உலகின் பல நாடுகளில், இலட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பிழைப்புக்காக, தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக, ஆண்டுக்கணக்கில் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில், கொரோனா முடக்கம் காரணமாக, பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து விட்டனர். விமானங்கள் பறக்கத் தடை விதித்ததால், நாடு திரும்பவும் முடியவில்லை. எனவே, அவர்கள் அடுத்த வேளை உணவுக்கும் வழி, இன்றி, அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்து நாள்களைக் கடத்தி வருகின்றனர். பல வேளை பட்டினிதான்.
நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் இல்லை. கொரோனா பாதிப்பு இருந்தால், அவர்களைத் தனிமைப்படுத்தவும் வசதிகள் இல்லை. மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது இல்லை. நெருக்கடியான அறைகளில் அடைந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் உயிர் அச்சத்துடன் நாள்களைக் கடத்தி வருகின்றனர். தற்கொலைகள் பெருகி இருக்கின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும், பத்துக்கும் மேற்பட்ட உடல்களைக் கொண்டு வருவதற்காக நான் முயற்சிகள் மேற்கொண்டேன். நான்கைந்து உடல்கள் வந்திருக்கின்றன. துபாயில் இயற்கை எய்திய, தென்காசி மாவட்டம் ரெட்டியபட்டி பிரதாப்குமார் , அபுதாபியில் இயற்கை எய்திய, பெரம்பலூர் மாவட்டம் பேரளி மதுரை வீரன் ஆகியோரது உடல்கள் நேற்று முன்தினம் வந்து சேர்ந்தன. இதனால், அயல்நாடுகளில் வசிப்பவர்களின் மனைவி,, பிள்ளைகள் மிகுந்த கலக்கத்துடன் இருக்கின்றனர்.
அயல்நாடுகளில் இருந்து கேரளத்திற்கு வருகின்ற வான் ஊர்திகளில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும் என, கேரள மாநில அரசு அறிவித்து விட்டது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வான் ஊர்திகளே வேண்டாம் என, தமிழ்நாடு அரசு தடைவிதித்து விட்டது. இதனால், அயல்நாடு வாழ் தமிழர்கள், தாங்க முடியாத வேதனை அடைந்துள்ளனர். மகப்பேறுக்காக வர வேண்டிய பெண்கள், பயணம் செய்ய வேண்டிய காலகட்டம் கடந்த நிலையில், உற்றார் உறவினர் துணை இன்றி, சிக்கிக் கொண்டுள்ளனர்.
எனவே, அயல்நாடு வாழ் தமிழர்களை மீட்டுக்கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் உடனே வான் ஊர்திகள் ஏற்பாடு செய்ய வேண்டும்;. பல ஆண்டுகளாகப் பாடுபட்டு உழைத்து, இந்தியாவுக்கு அயல்நாட்டுச் செலாவணி ஈட்டித் தந்த தொழிலாளர்களை, இந்த நெருக்கடி காலத்தில், கட்டணம் இன்றி அழைத்து வர வேண்டும்; தமிழ்நாட்டில் அவர்களுக்கான குவாரண்டைன் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்; அயல்நாடு வாழ் தமிழர்களின் நலன்காக்க, தமிழக அரசில் தனி அமைச்சம் உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (05.07.2020) காலை பத்து மணிக்கு, தமிழக மக்கள் அனைவரும், தங்கள் இல்ல வாயிலில் கோரிக்கை அட்டைகள் ஏந்தி, முழக்கங்களை எழுப்ப வேண்டும்; சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும்.
இந்தப் போராட்டத்தில், அமைப்பு, கட்சி, இயக்கம், சாதி, மத, வேறுபாடுகள் இன்றி, அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுக் கடமை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 04-06-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment