Friday, February 10, 2017

தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற, வைகோ தொடுத்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், 2015 செப்டெம்பர் 9 அன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தாக்கல் செய்த மனு மீது, தொடர்ந்து பல அமர்வுகளில் விசாரணை நடைபெற்றது.

நிறைவாக, 2017 ஜனவரி 10 ஆம் தேதியன்று நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில், 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவையும் அமைத்தது. தற்போது அந்தப் பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றன.

அதுபோலவே, தமிழ்நாட்டின் இதர 19 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி, வைகோ வேண்டுகோள் விடுத்தபோது, அதற்குத் தனியாக ரிட் மனு தாக்கல் செய்யுமாறு, நீதியரசர் செல்வம் அறிவித்தார். அதன்படி, வைகோ தாக்கல் செய்த ரிட் மனு, இன்று (10.2.2017) நீதியரசர் செல்வம், நீதியரசர் கலையரசன் அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

19 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்ப நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

நீதியரசர் செல்வம் அவர்கள் வைகோவைப் பார்த்து, ‘நீங்களே கலிங்கப்பட்டியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகின்ற செய்தியைப் பார்த்தோம். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்’ என்றார்.

அதற்கு வைகோ,

‘எங்கள் கிராமத்திற்கு உள்ளே அகற்றி விட்டோம். ஆனால் கலிங்கப்பட்டி பொதுப்பணித் துறை பெரிய கண்மாயில் ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் இருக்கின்றன. குடி மராமத்து போல ஊர் மக்களாகிய நாங்களே எங்கள் செலவில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகின்ற வேலையைச் செய்வதற்கு அனுமதி தேவை. அப்படி வெட்டப்படுகின்ற சீமைக் கருவேல மரங்களை பொதுப்பணித்துறையினரே ஏலம் விட்டு, அதில் கிடைக்கின்ற வருவாயில் உரிய பங்கை ஊராட்சி மன்றத்தை வழங்கிவிட்டு, மீத வருவாயை பொதுப்பணித்துறையே எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க வேண்டுகிறேன்’

என்று வைகோ கூறியவுடன்,

நீதியரசர் செல்வம் அவர்கள், ‘அதற்கு நீங்கள் தனியாக அதற்கு ரிட் மனு தாக்கல் செய்யுங்கள்; ஆணை பிறப்பிக்கிறோம்’ என்றார்.

அதன்பின், இந்தப் பணியில் நீங்கள் உங்கள் கட்சித் தோழர்களை முழுமையாகப் பயன்படுத்தலாமே? என்று நீதிபதி வினவினார்.

அதற்கு வைகோ,

நான் உரிய ஏற்பாட்டைச் செய்து வருகிறேன். சீமைக் கருவேல மரங்களால் ஏற்படுகின்ற ஆபத்தையும், அதை வேருடன் அகற்ற வேண்டிய கட்டாயத்தையும், மீண்டும் முளைவிடாமல் தடுக்க வேண்டிய கடமையையும் விளக்கி, அரசியல் கட்சி வண்ணம் இல்லாமல், துண்டு அறிக்கைகளை அச்சிட்டு, ஒவ்வொரு கல்லூரி பள்ளி வாயிலிலும் மாணவர்களிடம் வ்ழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில், பின்னர் கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களும், இளைஞர்களும் அவரவர் ஊர்களில், சீமைக் கருவேல மரங்களை அகற்ற முன்வரவும், அரசாங்கத்துடன் இணைந்து பொதுமக்கள், போர்க்கால அடிப்படையில் இந்த வேலையைத் தீவிரப்படுத்தவும் முயற்சித்து வருகிறேன். நாளைய தினம் இரண்டு கிராமங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகின்ற பணியில், மக்களையும் மாணவர்களையும் திரட்டிக் கொண்டு நானே களம் இறங்குகிறேன்.

தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாகத்தான் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்; அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினார்.

நீதியரசர் செல்வம் அவர்கள், ‘நீங்களே ஒரு தொலைக்காட்சியைத் தேர்ந்து எடுத்து ரிட் மனு தாக்கல் செய்யுங்கள்; நாங்கள் ஆணை பிறப்பிக்கின்றோம்’ என்று கூறினார்.

தொடர்ந்து வைகோ தமது வாதத்தில்,

‘வறட்சியால் தற்போது விவசாயிகள் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றார்கள். அரசாங்கமே அவர்களது நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றினால், செலவுத் தொகையும் அபராதத் தொகையும் கட்ட நேரிடுமோ என்று விவசாயிகள் கவலைப்படுகின்றார்கள். எனவே, அபராதத் தொகை வசூலிக்கக் கூடாது என ஆணை பிறப்பித்தால் உதவியாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு நீதிபதி செல்வம் அவர்கள், ‘கவலைப்படாதீர்கள்; அதற்கும் ஆவன செய்வோம்’ என்று கூறி, தமிழ்நாட்டில் உள்ள வனத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வைகோ மேற்கொண்டுள்ள முயற்சிக்கு வெற்றி கிடைத்து விட்டதாக, பல வழக்கறிஞர்கள் வைகோவின் கையைப் பற்றிக்கொண்டு பாராட்டுத் தெரிவித்தார்கள்.

மேற்க்கண்டவாறு மதிமுக தலைமை கழகமான தாயகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment