இலக்கியத் திறன் ஆய்வாளர் கோவை ஞானி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.
கோவை சோமனூரில் பிறந்த பழனிச்சாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பயின்று, கோவையில் தமிழ் ஆசிரியராக 30 ஆண்டுகள் பணி ஆற்றி இருக்கின்றார்.
அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேல், இரு கண்களும் பழுதாகிப் பார்வை இழந்த நிலையில், துணைவியார் இந்திராணி என்கின்ற உடற்பயிற்சி ஆசிரியரையும் இழந்தபின்னர், சாதாரண மனிதர்களைப் போல் அவர் ஒதுங்கி உட்கார்ந்து விடவில்லை. சற்றே நினைத்துப் பார்த்தால், அவரைப்போன்ற ஒருவர், உண்பதும் உறங்குவதுமாகப் பொழுதைக் கழிப்பதுதான் வாடிக்கை.
ஆனால் ஞானி, செங்கல்வராயன் என்கின்ற உதவியாளரை வைத்துக்கொண்டு, அவரைப் படிக்கச் சொல்லி நூல்கள் அனைத்தையும் நுட்பமாகக் கேட்பார். பின்னர், தம்முடைய திறன் ஆய்வை அவர் சொல்லிக்கொண்டே வருவார். உதவியாளர் அதனை எழுதிக்கொள்வார்.
இப்படி, 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்தார். நவீனத்துவம், பின் நவீனத்துவம் சார்ந்து திறன் ஆய்வு நூல்களை எழுதினார். எழுத்துப் பணிக்காகத் தம் பெயரை கோவை ஞானி என ஆக்கிக் கொண்டார். வாழும் காலத்திலேயே முத்திரை பதித்தார்.
கடவுள் மறுப்பாளரான ஞானி, மார்க்சியப் பார்வையோடு ஆய்வுகள் செய்தார். தமிழையும், மார்க்சியத்தையும் இணைத்த அவருடைய கட்டுகள், புதிய கருத்து ஓட்டத்தை ஏற்படுத்தக்கூடியவை.
கோவை வட்டாரத்தில் நடைபெறுகின்ற எல்லா இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் சென்று, கூர்ந்து கேட்டுக்கொண்டு இருப்பார் பிறகு அதுகுறித்து, தம்முடைய திறன் ஆய்வினை அந்த மேடையில் கணீர் குரலில் எடுத்து உரைப்பார்.
கோவைக்கு வருகை தருகின்ற தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகள், ஞானியைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர்.
திறன் ஆய்வுக்கலையில் தன்னிகர் அற்ற கோவை ஞானியின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 24-07-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment