Thursday, July 27, 2017

விழிகளில் நிறைந்த வீரசந்தனமே! வைகோ கடிதம்!

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும், இரத்தச் சுழற்சியோடும் கலந்து விட்ட கண்ணின் மணிகளே!

கோவை மாநகர், புறநகர் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, நெல்லையில் இருந்து புறப்பட்டுச் சாலை வழியாகப் பயணித்து மாநகருக்குள் நுழைந்தபோதுதான், அந்தச் செய்தி அலைபேசியில் எனக்கு வந்தது. பாவேந்தன் பேசினார்: ஓவியர் வீர.சந்தனம் மறைந்தார் என்றார். என் இதயம் தாங்க இயலாத துக்கத்தில், துயரத்தில் உறைந்தது. 34 ஆண்டுகளாக அவருடன் நான் கொண்ட நட்பு, ஆழமானது, விண்ணைப்போல் விரிந்து பரந்தது. 

ஜூலை 14 ஆம் தேதி கோவை மாநகர் புறநகர் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. சங்கொலி ஐந்தாண்டுச் சந்தா வழங்குவதில் இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையில் சகாக்களின் உதவியுடன், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆருயிர் இளவல் ஆர்.ஆர்.மோகன்குமார் அவர்கள், அம்மாவட்டத்திற்கு முதல் இடம் பெற்றுத் தந்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஆருயிர் சகோதரர் குகன்மில் செந்தில் அவர்களும் நிறைவான பங்கு அளித்தார். 

வீர சந்தனத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினோம். அன்று நள்ளிரவிலேயே சென்னை வந்து சேர்ந்தேன். 

சுதந்திரத் தமிழ் ஈழ உயிர் ஓவியங்களை, காலத்தால் அழிக்க முடியாத படைப்புகள் ஆக்கிய நிகர் அற்ற ஓவியனை, மரணம் எனும் காலன் ஈவு இரக்கம் இன்றிக் கொத்திக் கொண்டு போய்விட்டானே? தஞ்சைத் தரணியில் குடந்தை அருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் ஊரில் ஒப்பிலியப்பன் கோவில் அருகில், வீரமுத்து-பொன்னம்மாளின் மகனாகப் பிறந்த வீர.சந்தானம், (பின்னாளில் சந்தனம் எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டார்), குடந்தை ஓவியக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனாக இருந்தபோது ஆசிரியர்களின் பாராட்டைப் பெறும் வல்லமை அவரது விரல்களில் நடனமாடும் தூரிகையால் கிடைத்தது. சென்னை ஓவியக் கல்லூரியில் உயர்நிலை பட்டப்படிப்பை முடித்து, மத்திய அரசினுடைய ஜவுளித்துறை அமைச்சகத்தில் துணை ஆணையராகப் பொறுப்பு ஏற்று, வட கிழக்கு மாநிலங்களிலும், மத்திய இந்தியாவிலும் பல நகரங்களில் பணிபுரிந்த காலத்திலும் அவரது சுவாசம் தமிழ் ஈழ மூச்சாகவே திகழ்ந்தது. அறிவாசான் தந்தை பெரியாரின் தன்மான உணர்வு அவர் குருதியோடு கலந்தது. 

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தோழர்களாக நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். 1976 மே 5 இல், ஈழத்தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வார்ப்பித்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடக்க நாள் முதல் விடுதலைப்புலிகளைத் தன் இதயத்தில் ஓவியமாக வரைந்து கொண்டவர் வீர.சந்தனம். 

பொது உடைமைச் சிந்தனையைத் தன் வாழ்க்கையில் செயல்படுத்தினார். சாந்தி எனும் எழில் நங்கையைக் காதலித்து இல்லறம் ஏற்றார். அவர்களுக்கு இரண்டு புதல்வியர். சங்கீதா அவரது கணவர் சுகுமார், அவர்களின் பிள்ளைகள் கவின் பரிதி சுடர்முகில்; சந்தனத்தின் இளைய புதல்வி சாரிகா, அவரது கணவர் அருண் பிரின்ஸ், அவர்களின் பிள்ளைகள் துளசி, ஏகன்; மற்றும் ஆதரவு அற்றுக் குடிசைகளில் வாழ்ந்த செல்லா எனும் சிறுமியையும், சின்னப்பொண்ணு என்ற சிறுமியையும் தனது வளர்ப்பு மகள்களாகவே நேசித்து வளர்த்து வாழ வைத்தார். 

ஓவியத்திற்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். ஒரு சந்தர்ப்பத்தில் அவரது ஓவியத்திற்காக 50000 பண முடிப்பு வழங்கப்பட்டதை, வளர்ப்பு மகள் செல்லாவின் வைத்தியச் செலவுக்காக, அப்படியே மருத்துவ மனைக்குத் தந்தார். தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களோடும், விடுதலைப் புலிகளின் தளபதிகளோடும் உயிர்த் தோழனாகப் பழகினார். புலிகளின் குரலாகத் தமிழகத்தில் திகழ்ந்த பேபி சுப்பிரமணியத்திற்கு உற்ற சகோதரனாகவே வாழ்ந்தார். தான் பணி ஆற்றிய துறையில் இயக்குநர் பொறுப்புக்கு வாய்ப்பு இருந்தும், நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே விருப்ப ஓய்வு பெற்றார். 

பிகாசோவின் ஓவியங்களைப் போல வீர. சந்தனத்தின் ஓவியங்களும் வருங் காலத்தில் அழியாத புகழைப் பெறும். பழந்தமிழர் ஆலயங்களின் சுவர்களில் தீட்டப்பட்ட ஓவியங்களை, குறிப்பாக பட்டீசுவரம் ஆலயத்தில், தஞ்சைப் பெரு உடையார் ஆலயத்தில் காணப்படும் ஓவியங்களை உள்வாங்கிக் கொண்டு, தற்கால நவீன ஓவியங்களின் நுணுக்கத்தையும் இணைத்து, தமிழர் பண்பாட்டுத் தளத்தின் உரைகற்களாக விளங்கும் விதத்தில் சித்திரங்களை வரைந்தார். 

வாழும் மரம் (A life of Tree) என்ற ஒரு அற்புதமான ஓவியத்தில் மரத்தின் வேர்கள், கிளைகள், இலைகள், காய்கள், கனிகள், அக்கிளைகளில் அமர்ந்து இருக்கும் பறவைகள் என்று உயிர்களின் உலகமாக அதனைப் படைத்தார். 

கம்பன் காட்டிய அனுமனை மையமாக்கி, அவர் தீட்டிய சித்திரமும் விசித்திரமானது.  

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்;
துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா 

என்று பக்தர்கள் பரவசப்படும் பாடலை மனதில் கொண்டு, யானை முகத்தான் யாழ் வாசிக்கும் ஓவியம்; 

வீணையின் நரம்புகளில் கரிமுகனின் விரல்கள் படுகின்றன; அதனை மைய மாக்கி, பின்னணியில் சித்தரித்து இருக்கின்ற பாங்கு மிகவும் அற்புதமானது. ஒருசில மணி நேரங்களில் ஓவியத்தை விரைவாக வரையும் ஆற்றல் பெற்றவர். 

மதுரை விமான நிலையத்தில் அண்மையில் அவர் வரைந்த ஓவியம்தான், காண்போரைக் காந்தமாய்க் கவர்கின்றது. 

அவர் வணிக நோக்கத்தோடு ஏடுகளுக்குப் படங்கள் வரைந்து கொடுப்பது இல்லை. 

வாட்டிகன் நகரத்துக் கத்தோலிக்கத் தலைமை மதகுரு, போப் ஆண்டவர் தங்கியுள்ள ஆலயத்தில் மைக்கேல் ஏஞ்செலோ வரைந்த Last Supper என்ற ஓவியம், கிறித்து இயேசுநாதர் தமது 12 சீடர்களுடன் கடைசியாகப் பகிர்ந்து கொண்ட இரவு உணவு படத்தை, வரைந்து உள்ளார். அவர் ஓவியர் மட்டும் அல்ல, ஈடு இணையற்ற சிற்பியும் ஆவார். 

நமது வீர சந்தனம், ஈழத்தமிழர்களின் துயர சரிதத்தின் இறுதியாக நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் கோரப்படுகொலையை மைக்கேல் ஏஞ்செலோவின் சிந்தனை இயேசுவின் இறுதி உணவைச் சித்தரித்ததைப் போல முள்ளிவாய்க்கால் படுகொலைக் காட்சிகளைத் தமிழர்களின் இருதயங்களில் கண்ணீர்க் கோடுகளாக, இரத்தக் கோடுகளாகப் படிந்தவற்றை ஓவியக் கோடுகள் ஆக்கி, அந்த நெஞ்சை உருக்கும் ஓவியங்களையே அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் எழுப்பிய முள்ளிவாய்க்கால் முற்றத்தின் கற்சிற்பங்கள் ஆக்கும் வரைபடம் ஆக்கினார். 

தஞ்சையில் மாமன்னன் இராசராசன் எழுப்பிய கற்கோவில் சோழப் பேரரசின் வெற்றிப் பெருமிதத்தைக் குறிக்கின்றது. ஆனால், முள்ளிவாய்க்கால் முற்றம் ஈழத்தமிழர்களை சிங்களக் கொடியோர் பேரழிவுப் படுகொலை நடத்தியதற்கு அழியாச் சாட்சியமாய்த் திகழ்கின்றது. பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார், தமிழ்ப் பகைவர்களைத் தனது கவிதைகளில் அறக் கூற்றுவனாக அழித்து ஒழிக்கும் சீற்றத்தை எரிமலைக் குமுறலாகத் தந்தது போலவே, வீர சந்தனம் எனும் இந்த வீரப்போராளி, சிங்களக் கொடியோரையும், தமிழ் இனத் துரோகிகளையும் அடியோடு கரு அறுக்க வேண்டும் என்று, மேடைகளில் சங்கநாதம் எழுப்பும் அறம் பாடும் கவிஞனாக முழக்கம் இடுவார். 

அவருடன் உரையாடும்போது ஈழத் தமிழரைப் பற்றி அவர் பேசத் தொடங்கினால், கொதிநிலையில்தான் இருப்பார். தமிழ் ஈழத்திற்கான அறப்போர்க்களங்களா? அனைத்திலும் அவர் முதல் படை வீரனாகத் தோன்றுவார். உடல் மிக நலிவுற்ற நிலையிலும், அவர் மனம் தளர்ந்தது இல்லை. கிளர்ச்சிக் களத்திற்கு வரத் தவறியது இல்லை. தமிழ் ஈழத்தை நேசிக்கும் சகோதரர்கள் நடுவே, எளியேன் மீது எந்தக் குறையும் காணாமல், முழுமையாகத் தன் அன்பால் என்னை அரவணைத்தார். 

எவரிடம் உரையாடினாலும், வைகோ என்பவன் ஈழத்தமிழர்களின் படைக் கலன்; ஏது நேரினும் அதில் சமரசம் செய்து கொள்ளாத போராளி என்றே அவர் உரத்த குரலில் வாதித்ததை அறிந்து நான் நெக்குருகிப் போனேன். தமிழர் கடலில் கடற்கரை மணல்பெருவெளியில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தி ஆண்டுதோறும் மே 3 ஆம் வாரம் ஞாயிற்றுக்கிழமையில், ஈழத்தமிழர் வீர வணக்கப் புகழ் அஞ்சலி நடத்தும்போது, மாலை நான்கு மணிக்கே கடற்கரை மணலில் வந்து அமர்ந்து இருப்பார் நமது உயிரான வீர.சந்தனம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர், மிகவும் உடல் நலிந்து, நினைவு இழந்து, மருத்துவமனையில் மரண வாசலில் இருந்தபோது, அண்ணன் பழ.நெடுமாறன் அவர்களும், புதிய பார்வை ஆசிரியர் சகோதரர்  ம.நடராசன் அவர்களும், இளவழகனார் அவர்களும், பாவேந்தன் அவர்களும், நானும் பதறித் துடித்து  மருத்துவமனையின் மருங்கிருந்தோம். 

ஒவ்வொரு நாளும் மூன்று நான்கு முறை மருத்துவமனைக்குப் போய் வருவேன். அவருக்கு நினைவு வரவில்லை. அவரது அருமை மகள் சங்கீதா, பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டும், வளர்ப்பு மகள் செல்லாவும், சின்னப்பொண்ணுவும் உள்ளம் உடைந்து உடன் இருந்தனர். மருத்துவர் எழிலன் தவறாமல் வருவார். சில நாட்களுக்குப் பிறகு அவரது இமைகள் அசைந்தன. உதடுகள் அசைந்தன. எங்கள் நெஞ்சில் நம்பிக்கையின் ரேகைகள் படிந்தன. மீண்டு வந்தார். அந்த ஆண்டிலேயே மாவீரர் நாள் கூட்டத்தை நாம் முத்துரங்கன் சாலையில் நடத்தியபோது, நடக்க மாட்டாமல் மேடைக்கு வந்த ஓவியர் வீர.சந்தனத்தை இரண்டு நிமிடங்களில் பேசி முடியுங்கள் என்று சொல்லியும், வழக்கம்போல வீர கர்ஜனை புரிந்தபோது, நான் தடுத்து நிறுத்தி இல்லத்திற்கு அனுப்பி வைத்தேன். அரசியல் களத்தில் 2006 ஆம் ஆண்டு சட்டமன்றம், 2009 நாடாளுமன்றம், 2011 சட்ட மன்றம், 2014 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் 2016 சட்ட மன்றத் தேர்தலிலும் மறுமலர்ச்சி தி.மு.க. எடுத்த நிலைப்பாடுகளை முழுமையாக ஆதரித்தது மட்டும் அல்ல; விமர்சித்தவர்களுக்குச் சரியான பதில் தந்து வாயடைக்கச் செய்தார் என்பதை நான் அறிவேன்.

இந்த ஆண்டு தை முதல்நாளில் எனது கலிங்கப்பட்டி கிராமத்தில் தமிழர் திருநாள் பொங்கல் திருவிழாவில் ஓவியர் வீர.சந்தனம் அவர்களையும் இயக்குநர் புகழேந்தி தங்கராசு அவர்களையும் மே17 திருமுருகன் காந்தி அவர்களையும் சிறப்பு விருந்தினர்களாக எங்கள் ஊர் மக்கள் வரவேற்றனர். ஊரின் அனைத்துத் தெருக்களிலும் வீர.சந்தனம் நடந்தே வந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் 

மூவருமே உன்னதமான உணர்ச்சி உரை ஆற்றினர். அன்று அந்த மேடையில், என் வீரச்சகோதரர் வீர.சந்தனம் என்னைப் பெற்ற அன்னை மாரியம்மாளையும், என் தம்பி ரவிச்சந்திரனையும் பாராட்டிப் போற்றிய சொற்களை மறக்கத்தான் முடியுமா? 

இம்முறை மே திங்களில் நான் புழல் மத்தியச் சிறையில் இருந்தபோது, மே 17 ஆம் நாள், முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து, தாயகத்தில் வீர வணக்கப் புகழ் அஞ்சலிக் கூட்டத்தை நடத்தியபோது, அதிலும் வீர.சந்தனமும், இயக்குநர் புகழேந்தி தங்கராசு அவர்களும், தம்பி திருமுருகன் காந்தியும் உரை ஆற்றினர். அனல் தெறிக்கும் ஆவேசத்தோடும், நெஞ்சு வெடிக்கும் வேதனையோடும் வீர.சந்தனம் உரை ஆற்றியதை அறிந்தேன். 

சிறையில் இருந்து வெளிவந்தபின், ஒரு நாள் என்னைச் சந்தித்து, ஐந்து மணி நேரம் தமிழ் ஈழம் குறித்தும், தமிழக அரசியல் களம் குறித்தும், மனதின் ஆழத்தில் இருந்து என்னிடம் பேசினார். எனது எதிர்காலப் பங்களிப்பு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு, அவர் மனம் விரும்பிய ஆசைகளையும் இதயக் கனவுகளையும் சொன்னபோது, என் மீது அவர் கொண்டு இருக்கும் நம்பிக்கையை எண்ணி மிகவும் நெகிழ்ந்து போனேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மாமல்லபுரத்தில் இருந்து மிகவும் உடல்நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் நான் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் வீர.சந்தனம் அவர்களும், இளவழகனார் அவர்களும், கவலையோடு வந்து என்னைச் சந்தித்தனர். என் மீது அன்பு காட்டிய சகோதரனை இனி என்று காண்பேன்? 

என் வாழ்க்கையில் எத்தனையோ இழப்புகள், வேதனை விம்மல்கள். வீரசந்தனத்தை எண்ணும்போதே, தமிழ் ஈழத்தைச் சோதனைகள் சூழ்ந்து இருக்கின்ற வேளையில் எதற்கும் அஞ்சாத ஒருவீரப் போராளியை இழந்து விட்டோமே என்ற சஞ்சலம் நெஞ்சை அடைக்கின்றது. 

தமிழ் இன விடுதலைக் கவிக்குயில் இன்குலாப் மறைந்தார். திராவிட இயக்கத்தின் தேசியக் கவிஞனாக, கலீல் கிப்ரானின் மறுபதிப்பாக, கவிதா மண்டலத்தை ஆண்ட கவிக்கோ அப்துல் ரகுமானையும் இழந்தோம். ஒன்றன் பின் ஒன்றாக, தமிழ் இனக் காவல் அரண்கள், காலனின் கொடுங்கரங்களால் தகர்க்கப் படுவது தொடர்ந்ததால், இன்று வீர சந்தனத்தையும் இழந்தோம். 

ஈடு இணையற்ற இந்தப் படைப்பாளியின் மகள் சாரிகா, தன் கணவர் அருண் பிரின்சோடும், பிள்ளைகள் துளசி ஏகனோடும் அமெரிக்காவில் இருந்து பயணித்து, 15 ஆம் தேதி முற்பகலில் வந்த சேர்ந்து, கண்ணாடிப் பேழைக்குள் வீர சிங்கமாகத் தந்தை படுத்து இருந்த நிலை கண்டு கதறி அழுதபோது, அனைவரின் உள்ளமும் கலங்கியது.  தந்தை உயிர்பிரியும் தறுவாயில் அவரைக் கண் இமை போல் காத்து வந்த மூத்த மகள் சங்கீதா, அவரது கணவர் சுகுமாரும் பிள்ளைகளும், அந்த ஓவிய உயிர்ப்பறவை விண்ணுக்குச் சென்று விட்டது என்பதை அறிந்தபோது துடிதுடித்துப் போனார்களே... 

ஜூலை 9 ஆம் தேதி காலையில் எனக்குள் ஏற்பட்ட ஐயத்தால் ஓவியர் வீர.சந்தனத்தை அலைபேசியில் அழைத்தேன். அண்ணே, கதிராமங்கலத்திற்குப் புறப்பட்டு விட்டேன்; நாளை அங்கு பார்ப்பேன் என்றார். 

இப்படிச் செய்வீர்கள் என்று நினைத்துத் தான் அலைபேசியில் பேசுகிறேன்; நீங்கள் வரவே கூடாது; பயணத்தைக் கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும் என்று சற்றுக் கோபமாக உரிமையுடன் சொன்னேன். சரிண்ணே, வரலை... பயணத்தை ரத்து செய்து விடுகிறேன் என்றார். 

சகோதரர் இளவழகனார் இதுகுறித்து என்னிடம், நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து அங்கு வருவதற்கான பயணத் திட்டத்தை, நீங்கள் சொன்னதால் ரத்து செய்து விட்டோம் என்றார். 

பத்தாம் தேதி மாலை நான்கரை மணி அளவில், தம்பி அடைக்கலத்திடமும், தம்பி பிரசாந்திடமும் என் உடல்நலம் குறித்துக் கவலையோடு பேசி இருக்கின்றார். மறுநாள், 11 ஆம் தேதி காலையில் என்னை அழைத்தார். நேற்று கதிராமங்கலம் மேடையில் நீங்கள் சாய்ந்து சரிந்ததைப் பார்த்து ஒரு வினாடி என் இதயமே நின்றதைப் போல் கலங்கினேன். இப்படி அலையலாமா? எனக்கு அறிவுரை சொல்கின்ற நீங்கள் உங்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ள வேண்டாமா? என்றார். 

அப்படிச் சொன்ன அந்தத் தூயவனின் இதயம் நிரந்தரமாகத் துடிப்பை  நிறுத்திக் கொண்டதே? ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், நமது ஓவியருக்கு உயிருக்கு உயிரான சகோதரர் ஆவார். அவரது மறைவுச் செய்தி அறிந்தவுடன்  14 ஆம் தேதி நமது மாவட்டச் செயலாளர்கள் ஜீவன், கழககுமார், வழக்கறிஞர் சுப்பிரமணி ஆகியோர் அந்த இல்லத்திலேயே இரவில் இருந்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்தனர். துணிப்பந்தல் அமைத்து, வருவோர் அமர்வதற்கு நாற்காலிகள் போட்டு, புகழ் வணக்க நிகழ்விற்காக ஒலி, ஒளி அமைப்புகளைக் கவனித்தனர். 

கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்களும் 15 ஆம் தேதி நாள் முழுக்க அந்த இல்லத்திலேயே இருந்தார். 14 ஆம் தேதி, கோவை மாநகர், புறநகர் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஓவியர் வீர.சந்தனத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி நள்ளிரவில் சென்னை வந்து சேர்ந்தேன். 15 ஆம் தேதி காலை ஒன்பதரை மணி முதல் தேனாம்பேட்டையில் அவரது இல்லத்தில் புகழ் அஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்தேன். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களைத் தலைமை ஏற்கச் செய்து, வருகை தந்த உணர்வாளர்கள் அனைவரையும் இரங்கல் உரை ஆற்ற வைத்தேன். 

தமிழர் தேசிய முன்னணியின் அயனாவரம் முருகேசன், நமது வீரசந்தனத்தின் உடன் பயின்ற ஓவியர் விஸ்வம், வீர சந்தனத்தைக் கதாபாத்திரமாக்கிய வேட்டி குறும்படம் இயக்கிய இயக்குநர் கௌதமன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி, பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரின் புதல்வர் பொழிலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இரா.தெ. முத்து, தமிழ் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தமிழ்நேயன், முத்துக்குமார் சிலை எழுப்ப நிலம் தந்த புலவர் இரத்தினவேலவன், நமது வீர சந்தனத்தின் சக ஓவியர் அரஸ், டேவிட் பெரியார், தமிழர் தேசிய முன்னணியின் துணைத்தலைவர் பொன்.இறைவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், வீரப்போராளி புலவர் கலியபெருமாள் மகன் சோழன் நம்பியார், மண்மொழி இதழ் சார்பில் பொன்.மாயவன், வீர. சந்தனம் சிறப்பாக நடித்த அவள் பெயர் தமிழரசி திரைப்பட இயக்குநர் மீரா கதிரவன், நமது ஓவியர் கடைசியாக நடித்து முடித்த ஞானச்செருக்கு திரைப்பட இயக்குநர் தரணி இராஜேந்திரன், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர். 

எனது இரங்கல் உரையில், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் பதிவு செய்த புகழ் அஞ்சலியை நான் வாசித்தேன்.

அதனை இங்கே தருகிறேன்:

உலகத் தமிழர் உள்ளங்களில் நிலைத்து வாழும் ஓவிய வேங்கை வீரமுத்து சந்தானம் அவர்கள். 

தமிழ் ஈழ உணர்வாளரும், ஓவிய வேங்கையுமான வீரசந்தானம் ஐயா அவர்கள், 13.07.2017 அன்று காலமான செய்தி, தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் துயர் அளிப்பதாகவே உள்ளது. 

தொடக்க காலம் முதல் தமிழ் ஈழ தேசியத் தலைவர் அவர்களையே தனது மானசீகமான தலைவனாக ஏற்று, இறுதி வரை தமிழ் ஈழக் கனவையும், நனவையும் தன் நெஞ்சகத்தில் தாங்கி வாழ்ந்தவர் வீரசந்தனம் அவர்கள். தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வாழ்ந்த பற்றாளர். தமிழ்ச் சமூகத்தை விடுதலைக்காய்த் தூண்டிய செயற்பாட்டாளர். தன் இனத்தின் மீதும், மொழியின் மீதும், பண்பாட்டுக் கூறுகளின் மீதும் தீராத பற்றுக் கொண்டவராகத் திகழ்ந்தவர். அவரின் ஆற்றல் களும், செயற்பாடுகளும் விவரிக்க முடியாதவை. 

தமிழையும், தமிழ் இனத்தையும் பாதுகாக்க வேண்டும் என ஒவ்வொரு நொடியும் துடித்த இதயம் அவருடையது. தமிழ் இன உணர்வோடு வாழ்ந்ததுடன் நிற்காது, தனது ஓவியப் பணியையே ஈழத் தமிழ் இனத்தின் உயர்வுக்காக ஒப்பு வித்தவர். தமிழ் ஈழம் என்ற பெயரை உச்சரிப்பதற்கே பலரும் அஞ்சிநின்ற வேளைகளிலும், அரசுப்பணித்துறையில் அமர்ந்து இருந்த அவர் அச்சம் இன்றி வெளிப்படையாக எம் தாயகத்தின் விடுதலைப் பண் இசைத்த குயிலாகத் திகழ்ந்தார். அவரின் பேச்சிலும், மூச்சிலும் வாழ்விலும் பிரிக்க முடியாத கூறாகத் தமிழ் ஈழம் இருந்தது.

வீரசந்தானம் அவர்கள் சிறந்த ஓவியரென அறியப்பட்டவராக இருந்தபோதும், அவருக்குள் பன்முக ஆற்றல்கள் இருப்பதை உலகு அறியும். அவரின் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்திய திரைப் படங்கள் பல உண்டு. அதற்கு மகுடம் இட்டது அவரின் நடிப்பில் வெளியான சந்தியா ராகம் திரைப்படம். அதில் அவர் அந்தக் கதைக்கு ஏற்ற மனிதனாக வாழ்ந்தே காட்டினார் என்பதே உண்மை. 

அத்தோடு, முள்ளிவாய்க்கால் நினைவாகத் தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றத்தில், தமிழ் இன அழிப்பை வெளிப்படுத்தும் கருங்கற் சிற்பங்களை உணர்வுபூர்வமான முறையில் வடிவமைத்தவரும் வீரசந்தனம் அவர்களே. 

தமிழ் ஈழ மக்கள் கண்ணீர் சிந்திக் கதறிய போதெல்லாம் வீரசந்தனம் மிகவும் துயருற்றார். தன்னல நோக்கற்று தமிழ் ஈழ மக்களுக்காகப் பாடுபட்டார். தமிழ் ஈழம் ஒன்றே தமிழ் மக்கள் அமைதியாகவும் துயர் அற்றும் வாழ ஒரே தீர்வு என அவர் எப்போதும் முழங்கினார். 

2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டபோது, வீரசந்தனம் அவர்கள் மிகவும் மனம் தளர்வு அடைந்தார். எனினும், தமிழ் ஈழம் என்ற கனவு நனவாக வேண்டும் என்ற உறுதி அவரிடம் காணப்பட்டது. 

அந்த உறுதியோடு வாழ்ந்து கொண்டு இருந்த அவரை இன்று இழந்து நிற்கின்றோம். காலம் அவரை எம்மிடம் இருந்து பிரித்தாலும், உலகெங்கும் பரந்து வாழும் அனைத்துத் தமிழ் மக்களின் உள்ளங்களிலும் அவர் என்றும் வாழ்வார். 

அன்னாரைப் பிரிந்து துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் எமது ஆறுதலைத் தெரிவிப்பதுடன், அவரின் உள்ளத்தில் ஒளிர்ந்த தாயகக் கனவை நனவாக்க உறுதி கொள்வோம். 

புலிகளின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் 

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் அண்ணன் பழ. நெடுமாறன் அவர்கள் புகழ் அஞ்சலி நிகழ்ச்சியின் நிறைவுரை ஆற்றினார். 

என் வீரச் சகோதரனின் இறுதிப் பயணம் தகனம் நோக்கி நகர்ந்தது. 

நினைவேந்தல் நடந்து முடிந்தவுடன், தம்பி கவிஞர் மணிவேந்தன் தான் எழுதிய இரங்கல் கவிதையை என்னிடம் தந்தார். 

கவிதையை வாசிக்கும்போதே என் கண்கள் நனைந்தன. அதனையே இங்கு தருகிறேன்.

விரிபுகழ் மிக்கது
வீழாத காவியமா?
வீர சந்தனத்தின்
விழிநிறை ஓவியமா?
என்று என்னிடம்
எவரேனும் கேட்டால்
நொடி நேரக்
கடத்தலுக்கும்
இடம் கொடுக்காமல்
ஓங்கிக் குரல் எழுப்பி...
அய்யா சந்தனத்தின்
அழகு ஓவியமே
உயர்ந்தது என்று
உரைப்பேன் நான்!
மூச்சுத் திணறி - நீ
மூர்ச்சையாகிப் போன சேதி
என் செவி வந்த போதினில்
உன் உருவை
ஆழமாய் உள்வாங்கினேன்!
அகவை எழுபதை
தழுவிய பின்பும்
விழுவதில்லை - உன்
தலையைவிட்டு என்றுரைத்து
கொட்டாமல் கொத்தாய்
வளர்ந்திருந்த தலைமுடியை...
உளிக் கூர்மையோடு
உள் இழுத்த கண்களை...
தமிழ் நிலம் ஆண்ட
மன்னர்களின் கம்பீரத்தைக்
கூட்டிய அதே நீள் மூக்கினை...
இதழ்களை முற்றாய்
மறைத்த பெரும் மீசையை...
வெண்தாடி வேந்தன்போல்
வைத்திருந்த அருவித்தாடியை...
அடிக்கடி சலவைக்குள்
அகப்படாத ஜிப்பாவை...
நீள் வடிவில்
தோள் தழுவிய துண்டை...
கசங்கிய 
கால் சட்டையை...
காசை அதிகம்
விழுங்கா காலணியை...
என் எதிர் நிறுத்தி
உனைத் தரிசித்தேன்!
ஓவியன் நீயா - இல்லை
ஓவியமே நீதானா
என்றே தோன்றும்
உன்னைக் காணும்போது!
அன்பிற்கு இனிய
ஆருயிர்ச் சந்தனமே
நேற்றைக்கு முன்தினம் - உன்
நெஞ்சிற்கினிய
நேர் நடை வைகோவோடு
உரையாடினாயாமே
நெடுநேரம் தொலைபேசியில்!
அப்படி என்னதான்
அவரோடு பேசினாய்!
ஈழ உறவுகளுக்காய்
எப்போதும்போல் களமாடுங்கள்!
யான் போய்வருகிறேன்!
வான்மீதில் நின்று
உங்களுக்கு
வலுதருகிறேன் என்றாயோ?
உறுதியாய் - உன்
எதிரியும் சொல்வான்!
தனி ஈழக் கொள்கையை
நேற்று ஆதரித்து
இன்று கைகழுவி
நாளைத் தழுவிக் கொள்கிற
நழுவல் பேர்வழி
நீ இல்லை என்று!
நாற்பத்தி மூன்றாண்டுகள்
ஈழம் ஈழம்
என்று வாழ்ந்தவன் நீ!
ஈராயிரம் ஆண்டுகட்குப்பின்
ஈழம் இனத்துக்குத் தந்த
மாவீரன் பிரபாகரனின்
மாசறு மனதில்
ஒளி வீசிய ஞாயிறு நீ!
ஈழம் என்றால் வைகோ
வைகோ என்றால் ஈழமென்று
அடிக்கடி உச்சரித்து...
எதிரிக்கு நெருக்கடியும்
எமக்குள் நெருப்புப் பொறியும்
தந்தவன் நீயன்றோ?
சந்தனம் எனில் மணக்கும்!
வீர சந்தனம் எனில்
சிங்களவனை எரிக்கும்!
முள்ளி வாய்க்கால்
முற்றத்தில் - நீ
வரைந்த ஓவியங்களுக்கு
ஒன்று நிகராய்
இங்கு உண்டோ?
எதிரி வெடித்த
செல்லில் செத்த
உறவுகட்கு - நீ
கல்லில் உயிர்கொடுத்துக்
காலமாகிவிட்டாய்!
உன்னைக் ‘காவு’
வாங்கிவிட்டதாய் - சாவால்
தலைக் கனம் கொள்ள
முடியவே முடியாது!
இறப்பவன் பட்டியலில்
படைப்பவன் எப்போதும்
இடம்பெற மாட்டான்!
தேசப் பாதுகாப்புச் சட்ட
பிடியில் சிக்கி - உன்
பாச வைகோ
சிறையில் இருந்தவாறு
கூறியதை ஏற்று...
தாவி நீ ஓடிவந்து
தாயகத்தில் நிகழ்ந்த
முள்ளி வாய்க்கால்
நினைவேந்தல் கூட்டத்தில்
முழங்கும் போது...
இத்தனை லட்சம் பேர்
ஈழத்தில் இறந்த பின்னும்
எதுவும் செய்யா - நாம்
ஏன் உயிரோடிருக்க வேண்டும்
என்ற சிந்தையை
எனக்குள் ஏற்படுத்திவிட்டது
தம்பி மணிவேந்தன் பேச்சென்று
தணலாய்க் கொதித்தாய்!
ஓவியனே - அதன்பின்
உன்னை நான் பார்த்தது
மண்ணைவிட்டு நீ போன பின்பு
கண்ணாடிக் கூண்டுக்குள்தான்!
மேடைகளில்
உன் பெயரை
உச்சரிக்காமல் - நான்
பேசியது உண்டு!
என் பெயரை
உச்சரிக்காமல் - நீ
பேசியதே இல்லை!
என் போன்ற
விழுதுகளைத் தொழுத
ஆலமரம் நீ!
என்னைக் காணும் போதெல்லாம்
என் தோள்கள் பற்றி...
உன் ஈழ வரலாறு
படிக்கிறேன் நான்!
வெடிக்கிறாய் எரிமலையாய்
என்று பாராட்டுவாய்!
விழிகளில் நிறைந்த
வீர சந்தனமே
திடீரென்று மூடிக்கொண்டாய்
விழிகளை இருக்கமாய்!
தீர்க்கமாய்ச் சொல்கிறேன்
எங்கள் நினைவுகளில்
நீ வாழ்வாய்
இன்னும் நெருக்கமாய்!

நெஞ்சம் அடைத்த துக்கத்துடன் விமான நிலையத்திற்கு விரைந்து, ஓய்வு அறையிலேயே நீராடி உடை மாற்றிக் கொண்டு, கோவை சென்று சேர்ந்து, திருப்பூர் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். சங்கொலி ஐந்து ஆண்டுச் சந்தா மனம் மகிழும் விதத்தில் அமைத்துத் தந்தார் ஆருயிர்ச் சகோதரர் ஆர்.டி.மாரியப்பன். 

எனது ஆருயிர்ச் சகோதரர்களான திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் அவர்களும், கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் குகன்மில் செந்தில் அவர்களும் ஏற்பாடு செய்து இருந்த, மது ஒழிப்புப் போராளிகளுக்கு விருது வழங்கும் கருமத்தம்பட்டி பொதுக்கூட்டத்தில், ஆருயிர்ச் சகோதரர்களான கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், டாக்டர் கிருஷ்ணன், பொறியாளர் ஈஸ்வரன் ஆகியோரோடு பங்கேற்றேன். 

கழகத்தின் அவைத்தலைவர் ஆருயிர் அண்ணன் திருப்பூர் துரைசாமி, பொருளாளர் ஆருயிர்ச் சகோதரர் கணேசமூர்த்தி உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு என்னோடு வந்த முன்னணியினர் அனைவரும் உரை ஆற்றினோம். 

தாய்மார்கள் பெருமளவில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தை முன்னின்று நடத்திய தம்பி சூலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆனந்தகுமார் மிகவும் பாராட்டுக்கு உரியவர். 

மறுநாள், 16 ஆம் தேதி காலையில் ஈரோடு மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் கந்தசாமி ஏற்பாடு செய்த செயல்வீரர்கள் கூட்டத்தில், அவைத் தலைவரும், பொருளாளரும், நானும் பங்கேற்றோம். செல்லும் வழியில் கவுந்தப்பாடியில் ஒன்றியச் செயலாளர் வீரக்குமார் ஏற்பாடு செய்து இருந்த கொடியேற்று நிகழ்ச்சியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் குறிப்பாகத் தாய்மார்கள் திரண்டு இருந்தது எனக்கு வியப்பைத் தந்தது; அதே வேளையில் நம்பிக்கையையும் ஊட்டியது. அடுத்து ஒத்தக்குதிரை என்ற ஊரிலும் கொடி ஏற்றி வைத்து விட்டு கோபிசெட்டி பாளையத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். 

ஈரோடு கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் குழந்தைவேல் அவர்களும், மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் முருகன் அவர்களும் நடத்திய செயல்வீரர்கள் கூட்டத்தில், கழகப் பொருளாளர் கணேசமூர்த்தி ஆற்றிய உரையும், கூட்ட ஏற்பாடும் எனக்கு உள வலிவும் ஊக்கமும் தந்ததால் ஒரு மணி நேரம் உரை ஆற்றினேன். 

அடுத்த துக்கச் செய்தி வந்தது. பேரறிஞர் அண்ணாவின் அன்பைப் பெற்றவரும், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், நமது இயக்கத்தின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான அண்ணன் சீர்காழி கா.சுப்ரவேலு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியால் மிகுந்த துயரத்திற்கு உள்ளான நான், இரவிலேயே பயணித்துத் தஞ்சை போய்ச் சேர்ந்தேன். 

ஜூலை 17 காலையில், துணைப் பொதுச் செயலாளர் ஆருயிர்ச் சகோதரர் துரை.பாலகிருஷ்ணன் அவர்களும், விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்களும், நாகை மாவட்டச் செயலாளர் தம்பி மோகன் அவர்களும் சீர்காழிக்குச் சென்றோம். வழியில், குத்தாலத்தில் திராவிட இயக்கக் கொள்கை மணியாகத் திகழ்ந்து மறைந்த அண்ணன் தங்கையன் இல்லம் சென்று, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டுச் சீர்காழி போய்ச் சேர்ந்தோம்.

கழகக் கண்மணிகள் மார்கோனி, மார்கெட் கணேசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தோழர்களோடு அண்ணன் சுப்ரவேலு இல்லம் சென்றேன். இதற்கு முன்பு இருமுறை அங்கே சென்று இருக்கின்றேன். தந்தை பெரியாரின் தன்மானக் கொள்கைகளில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர். பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்தில், சோழ மண்டலத்தில் அரும்பாடுபட்டவர். எளிமைக்கும், நேர்மைக்கும் இலக்கணம் ஆனவர். 93 ஆம் ஆண்டு, நான் தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டபோது, அது அநீதி என்று நம்மோடு அணிவகுத்தவர். அவர் மறைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தம் புதல்வியரிடம் நான் வைகோவைப் போய்ப் பார்க்க வேண்டும்; கதிராமங்கலம் மேடையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்ததில் இருந்து எனக்கு நிம்மதி போய் விட்டது. நான் சென்னை சென்று பார்த்து வருகிறேன் என்றாராம். 

இல்லை அவர் கோவை சுற்றுப் பயணத்தில் இருக்கின்றார். அலைபேசியில் பேசுங்கள் என்றபோது, வைகோ பல பணிகளில் இருப்பார்; நான் பின்னர் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொன்னதாக அவரது இரு புதல்வியர்களும் மகன் குலோத்துங்கனும் கூறி அழுதனர். அவர் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடிப் பேழையின் மீது என் கண்ணீரைச் சிந்தியவாறு இரங்கல் உரை ஆற்றிவிட்டுக் காரிலேயே சென்னை வந்து சேர்ந்தேன்.

இன்று மதியம் 18.07.2017 திருப்பூர் மாவட்டக் கழகப் பொருளாளர் ஈஸ்வரன் மறைந்தார் என்று செய்தி கேட்டு நிலைகுலைந்து போனேன். கழகம் உதித்த நாள்முதல் இலட்சிய தாகத்துடன் பணியாற்றினார். நம் அவைத்தலைவர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்களின் பேரன்பையும், பெரு நம்பிக்கையும் பெற்றுத் திகழ்ந்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.டி.எம். அவர்களுக்கு பெரும் துணையாக செயல்பட்டார். ஜூலை 15 ஆம் தேதி - திருப்பூர் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில், சங்கொலி சந்தாக்களை தொகுத்து என்னிடம் வழங்கிய அந்தக் கொள்கை வீரர், மாரடைப்பால் மறைந்தார் என்பதை நினைத்தாலே இதயம் கலங்குகிறதே!

ஜூலை 18. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1967 இல் இதே நாளில்தான் நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று சட்டமன்றத்தில் பெயர் சூட்டும் தீர்மானத்தை அவையில் ஒருமனதாக நிறைவேற்றினார்கள். மாலையில் வட சென்னை கிழக்கு மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம். துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்களும் முன்னோடிகளும் நானும் பங்கேற்றோம். உயர்நிலைக்குழு உறுப்பினர் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் அவர்களும், இனிய தம்பிகள் வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.சி.இராசேந்திரன், தென்சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கழககுமார், தென்சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி மற்றும் முன்னோடிகள் பங்கேற்றோம். செயல்வீரர்கள் கூட்டத்தை மாவட்டச் செயலாளர் ஆருயிர்த்தம்பி ஜீவன் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார். 

ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். சீர்காழி வரும் வழியில் இடையில் என்னைச் சந்தித்து மயிலாடுதுறை அழகிரி, தன்னை மீண்டும் நம் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். 

தஞ்சை மாநாடு மிகப்பெரிய வெற்றி பெறும். நிறைந்த நம்பிக்கையோடு இருக்கின்றேன். என் எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்றித் தருவீர்கள் என்ற எண்ணமே மேலோங்குகின்றது.

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்! 

பாசமுடன்,
வைகோ

இந்த கடிதமானது 28.07.2017 பிரசுரத்தில் சங்கொலியில் வெளியாகிறது.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment