Thursday, July 13, 2017

நடுவர் மன்றத் தீர்ப்பை அலட்சியப்படுத்தி பாசனப் பரப்பை விரிவுபடுத்தியது கர்நாடகமே! தலைவர் ஐயா வைகோ அவர்கள் அறிக்கை!

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரி 5ஆம் தேதி வழங்கப்பட்டது. அதை எதிர்த்துக் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குப் பாதகமானவற்றைச் சுட்டிக் காட்டித் தமிழகமும் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், ஜூலை 12ஆம் தேதி மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வராய், ஏ.எம்.கான்விகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கர்நாடக மாநிலம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பா~லி எஸ்.நாரிமன், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பாரபட்சமானது, நீர்ப்பாசனச் சட்டத்திற்கு எதிரானது. சென்னை மாகாணமும், மைசூரு மாகாணமும் 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் விடுதலை பெற்ற பிறகு காலாவதியாகிவிட்டன. தமிழ்நாட்டில் பாசனப் பரப்புகள் அதிகரித்துவிட்டதால் அதற்கு ஏற்ப கர்நாடகம், காவிரி நீரை வழங்க முடியாது, தமிழகம் அதிக நீரைக் கேட்பதால்தான் இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது” என்று தெரிவித்து இருக்கின்றார்.

கர்நாடக மாநிலம் கடந்த 43 ஆண்டுகளாக பழைய பல்வியை திரும்பத் திரும்பப் பாடி வருகின்றது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில், 1990 ஜூனில் மத்திய அரசு அமைத்த காவிரி நடுவர் மன்றம், 17 ஆண்டுக் காலம் விசாரணை செய்து இறுதித் தீர்ப்பை வழங்கியது. கர்நாடக மாநிலம் காவிரி நடுவர் மன்றத்தையே ஏற்க முடியாது என்று அடாவடித்தனம் செய்தது.

காவிரி நடுவர் மன்றம்1991 இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை ஏற்க மறுத்த கர்நாடகம், தனிச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. கர்நாடகாவில் குறிப்பாக பெங்களுரு போன்ற நகரங்களில் காலம் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டு, வன்முறை வெறியாட்டங்கள் தலைவிரித்து ஆடின. தமிழர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதைப்போலவே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்தபோதும் கர்நாடக மாநிலம் அதைச் செயல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு பிடிவாதத்துடன் கூறி வருகின்றது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசின் சார்பில் வாதாடிய வழங்கறிஞர் தெரிவித்துள்ள கருத்துகள் கர்நாடக மாநிலத்தின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகின்றது.

1974 இல் கர்நாடக பாசனப் பரப்பு 6.8 இலட்சம் ஏக்கர்தான் இருந்தது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்ககாலத் தீர்ப்பில் கர்நாடகம் தனது பாசனப் பரப்பை 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கம் செய்யக்கூடாது என்று தெரிவித்தது. ஆனால் கர்நாடகம் பாசனப் பரப்புக்களை 1991க்குப் பிறகு விரிவுபடுத்திக்கொண்டே வந்தது. நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பிலும் தடையை மீறி கர்நாடகம் விரிவாக்கம் செய்த பாசனப் பரப்பையும் உள்ளடக்கி 18.85 இலட்சம் ஏக்கர் நிலத்தை பாசனப் பரப்பாகத் தீர்மானித்தது. ஆனால், கர்நாடக அரசு தற்போது தனது காவிரி நீர் பாசனப் பரப்பை 21 இலட்சம் ஏக்கராக அதிகரித்து இருக்கின்றது. அடுத்த ஐந்தாண்டுக் காலத்தில் 30 இலட்சம் ஏக்கராக மாற்றவும் இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இதற்காகத்தான் மேகேதாட்டு, ராசிமணலில் காவிரியின் குறுக்கே தடுப்பு அணை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கர்நாடக 3000 புதிய ஏரிகளை உருவாக்கி பாசனப் பரப்பை பலமடங்கு விரிவுபடுத்திவிட்டது. ஆனால் தமிழ்நாடு, 1971 காவிரி நீர் பாசனப் பரப்பு 25.03 இலட்சம் ஏக்கராக இருந்ததை நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் 24.71 இலட்சம் ஏக்கர் என்று குறைத்தது. இந்த நிலையில், கர்நாடக அரசு தமிழ்நாட்டில் பாசனப் பரப்பு அதிகரிக்கப்பட்டு, காவிரியில் அதிக நீர் கோருவதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பது பச்சைப் பொய் ஆகும்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்ததின் விளைவுதான் கர்நாடக மாநிலத்தின் அடாவடிப் போக்குக்குக் காரணம் ஆகும்.

உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் கர்நாடக அரசு அதை ஏற்கப்போவது இல்லை என்பது கடந்தகாலங்களில் தெளிவாகிவிட்டது. எனவே, காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது  இன்றைய 13-07-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment