Monday, February 6, 2017

அறிஞர் பெருந்தகை மணவை முஸ்தபா, தமிழுக்குத் தொண்டு ஆற்றிய தனி ஒருவர்! வைகோ புகழ் அஞ்சலி!

அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி ஆகிய துறைகளில் பல்லாயிரக்கணக்கான புதிய தமிழ்ச் சொற்களை ஆக்கித் தந்து, தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் தன்னிகர் இல்லாத் தொண்டு ஆற்றிய அறிஞர் பெருந்தகை மணவை முஸ்தபா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

நீண்ட காலம் அவர் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த யுனெஸ்கோ கூரியர் இதழ்களைப் படித்து வியந்து இருக்கின்றேன். தொலைக்காட்சிகள் இல்லாத அந்த நாள்களில், உலகின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் புதிய செய்திகளைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த அந்த இதழை விரும்பி படித்து இருக்கின்றேன். அதன் ஒவ்வொரு பதிப்பிலும், நூற்றுக்கணக்கான புதிய தமிழ்ச்சொற்களை ஆக்கி அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

தரமான அந்த இதழ் நிறுத்தப்பட்ட பிறகு, கலைச்சொற்கள் ஆக்கும் பணியில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். தனி ஒரு மனிதனாக எட்டு கலைச் சொற்கள் அகராதிகளை வெளியிட்டுச் சாதனை படைத்தார்.

‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ என்ற இவரது நூல் தமிழக அரசின் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல் விருதை வென்றது.

இவரது அரும்பணிகளைப் பாராட்டித் தமிழக அரசு கலைமாமணி விருது அளித்துச் சிறப்பித்தது.

மணவை முஸ்தபா அவர்களுடைய இல்லத்திற்கு மூன்று முறை சென்று சந்தித்து உரையாடி மகிழ்ந்து இருக்கின்றேன்.

அன்னாரது மறைவு எனக்கு மட்டும் அல்ல; தமிழ் கூறும் நல்லுலகிற்கே பேரிழப்பு.

அவரது மறைவால் துயருறும் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment