ஜனநாயகத்தில் ஏடுகளும் ஊடகங்களும் விமர்சனம் செய்வது இயற்கையானது. பல காலகட்டங்களில் உண்மைக்கு மாறாக, என் மீது கடுமையான விமர்சனங்கள், தாக்குதல்களை ஒன்றிரண்டு ஏடுகளும், ஒன்றிரண்டு இணையதளங்களும் செய்தபோது, நான் மிகவும் மனம் உடைந்து சகித்துக் கொண்டேன்.
போராட்டங்களும், சிறைவாசமும் நிறைந்த எனது 55 ஆண்டுக்கால பொது வாழ்க்கையில், காரணம் இன்றி என் மீது கடுமையான வெறுப்பை ஒன்றிரண்டு ஊடகங்கள், இணையதளங்கள் வெளியிடும்போது, அதன் காரணமே எனக்குப் புரியவில்லை.
நேற்றும், இன்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பிரச்சாரம் குறித்துப் பேசுவதற்காக என்னைச் சந்திக்க வந்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை என்னை அன்பாகவும், மதிப்பாகவும் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், என்னைக் கடுமையாகக் கடந்த காலத்தில் தாக்கிய தி.மு.க.வினர் இன்று என்னைத் தேடி வருகிறார்கள் என்று, நான் தோழர்களிடம் பெருமைப்பட்டுக் கொள்வதாக, அப்பட்டமான பொய்யை, விகடன் இணையதளம் நஞ்சாகக் கக்கி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையையும், அந்த இயக்கத்தின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும், நான் மிகவும் மதித்து நேசித்து வருகின்றேன். அத்தோழர்கள் மனதில், என் மீது கசப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன், விகடன் இணையதளம் பொய்ச் செய்திகளைப் பரப்புவது, சிறிது காலமாகவே தொடர்ந்து நடந்து வருகின்றது. இதற்காக, கழகத் தோழர்கள் எவரும், பதிலுக்குப் பதில் என்ற முறையில் விகடன் இணையதளத்தின் மீது எந்த விமர்சனத்தையும் வைக்க வேண்டாம் என வைகோ தொண்டர்களுக்கு இன்று 18-03-2019 வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment