Monday, July 17, 2017

தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட ஐம்பது ஆண்டு பொன்விழா! உரிமைகளைக் காக்க உறுதி ஏற்போம்! வைகோ அறிக்கை!

சென்னை மாகாணம் எனும் பெயரை மாற்றி, இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துத் தியாகி சங்கரலிங்கனார் அவர்கள், விருதுநகர் தேசபந்து திடலில் ஜூலை 27, 1956 இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் விருதுநகர் சென்று அவரைச் சந்தித்தபோது, “அண்ணா! நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றுக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம், காங்கிரஸ் தலைவர் கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனார் அவர்களைச் சந்தித்து, உண்ணா நோன்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தம் குறிக்கோளில் உறுதியாக இருந்தார். 76 நாட்கள் கடந்த நிலையில், அக்டோபர் 13, 1956 இல் உயிர் துறந்தார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஜூலை 18, 1967 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் “ ‘சென்னை மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.

அப்போது அவர் உரை ஆற்றுகையில், “இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும் எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். இந்தத் தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி; தமிழரின் வெற்றி; தமிழர் வரலாற்றின் வெற்றி; தமிழ்நாட்டு வெற்றி; இந்த வெற்றியில் அனைவரும் பங்குகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பிறகு இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சட்டமன்ற அவைத்தலைவர் சி.பா.ஆதித்தனார் அறிவித்ததும், சட்டமன்றமே அதிரும் வகையில் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘தமிழ்நாடு’ என மூன்று முறை குரல் எழுப்பினார். எல்லா உறுப்பினர்களும் ‘வாழ்க’ குரல் எழுப்ப, சட்டமன்றமே உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தியது.

நன்றி தெரிவித்து உரையாற்றி அண்ணா அவர்கள், “இந்தத் தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டு இருப்பது தமிழர்க்கு -தமிழர் வரலாற்றுக்கு - தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெரும் வெற்றி ஆகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போல் அவர் எண்ணம் ஈடேறிவிட்டது” என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.

18.7.1967 அன்று தீர்மானம் நிறைவேறி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.

நவம்பர் 23, 1968 அன்று நாடாளுமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டுவதற்கான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

தாயகத்திற்கு ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டு விழா டிசம்பர் 1, 1968 இல் பாலர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றபோது, உடல் நலிவுற்ற நிலையிலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் பங்கேற்று உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.

தமிழத் தேசிய இனத்தின் மொழி, இன, பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார்கள். ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டப்பட்ட பொன்விழா கொண்டாடும் நேரத்தில், தமிழ்நாட்டின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, பொருளாதார இறையாண்மை, வாழ்வுரிமை அனைத்தையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பையும், தனித்தன்மையையும் பாதுகாக்கும் வகையிலும் உரிமைகளை விட்டுக்கொடுக்ககாமல், அவற்றைத் தட்டிப் பறிக்க நினைக்கும் டெல்லி ஆதிக்க அரசுக்கு அடிபணியாமல் தமிழர்கள் ஓரணியில் நின்று வாகைசூட இந்நாளில் உறுதி ஏற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment