Tuesday, April 19, 2016

சிவந்தி ஆதித்தன் புகழ் காலத்தைக் கடந்து ஒளி வீசும்-வைகோ!

தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் அவர்களுடைய அருமைத் திருமகனும், பத்திரிக்கை உலகில் தமிழகம் அதுவரை கண்டிராத நாளிதழ் புரட்சியின் அடையாளமாக, தன் தந்தையார் தொடங்கிய தினத் தந்தி நாளிதழைப் பன்மடங்கு உயர்த்தி அதிகம் பேர் வாசிக்கும் நாளிதழ் என்ற பெருமையைச் சாதித்தவருமான ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு புகழ் அஞ்சலி நாளில் அப்பெருந்தகையின் உன்னதப் பண்புகள் என் இதயச் சுவர்களில் அழியாத கல்வெட்டாகப் பதிந்துள்ளன.

மனித நேய ஈர நெஞ்சுடன் வறுமையில் வாடியோருக்கும் துன்பத்தில் உழன்றோருக்கும் விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் அவர் செய்த உதவிகள் கணக்கில் அடங்காதவை.

பராக்கிரம பாண்டியன் கட்டிய தென்காசி விசுவநாதர் ஆலயத்தில் அவர் செய்த திருப்பணியால் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் ராஜகோபுரம் போன்றதுதான் அவரது புகழ் வாழ்க்கை.

கைப்பந்து ஆட்டத்தில் இந்தியா உலக அரங்கில் விருதுகள் பெற்றதற்கு முழுமுதல் காரணமான மூலவர் ஐயா சிவந்தி ஆதித்தனார் என்பதை நான் மிக நன்றாக அறிவேன்.

அகில உலக ஒலிம்பிக் கழகத்தில் இந்தியப் பிரதிநிதியாக ஐயா சிவந்தி ஆதித்தனார் இடம் பெற வேண்டும் என்று, அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களிடம் நான் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றாலும், தம் துணைவியாரோடு சென்னை அண்ணா நகரில் உள்ள என் இல்லத்திற்கு வந்து அவர் நன்றி சொன்னதை நான் என்றும் மறவேன்.

அவர் பிணிவாய்ப்பட்டு நினைவு இழந்து சிகிச்சை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அவரது உள்ளம் எத்தகைய வேதனைக்கு உள்ளானது என்பதை நான் அறிவேன்.

தமிழ்நாட்டின் புகழ்மிக்க குடும்பங்களுள் ஒன்றான ஐயா ஆதித்தனார் அவர்கள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறைச் சகோதரர்கள், தங்களுடைய பூர்வீகமான காயாமொழி கிராமத்தில் ஐயா சி பா ஆதித்தனார் அவர்களது திரு வுருவச் சிலையைத் திறந்து வைக்கும் பெரும்பேற்றினை எனக்கு வழங்கியமைக்கு எந்நாளும் நன்றி உடையவன்.

திருச்செந்தூர் முருகன் கோவில் தேரோட்டத்தின்போது, பட்டு வேட்டி பட்டுச் சட்டை இடுப்பில் பட்டுத் துண்டுடன் ஐயா சிவந்தி ஆதித்தனார் வடம் பிடிக்கும் காட்சி முருக பக்தர்கள் உள்ளத்தில் எந்நாளும் நிலைத்திருக்கும். அன்னாரது புகழ் காலத்தைக் கடந்து ஒளி வீசும் என தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment