக்கும் இந்துத்துவ சக்திகள், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு சமூக, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவும், தமிழ் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைத் தகர்க்கவும் வெறித்தனமான முயற்சியில் இறங்கி உள்ளன.
இத்தகைய இனப் பகைவர்களை முறியடித்து, தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கின்றது.
இந்துத்துவ சனாதனச் சக்திகளை, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வீழ்த்தி புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்காக, திராவிட இயக்கங்களின் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கரம் கோர்த்துள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்களிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி வெற்றி வாகை சூடுவதற்கு வீறுகொண்டு பணியாற்றுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு சூளுரை மேற்கொள்கின்றது.
தீர்மானம் எண். 2 :
2014 மே மாதம், நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பா.ஜ.க. அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைப் புறக்கணித்து, அநீதி இழைத்துள்ளது.
தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி நதிநீர்ப் பங்கீட்டில், நமது மரபு உரிமைகளைப் பறிக்கும் வகையில் கர்நாடக மாநிலத்திற்குத் துணைபோனது; காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு அமைக்காமல் வஞ்சித்தது. உச்ச நீதிமன்ற உத்திரவும், தமிழக மக்களின் கொந்தளிப்பும் ஏற்படுத்திய அழுத்தங்களால், பெயர் அளவில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தனர்.
அதன்பிறகு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் தடுப்பணை
கட்டுவதற்கு ஆய்வு நடத்த அனுமதி வழங்கியது.
முல்லைப்பெரியாறு அணையைத் தகர்த்து விட்டுப் புதிய அணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரும் கேரள மாநிலத்திற்கு ஆதரவாக, புதிய அணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்து இருப்பதும் அநீதி ஆகும்.
பாலாறு, பவானி, தென்பெண்ணை ஆகிய ஆறுகளின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டும் அண்டை மாநிலங்களின் திட்டங்களையும் தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கின்றது.
வளம்கொழிக்கும் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்துப் பாதுகாக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்தி பாலைவனமாக்கிட, மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
காவிரிப் படுகையின் பகுதியான நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் சுமார் 57,500 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தி, பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017, ஜூலை 19-ஆம் தேதி தமிழக அரசு மூலம் அறிவிக்கை வெளியிட ஏற்பாடு செய்தது.
தூத்துக்குடியில் பத்து இலட்சம் மக்களின் உயிரோடு விளையாடி வரும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கு, பா.ஜ.க. அரசு, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் அமைதிவழி அறப்போராட்டம் நடத்த பேரணியாகச் சென்றபோது தமிழகக் காவல்துறையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 அப்பாவி மக்களின் படுகொலைக்கு தமிழ்நாட்டின் அதிமுக அரசே குற்றவாளியாகும்.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வகத்தை நிறுவிட மத்திய அரசு பல வகைகளில் செயல்பட்டு வருகிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வாதாடி நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை ஆணை பெற்றிருந்தாலும், அதனை நிறைவேற்றுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு முனைந்துள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைத்து உயர் அழுத்த மின்சாரத்தை எடுத்துச் செல்ல அதானி குழுமம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு தமிழக அரசின் உதவியுடன் அனுமதி அளித்துள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு அலட்சியப்படுத்துகின்றது.
கெயில் எரிவாயு குழாய்களையும், இருகூர்-தேவனகொத்தி பைப்லைன் திட்டத்தின் எண்ணெய் குழாய்களையும், விவசாய நிலங்களில் பதிக்கும் மத்திய அரசின் திட்டத்தால், எண்ணற்ற விவசாயிகள் வாழ்வு பாழாக்கப்படுகின்றது.
சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் “நீட்” நுழைவுத் தேர்வு, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்குப் பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்களுக்கு வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாதது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
‘கஜா’ புயலால் பேரழிவுக்கு உள்ளான காவிரிப் படுகை மாவட்டங்களின் மீள் புனரமைப்புக்கு, தமிழக அரசு கோரிய 15 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகையைத் தர மறுத்தது மட்டும் அன்றி, உயிர் இழந்த 89 தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இதயத்தில் ஈரம் இல்லாமல் போனது.
நரேந்திர மோடியின் 52 மாத ஆட்சியில்,
இந்தி, சமஸ்கிருத மொழிகள் திணிப்பு;
வேதக் கல்வி வாரியம் அமைப்பு;
பசுவதை எனும் பெயரால் சிறுபான்மை, தலித் மக்கள் மீது தாக்குதல்கள்,
படுகொலைகள்;
மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை நியமித்தல்;
மாநில உரிமைகளை நசுக்கும் வகையில் ‘நிதி ஆயோக்’ உருவாக்கம்;
நீதித்துறை, பத்திரிகை, ஊடகத்துறை, அரசு நிர்வாகத் துறை
அனைத்தையும் மிரட்டிப் பணிய வைக்கும் பாசிசப் போக்கு;
நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த நிலை;
அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காலில் போட்டு மிதிக்கும் கொடுமை;
மத்திய அரசின் முகவர்களான ஆளுநர்கள் மூலம் மாநிலங்களை ஆட்டிப்
படைக்கும் அதிகார ஆதிக்கம்;
மத்திய அரசுத் துறைச் செயலாளர்களாகக் குடிமைப்பணித் தேர்வு எழுதாத
வெளியாட்களை நியமிக்க முயற்சி; அதிலும் ஆ.எஸ்.எஸ்.
தொடர்புடையோர் நியமனம்;
கல்வித்துறையைக் காவிமயம் ஆக்குதல்;
மாநிலங்களின் நிதி தன்னாட்சிக்கு வேட்டு வைத்தல்;
மத்திய அரசின் நேரடி ஆதிக்கத்திற்கு ஏதுவாக உயர்கல்வி ஆணையம்,
தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தல்;
மத்திய ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., புள்ளியியல் துறை
போன்றவற்றை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் எதேச்சாதிகாரம்;
பொதுத்துறை வங்கிகளில் பல இலட்சம் கோடி ரூபாய் சுருட்டல்;
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல ஆயிரம் கோடி ஊழல்;
ஆர்.எஸ்.எஸ்.,-சங் பரிவார்-சனாதனக் கொள்கைகளை எதிர்த்த சிந்தனையாளர்கள்
நரேந்திர தபோல்கர், எம்.எம். கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ்
உள்ளிட்டோர் படுகொலை;
சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள் மீது அடக்குமுறை
என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை, பல்வேறு தேசிய இனங்களின் மொழி, இனப் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைத்து, ஒற்றை இந்துத்துவ-சனாதன-இந்து ராஷ்டிராவை அமைப்பதற்கு, ஒரே நாடு-ஒரே மொழி-ஒரே மதம்-ஒரே கலாச்சாரம்-ஒரே மாதிரியான கல்வி- ஒரே வரி என்று ஒரு குடையின்கீழ் கொண்டு வருவதற்கு மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகின்றது.
மதத்தின் பெயரால் நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி இரத்தம் குடிக்கும் வகையில் சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீது இந்துத்துவாக் கும்பல் வன்முறைகளை ஏவி வரும் நிலைமை தொடர்கின்றது.
தேசத் தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்துவதும், அவரைக் கொலை செய்த கோட்சேவைக் கொண்டாடி மகிழ்வதும், சங் பரிவார் கூட்டத்தின் வன்மத்தைக் காட்டுகின்றது. இதற்கு அடிப்படைக் காரணம், மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு அமைந்ததுதான்.
ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதும், இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவைப் பாதுகாக்கத் துடிப்பதும், தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டத்தைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தியதும் தமிழக மக்களின் நெஞ்சில் பா.ஜ.க. அரசு மூட்டிய என்றும் தணியாத கனல் ஆகும்.
தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீது வன்மம் பாராட்டி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வருவது இந்திய ஜனநாயகத்திற்கே பெரும் ஆபத்தாக முடியும்.
எனவே, பா.ஜ.க. ஆட்சியைத் தூக்கி எறியவும், மத்திய அரசுக்கு அடிமைச் சேவகம் புரியும் அ.இ.அ.தி.மு.க. அரசை வீழ்த்தவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான வெற்றிக் கூட்டணியை ஆதரித்து, மகத்தான வரலாற்று மாற்றத்திற்கு வித்திடும் வகையில் வாக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக, புதுச்சேரி வாக்காளப் பெருமக்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண்: 3
‘28 ஆண்டுகள் சிறைச்சாலையில் மனதளவில் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கின்ற ஏழு தமிழர்களை விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவு எடுக்கலாம்’ என்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் ரஞ்சன் கோகோய் அவர்கள் தலைமையிலான அமர்வு செப்டம்பர் 6 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதன்படி, செப்டம்பர் 9 ஆம் தேதி, தமிழக அரசின் அமைச்சரவை கூடி, ஏழு தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின்படி, அந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துக் கையெழுத்து இட வேண்டிய ஆளுநர், அதற்குப் பதிலாக, அந்தக் கோப்பினை, மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கருத்துக் கேட்பதற்காக அனுப்பி வைத்தது, அரசியல் சட்டத்திற்கு எதிரானது; உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை அவமதிக்கின்ற செயல் ஆகும்.
அந்தக் கோப்பு டெல்லிக்கு ஆளுநர் அனுப்பினாரா, அல்லது, அவர் தமிழ்நாட்டு அரசுக்குத் திருப்பி அனுப்பி, அதை எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு அனுப்பியதா என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிக்கை விடுத்தார்கள். அதற்கு இதுவரை ஆளுநரோ, தமிழக அரசோ எந்த விளக்கமும் தரவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறை அறுத்து எறிந்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், சிறையில் வாடுகின்ற ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, 2018 டிசம்பர் 3 ஆம் நாள், ஆளுநர் மாளிகையை முற்றுகை இட்டு, கழகத்தின் சார்பில் அறப்போர் நடத்தப்பட்டது.
முதல் அமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூடி எடுத்த முடிவைச் செயல்படுத்தாமல், ஆறு மாதங்களாக இழுத்தடிக்கின்ற, அரசியல் சட்டத்தை மதிக்காமல், தான்தோன்றித் தனமாகச் செயல்பட்டு வருகின்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு இப்பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது; ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றது.
தீர்மானம் எண்: 4
தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் நிறுவனம் அமைத்த தாமிர உருக்கு ஆலை எனும் நாசகார நச்சு ஆலையானது நிலம், நிலத்தடி நீர், நிலத்தின் மேல் தேங்கும் நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நஞ்சு ஆக்கி மனித உயிர்களுக்கும், கடல்வாழ் உயிர்களுக்கும், விவசாய விளைநிலங்களுக்கும் பெரும் கேட்டினை, ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையைத் தூத்துக்குடியில் இருந்து அகற்ற வேண்டும் என்று, கடந்த 22 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் போராடி வந்தார்.
1996 மார்ச் 5 ஆம் நாள், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கிய வைகோ அவர்கள், மக்கள் திரள் போராட்டங்கள், பரப்புரை விழிப்புணர்வு நடைப்பயணம் என 22 ஆண்டுகள் இடைவிடாது களத்தில் நின்றார். மக்கள் மன்றம், சென்னை உயர்நீதிமன்றம், தில்லி உச்சநீதிமன்றத்தில் அயர்வும், சலிப்பும் இன்றித் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வாதாடி வந்தார்.
உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைப்பினர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், வைகோவும் ஆலையை மூடக் கோரி ரிட் மனு தாக்கல் செய்தார்.
1998 நவம்பர் 23-இல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது.
1998 டிசம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் அவர்கள் அமர்வில், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக வைகோ அவர்கள் நீதிமன்றத்தில் வாதாடினார்.
இந்த விசாரணையின்போதுதான், தலைமை நீதிபதி லிபரான் அவர்கள், “வைகோ அவர்களே! உங்கள் நேர்மைக்கும் நாணயத்துக்கும் எவரும் நற்சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை; அனைவரும் அறிவார்கள்,” என்று நீதிமன்றத்திலேயே பாராட்டு தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதால் 1998 டிசம்பர் 14-இல் அங்கும் வைகோ அவர்கள் வாதாடினார். நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆலை 1999 பிப்ரவரி 23-இல் மீண்டும் திறக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் வைகோ அவர்களின் சட்டப் போராட்டமும் தொடர்ந்தது.
2010-ஆம் ஆண்டு, செப்டம்பர் 28-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிபி தருமராஜ், பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச் சொல்லி தீர்ப்பு அளித்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை ஆணை பெற்றது.
பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு மேல் முறையீட்டுக்குப் போனபோது, இந்த வழக்கு விசாரணையில் சுமார் 40 அமர்வுகளில் தொடர்ந்து இடையறாமல் நேர்நின்று ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்காக சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ் அவர்கள் துணையுடன் வாதாடிய வரலாறு வைகோ அவர்களைத் தவிர வேறு எவருக்கும் இல்லை.
அது மட்டும் அன்றி, தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் நடந்த வழக்கு விசாரணைகளிலும் வைகோ அவர்கள் பங்கேற்று, அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தார்.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பட்நாயக், கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்து இருந்தாலும் அத்தீர்ப்பில் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடி வரும் வைகோ அவர்களை மிகவும் பாராட்டி இருந்தனர்.
உயர் நீதிமன்றம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம், உச்ச நீதிமன்றம் என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சட்டப் போராட்டத்தை வைகோ நடத்தி வந்த நிலையில்தான், 2018 மே 22-ஆம் தேதி இலட்சக்கணக்கான மக்கள் கொந்தளித்து எழுந்து ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அணி திரண்டு பேரணியாகச் சென்றனர்.
தமிழக அரசு காவல்துறையை ஏவி காக்கை, குருவிகளைச் சுடுவதைப் போல பொது மக்கள் மீது மூர்க்கத்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்தது.
தூத்துக்குடி படுகொலைகள் நாடெங்கும் மக்களிடையே ஏற்படுத்திய கொந்தளிப்பைக் கண்ட அ.இ.அ.தி.மு.க. அரசு, 2018 மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்சார வாரியம் மூலம் ஆணைகளைப் பிறப்பித்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு, 2018 ஜூன் 22-ஆம் தேதி, நீதிபதிகள் சி.பி. செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய ஆணையைத் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்; அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” என்று வைகோ சார்பில் வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதாடினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் “தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி ஆலையை மூடுவதற்கு உரிய காரணங்களைத் தெளிவுபடுத்தி அரசின் சார்பாகக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்,” என்று உத்தரவிட்டனர்.
அதன்பின்னர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைமை அமர்வில், ஆலையைத் திறக்க முறையீடு செய்தது. இது தொடர்பாக ஆய்வு செய்ய தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது.
தருண் அகர்வால் குழு தனது அறிக்கையை, 2018 நவம்பர் 26-ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீதான வாதங்களை முன்வைக்க, டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ அவர்கள் அனுமதி கேட்டபோது தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் அனுமதி அளிக்காமல் அலட்சியப்படுத்தினார்.
ஆனாலும், மக்களுக்கான போராட்டத்தில் இலட்சிய உறுதியுடன் திகழும் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், 2018 டிசம்பர் 10-ஆம் தேதி டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த 22 ஆண்டுகளாகத் தாம் போராடி வருவதை எடுத்துக் காட்டி, தன் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதி தர வேண்டும் என்று கடுமையாகப் போராடினார். ஒரு கட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தன் கருத்தைத் தெரிவிக்க அனுமதி அளிக்காவிடில், இந்தத் தீர்ப்பு ஆயத்தில் எதுவும் நடைபெறாது என்று வெளிப்படையாக தீர்ப்பு ஆயத்தின் நீதிபதியைப் பார்த்துக் குரல் எழுப்பினார்.
அதன் பின்னர் வைகோ அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டியதன் அவசியத்தைப் பட்டியல் இட்டு, குறித்த நேரத்தில் தன் வாதங்களை முன் வைத்தார்.
2018 டிசம்பர் 15-ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு அனுமதி அளித்தது.
2019 ஜனவரி 8-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வைகோ அவர்கள், ‘தூத்துக்குடியில் சிந்தப்பட்ட மக்களின் இரத்தம் இங்கே நியாயம் கேட்கின்றது’ என்பதை எடுத்து உரைத்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோகிங்டன் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வில், 2019 ஜனவரி 24-ஆம் தேதி ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அன்று பகல் 12 மணி அளவில் வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழக்கை ஏற்க முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலை குறித்து இன்றே ஆணை பிறப்பிக்கப் போகிறோம் என்றும், ஒருமுறைக்கு நான்கு முறை நீதிபதி நாரிமன் அழுத்தமாகக் கூறினார்.
தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை நீதிபதி ஏற்காத நிலையில், வைகோ அவர்கள், தனது வாதங்களை முன்வைத்துவிட்டு,
“ஜனவரி 8-ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.
ஆனால், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது என்று ஸ்டெர்லைட் தரப்பில் இருந்து எனக்கு எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை; நானாகக் கேள்விப்பட்டுத்தான் வந்தேன்;
ஆலையைத் திறக்குமாறு இன்று தீர்ப்பு அளிக்க வேண்டாம்; செவ்வாய்கிழமை அமர்வில் எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாகக் கேளுங்கள்”
என்று தெரிவித்தபோது நீதிபதி நாரிமன் அவர்கள், “உங்களுக்கு முறையாகத் தகவல் அனுப்பப்படும்; செவ்வாய்க்கிழமை அமர்வில் உங்கள் வாதங்களை முன்வைக்கலாம்,” என்று அனுமதி அளித்தார். தனக்கு 40 நிமிடங்கள் வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்று வைகோ கூறியதையும் நீதிபதி நாரிமன் ஏற்றுக் கொண்டார்.
பிப்ரவரி 7, 2019 அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பகல் 12 மணி முதல் 12.40 வரை வைகோ அவர்கள், தனது நீண்ட வாதத்தை முன்வைத்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டு காலம் போராடி வருவதை எடுத்துக் காட்டிய வைகோ அவர்கள், தூத்துக்குடி மக்கள் மீது 2018 மே 22-இல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, 13 பேர் படுகொலை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறி உள்ளதையும், தொழில்நுட்ப முரண்பாடுகளையும் பட்டியல் இட்டார். தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் தீர்ப்பை ரத்து, செய்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா அமர்வு 2019 பிப்ரவரி 18-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி இல்லை’ என்று திட்டவட்டமாகக் கூறி விட்டது.
ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெஞ்சைத் தொடும் அளவுக்கு பிப்ரவரி 7-ஆம் தேதி கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 40 நிமிடங்கள் எடுத்துரைத்த வாதங்கள்தான், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டதற்குக் காரணம் என்று பத்திரிகைகளும் ஊடகங்களும் பாராட்டு தெரிவித்தன.
22 ஆண்டு காலம் சோர்வு இன்றிப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றும், நீதிமன்றங்களில் நேர்நின்று வழக்காடியும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறப்பதற்குத் தடை ஆணை பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 27-ஆவது பொதுக்குழு இதயமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இதில் 3 நூல்களும் வெளியிடப்பட்டன.
மறுமலர்ச்சி திமுக 27 ஆவது பொதுக்குழுவில் வெளியிடப்பட்ட நூல்கள்
1. ஈரோட்டுக் காவியம் என்ற நூலை
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்
மல்லை சத்யா அவர்கள் வெளியிட
அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர்
புலவர் செவந்தியப்பன் அவர்கள்
பெற்றுக் கொள்கின்றார்கள்.
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்
மல்லை சத்யா அவர்கள் வெளியிட
அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர்
புலவர் செவந்தியப்பன் அவர்கள்
பெற்றுக் கொள்கின்றார்கள்.
2. உரிமைக்குரல் என்ற நூலை
கழகத்தின் பொருளாளர் கணேசமூர்த்தி அவர்கள் வெளியிட
துணைப் பொதுச்செயலாளர் ஏ கே மணி அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.
கழகத்தின் பொருளாளர் கணேசமூர்த்தி அவர்கள் வெளியிட
துணைப் பொதுச்செயலாளர் ஏ கே மணி அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள்.
3. ஸ்டெர்லைட் எதிர்ப்பு அறப் போர்க் களத்தில் வைகோ
என்ற நூலை
கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் வெளியிட
துணைப் பொதுச்செயலாளர்
துரை பாலகிருஷ்ணன் அவர்கள்
பெற்றுக் கொள்கின்றார்கள்
என்ற நூலை
கழகத்தின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் வெளியிட
துணைப் பொதுச்செயலாளர்
துரை பாலகிருஷ்ணன் அவர்கள்
பெற்றுக் கொள்கின்றார்கள்
No comments:
Post a Comment