தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட அலகு, நில அளவை 2(2) பிரிவின் சார்பில், அரசாணை (நிலை) எண் 370 ஜூலை 21, 2020 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இதன்படி நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் - நில அளவை உட்பிரிவு, புல எல்லை அமைத்தல் மற்றும் மேல்முறையீடு, புலப்பட நகல் வழங்குதல் மற்றும் கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குதல் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் 40 மடங்கு உயர்த்தப்பட்டு உ ள்ளன.
புல எல்லைகளைச் சுட்டிக்காட்டும் பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.20 லிருந்து ரூ,200 ஆகவும் கோணமானியைப் பயன்படுத்தி பக்க எல்லைகளைச் சுட்டிக்காட்டுதலுக்கானக் கட்டணம் ரூ,30 லிருந்து ரூ.300 ஆகவும், பராமரிப்பு - நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டிற்கு - ஒரு பக்க எல்லைக்கான கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.400 ஆகவும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் உட்பிரிவு / பாகப் பிரிவினைக்கு, முன்னர் நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை நிர்ணயித்துச் சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம் புன்செய் நிலத்திற்கு ரூ.30 என்று இருந்ததை ரூ.1000 ஆகவும், நன்செய் நிலத்திற்கு ரூ.50 என்று இருந்ததை ரூ.2000 ஆகவும் உயர்த்தியுள்ளனர். மேல்முறையீட்டின் பேரில், மறு அளவீட்டுக்கான கட்டணம் புன்செய் நிலத்திற்கு ரூ.60 லிருந்து ரூ.2000 ஆகவும், நன்செய் நிலத்திற்கு ரூ.60லிருந்து ரூ.4000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நில அளவைக் குறியீட்டின் தொகை (நில அளவை முன்பணம்) செலவினங்களுக்கான கூடுதல் கட்டணம் 400 விழுக்காட்டிலிருந்து 800 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதைப் போலவே உட்பிரிவுக் கட்டணம் - கிராமப்புறம் ரூ.40, நகராட்சி ரூ.50, மாநகராட்சி ரூ.60 என்று இருந்ததை முறையே ரூ.400, ரூ.500 மற்றும் ரூ.600 என்று தாறுமாறாக பன்மடங்கு உயர்த்திவிட்டனர்.
புல அளவீட்டுப் புத்தகப் பிரதி பக்கம் ஒன்றுக்கு ஏ-4 அளவு ரூ.20 என்பதை ரூ.50 ஆகவும், ஏ-3 அளவு ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வரைபடங்கள், வட்ட வரைபடங்கள், நகரிய வரைபடங்கள் மற்றும் கிராம வரைபடங்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்ககளும் உயர்த்தப்பட்டுள்ளன.
கொரோனா பொது முடக்கத்தால் மக்கள் துயரம் சூழ்ந்து வாழ்வாதரங்களைப் பறிகொடுத்துவிட்டு அச்சத்தாலும், எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையிலும் பரிதவித்துக்கொண்டு இருக்கின்ற நேரத்தில், தமிழக அரசு நில அளவைக் கட்டணங்களை 40 மடங்கு உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது.
ஏற்கனவே மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, கொந்தளித்துள்ள நிலையில், தமிழக அரசு நில அளவைக் கட்டணங்களை உயர்த்தி, தாங்கொணா சுமையை ஏற்றி இருக்கின்றது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் துயர் துடைக்க வேண்டிய அரசு, அவர்களை வேதனையில் தள்ளுவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, நில அளவைக் கட்டண உயர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்கள் தனது அறிக்கையில் 28-07-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment