Tuesday, July 18, 2017

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த கல்லூரி மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம்-காவிரிப் படுகையில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி!வைகோ கண்டனம்!

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி படுகையில் வேளாண்மைத் தொழிலை முற்றிலுமாக அழித்துவிடும் நோக்கத்தில் மத்திய அரசின் தொடர் செயல்பாடுகள் இருக்கின்றன. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து காவிரி பாசனப் பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டம் -நெடுவாசலிலும் மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக தொடர்ந்துகொண்டு இருக்கின்றது.

காவிரி படுகை மாவட்டங்களில் இந்திய அ ரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம், ஓ.என்.ஜி.சி. பல ஆண்டுகளாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து இயற்கை எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. மூலமாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் தகவல்கள் உறுதியான பின்னர்தான் கதிராமங்கலத்தில் மக்கள் போராட்டம் தீவிரமானது. தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புகளை துச்சமாகக் கருதும் மத்திய அரசு, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையின் மதிப்பீட்டு நிபுணர்குழு மூலம், ஓ.என்.ஜி.சி. 110 இடங்களில் எண்ணெய் துரப்பணக் கிணறுகளைத் தோண்டுவதற்கு தேவையான முன்மொழிவுகள் அடங்கிய பரிந்துரைகளை அளித்திருக்கிறது. மேலும், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தவும், சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச் சூழல் மேலாண்மைத் திட்ட அறிக்கைகள் தயாரிக்கவும் வழிகாட்டுதல் அளித்துள்ளது.

நரிமணம், குத்தாலம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இயற்கை எரிவாயு மத்திய சேமிப்புக் கிடங்கு போல், நாகை மாவட்டம் -சீர்காழி அருகில் மாதானத்திலும் அமைப்பதற்கு 20 ஏக்கர் நிலத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கண்டறிந்துள்ளது. இங்கு மட்டுமே 20 எண்ணெய் துரப்பணக் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன. மேலும், காவிரி படுகையில் உள்ள ஆதிச்சபுரம், கீழ்வேளூர், திருவாரூர், மாத்தூர், நன்னிலம், நரிமணம், அடியக்கமங்கலம், வடக்குகோவில் களப்பால், குத்தாலம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சிரங்குடி, பெரியபட்டினம், பெருங்குளம், பாக் ஜலசந்தியின் மேல் மட்டப் பகுதிகளில் எண்ணெய் துரப்பணக் கிணறுகள் தோண்ட திட்டமிட்டு இருக்கின்றன. இதற்காக ரூ.194 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டப் பணிகள் ஒவ்வொன்றிலும் நேரடியாக 70 அல்லது 80 பேருக்கும், ஒப்பந்தப் பணியாளர்கள் 150 பேருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கவும் ஓ.என்.ஜி.சி. திட்டமிட்டு இருக்கிறது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம், மதிப்பீட்டு நிபுணர் குழுவின் அனுமதிக்காக தாக்கல் செய்துள்ள அறிக்கையில், எண்ணெய் துரப்பணக் கிணறுகள் அமையும் இடங்களில் தேசிய பூங்கா, வனவிலங்குகள் சரணாலயம், புலிகள் மற்றும் யானைக் காப்பகங்கள் போன்றவை பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் எங்கும் இல்லை. பத்து கிலோ மீட்டர் தொலைவில்தான் கொடுவையூர் ஆறு, ஓடம் போக்கியாறு, வேலப்பர் ஆறு, உப்பனாறு, சித்தாறு மற்றும் வைகை ஆறுகள் இருக்கின்றன. ஒரு எண்ணெய் கிணறுக்கு 25 கனஅடி தண்ணீர் ஒரு நாளைக்குத் தேவைப்படும். அவை அருகில் உள்ள நீராதாரங்களிலிருந்து பெறப்படும். மேலும் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படும் இடங்களில் உள்ள மக்களின் சமூக நல்வாழ்வுத் திட்டங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 2.5 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களுக்கான ஆய்வுப் பணிகளைத்தான் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இத்திட்டங்களை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி வெடித்து வரும் நிலையில், மத்திய அரசு மேலும் மேலும் பல வகைகளில் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டி வருவது கண்டனத்துக்கு உரியது.

தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு போன்ற திட்டங்களுக்கு உறுதியான எதிர்ப்பை தெரிவிக்காமல், மத்திய அரசின் மிரட்டலுக்கு தமிழக அரசு அடிபணிந்து போய்க்கொண்டு இருக்கிறது. மோடி அரசின் விருப்பங்களை நிறைவேற்ற மக்கள் எழுச்சி தடையாக இருப்பதால், அடக்குமுறை தர்பாரை கட்டவிழ்த்துவிட்டு, மக்கள் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. அதனால்தான், கதிராமங்கலம் மக்கள் மீது காவல்துறையை ஏவியது.

நெடுவாசல், கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பரப்புரை செய்து, அறப்போராட்டங்களில் பங்கேற்ற சேலம் கல்லூரி மாணவி வளர்மதியை கைது செய்து, சிறையில் அடைத்து, நக்சல்பாரி முத்திரை குத்தி குண்டர் சட்டத்தையும் ஏவி இருக்கிறது. அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோரைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது ஆகும்.

இத்தகைய ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும் தமிழக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், கல்லூரி மாணவி வளர்மதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் துரப்பணக் கிணறுகள் தோண்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் 18-07-2017 இன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment