Saturday, February 11, 2017

வீரணார்புரம் பிள்ளையார்குளம் கிராமங்களில் சீமை கருவேல மரங்களை அகற்றிய வைகோ!

2017 பிப்ரவரி 11 ஆம் நாளான இன்று கலிங்கப்பட்டிக்கு மேற்கே உள்ள வீரணாபுரம் கிராமத்தில் காலை 9 மணி அளவில், பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 100 பேர், கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 பேர் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். 

ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் மரம் அறுக்கும் கருவிகள், அரிவாள், துரட்டைக் கம்பு ஆகிய உபகரணங்களுடன் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

அதே போன்று பிள்ளையார்குளம் கிராமத்தில் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் வை.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் மாணவர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர் ஜே.சி.பி. இயந்திரம் மரங்களை அகற்றுவதற்குத் தேவையான மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் தேவையான உபகரணங்களுடன் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேகமாக நடைபெற்றது.

தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகையாளர்களிடம் வைகோ தெரிவித்ததாவது,

“கடந்த இரண்டு ஆண்டுகளாக சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரிட் மனு தாக்கல் செய்து, முழு மூச்சாக இந்தப் பணியில் நான் ஈடுபட்டிருக்கிறேன். நீதிமன்ற வரலாற்றில் தமிழக மக்களின் எதிர்கால நலனைக் காக்கும் உன்னதமான ஆணைகளை நீதியரசர் செல்வம் அவர்களும், நீதியரசர் கலையரசன் அவர்களும் பிறப்பித்தனர்.

பிப்ரவரி 10 ஆம் தேதியன்று நீதியரசர் செல்வம் அவர்கள் வைகோ அவர்களிடம் ‘உங்கள் கட்சித் தொண்டர்களை முழுமையாக ஈடுபடுத்துங்கள்’ என்று கூறினார். ஆனால் இன்றைக்கு நாங்கள் வந்த எந்த வாகனத்திலும் எங்கள் கட்சிக் கொடிகளைக் கட்டவில்லை. அரசியல் கட்சி, ஜாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழ்நாட்டுக்குப் பேராபத்தாக எங்கும் பற்றிப் பரவிவிட்ட சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் வேரோடு அழித்தால்தான் எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்ற முடியும். சீமைக் கருவேல மரத்தின் வேர்கள் மிக ஆழமாகச் செல்லும். நிலத்தடி நீரை முற்றாக உறிஞ்சிக் கொள்ளும். விவசாயப் பயிர்கள் காய்ந்து கருகினாலும், தென்னை மரங்களே பட்டுப் போனாலும் சீமைக் கருவேல மரங்கள் பச்சைப் பசேல் என்று இருப்பதற்கு இதுதான் காரணமாகும்.

பூமிக்கு மேல் உள்ள மரங்களை வெட்டினாலும் பயன் இல்லை. பூமியின் அடியில் உள்ள வேர்களை முழுமையாகத் தோண்டி எடுத்துவிட வேண்டும். அதற்கு ஜே.சி.பி. இயந்திரங்களைத்தான் பயன்படுத்த முடியும். அரசாங்கம் முழுமையாக இந்த வேலையில் ஈடுபட வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கேற்ப அரசு அதிகாரிகள் எவ்வளவுதான் முயன்றாலும், பொதுமக்களும், மாணவர்களும் முழுமையாக ஈடுபட்டாலன்றி சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க முடியாது.

ஆங்காங்கு கோயில் திருவிழாக்களுக்கு ஊர் கூடி நிதி பிரித்து விழா நடத்துவது போல், அந்தந்த ஊர்களில் உள்ள பொதுமக்களே ஒன்று சேர்ந்து ஜே.சி.பி. இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்தி இந்த வேலையைச் செய்ய வேண்டும்.

பொதுநல நோக்கோடு ஜே.சி.பி. இயந்திர உரிமையாளர்கள் குறைந்த கட்டணத்திலோ அல்லது கட்டணம் இன்றியோ உதவ முன்வரவேண்டும். வேருடன் அழித்தாலும்கூட, சீமைக் கருவேலக் காய்களைத் தின்கின்ற ஆடுகள் வெளியேற்றும் கழிவுகளிலிருந்து மழைக்காலத்தில் விதைகள் மீண்டும் சீமைக் கருவேலச் செடிகளாக முளைக்கத் தொடங்கும்.

‘இளைதாக முள்மரம்கொல்க’ என்ற திருவள்ளுவர் கருத்துக்கு ஏற்ப பொதுமக்களும், மாணவர்களும் கண்ணுக்குத் தென்படுகிற இடங்களில் எல்லாம் சீமைக் கருவேலச் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாம்.

தமிழமெங்கும் இருக்கின்ற கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் அவரவர்கள் சொந்த ஊர்களிலும், வசிக்கும் இடங்களிலும் விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றும் சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட வேண்டும்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் சட்டபூர்வமான உரிமைகளை மறுத்து கேடு செய்வதாலும், பருவ மழை பொய்த்துப் போவதாலும், தமிழ்நாடு வறண்ட பூமியாக மாறிக்கொண்டு இருக்கிறது. சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீரையும் அடியோடு நாம் இழக்கும் சூழலில் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக பாலைவனமாகவே மாறிவிடும் என்ற கவலை என் மனதை வாட்டுகிறது. நான் பிறந்த பொன்னாடாகிய தமிழ்நாடு எதிர்காலத்தில் ஒரு எத்தியோபியாவாக மாறிவிடக்கூடாதே! வருங்கல சந்ததிகள் வாழ்வு நாசமாகிவிடக்கூடாதே! என்ற மனவேதனையுடன் மாணவர் சமுதாயத்தையும், இளைஞர்களையும் இருகரம்கூப்பி வணங்கி வேண்டுகிறேன்.

தமிழகத்தின் நதிநீர்ப் பிரச்சினைகளிலும், மீத்தேன் எரிவாயு, ஷேல் எரிவாயு ஆபத்துக்களிலிருந்து தமிழகத்தை மீட்கும் பணியிலும், தேனி மாவட்டத்தையும், முல்லைப் பெரியாறு அணையையும் அழிக்கக் கூடிய நியூட்ரினோ திட்டத்தை தடுக்கும் பணியிலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையால் சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்துக்கும் ஏற்பட்டுவிட்ட அபாயத்தைத் தடுக்கும் போராட்டத்திலும், மதுவின் கொடுமையிலிருந்து தமிழகத்தை மீட்கும் பணியிலும் எந்தவிதமான அரசியல் இலாப நோக்கமும் இன்றி தமிழ்நாட்டின் ஊழியக்காரனாக வேலை செய்கிறேன். அடுத்த தலைமுறைகளைப் பற்றிய கவலையால்தான் நான் போராடுகிறேன்.

மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகின்ற பணியில் முழுமையாக ஈடுபடுமாறு வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment