Saturday, July 18, 2020

உயர்கல்வித் துறையில் மத்திய பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரப் போக்கு! வைகோ கண்டனம்!


கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டன. இது தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு சில வழிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துக்கொண்டு இருக்கும் நிலையில், உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்கள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை. செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து பல்கலைக் கழகங்கள் தாமே முடிவெடுக்கலாம் என்று பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டுதல் வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், உயர்கல்வித் துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகவும், பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி, இறுதிக் காலத் தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்குள் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பல்கலைக் கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தியே ஆகவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், “செப்டம்பர் மாதத்தில் பல்கலைக் கழகத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே கல்லூரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதைப் போலவே டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லி பல்கலைக் கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இறுதி ஆண்டுத் தேர்வுகளை இரத்து செய்யக் கோரியுள்ளார். மேலும், ஐ.ஐ.டி. உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே உள்மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கியுள்ள நிலையில், பிற பல்கலைக் கழகங்களும் அதையே பின்பற்றி ஏன் பட்டம் கொடுக்க முடியாது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகத் தேர்வுகளையும் இரத்து செய்வதாக டெல்லி மாநில அரசு அறிவித்து இருக்கிறது.
மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பல்கலைக் கழக இறுதி செமஸ்டர் தேர்வை இரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். மாநில அரசின் இந்த முடிவு மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று பல்கலைக் கழக வேந்தரும், மாநில ஆளுநருமான பகத்சிங் கோஷ்யாரி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே, பல்கலைக் கழக இறுதித் தேர்வுகள் நடத்தப்படாது என்பதிலிருந்து அரசு பின்வாங்காது என்று கூறி இருக்கிறார். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால், “உயர்கல்வி என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே செப்டம்பர் இறுதிக்குள் பல்கலைக் கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை மாநில அரசுகள் நடத்தியே தீர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கும் சூழலில், தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கக்கூட மாநில அரசுகளுக்கு உரிமை கிடையாது என்று மத்திய பா.ஜ.க. அரசு எதேச்சாதிகாரமாக நடந்துகொள்கிறது.

உயர்கல்வித் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்துள்ளது மட்டுமின்றி, இலட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய பா.ஜ.க. அரசின் போக்கு  வன்மையான கண்டனத்துக்கு உரியது.

மராட்டிய, டெல்லி மாநில அரசுகளைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் பல்கலைக் கழக இறுதியாண்டுத் தேர்வுகளை இரத்து செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். உள்மதிப்பீடுகளின் அடிப்படையில் பட்டங்களை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 18-7-2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment