Friday, July 31, 2020

ஈகை உணர்வால் வாகை சூடுவோம்-வைகோ-!

 
ஈதுல் அல்ஹா என்னும் ஈகைத் திருநாளாம் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகையாக இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது. தன் ஒரே பிள்ளை என்றும் பாராமல் மூன்று முறை கனவில் கண்டதையே இறைவனின் கட்டளை என்று கருதி, தள்ளாத வயதில் பெற்றெடுத்த இஸ்மாயிலை, நபி இப்ராகீம் (அலை) பலியிட முன்வந்த தியாகம் இன்றளவும் உலகெங்கும் நினைவுகூரப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக நடைபெற்றது இந்த நிகழ்வு.

நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைத் தகர்த்து, ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்ற உணர்வுடன், வழக்க வழிபாடுகளில் திளைத்திருக்கும் மகோன்னதம் இன்று அரங்கேறுகிறது; ஈகை உணர்வால், வையகத்தை அய்யமின்றி வாகை சூடலாம் என்று அறிவிக்கின்றது.

தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் தனது அறிக்கையில் 31-07-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, July 30, 2020

அண்ணா சிலைக்கு காவி கட்டி களங்கப்படுத்திய காலிகள். வைகோ கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி துணி கட்டி களங்கப்படுத்தியுள்ளனர் சில அயோக்கியர்கள்.

தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதித்து வந்த சாதி, மதவெறி பாசிசவாதிகள் தற்போது பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் அவமதித்துள்ளனர். இது தமிழ் அன்னையையே களங்கப்படுத்திய செயலாகும். இத்தகைய தீய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

இத்தகைய செயல்கள் மூலம் மக்கள் கவனத்தைத் திசை திருப்பி, நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் சில அக்கறையுள்ள சக்திகள் முனைப்பாக உள்ளன.

மேலும் மேலும் இதுபோன்ற காலித்தனமான செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து கூண்டில் ஏற்றி, தக்க தண்டனை வழங்க வேண்டும்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் ஈனச் செயல்களுக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் தனது அறிக்கையில் 30-07-2020  தெரிவித்துள்ளார்.

பன்முகத்தன்மை, கூட்டாட்சிக் கோட்பாடுகளை சீர்குலைக்கும் புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்க! வைகோ அறிக்கை!

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்டக் குழு ‘தேசியக் கல்விக் கொள்கை வரைவு -2019’ அறிக்கையை கடந்த ஆண்டு மே 31 ஆம் தேதி மத்திய அரசிடம் வழங்கியது.

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் உருவாகிய நிலையில், கடந்த ஜூன் 30 ஆம் தேதி வரையில் கருத்துத் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியது.

கொரோனா தீநுண்மி பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கடந்த ஐந்து மாதங்களாக நாடே முடங்கி உள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா துயரச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். சனாதான சக்திகளின் நீண்டகாலத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முனைந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியம் வாய்ந்த கல்வித்துறையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும்போதும் விரிவான விவாதங்கள், கலந்தாய்வுகள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற மக்களாட்சிக் கோட்பாடுகளை அலட்சியப்படுத்தி வரும் பா.ஜ.க. அரசு, எதேச்சாதிகாரமாக புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்டுள்ள இந்தியாவை, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்று ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, ஆரிய சனாதான ஒற்றைப் பண்பாட்டைத் திணிப்பதற்கு பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் “ஒரே நாடு; ஒரே கல்வி முறை” என்கிற கோட்பாடு ஆகும். இதனைச் செயல்படுத்தவே ‘புதிய கல்விக்கொள்கை’ வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

கல்வித்துறை பொதுப்பட்டியலின் கீழ் இருப்பதால், கல்வித் துறை அதிகாரங்கள் அனைத்தையும் மாநிலங்களிடமிருந்து பறித்து, மத்திய அரசு டெல்லியில் குவித்துக்கொள்ள புதிய கல்விக் கொள்கை வழிவகை செய்துள்ளது.

பிரதமர் தலைமையில் அமைக்கப்படும் ‘ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் (RSA)’ எனப்படும் ‘தேசிய கல்வி ஆணையம்’ உயர் அதிகாரம் கொண்டதாக இருக்கும்.

மழலையர் பள்ளியிலிருந்து உயர் கல்வி, ஆராய்ச்சி மையம் வரை ஒட்டுமொத்தக் கல்வித்துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கக்கூடிய அமைப்பாக தேசியக் கல்வி ஆணையம் இருக்கும். கல்விக் கொள்கை, நிதி ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, தர நிர்ணயம் வழங்குவது, பாடத் திட்டங்கள் உருவாக்கம் போன்ற அனைத்தும் இந்த ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படும். மாநிலங்கள், தேசிய கல்வி ஆணையத்தின் உத்தரவுகளைக் கீழ்பணிந்து நிறைவேற்ற வேண்டும். மாநில அரசுகளுக்கு இனி கல்வித்துறை தொடர்பான எள்ளளவு அதிகாரம்கூட கிடையாது.

மாநில உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சிக் கோட்பாட்டைச் சிதைக்கும் புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டுமா?

பல்வேறு மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள இந்திய நாட்டில், தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்து ஒரே நாடு; ஒரே பாடத்திட்டம் என்று திணிப்பதை எப்படி சகிக்க முடியும்?

மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கி இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தைத் திணிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்துத்துவ சனாதான வேதகால நம்பிக்கை முறையுடன் மதிப்புமிக்க கல்வியை இணைத்து மையப்படுத்தப்பட்ட ஒரு தேசிய ஆய்வு நிறுவனம் (National Research Foundation -NRF) உருவாக்குவது என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்த்துவிடும்.

நாடு முழுவதும் ஒரே பொதுத் தேர்வு, கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு, ஒருங்கிணைந்த பள்ளிகள் திட்டத்தின்படி பள்ளிகளை மூடுதல், மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி எனும் பெயரால் இந்துத்துவ மனுதரும கோட்பாட்டின் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்துதல், கல்வி உரிமைச் சட்டம், தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றை நீர்த்துப்போகச் செய்தல், இணைய வழி தொலைதூரக் கல்வியை பரவலாக்குதல் போன்ற புதிய கல்விக் கொள்கை முன்வைத்துள்ள கூறுகள் அனைத்தும் கல்வியில் சமநிலை என்னும் கொள்கையைச் சீர்குலைக்கின்றன.

கல்வித்துறையைத் தனியார்மயம் ஆக்கவும், பன்னாட்டு கல்வி வணிகத்தை ஊக்குவிக்கவும் புதிய கல்விக் கொள்கை தாராளமான அனுமதி வழங்கி உள்ளது. அரசின் நிதி ஒதுக்கீடு இன்றியே உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதும், தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்படும் என்று வரையறுத்து இருப்பதும் கல்வித்துறை முழுக்க முழுக்க தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதையே உறுதி செய்கிறது.

இதனால் இந்திய உயர்கல்வித் துறை பெரும் சந்தையாக மாறி, உலகப் பெரு முதலாளிகளின் வேட்டைக் காடாக ஆகும். கட்டற்ற அன்னிய முதலீடு பாய்ந்து, உயர்கல்வித் துறை சேவை என்பதிலிருந்து மாறி, முழு வணிகமாகவும், விற்பனைக்குரிய சந்தைப் பொருளாகவும் மாறிவிடும்.

சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பும் வகையில், கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வெளிச்சம் பாய்வதை புதிய கல்விக் கொள்கை தடை செய்கிறது.

புதிய கல்விக் கொள்கையின் கேடுகளால் ஏற்படும் விளைவுகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உலை வைத்துவிடும் நிலைமையை எதிர்காலத்தில் உருவாக்கிவிடும் என்பதை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் முற்றாக நிராகரிக்க வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரான புதிய கல்விக் கொள்கையை பா.ஜ.க. அரசு திணிக்க முற்பட்டால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. எனவே மத்திய பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கையை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் தனது அறிக்கையில் 30-07-2020 தெரிவித்துள்ளார்.

Wednesday, July 29, 2020

பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்க! ஐந்தாயிரம் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிடுக! வைகோ வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களை கற்பிப்பதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு ஆணை எண் 177ன் படி, 11.11.2011 அன்று வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்டனர்.

பகுதிநேர ஆசிரியர்களான இவர்கள் வாரத்திற்கு மூன்று அரை நாட்கள் பணியாற்றுவார்கள் என்றும், தொகுப்பூதியம் மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை எண். 177ன் படி பகுதிநேர ஆசிரியர்கள் வாரத்திற்கு மூன்று அரைநாட்கள்  என மாதத்திற்கு 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதும். இந்த வகையில் ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம். அதற்கான ஊதியத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் ஒவ்வொரு பகுதிநேர ஆசிரியருக்கும் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால் இந்த அரசாணையை கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியே வந்தனர்.

அதன்பின்னர் இன்னொரு அரசாணை (186) பிறப்பிக்கப்பட்டு, பகுதிநேர ஆசிரியர்கள் இரு பள்ளிகளில் மட்டுமே பணியாற்ற முடியும் என்று விதிகள் திருத்தப்பட்டன. இந்த அரசாணையும் நடைமுறைக்கு வரவில்லை. ஏனெனில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் போதுமான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், காலியாக உள்ளதால், பகுதிநேர ஆசிரியர்கள், ஆசிரியர் இல்லாத வகுப்புகளை கவனிக்குமாறு கட்டாயப்படுத்தப்படும் அவலநிலை தொடர்கிறது. இதனால் பகுதிநேர ஆசிரியர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, சொற்ப ஊதியத்தில் நிரந்தர ஆசிரியர்களின் பணியை மேற்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இவ்வாறு பணிச்சுமையை தாங்கிக் கொண்டு மிக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 11 மாதங்களுக்கான ஊதியம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை.

2011 இல் பணியமர்த்தப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 16,549 பேரில் பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணமுற்றோர் போக தற்போது 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணியாற்றுகின்றனர்.

சொற்ப ஊதியத்திலேயே 9 ஆண்டுகள் பணிபுரிந்து 10 ஆவது ஆண்டில் பணி தொடரும் பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு ரூ.2000, 2017 ஆம் ஆண்டு ரூ.700 என மொத்தம் 9 ஆண்டுகளில் ரூ.2700 மட்டும் ஊதிய உயர்வு பெற்றுள்ளனர்.

தமிழக அரசில் பணிபுரியும் மற்ற தொகுப்பு ஊதியப் பணியாளர்களுக்கும், தின ஊதியப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் போனஸ் போன்ற பணப் பயன் எதுவும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.

வெறும் ரூ.7700 ஊதியம் பெற்றுக்கொண்டு கடந்த 9 ஆண்டு காலமாக நிரந்தர ஆசிரியர்கள் போன்று பணிச் சுமையை ஏற்றுக்கொண்டு கடமையாற்றும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் அதிகரித்து வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்யவும் தமிழக அரசு முன்வரவேண்டும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் அறிவித்தார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அமைச்சரின் வாக்குறுதியைக் காப்பாற்றாமல் தமிழக அரசு மௌனம் காக்கிறது.

தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள், உயர் கல்வி கற்பதற்கு கல்வித்துறையின் அனுமதி வேண்டி விண்ணப்பித்து காத்திருந்தனர். ஆனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களின் இக்கோரிக்கை குறித்து முடிவு எடுக்காததால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உயர் கல்வி கற்க முனைந்தனர். இவ்வாறு உயர் கல்வி பயின்ற ஐந்தாயிரம் ஆசிரியர்கள் விதிமுறைகளை மீறினார்கள் என்று நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. ஆசிரியர் சமூகத்தை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் விதத்தில் தொடக்கக் கல்வித்துறை பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

முதுநிலைப் பட்டதாரிகளான பகுதிநேர ஆசிரியர்களை வறுமையின் பிடியில் தள்ளுவது கொடுமையாகும். கடந்த 9 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் மே மாத ஊதியத்தை கணக்கிட்டு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்குவதுடன், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் தனது அறிக்கையில் 29-07-2020 தெரிவித்துள்ளார்.

Tuesday, July 28, 2020

கொரோனா பரவலால் மக்கள் அல்லல்படும் நிலையில் நில அளவைக் கட்டணங்களை உயர்த்துவதா? வைகோ கண்டனம்!

தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட அலகு, நில அளவை 2(2) பிரிவின் சார்பில், அரசாணை (நிலை) எண் 370 ஜூலை 21, 2020 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் - நில அளவை உட்பிரிவு, புல எல்லை அமைத்தல் மற்றும் மேல்முறையீடு, புலப்பட நகல் வழங்குதல் மற்றும் கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குதல் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் 40 மடங்கு உயர்த்தப்பட்டு உ ள்ளன.

புல எல்லைகளைச் சுட்டிக்காட்டும் பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.20 லிருந்து ரூ,200 ஆகவும் கோணமானியைப் பயன்படுத்தி பக்க எல்லைகளைச் சுட்டிக்காட்டுதலுக்கானக் கட்டணம் ரூ,30 லிருந்து ரூ.300 ஆகவும், பராமரிப்பு - நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு - ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.400 ஆகவும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் உட்பிரிவு / பாகப் பிரிவினைக்கு, முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயித்துச் சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம் புன்செய் நிலத்திற்கு ரூ.30 என்று இருந்ததை ரூ.1000 ஆகவும், நன்செய் நிலத்திற்கு ரூ.50 என்று இருந்ததை ரூ.2000 ஆகவும் உயர்த்தியுள்ளனர். மேல்முறையீட்டின் பேரில், மறு அளவீட்டுக்கான கட்டணம் புன்செய் நிலத்திற்கு ரூ.60 லிருந்து ரூ.2000 ஆகவும், நன்செய் நிலத்திற்கு ரூ.60லிருந்து ரூ.4000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நில அளவைக் குறியீட்டின் தொகை (நில அளவை முன்பணம்) செலவினங்களுக்கான கூடுதல் கட்டணம் 400 விழுக்காட்டிலிருந்து 800 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.                    

அதைப் போலவே உட்பிரிவுக் கட்டணம் - கிராமப்புறம் ரூ.40, நகராட்சி ரூ.50, மாநகராட்சி ரூ.60 என்று இருந்ததை முறையே ரூ.400, ரூ.500 மற்றும் ரூ.600 என்று தாறுமாறாக பன்மடங்கு உயர்த்திவிட்டனர்.

புல அளவீட்டுப் புத்தகப் பிரதி பக்கம் ஒன்றுக்கு ஏ-4 அளவு ரூ.20 என்பதை ரூ.50 ஆகவும், ஏ-3 அளவு ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வரைபடங்கள், வட்ட வரைபடங்கள், நகரிய வரைபடங்கள் மற்றும் கிராம வரைபடங்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்ககளும் உயர்த்தப்பட்டுள்ளன.

கொரோனா பொது முடக்கத்தால் மக்கள் துயரம் சூழ்ந்து வாழ்வாதரங்களைப் பறிகொடுத்துவிட்டு அச்சத்தாலும், எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையிலும் பரிதவித்துக்கொண்டு இருக்கின்ற நேரத்தில், தமிழக அரசு நில அளவைக் கட்டணங்களை 40 மடங்கு உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது.

ஏற்கனவே மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, கொந்தளித்துள்ள நிலையில், தமிழக அரசு நில அளவைக் கட்டணங்களை உயர்த்தி, தாங்கொணா சுமையை ஏற்றி இருக்கின்றது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் துயர் துடைக்க வேண்டிய அரசு, அவர்களை வேதனையில் தள்ளுவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, நில அளவைக் கட்டண உயர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் தனது அறிக்கையில் 28-07-2020 தெரிவித்துள்ளார்.

Monday, July 27, 2020

வைகோ தலைமையில் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம்!

விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஜூலை 27 ஆம் நாள் காலை 10 மணி அளவில், சென்னை, அண்ணா நகர் இல்லத்தில் முன்பு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில்,  கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சிமன்றக்குழுச் செயலாளரும், திருவள்ளூர் மாவட்டச் செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.சி.இராஜேந்திரன், தென்சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழககுமார், சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, துரை வையாபுரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Saturday, July 25, 2020

விவசாயி அணைக்கரை முத்து மரணம் குறித்து உயர்நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்! வைகோ அறிக்கை!

தென்காசி மாவட்டம் - கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து தம்முடைய நிலக்கடலை, காய்கறித் தோட்டத்தில் அனுமதியின்றி மின் வேலி அமைத்து இருந்ததாகக் கூறி, கடந்த 22 ஆம் தேதி நள்ளிரவு சிவசைலம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்களால் அவர் தாக்கப்பட்டதாகவும், தொடர்ந்து நள்ளிரவுக்குப் பின்னர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டு, கூடுதல் மருத்துவ உதவிக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கிடைக்கப் பெறும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில்தான் ஓரளவு விவசாயம் நடைபெறுகிறது. அதுவும் காட்டுப் பன்றி போன்ற விலங்குகள் வேளாண்மை நிலத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் துயரமாகும். இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை.

வனவிலங்குகளால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு பேரிடர் இழப்பாகக் கருதி நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று நான் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தபோதிலும், அது செவிடர் காதில் ஓதிய சங்காகவே உள்ளது.

மலையடிவார விவசாயிகளின் வேதனையைச் சொல்லி மாளாது. இத்தகையச் சூழ்நிலையில் விவசாயி அணைக்கரை முத்து தமது வேளாண் பயிர்களைப் பாதுகாக்க மின்வேலி அமைத்துள்ளது மாபாதகச் செயல் அல்ல. அதனால் எவருக்கும் உயிர் இழப்பு ஏற்படப்போவதும் இல்லை. அதைத் தவிர மலையடிவார விவசாயிகளுக்கு தங்கள் வேளாண்மையைப் பாதுகாக்க வேறு வழி இல்லை.

இதற்காக நள்ளிரவு 11 மணிக்கு வீடு புகுந்து, விவசாயி அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் அவசர அவசியம் வனத்துறைக்கு ஏன் வந்தது? தென்காசி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் தகவலைக் குடும்பத்தினருக்குத் தெரிவிக்காதது ஏன்?

சுமார் 75 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த விவசாயியை வனத்துறையினர் கடுமையாகத் தாக்கியதன் விளைவாகவே அவர் இறந்துவிட்டார் என அவரது குடும்பத்தினரும், அனைத்து அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் கடந்த மூன்று நாட்களாகக் குரல் எழுப்பி வருகின்றனர். கடையம் வாகைக்குளம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

வனத்துறையினர் தாக்கியதன் விளைவாகவே விவசாயி அணைக்கரை முத்து இறந்திருக்கிறார் என்பது சந்தர்ப்ப சாட்சியங்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, கைது செய்து, விசாரணை நடத்த வேண்டும்.

நிபுணத்துவம் பெற்ற மூன்று மருத்துவக் குழுவினரால் விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்வதுடன், அதனை ஒளிப்படம் எடுத்திட வேண்டும். பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்.

வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவரை அநியாயமாக இழந்துவிட்ட அக்குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் தனது அறிக்கையில் 25-07-2020 தெரிவித்துள்ளார்.

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020 திருத்த வரைவு அறிக்கையைத் திரும்பப் பெறுக! வைகோ வலியுறுத்தல்!

சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம்-1986 இன் கீழ், இந்தியாவில் செயல்படுத்தப்படும் 50 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீடுகள் கொண்ட பெருந்திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (Environmental Impact Assessment-EIA) கட்டாயமாகும்.

1994 ஜனவரி 27 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணைப்படி, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை சட்ட ரீதியாகக் கட்டாயமாகும்.

பா.ஜ.க. அரசு 2014 இல் பொறுப்பு ஏற்றதிலிருந்து செயல்படுத்த முனைந்துள்ள திட்டங்கள் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிப்பதாகவும், இயற்கை சமனிலையைச் சீர்குலைப்பதாகவும் இருப்பதால், சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வளர்ச்சியின் பெயரால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் பெரும் நிறுவனங்களுக்குத்தான் பயனளிக்கின்றன. பா.ஜ.க. அரசு தமது விருப்பம் போலத் திட்டங்களைச் செயல்படுத்த சுற்றுச் சூழல் சட்டமும், விதிமுறைகளும் தடையாக இருப்பதால் அவற்றை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், சுற்றுச் சூழல் சட்டத்தின் விதிமுறைகளை மாற்றுவதற்கு முனைந்துள்ளது.

சற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை (EIA) என்பது புதிதாகத் தொடங்கப்பட இருக்கும் தொழில்கள், திட்டங்கள், அவற்றின் கட்டமைப்புகள் ஆகியவற்றால் ஏற்படும் தாக்கங்களையும், விளைவுகளையும் முன்னறிவிக்கும் ஆய்வு அறிக்கையாகும்.

நடைமுறையில் உள்ள சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை தொடர்பான விதிமுறைகள்-2006 இல் சில திருத்தங்களைச் செய்து (எஸ்.ஓ. 1119(இ)2020) கடந்த மார்ச் 23 ஆம் தேதி ஒரு வரைவு அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு தயாரித்து, ஏப்ரல் 11, 2020 இல் அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம். மாநில அரசுகள் தங்களது கருத்துகளை அளிக்கலாம் என்று மத்திய சூற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கூறி இருந்தது.

கொரோனா தீநுண்மி பாதிப்பால் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மீதான மக்கள் கருத்தினைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை சட்டத் திருத்த விதிகள் வரைவு அறிவிக்கை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், 22 மொழிகளில் இதனை மொழிபெயர்த்து, 10 நாட்களுக்குள் மத்தியச் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட வேண்டும் என்றும், ஆகஸ்டு 11, 2020 வரையில் பொதுமக்கள் கருத்துகளைக் கேட்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் தற்போது 25 நாட்கள் கடந்தும், மத்திய அரசு மொழிபெயர்க்கப்பட்ட அறிவிக்கையை வெளியிடாமல் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்?

சுற்றுப்புறச் சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020, ஏற்கனவே உள்ள விதிமுறைகளில் மூன்று முக்கியமான திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறது.

முதலாவதாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கிறது.

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் திட்டங்கள் குறித்து பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், சுற்றுச் சூழல் குறித்த வழக்கு ஒன்றில் அளித்தத் தீர்ப்பில், திட்டம் தொடங்கிய பிறகு அனுமதி (ஞடிளவ குயஉவடி ஹயீயீசடிஎயட) வழங்க மத்திய அரசுக்கு அனுமதி இல்லை என்றும், அவ்வாறு அனுமதி வழங்குவது சுற்றுச் சூழல் பாதுகாப்பு அடிப்படை நியதிகளுக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். உச்சநீதிமன்றத்தை ஒரு பொருட்டாகக் கருதாத பா.ஜ.க. அரசு, மேற்கண்ட திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.

இரண்டாவதாக குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு அது செயல்படுத்தப்படும் பகுதிகளில் வாழும் மக்களிடம் கருத்துக் கேட்கத் தேவை இல்லை. மற்றத் திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக வழங்கப்பட்டு வரும் காலஅவகாசம் 30 நாட்களிலிருந்து, 20 நாட்களாகக் குறைக்கப்படும்.

இத்திருத்த விதியின் கீழ் எந்த வரையறையும் இல்லாததால், அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவதற்கான ஏற்பாடு இது என்பது தெரிகிறது.

மூன்றாவதாக நாட்டின் பாதுகாப்பு, சுரங்கம், கனிமவளத் திட்டங்கள் உள்ளிட்ட முகாமையான திட்டங்களுக்குச் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட மூன்று திருத்தங்கள் மூலம் மத்திய அரசு விரும்புகின்ற எந்தத் திட்டத்தையும், எந்த மாநிலங்களிலும் எத்தகைய அனுமதி இன்றியும் செயல்படுத்தலாம். இத்தகைய வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

தற்போது சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய 191 திட்டங்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அனமதி அளித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், நியூட்ரினோ ஆய்வகம், சேலம் - சென்னை எட்டுவழி பசுமைச் சாலை, இரசாயன முதலீட்டு மண்டலம் மற்றும் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவது ஆகியவற்றைச் செயல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முனைந்திருப்பதால், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020 திருத்த வரைவு அறிக்கையால் தமிழ்நாட்டிற்கு முற்றிலும் பேராபத்துதான் விளையும்.

எனவே தமிழக அரசு இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, தமிழ்நாட்டில் நாசகார திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 25-07-2020 தெரிவித்துள்ளார்.

Friday, July 24, 2020

இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய அதிசயம் கோவை ஞானி-வைகோ புகழாரம்!

இலக்கியத் திறன் ஆய்வாளர் கோவை ஞானி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 

கோவை சோமனூரில் பிறந்த பழனிச்சாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பயின்று, கோவையில் தமிழ் ஆசிரியராக 30 ஆண்டுகள் பணி ஆற்றி இருக்கின்றார்.

அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேல், இரு கண்களும் பழுதாகிப் பார்வை இழந்த நிலையில், துணைவியார் இந்திராணி என்கின்ற உடற்பயிற்சி ஆசிரியரையும் இழந்தபின்னர், சாதாரண மனிதர்களைப் போல் அவர் ஒதுங்கி உட்கார்ந்து விடவில்லை.    சற்றே நினைத்துப் பார்த்தால், அவரைப்போன்ற ஒருவர், உண்பதும் உறங்குவதுமாகப் பொழுதைக் கழிப்பதுதான் வாடிக்கை.

ஆனால் ஞானி, செங்கல்வராயன் என்கின்ற உதவியாளரை வைத்துக்கொண்டு, அவரைப் படிக்கச் சொல்லி நூல்கள் அனைத்தையும் நுட்பமாகக் கேட்பார். பின்னர், தம்முடைய திறன் ஆய்வை அவர் சொல்லிக்கொண்டே வருவார். உதவியாளர் அதனை எழுதிக்கொள்வார். 

இப்படி, 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்தார். நவீனத்துவம், பின் நவீனத்துவம் சார்ந்து  திறன் ஆய்வு நூல்களை எழுதினார்.  எழுத்துப் பணிக்காகத் தம் பெயரை கோவை ஞானி என ஆக்கிக் கொண்டார்.  வாழும் காலத்திலேயே முத்திரை பதித்தார். 

கடவுள் மறுப்பாளரான ஞானி, மார்க்சியப் பார்வையோடு ஆய்வுகள் செய்தார். தமிழையும், மார்க்சியத்தையும் இணைத்த அவருடைய கட்டுகள், புதிய கருத்து ஓட்டத்தை ஏற்படுத்தக்கூடியவை.   

கோவை வட்டாரத்தில் நடைபெறுகின்ற  எல்லா இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் சென்று, கூர்ந்து கேட்டுக்கொண்டு இருப்பார் பிறகு அதுகுறித்து, தம்முடைய திறன் ஆய்வினை அந்த மேடையில் கணீர் குரலில் எடுத்து உரைப்பார். 

கோவைக்கு வருகை தருகின்ற தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், ஞானியைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர். 

திறன் ஆய்வுக்கலையில் தன்னிகர் அற்ற கோவை ஞானியின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. 

அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,  என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 24-07-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, July 23, 2020

வேளாண் தொழிலை நசுக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெறுக! ஜூலை 27 கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் வெல்லட்டும்! வைகோ அறிக்கை!

கொரோனா தீநுண்மி ஏற்படுத்தி வரும் துயரத்தால் கடந்த 5 மாதங்களாக நாட்டு மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்து, வாழ்வாதாரங்களை முற்றிலும் பறிகொடுத்துவிட்டு, எதிர்காலம் இருள் அடைந்து கிடக்கின்ற வேதனையில் தவிக்கின்றனர்.

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு தனது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்படாமல், மாநிலங்களை அடக்கி ஆளும் எதேச்சாதிகாரத் தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தம்-2020 மற்றும் ஜூன் 3, 2020 இல் பிறப்பிக்கப்பட்ட மூன்று அவசரச் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஆகியவை விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கும் சட்டங்களாகும்.

நாடாளுமன்றத்தில் விவாதித்து, மாநிலங்களின் கருத்துகளையும் அறிந்து வேளாண் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவராமல், தானடித்த மூப்பாக மோடி அரசு செயல்படுவது, இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்து, மாநில உரிமைகளை நசுக்கும் ‘பேரரசு’ மனப்பான்மை ஆகும்.

வேளாண் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து, டெல்லியின் ஏகபோக ஒற்றை அதிகார ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் மேற்கண்ட நான்கு சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

ஏனெனில், விவசாயிகள் வேளாண் தொழிலுக்கு பெற்று வரும் இலவச மின்சார உரிமையை, மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 முற்றிலும் நிராகரிக்கிறது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 திருத்தச் சட்டம் தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களிலிருந்து நீக்கி உள்ளது. இதனால் சந்தையில் இவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமை பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். மேலும் பதுக்கல்காரர்களால் விலையேற்றம் மக்களைப் பாதிக்கும்.

“ஒரே நாடு; ஒரே வேளாண் சந்தை” என்பதை நிலைநாட்ட வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020 கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை இந்தியாவில் எங்கு கொண்டுபோய் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் என்று மத்திய அரசு கூறுவது ‘கேழ்வரகில் நெய் வடிகிறது’ என்ற முதுமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

நடைமுறைச் சாத்தியமற்ற, விவசாயிகளுக்குப் பாதகமான இச்சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். விவசாயிகளிடம் நேரடியாக அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை கொள்முதல் செய்வது மட்டுமின்றி, சந்தையை தங்கள் விருப்பப்படி பெருநிறுவனங்கள் ஆட்டிப் படைக்கும் நிலைதான் உருவாகும்.

தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக்குழுச் சட்டங்கள், வேளாண் கொள்முதலை இனிக் கட்டுப்படுத்த முடியாது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழித்துக்கட்டப்பட்டு, தனியார் கொள்முதல் நிலையங்கள் பெருகும். இது விவசாயிகளுக்குச் செய்யப்படும் பச்சைத் துரோகம் அல்லவா?

விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு), விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியில் பெருவர்த்தக நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கிறது.

இதனால் வேளாண் தொழிலை பெரு வணிகக் குழுமங்களிடம் பறிகொடுத்துவிட்டு, விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறி, சொந்த மண்ணிலேயே பஞ்சைப் பராரிகளாக அலையும் நிலையை உருவாக்கிவிடும். அந்த நிலைமை ஏற்பட வேண்டும் - வேளாண் நிலங்களைப் பறிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டமாகும்.

விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 27 ஆம் நாள், விவசாயிகள் நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி எதிர்ப்புத் தெரிவிப்பது என்றும், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து மாவட்டங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரகடனம் செய்திருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், அவசரச் சட்டங்களைத் திருப்பப் பெறக்கோரியும் ஜூலை 27 ஆம் நாள் நடைபெற உள்ள கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவை அளிக்கிறது. வேளாண் தொழிலைப் பாதுகாக்க கழகக் கண்மணிகளும், பொதுமக்களும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மாவட்டங்களில் நடைபெறும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 23-07-2020  தெரிவித்துள்ளார்.

Tuesday, July 21, 2020

தேசிய பஞ்சு ஆலைக் கழகத்தின் நூற்பு ஆலைகளை இயக்குக. தொழிலாளர்களுக்கு ஊதியம் தருக! அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, வைகோ கடிதம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், துணிநூல் மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ள மின்அஞ்சல் கடித விவரம்:-

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்தியாவில் நூற்பு ஆலைத் தொழிலில், முன்னணி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் தொடர்ந்து இயங்கி வருகின்றது. இலட்சக் கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். 

1965 ஆம் ஆண்டு, ஸ்டேன்ஸ், காளீஸ்வரா உள்ளிட்ட 15 ஆலைகள் மூடப்பட்டதால், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1967 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராகப் பொறுப்பு ஏற்றதும், தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மூடப்பட்ட ஆலைகளைத் திறப்பதற்கு, பல கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கும் இடைக்கால உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆயினும், ஆலைகள் திறக்கப்படவில்லை. 

எனவே, அந்த ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அண்ணாவின் மறைவிற்குப் பின் முதல்வராகப் பொறுப்பு ஏற்ற கலைஞர் கருணாநிதி அவர்கள், 1972 ஆம் ஆண்டில், மூடிக்கிடந்த பஞ்சு ஆலைகளை அரசே ஏற்று நடத்தச் சட்டம் இயற்றி, தமிழ்நாடு பஞ்சு ஆலைக் கழகம் அமைத்தார். ஆலைகள் திறக்கப்பட்டன. பலஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றார்கள். 

அதைத் தொடர்ந்து, இந்தியா முழுமையும் மூடப்பட்டுக் கிடந்த 100 க்கும் மேற்பட்ட பஞ்சு ஆலைகளை, இந்திய அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்றது. எனவே, 1974 ஆம் ஆண்டு, பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், தேசிய பஞ்சு ஆலைக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி, மூடிக்கிடந்த 124 பஞ்சு ஆலைகளை அரசே ஏற்று நடத்த வகை செய்தார். 

அதனால், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். 

அந்த ஆலைகள் தொடர்ந்து இலாபகரமாக இயங்கி வந்தாலும், அரசியல் பொருளாதார நிர்வாகச் சீர்கேடுகளால் நலிவுற்றன. 

இந்திய அளவில் தற்போது இயங்கி வருகின்ற 24 ஆலைகளுள் 7 தமிழகத்தில் உள்ளன. ஆனால் அவையும் தற்போது தள்ளாடிக் கொண்டு இருக்கின்றன. முழுமையான வேலைவாய்ப்பு இல்லை. கொரோனா முடக்கத்தால் முற்றிலும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. 

வேலை இழந்த தொழிலாளர்களுக்கு முழுச் சம்பளம் வழங்க வேண்டும் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார்கள். அதன்படி, 24.03.2020 முதல் 30.04.2020 வரை, 36 நாள்களுக்கு உண்டான முழுச்சம்பளம் வழங்கினார்கள். 

அதன்பிறகு, 01.05.2020 முதல் 17.05.2020 வரை உள்ள நாட்களுக்கு முழுச்சம்பளம் வழங்குவதாக ஒப்புக்கொண்டு, நாளது தேதி வரை வழங்கவில்லை. 

அதன்பிறகு, 50 விழுக்காடு சம்பளம் வழங்குவதாக தொழிலாளர்களிடம் பேசி ஒப்புக்கொண்டனர். அதையும் வழங்கவில்லை. 

இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், 19.06.2020 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 25.06.2020 க்குள் வழங்குவது என முடிவு செய்தார்கள். அதன்பிறகு, சம்பளத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. 

எனவே, மேற்கண்ட ஆலைகளை முழுஅளவில் இயங்கச் செய்து, தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஆவன செய்திடுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன். 

இவ்வாறு, வைகோ கேட்டுக் கொண்டுள்ளார் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 21-07-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, July 19, 2020

அயல்நாடுகளில் இறந்த தமிழர்கள் அமைச்சர் ஜெய்சங்கருக்கு, வைகோ கடிதம்!

தென்காசி மாவட்டம், கீழ்கடையம் புலவனூரைச் சேர்ந்த பொன்னுதுரை, மேற்கு ஆப்பிரிக்காவின் சியர்ரா லியோன் நாட்டில், மின்கோபுரங்கள் அமைக்கும் பணியில் வேலை பார்த்து வந்தார். பணிகள் சரிவர நடக்கவில்லை எனக்கூறி, நிறுவனத்திற்கும், பொன்னுதுரை மற்றும் அவரைச் சார்ந்த தொழிலாளர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்தன. இந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தி, அவரது மனைவி மெர்சி லில்லிக்குக் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கணவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வந்து உடல்கூறு சோதனை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இருந்தார். 

விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை, ஆண்டியாபுரம் ஜெகவீரன்பட்டியைச் சேர்ந்த கனகராஜ், மலேசியாவின் ஜொகூர் பாருவில் வேலை பார்த்து வந்தார். சிறுநீரகக் கோளாறால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். 

மேற்கண்ட இருவரது உடல்களையும் தமிழகத்திற்குக் கொண்டு வந்து சேர்க்கும்படி கோரி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, மின்அஞ்சல் கடிதம் எழுதி உள்ளார். அந்த நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கும் தகவல் தெரிவித்து உள்ளார் என‌ மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 19-07-2020  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் ஆலயங்களுக்கு எதிரே டயர்களை எரித்தது அக்கிரமச் செயல்! வைகோ கண்டனம்!

கோயம்புத்தூரில், டவுன்ஹால் ஐந்து முக்குப் பகுதியில் உள்ள மகாளியம்மன் கோவில், கோவை இரயில் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவில், கோட்டை மேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகில் உள்ள விநாயகர் கோவில், நல்லாம்பாளையம் செல்வவிநாயகர் கோவில் ஆகிய நான்கு கோவில்களின் வாசல்களிலும் நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களின் டயர்களை தீ வைத்து எரித்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து, அராஜகம் ஏற்படுத்துகின்ற அக்கிரமத்தில் ஈடுபட்டவர்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


கோவில் வளாகங்களில் கரும்புகை படிந்துள்ளது.


இந்தக் கயமைச் செயலில் ஈடுபட்ட வன்முறையாளர்களை தமிழக காவல்துறை கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மாதிரியான செயல்கள் அனைத்துத் தரப்பினராலும் கண்டிக்கத்தக்க இழி செயலாகும் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 19-07-2020 தெரிவித்துள்ளார்.

Saturday, July 18, 2020

உயர்கல்வித் துறையில் மத்திய பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரப் போக்கு! வைகோ கண்டனம்!


கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டன. இது தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு சில வழிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்கள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை. செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து பல்கலைக் கழகங்கள் தாமே முடிவெடுக்கலாம் என்று பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டுதல் வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், உயர்கல்வித் துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகவும், பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி, இறுதிக் காலத் தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்குள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பல்கலைக் கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே ஆகவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், “செப்டம்பர் மாதத்தில் பல்கலைக் கழகத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதைப் போலவே டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லி பல்கலைக் கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இறுதி ஆண்டுத் தேர்வுகளை இரத்து செய்யக் கோரியுள்ளார். மேலும், ஐ.ஐ.டி. உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே உள்மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கியுள்ள நிலையில், பிற பல்கலைக் கழகங்களும் அதையே பின்பற்றி ஏன் பட்டம் கொடுக்க முடியாது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகத் தேர்வுகளையும் இரத்து செய்வதாக டெல்லி மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பல்கலைக் கழக இறுதி செமஸ்டர் தேர்வை இரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். மாநில அரசின் இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று பல்கலைக் கழக வேந்தரும், மாநில ஆளுநருமான பகத்சிங் கோஷ்யாரி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே, பல்கலைக் கழக இறுதித் தேர்வுகள் நடத்தப்படாது என்பதிலிருந்து அரசு பின்வாங்காது என்று கூறி இருக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், “உயர்கல்வி என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே செப்டம்பர் இறுதிக்குள் பல்கலைக் கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை மாநில அரசுகள் நடத்தியே தீர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கும் சூழலில், தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கக்கூட மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது என்று மத்திய பா.ஜ.க. அரசு எதேச்சாதிகாரமாக நடந்துகொள்கிறது.

உயர்கல்வித் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்துள்ளது மட்டுமின்றி, இலட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய பா.ஜ.க. அரசின் போக்கு  வன்மையான கண்டனத்துக்கு உரியது.

மராட்டிய, டெல்லி மாநில அரசுகளைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் பல்கலைக் கழக இறுதியாண்டுத் தேர்வுகளை இரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். உள்மதிப்பீடுகளின் அடிப்படையில் பட்டங்களை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 18-7-2020 தெரிவித்துள்ளார்.

தமிழர் மறுமலர்ச்சி பேரவை நிர்வாகிகள் கூட்டம்!


வளைகுடா மற்றும் சிங்கபூரில் இயங்கி வரும் தமிழர் மறுமலர்ச்சி பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று 17-07-2020 இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகளான, செயலாளர்கள், அவைத் தலைவர், பொருளாளர் மற்றும் சில சிறப்பு அழைப்பாளர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள்.

கழக பொதுச் செயலாளர் அன்புத் தலைவர் வைகோ MP அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு இறுதியுரை நிகழ்த்தினார். துணைபொதுச் செயலாளர் மல்லை.சி..சத்யா, மகளிர் அணி செயலாளர் அக்கா மருத்துவர் ரொஹையா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
.
கழக பணிகள் கொரொனா காலத்திலும் தொய்வின்றி நடைபெறும்விதமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அணிகளின் அமைப்பாளர்கள் கூட்டம், மாவட்ட வாரியாக செயல்வீரர்கள் கூட்டம் என இணையவழி கூட்டங்களை நடத்தி வருகிறார் அன்பு தலைவர் வைகோ அவர்கள்.

இணையத்திற்கும் அங்கிகாரம் வழங்கும்விதமாக, கழக துணை நிலை அமைப்பான தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் நேற்றைய zoom செயலி மூலமான இணைய கூட்டத்தில் பஹ்ரைன், அமீரகம், சிங்கப்பூர், குவைத், கத்தார், ஓமான், சவூதி உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் அமைப்புகளின் செயலாளர், பொருளாளர், அவைத்தலைவர் உள்ளிட்ட 42 பேர் பங்கேற்றார்கள்.

தாங்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள அமைப்புகளின் பணிகளை செயலாளர்கள் விளக்கி உரையாற்றினார்கள். நிகழ்வில் நிறைவாக கழக பொதுச் செயலாளர் அவர்கள் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் பணிகளை பாராட்டி உரையாற்றியது அவர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்திருக்கிறது.

ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பாக ஓமானில் கழகம் செய்த பணிகளை எடுத்துரைத்தும், எதிர்கால செயல்திட்டம் பற்றியும், மதிமுக மாநாடு பற்றியும், தலைவர் ட்விட்டர் வலைதளத்தில் இணையவேண்டுமென்று கூறியும், ஒமான் சலாலாவில் பாதிக்கப்பட்ட 2 தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரைவில் நாடு திரும்புவார்கள் எனவும் தலைவரிடத்தில் கூறி சிற்றுரை நிகழ்த்தினேன். அன்புத் தலைவர் வைகோ அவர்கள், வெகுவாக பாராட்டி, கழக துணை நிலை அமைப்பின் பெயரை சரியாக கேட்டு தமிழர் மறுமலர்ச்சி பேரவை என எழுதி 2017 ல் துபாயில் வைத்து சொல்லிய பெயரை சரிபார்த்துக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் வளைகுடா அமைப்புகளைன் சார்பாக, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

1. கொரோனா நோயினால் வாழ்விழந்து தவிக்கும் ஏழை மக்களின் துயர் துடைக்க நாள்தோறும் வீதியிலிறங்கி தன்னலம் கருதாது நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைவர் வைகோ அவர்கள் குறிப்பிடுவது போல செஞ்சிலுவை சங்கமாக இயங்கி மாற்றாரும் வியக்கும் வண்ணம் இயக்கத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளுக்கு கழக கண்மணிகளுக்கு இந்த கூட்டம் பாராட்டு தெரிவிக்கிறது.

2. சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் , பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரட்டை கொலை வழக்கை சி.பி.சி..டி. விசாரித்து
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முருகன், முத்துராஜ் மற்றும் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் இந்த லாக்-அப் படுகொலை வழக்கை விசாரணை நடத்தி வரும் சி.பி.சி..டி. .ஜி. சங்கர் மற்றும் சி.பி.சி..டி. காவல்துறை அதிகாரிகளுக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவிப்பதுடன், ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

3. வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர வந்தே பாரத் விமான சேவை போதுமானதாக இல்லை கத்தார், சவூதி, அமீரகம் போன்ற வளைகுடா
நாடுகளில் சுமார் எட்டாயிரம் தமிழர்கள் வேலையிழந்து ஊர் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள் அவர்களை விமான கட்டணமின்றி தமிழகம் அழைத்து வர வேண்டும் என்று மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கோரிக்கை வைத்து உலக தமிழர்களின் குரலாக வீதிக்கு வந்து போராடியிருக்கிறார்கள் , இந்த விசயத்தில் மெத்தனம் காட்டாமல் தமிழக அரசும் இந்திய அரசும் உடனே துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார்கள். இவ்வாறு கைது
செய்யப்பட்டவர்கள்
சென்னை மாநகராட்சி ஆணையாளரிடம் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்துவிட்டு, சென்னை மாநகருக்குள் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், சொந்தப் பிணையில் இவர்களை விடுவிக்க நீதிமன்றங்கள் ஆணையிட்டன.
ஆனால், இவ்வாறு பிணை வழங்கப்பட்டவர்கள் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலிருந்து மீண்டும் சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
விசா விதிமுறை மீறலுக்காக போதுமான தண்டனை அனுபவித்துவிட்டார்கள் என்றும், இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் அவர்கள் வழக்கை முடித்து, அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதன் பின்னரும் இந்த வெளிநாட்டினரை கொரோனா பரவியுள்ள புழல் சிறையில் அடைத்து வைத்த எடப்பாடி அரசு நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறி உள்ளது என்று தலைவர் வைகோ கண்டனத்தை பதிவு செய்தார்கள் .
தொடர்ந்து தலைவர் வைகோ அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் தலைவர் வைகோ அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டவாறு வெளிநாட்டு பயணிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு
தமிழ்நாடு ஹஜ் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் . தலைவர் வைகோ அவர்களின் இந்த
மனிதநேய பணிக்கு இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவிக்கிறது.

5. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எவ்வித சார்பும் இன்றி சீரிய முறையில் நடத்துவதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.
தற்போது பா... அரசு தேர்தல் நடத்தும் விதிமுறை 2019 மற்றும் தேர்தல் நடத்தும் விதிமுறை 2020 ஆகியவற்றை சட்டதிருத்தமாக கொண்டுவந்துள்ளது.
இச்சட்டத் திருத்தத்தின்படி மூத்த குடிமக்களுக்கான வயது 80 லிருந்து, 65 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் அஞ்சல் வாக்குச் செலுத்துவதற்கு தகுதியானவர்கள் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை குடிமக்களுக்கு உறுதி தராது . அஞ்சல் வாக்குச் சீட்டுப் பதிவு செய்வதற்கு வயது வரம்பை 65 என்று குறைத்து இருப்பது பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். எனவே மத்திய அரசு தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டு, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திகிறது.

6.கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகாரர்கள் கொடும் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அண்மைக் காலமாக .தி.மு.. ஆட்சியில் தந்தை பெரியார் அவர்களின் உருவச் சிலைகள் தகர்க்கப்படுவதும், தாக்கப்படுவதும், சிதைக்கப்படுவதும், இழிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.
தமிழக அரசு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேவலமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்துக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை