திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில், கழிவுநீர் அகற்றுவதற்காக, நிலத்திற்கு உள்ளே குழாய்கள் அமைக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, ரூ 59 கோடி செலவில், ஒரு பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
கீழகல்கண்டார் கோட்டை, 63 ஆவது வட்டத்தில், கழிவு நீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கான தொட்டிகள் கட்டுகின்றார்கள்.
அதற்காக, சோழர்கள் காலத்தில் இருந்து விவசாயிகள் பயன்பெற்று வருகின்ற, அழகுநாச்சியார் கோவில் நிலத்துடன் 50 மீட்டர் இடைவெளியில் உள்ள, 1927 ஆம் ஆண்டு முதல் வருவாய் பதிவு ஏடுகளில் சர்வே எண் 81 இல் உள்ள, 3.5 ஏக்கர் களத்துமேடு முழுமையும், சட்டத்திற்குப் புறம்பான முறையில் மாநகராட்சி கைப்பற்றி இருக்கின்றது.
இந்த நத்தம் களத்துமேட்டில்தான், அழகுநாச்சியார் கோவில் ஆலயத் திருவிழா, ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுகின்றது. மக்கள் குவிந்து இருப்பர்.
அந்தப் பகுதி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, இந்தக் களத்துமேட்டுக்குத்தான் கொண்டு வந்து பதர் நீக்குகின்றனர். வாழைத்தார்களைத் தலையில் சுமந்து கொண்டு வந்து, இந்தக் களத்துமேட்டில்தான் வைத்து, அதன்பிறகு வண்டிகளில் ஏற்றி சந்தைக்குக் கொண்டு செல்கின்றனர்.
காவிரி உய்யகொண்டான் கால்வாய் பாசனத்தால், இந்தப் பகுதியில் 600 ஏக்கரில் விவசாயம் செழுமையாக நடைபெற்று வருகின்றது. ஆலத்தூர், எல்லக்குடி, மலைக்கோவில், திருவெறும்பூர், கூத்தைப்பார், வேங்கூர், நடராசபுரம், அரசங்குடி மேலும் கல்லணை வரை, சுமார் 1000 ஏக்கருக்கும் மேல் விவசாயப் பணிகள் நடைபெறுகின்றன.
இப்போது கட்டுகின்ற கழிவுநீர் மறுசுழற்சித் தொட்டியின் தேவைக்காக, ஆழ்துளைக் கிணறு அமைத்து நீர் உறிஞ்சுவதால், இந்தப் பகுதியில் உள்ள 2500 வீடுகளில் உள்ள உறைகிணறுகளில் உள்ள நீர் வறண்டு விடும்.
அவ்வாறு சுழற்சி செய்கையில் வெளியேறும் கழிவு நீர், 37000 கேஎல்டி அளவு நீரை, உய்யகொண்டான் கால்வாயில்தான் விடப்போகின்றார்கள். ஆனால், அதை மரம் வளர்க்க மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். நெல், வாழைக்கு பயன்படுத்தக்கூடாது என்று, சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.
உய்யகொண்டான் கால்வாய் தண்ணீர், திருவெறும்பூர், கூத்தைப்பார், அரசங்குடி, நடராசபுரம் கண்மாய்களையும் நிரப்புகின்றது. எனவே, விவசாயிகள் மட்டும் அல்லாமல், ஆடு, மாடு, மனிதர்களும் பயன்படுத்தும் நிலை உள்ளது.
எனவே, கழிவு நீரை சுழற்சி செய்து, பாசன வாய்க்காலில் விட்டால், சுற்றுச்சூழல் கெடும், விவசாயமும் கெடும்.
சுற்றுச்சூழல் சிவப்பு மண்டல வரிசையில், பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி கடிதம் வழங்கி உள்ளனர்.
1. அருகில் உள்ள வசிப்பு இடங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது. விவசாயிகள், எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது.
2. ஒருநாளில் சுழற்சி செய்யும் கழிவு நீர், (37000 கேஎல்டி) விவசாய நிலம் மற்றும் பாசன வாய்க்காலில் விடக்கூடாது.
கழிவு நீர் சேகரிப்பு, மறுசுழற்சி தொட்டிகள் கட்டுவதற்கு, மாநகராட்சி வசம் போதுமான நூற்றுக்கணக்கான ஏக்கர் புன்செய் நிலம், பயன்பாடு இல்லாமல் உள்ளது.
எனவே, கீழகல்கண்டார்கோட்டை அழகு நாச்சியார் அம்மன் கோவில் அருகில் உள்ள களத்துமேட்டில் தொட்டிகளைக் கட்டக்கூடாது என, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 2500 வீடுகளில் வசிக்கின்ற மக்களும் எதிர்க்கின்றனர். இப்பகுதியில் உள்ள, அனைத்து அரசியல் கட்சியினரும் எதிர்க்கின்றார்கள்.
பொதுமக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, 200 காவலர்களைக் கொண்டு வந்து நிறுத்தி, யாரும் அருகில் செல்ல முடியாத வகையில் தடுத்து, வேகவேகமாகக் கட்டுகின்றார்கள்.
மேலும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமலேயே கட்டுமானப் பணிகளைத் தொடங்கி விட்டார்கள். அதன்பிறகுதான், அவசரம் அவசரமாக அனுமதி பெற்று இருக்கின்றார்கள்.
எனவே, கழிவு நீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சித் தொட்டிகளை, மாநகராட்சி வசம் உள்ள,இடத்தில் கட்டுவதற்கு ஆவன செய்யுமாறு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 10-7-2020 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment