Monday, August 26, 2019

வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு வைகோ கண்டனம்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் காவல் நிலையம் எதிரிலேயே அரசியல் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலையின் தலைப் பகுதி உடைத்து நொறுக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.
கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு இரு சமூகங்களிடையே மோதல் ஏற்பட்டு, வன்முறைத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. காவல்துறையின் அலட்சியத்தின் காரணமாக, நேற்று ஓர் கும்பல் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வேதாரண்யம் கடை வீதியில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி உள்ளது. மேலும் பட்டியலின மக்களின் கடைகளையும் அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கி உள்ளது.
காவல்துறை அமைதியாக வேடிக்கை பார்த்ததால், அந்த வன்முறைக் கும்பல் ஆத்திரம் தலைக்கு ஏறி, அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து நொறுக்கி இருக்கிறது.
சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் இருந்தால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் என்பதை இதில் தொடர்புடையவர்கள் நன்கு உணர வேண்டும்.
அம்பேத்கர் சிலையை உடைத்த வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அரசு தரப்பில் மாற்று ஏற்பாடு செய்து, உடனடியாக மற்றொரு அம்பேத்கர் சிலை அங்கே நிறுவப்பட்டு இருப்பது ஆறுதல் தருகிறது.

ஆனால், இதுபோன்ற வன்முறைகள், சிலை உடைப்புகள் தொடராமல் இருக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஆகஸ்ட் 27: சேலத்தில் அணி திரள்வோம்; இனப்பகையை எதிர்கொள்ள ஆயத்தம் ஆவோம்-வைகோ அழைப்பு!

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் திராவிடர் கழகமாக வீறு கொண்டு எழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்ற அதே சேலம் மாநகரில், ஆகஸ்ட் திங்கள் 27 ஆம் நாளில், தமிழர் உரிமைப் பாசறையாம் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாடு எழுச்சியுடன் நடைபெறுவதை அறிந்து, நெஞ்சமெலாம் இனிக்கின்றது!
தமிழர் சமுதாயத்தை, மானமும் அறிவும் உள்ளதாக உயர்த்திட, அரிமாவாகச் சிலிர்த்து எழுந்து, உயிர் மூச்சு உள்ளவரை போராடிய அய்யா பெரியார் தலைமையில் அன்று நடைபெற்ற மாநாட்டில், நம் உயிரில், உணர்வில், குருதியோட்டத்தில் நீக்கமற நிறைந்துவிட்ட அறிஞர் அண்ணா அவர்களின் தீர்மானம், நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக பரிணாம வளர்ச்சி கொள்ளச் செய்தது.
இதுகுறித்து, “திராவிட நாடு” இதழில் (13.08.1944) பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க உணர்ச்சிமிகு தலையங்கத்தைத் தீட்டினார் அண்ணா!
‘சேலம் செயலாற்றும் காலம்’ எனும் அந்தச் சீர்மிகு ஆசிரிய உரையை, 19.08.1944 குடியரசு இதழின் முகப்பில், முதல் இடம் தந்து வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார் அய்யா!
‘27.08.1944 இல் சேலம் நகரில் கண்காட்சிக் கொட்டகையிலே, ஜஸ்டிஸ் கட்சியின் மாகாண மாநாடு நடைபெற ஏற்பாடு ஆகி விட்டது. பெரியார் தலைமை வகிக்கின்றார். தோள்தட்டி, மார் நிமிர்த்தி, அணி அணியாக வருக! வருக!! என்று வரவேற்புக்குழுத்தலைவர் இரத்தினசாமி கனிவுடன் அழைக்கின்றார்’
“உறுதியும் உணர்ச்சியும் பெருக்கெடுத்தோடும் உள்ளம் படைத்த உத்தம வீரர்களே! உங்கள் நாட்டின் எதிர்காலம், இனத்தின் எதிர்காலம் எப்படி அமைதல் வேண்டும் என்பதை எடுத்துரைக்க சேலம் வாருங்கள்”
என்று 75 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா அழைத்தாரே, அந்த சேலத்தில்தான் இப்போதும் மாநாடு.
“சூதும் சூழ்ச்சியும் புகமுடியாத வளமான உமது மனத்திலே தோன்றும் தூய கருத்தை அச்சம் தயை தாட்சணியமின்றி எடுத்துக் கூற வாரீர் சேலத்திற்கு என்று அழைக்கிறோம். அன்போடு, உரிமையோடு! சொல்லும் செயலும் வெல்லும் வகையுடையதாக உம்மிடம் அமைந்திருக்கிறது என்ற நம்பிக்கையோடு செயலாற்றும் சிலபேர்கள் உள்ளனர் என்ற பூரிப்போடு, வாரீர்! விரைந்து சேரீர்! ஒன்றாக சேலத்தில்! உரிமைப்போர் நடத்த இதுவே சரியான காலம் என்பதை சேலம் எடுத்துக்காட்டும் என்று நம்புகிறோம்”
என்று திராவிட நாடு இதழ் மூலம் அண்ணா அறைகூவி அழைத்தது இன்றைக்கும் பொருத்தமாகத்தானே இருக்கின்றது?
75 ஆண்டு வரலாறு காணும் திராவிடர் கழகம், நூறாண்டுகளைக் கடந்தும் தொடரும் திராவிட இயக்கம், தமிழ் மண்ணில் நிகழ்த்திய சாதனைகள், புரட்டிப் போட்ட புரட்சிகள் ஏராளம்! ஏராளம்!! சமூக நீதி, பெண்கள் உரிமை, மதநல்லிணக்கம், சமத்துவம் முதலான மறுமலர்ச்சி மாண்புகள் இந்தியத் துணைக் கண்டத்திலேயே, தமிழகத்தில் மட்டும் செழித்து செம்மாந்த நிலையில், உயிர்த் துடிப்புடன் உலவி வருவதற்கு பெரியார்-அண்ணா பெரும்படைதான் காரணம்!
நம் விழி திறந்த வித்தகர்களான பெரியாரும், அண்ணாவும் இல்லை என்ற துணிச்சலில், திராவிடத்தை ஆரியவர்த்தம் ஆக்கிட ஆளுகின்ற காவிக்கூட்டம் களம் இறங்கி உள்ள காலம் இது! ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற முழக்கம் பொருளாதார அளவுகோலால் வகுப்பு உரிமையை வீழ்த்தும் சதித்திட்டம், ‘இந்து’ எனும் மயக்க மருத்து தந்து, வர்ணாசிரம தர்மத்தை உயிர்ப்பிக்கும் பகீரதப் பிரயத்தனம் இவைகள் எல்லாம் அவர்களின் அம்புறாத்தூளியில் இருந்து அடுக்கடுக்காகப் புறப்பட்டு வரும் அம்புகள்.
அவற்றைத் தடுத்துத் தகர்ப்பதற்கு, பெரியார்-அண்ணா கொள்கை எனும் அறிவு ஆயுதம் ஏந்த வேண்டிய காலத்தில்தான் திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலத்தில் நடக்கின்றது. ஈரோட்டுப் பட்டறையிலும், காஞ்சிப் பாசறையிலும் வார்ப்பிக்கப்பட்ட திராவிடச் சிந்தனை எனும் கவசம் ஏந்தி, சங்கொலி முழங்கி அணிவகுத்திட, தமிழர்கள் சேலத்திற்கு அணிவகுத்திட வேண்டும்.
சற்று உடல்நலம் இன்றி, மருத்துவர்களின் கட்டுப்பாடு காரணமாக, ஓய்வில் இருந்தாலும்கூட, என் மனமெலாம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டு நிகழ்வுகளை நோக்கியே மையம் கொண்டுள்ளது. நெஞ்சத் திரையில் மாநாட்டின் மாட்சிகள் - வண்ணமிகு காட்சிகள் ஓவியமாய் ஓடிக் கொண்டே இருக்கின்றது.
திராவிடர் கழகத்தின் தலைவர்-விடுதலை ஆசிரியர் - தமிழர் தலைவர் நம் அனைவரின் மூத்த அண்ணன் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டில், தி.மு.கழகத்தின் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், நாளைய முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுரை ஆற்றுவதும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களும், நம் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு முழக்கமிடுவதும் மகிழ்ச்சிக்கு உரியதாகும்!
‘இன உணர்வோடு அனைவரும் மாநாட்டுக்கு அணி திரண்டு வாருங்கள்’ என்று, பெரியாரின் பேரன்-திராவிட இயக்கப் போர்வாள் எனும் உணர்வோடு அழைக்கின்றேன். தமிழ் இன விடுதலைக்கு வழிகாட்டும் திராவிடர் கழகப் பவள விழா மாநாடு, வெற்றிகளைக் குவிக்கவும், புதிய சரித்திரம் படைக்கவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகின்றேன்.

Sunday, August 25, 2019

பேரறிஞர் அண்ணா - பெருந்தலைவர் காமராஜர் பெயர் பலகை அகற்றம் சென்னை விமான நிலைய முற்றுகை-மதிமுகவினர் கைது!

பேரறிஞர் அண்ணா பன்னாட்டு - பெருந்தலைவர் காமராஜர் உள்நாட்டு விமான நிலைய பெயர் பலகை அகற்றிய மத்திய அரசையும், தடுக்க தவறிய மாநில அரசையும் கண்டித்து, இன்று 25-08-2019 காலை 10:30 மணி அளவில் மறுமலர்ச்சி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திரிசூலம் இரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற போது, மதிமுகவினரை காவல்துறையினர் தடுத்து கைது செய்து. மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், ஊனை பார்த்திபன், தேர்தல் பணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் ஆயிரக் கணக்கில் கலந்துகொண்டு கைதாகினர்.

Saturday, August 24, 2019

மதிமுக இளைஞர் அணியின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், இன்று 24.8.2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை தாயகத்தில், மாநில இளைஞரணிச் செயலாளர் பொறியாளர் வே.ஈசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் அரசியல் ஆய்வு மையச் செயலாளர் பொறியாளர் மு.செந்திலதிபன், மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் க.அழகுசுந்தரம், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, மா.வை. மகேந்திரன், அணிச் செயலாளர்கள் மணவை தமிழ்மாணிக்கம், பால.சசிகுமார், ஆ.பாஸ்கர சேதுபதி மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1:
தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழ்நாட்டு வாழ்வாதாரத்தைக் காக்கவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்ற போராளி திராவிட இயக்கத்தின் போர்வாள் கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், பொதுச்செயலாளர் தன்னுடைய அசாத்திய திறமையாலும் அறிவாற்றலாலும் நமது மாநிலமான தமிழ்நாட்டுக்காக மட்டுமன்றி, இந்தியா முழுவதிலுமான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணும் வகையில் மாநிலங்களவையில் தனது ஆழமான கருத்துக்களை எடுத்து வைத்து உரையாற்றி வருவதற்கும் இந்தக் கூட்டம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:
பிற்படுத்தப்பட்ட சாமானிய மக்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக உழைத்திட்ட பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செப்டம்பர் 15-ஆம் தேதியன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. இம்மாநாட்டில் இளைஞர் அணியினர் சீருடையுடன் பெரும் திரளாக பங்கெடுப்பது என்று இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 3:
பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகின்ற வரையில் இந்த நாட்டில் இருமொழிக் கொள்கையே இருக்குமென்று நாடாளுமன்றத்தில் உறுதிமொழி அளித்திட்ட முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உறுதிமொழியை குழிதோண்டிப் புதைக்கின்ற வகையில் மும்மொழிக் கொள்கை என்கின்ற பெயரில் கட்டாயமாக இந்தியைத் திணிக்கின்ற மத்திய அரசாங்கத்தின் முயற்சியையும், மூன்றாம் வகுப்பிலிருந்தே பொதுத்தேர்வு என்கின்ற புதிய கல்வி முறையைப் புகுத்தி, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு பங்கம் விளைவிக்கின்ற புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

கல்வித்துறையை முழுவதுமாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், மாநிலங்களின் கருத்துக்களை கேட்காமலேயே, மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிராக மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கின்ற இந்த புதிய கல்விக் கொள்கை திட்டத்தை முற்றிலுமாக புறக்கணிக்கின்றோம்.

தீர்மானம் 4:
உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் நகர்புற மற்றும் கிராமபுறங்களில் இருக்கின்ற சுகாதார சீர்கேட்டை சரிசெய்யவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், சாக்கடை வசதிகள், சாலை வசதிகளை சீர்படுத்தவும், உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிதுவத்தை நிலைநாட்ட விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட மாநில அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5:
தலைமைக் கழகம் அறிவுறுத்தி இருக்கின்றபடி, வருகின்ற அக்டோபர் மாதம் துவங்க இருக்கின்ற புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் மாவட்ட கழகத்துடன் இணைந்து புதிய இளைஞர்களை கழகத்தில் சேர்த்து இயக்கத்திற்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞர் அணியினர் தீவிரமாக செயல்படுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 6 :
சென்னை விமான நிலையத்தில் பேரறிஞர் அண்ணா பெயரில் பன்னாட்டு முனையமும், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்நாட்டு முனையமும் செயல்பட்டு வந்த நிலையில், விமான நிலைய நிர்வாகம் இரு தலைவர்கள் பெயரையும் நீக்கிவிட்டு புதிய பெயர் பலகைகளை அமைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா பெயர்களை விமான நிலைய பெயர் பலகையில் நீக்கி இருப்பதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

முன்பு இருந்தது போன்று உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும் பன்னாட்டு முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரையும் உடனடியாக இடம்பெறச் செய்ய வேண்டும். இல்லையேல் விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம், தலைவர் வைகோ அவர்கள் அனுமதியுடன் மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்தப்படும் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.

இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் திட்டங்களைக் கைவிடுக-வைகோ வேண்டுகோள்!

2014 இல் பாரதிய ஜனதா அரசு பொறுப்பு ஏற்றது முதல், இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பிபேக் தேப்ராய் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்து இருக்கின்றது.
ஆனாலும், இரயில்வே துறை தனியார் மயம் ஆகாது என்று இரயில்வே அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, பியுஷ் கோயல் கூறி வந்தனர்.
கடந்த மே மாதம் இரண்டாவது முறையாகப் பொறுப்பு ஏற்ற பின்பு, ‘100 நாள் செயல் திட்டம்’ என்ற பெயரில், இரயில்வே உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க பாஜக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
நெரிசல் இல்லா வழித் தடங்களிலும், சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள வழித் தடங்களிலும், தங்க நாற்கரப் பாதை எனப்படும் சென்னை - மும்பை, மும்பை - டெல்லி, டெல்லி - ஹௌரா, ஹௌரா - சென்னை வழித்தடங்களிலும், தனியார் நிறுவனங்கள் தொடரிகளை ஓட்டுவதற்கு உரிமம் அளிக்கின்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜதானி, சதாப்தி உள்ளிட்ட பிரிமியம் கட்டண இரயில்களைத் தனியார் இயக்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு, பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே இரயில்வேத் துறைக்குச் சொந்தமான அச்சகங்கள் மூடப்பட்டு உள்ளன. பயணச் சீட்டு வழங்குவதையும், இரயில் பெட்டி தயாரிப்பு, இரயில் இயந்திரம் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் ஏழு உற்பத்தி ஆலைகளையும், இரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளையும் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க இரயில்வே துறை முனைந்துள்ளது.
இந்நிலையில், இரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாகக் காரணம் கூறி, ஐ.ஆர்.சி.டி.சி.யின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய நேற்று முன்தினம் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மத்திய அரசு விண்ணப்பித்துள்ளது. ரூபாய் 10 முகமதிப்பு கொண்ட இரண்டு கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் ரூபாய் 600 கோடி வரை திரட்டுவதற்கு இரயில்வே துறை முடிவு எடுத்து இருக்கின்றது.
இரயில்வே துறையைப் புதுப்பிக்க, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 இலட்சம் கோடி முதலீடு தேவைப்படுகின்றது; ஆனால் ஆண்டுக்கு 1.6 இலட்சம் கோடி மூலதனம் இடும் சக்தி மட்டுமே இரயில்வே துறையிடம் இருப்பதால், தனியார் மூலதனம் தேவை என்று பா.ஜ.க. அரசு தனியார் மயத்தை நியாயப்படுத்துகின்றது.
நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரயில்வே துறையைப் புதுப்பிக்கத் தேவையான நிதி, பொதுத்துறை-தனியார் கூட்டின் மூலம் திரட்டப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும்; ஏழை எளிய மக்களுக்கு இரயில் பயணம் என்பது எட்டா கனியாக ஆகிவிடும். சரக்குக் கட்டணங்கள் கடுமையாக உயரும்; அதனால், விலைவாசி உயரும். இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
எனவே, முன்பு அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் வகையில், இரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 24-08-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Friday, August 23, 2019

மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!


மறுமலர்ச்சி தி.மு.க., மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள்/துணை அமைப்பாளர்கள், மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், 23.08.2019 வெள்ளிக்கிழமை தலைமைக் கழகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.


அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் பொறியாளர் மு. செந்திலதிபன் மற்றும் கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் க. அழகுசுந்தரம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1 :
தலைவர் வைகோ எம்.பி., அவர்களுக்குப் பாராட்டு!

டெல்லி நாடாளுமன்றத்தில் முதன்முதலாக 1978 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் சீரிய முறையில் பணியாற்றினார்.

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்திற்கு சென்று, காஷ்மீர் பிரச்சினை, முத்தலாக் சட்டப் பிரிவு, சட்ட விரோத தடுப்பு மசோதாக்களில் கம்பீரமாக முழக்கமிட்டு வரும் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு கழக மாணவர் அணியின் சார்பில் இக்கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து பெருமை கொள்கிறது.

தீர்மானம் 2:
பத்தாயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ‘மறுமலர்ச்சி மாணவர் மாநாடு’ நடத்திடுவோம்!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற கிளைகளை உருவாக்கி, 2020 ஆண்டு மத்தியில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும், ‘மறுமலர்ச்சி மாணவர் மாநாடு’ நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 3 :
கழக மாநாடு ஐந்தாயிரம் பேர் சீருடையில் பங்கேற்பீர்!

செப்டம்பர் 15, 2019 அன்று தலைநகர் சென்னையில் நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டில் கழக மாணவர் அணியினர் ஐந்தாயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்றுச் சிறப்பிப்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4:
கல்லூரிகளில் தலைவர் வைகோ உரை கேட்போம்!

திராவிடப் பேரியக்கத்தின் பணிகள் மற்றும் சாதனைகள் குறித்தும், தமிழக வாழ்வாதாரங்கள் குறித்தும், தமிழின வரலாறு குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், மாவட்டத்துக்கு ஒரு கல்லூரியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றுதற்கான ஏற்பாடுகளை மாணவர் மன்ற நிர்வாகிகளைக் கொண்டு மாணவர் அணி செயல்படுத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 

தீர்மானம் 5:
நீட் தேர்வை ரத்து செய்திடு!

மத்திய பா.ஜ.க. அரசு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியதன் மூலம் சாதாரண எளிய குடும்பப் பின்னணியில் தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகளை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது.

மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் உள்ள குளறுபடிகள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் வினாத்தாள், மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட, பயிற்சி மையத்தில் சேர்ந்தால்தான் நீட் தேர்வில் வெற்றிபெற இயலும் என்ற நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டு வருகிறது.

புற்றீசல் போல நீட் பயிற்சி மையங்கள் முளைத்திருப்பதும், மேல்நிலைப் படிப்பு பயில்வது கூட இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதும் கல்வித்துறையின் அவலம் ஆகும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கேட்டு, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு அலட்சியம் செய்து, குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது. இதனை எதிர்த்து போர்க்குரல் எழுப்ப வேண்டிய ஆளும் அதிமுக அரசும் மௌனம் காத்தது.

இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்போக்குச் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமான 10 விழுக்காடு ஒதுக்கீடு முறையை அகற்றிடவும், மருத்துவக் கல்வி பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பு மாணவ - மாணவிகளுக்கும் கிடைக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெற்றிடவும், மத்திய அரசின் பிடியிலிருந்து கல்வியை முழுமையாக மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் கொண்டு வருவதற்காகவும் மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி, தொடர்ந்து போராடுவது என்று இக்கூட்டம் முடிவெடுக்கிறது.

தீர்மானம் 6:
கஸ்தூரி ரங்கன் அறிக்கையை நிராகரித்திடுக!

கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட வரைவு அறிக்கை மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், சமூக நீதிக்கு சவக்குழி எழுப்பும் வகையிலும் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை நாடு முழுவதும் திணிக்கும் வகையிலும் 3, 6, 9 ஆகிய வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு கட்டாய பருவத் தேர்வு இதில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் கல்வி பயில வேண்டும் எனும் புதிய குலக் கல்வியை நடைமுறைப்படுத்தும் வகையிலும் உள்ளது.

எனவே இந்தப் புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்திற்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. கல்வியாளர்களுடன் கருத்துக் கேட்காமலும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விவாதிக்காமலும் அவசர அவசரமாக சங் பரிவார் கூட்டத்தின் நிர்பந்தத்துடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டத்தினால் கேடுகளே மிகுதி என்பதால் இதனை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

Wednesday, August 21, 2019

இனப்படுகொலைக் குற்றவாளி இராணுவத் தளபதியா? வைகோ கண்டனம்!

மனிதகுல வரலாற்றில் பல்வேறுகாலகட்டங்களில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலைகளில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் படுகொலைதான் மிகக் கொடூரமானதாகும்.
ஏழு அணு ஆயுத வல்லரசு களின் ஆயுத உதவிகளைப் பெற்று, சிங்களப் பேரினவாத அரசு நடத்திய தாக்குதல்களில், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்தப் படுகொலைகளை நடத்திய சிங்கள இராணுவ த்தின் 58 ஆவது டிவிசன் கமாண்டர் சவேந்திர சில்வா, யூதர்களைக் கொன்று குவித்த அடால்ப் இச்மனைப் போல், பன்னாட்டு நீதிமன்றத்தால் தூக்கில் இடப்பட வேண்டிய கொலைகாரப் பாவி ஆவான்.
ஐ.நா.வழங்கிய உதவிப் பொருட்கள், யுத்தத்தால் வீடு வாசல்களை இழந்து,காடுகளுக்குள் நிர்கதியாக நின்ற அப்பாவித் தமிழர்களுக்குக் கிடைக்க விடாமல் செய்தவன்;
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைப் பிடித்துச் சுட்டுக்கொல்ல ஆணை இட்டவன்;
தமிழ்ப் பெண்களின் மானத்தை கற்பைச் சூறையாடி, கொன்று குவித்த அரக்கன்;
இறுதிக்கட்டப் போரின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவ முகாம்கள் மீது குண்டுகளை வீசி, அங்கே சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த தமிழர்களைக் கொன்றவன்;
பால் பவுடரும் உணவுப் பொருட்களும் வாங்க வரிசைகளில் நின்ற தாய்மாய்கள் மீதும் குண்டுகளை வீசக்காரணம் ஆனவன்;
கொலைகார இராணுவத்தினரை வெள்ளை வேன்களில் அனுப்பி, தமிழர்களை இரத்த வேட்டை ஆடியவன்;
அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, நெஞ்சைப் பதற வைக்கின்ற படுகொலைகளைச் செய்த கயவன்தான் சவேந்திர சில்வா.
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலிலும், டப்ளின், பிரெம்மன் தீர்ப்பு ஆயங்களிலும் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் சவேந்திர சில்வாவின் கொலை பாதகச் செயல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம், சிங்கள இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சவேந்திர சில்வாவை, அதிபர் மைத்ரிபால சிறிசேனா நியமித்தபோதே தமிழர்கள் தலையில் இடி விழுந்தது. இப்போது தலைமைத் தளபதியாக நியமித்துள்ளார்.
கொலைகார ராஜபக்சே அரசில் இராணுவ அமைச்சராக இருந்த, சிறிசேனாவும் இனப்படுகொலைக் குற்றவாளியே.
இவர்கள் மூவருமே உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
சவேந்திர சில்வா நியமனத்திற்கு அமெரிக்க அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல நாடுகளின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஏழரைக்கோடித் தமிழர்களைக் குடிமக்களாகக் கொண்டுள்ள இந்திய அரசு கண்டிக்கவில்லை. மாறாக, கொஞ்சிக் குலவுகின்றது. மன்னிக்க முடியாத தவறுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது.
தமிழகத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தங்கள் மேனியில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக்கொண்டு உயிர்க்கொடை ஈந்தனர். அந்தத் தியாகம் வீண் போகாது.
காலம் மாறும்; ஈழத்தமிழர் பிரச்சினையின் பரிமாணமும் மாறும். இனப்படுகொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது அறிக்கையில் 21-08-2019 தெரிவித்துள்ளார்.

Monday, August 19, 2019

மதிமுக இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் நியமனம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் திரு கே.ஏ.எம் குணா அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பொறுப்பில் இயங்கும் நிலை இல்லை என்றும் தொடர்ந்து கழகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கழகப் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெற திரு எம்.பேட்ரிக் (முகவரி: எண் 3/2174, சேதுபதி நகர், பாம்பன், இராமநாதபுரம் மாவட்டம். கைபேசி எண் 9443289215) அவர்கள் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என்று மதிமுக தலைமை நிலையம் இன்று 19-08-2019 அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, August 18, 2019

காண்டூர் கால்வாயை, போர்க்கால நடவடிக்கையில் சீரமைத்திடுக - வைகோ வேண்டுகோள்!

பெருந்தலைவர் காமராஜர், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆகியோர் ஒருங்கிணைந்து கொண்டுவந்த பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம், ஆசியாவிலேயே முதல் திட்டம் ஆகும். இதன் விளைவாக, கொங்கு மண்டலம் தென்னை வளர்ப்பு உள்ளிட்ட வேளாண்மையில் சிறந்து விளங்குகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமாகவும், பரவலாகவும் மழை கொட்டித் தீர்த்தது. பரம்பிக்குளம், தூணக்கடவு நீர்பிடிப்புப் பகுதிகளில் பெருகிய வெள்ளத்தால், காண்டூர் கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், ஆழியாறு, திருமூர்த்தி அணைகளுக்கு வரும் நீர் தடைப்பட்டுள்ளது. எனவே, பழைய, புதிய பாசன விவசாயிகள் நீர் இன்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் வாழும் நாகர்ஊத்து எனும் கிராமம் முற்றிலுமாக அழிந்து விட்டது.
கடந்த முறை காண்டூர் கால்வாயைச் செப்பனிடும்போது, பல சிற்றோடைகளைத் தடுத்து நிறுத்தி, காண்டூர் கால்வாய்க்குத் திருப்பி விட்டனர். எனவே, அந்த வழியில், திடீரெனப் பெருமளவில் நீர் வந்ததே கால்வாய் உடைப்பிற்குக் காரணம் ஆகும்.
எனவே, காண்டூர் கால்வாயை உடனடியாகச் சீரமைத்து, பழைய, புதிய ஆயக்கட்டு விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிற்றோடைகளைத் திசை திருப்பாமல், அவற்றின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அப்போதுதான் நல்லாற்றுப் பாசன விவசாயிகள் சிறிதளவேனும் பயன்பெறக்கூடிய நிலை ஏற்படும்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், இதுவரை கட்டப்படாமல் இருக்கும் ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்தினால், இதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
ஆகவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் காண்டூர் கால்வாயைச் சீரமைக்க வேண்டும்; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 18-08-2019 தெரிவித்துள்ளார்.

Saturday, August 17, 2019

சேலம் மாநகர் மாவட்டம் சேலம் மத்தியம் மாவட்டமாக இயங்கும் - தலைமைக் கழக அறிவிப்பு!

சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மற்றும் சேலம் மாநகர் மாவட்டக் கழகங்களாக இயங்கி வரும் மாவட்டங்கள் இனி சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம் என அழைக்கப்படும். சேலம் மத்தியம் மாவட்டத்தில் அடங்கியுள்ள ஒன்றிய, நகரக் கழகங்கள் பின்வருமாறு:

(1) சேலம் மாநகர், (2) சேலம் ஒன்றியம்,
(3) ஓமலூர் ஒன்றியம், (4) ஏற்காடு ஒன்றியம்,
(5) காடையாம்பட்டி ஒன்றியம் (6) அயோத்தியாபட்டணம் ஒன்றியம்,
(7) வீரபாண்டி ஒன்றியம்

சேலம் மத்தியம் மாவட்டக் கழகத்திற்குப் பொறுப்பாளராக வழக்கறிஞர் ஆ.ஆனந்தராஜ் அவர்கள் (முகவரி : 1/129-சி, இராமலிங்கம் தெரு, அதிகாரிப்பட்டி,  உடையப்பட்டி (அஞ்சல்),சேலம் - 636 140; கைப்பேசி எண். 94432 - 68688) தொடர்ந்து கழகப் பணியாற்றுவார் என 17-08-2019 அன்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Friday, August 16, 2019

வைகோ நிகழ்ச்சிகளில் பட்டாசு தடை - தாயகம் அறிவுப்பு!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கழகத் தோழர்கள் ஆர்வமிகுதியால் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறும், தீ விபத்து ஏற்படும் அபாயமும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் நிகழ்கின்றது.

எனவே பட்டாசு வெடிப்பதை கழகத் தோழர்கள் கண்டிப்பாகக் கைவிட வேண்டும். இதனை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதிமுக தலைமைக் கழகம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று 16-08-2019 தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணா 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு - வைகோ அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள் அன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாடு, சென்னை - நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 8.30 மணிக்கு நாதசுவர இசையுடன் தொடங்கி நடைபெற உள்ளது.

இம்மாநாட்டிற்கு கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமை தாங்குகிறார்.

துணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி அவர்கள் மாநாட்டினைத் திறந்து வைக்கிறார்.

அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் ஈழ வாளேந்தி அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்கள் தந்தை பெரியார் சுடரினையும், மாநில மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் ரொஹையா அவர்கள் பேரறிஞர் அண்ணா சுடரினையும் ஏற்றி வைக்கிறார்கள்.

கழக தணிக்கைக் குழு உறுப்பினர் டி.டி.அரங்கசாமி அவர்கள் திராவிட இயக்கக் 
கண்காட்சியையும், கழக உயர்நிலைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் தமிழ ஈழக் கண்காட்சியையும் திறந்து வைக்கின்றார்கள்.

திமுக தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகிறார்.

முற்பகல் நிகழ்ச்சியில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முற்பகல் நிகழ்ச்சியில் நிறைவுரை நிகழ்த்துகிறார்.

திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஆரணி டி.ராஜா அவர்கள் தந்தை பெரியார் படத்தினையும், கழகத் தீர்மானக் குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன் அவர்கள் பேரறிஞர் அண்ணா படத்தினையும், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.வெற்றிவேல் அவர்கள் டாக்டர் நடேசனார் படத்தினையும், கழக உயர்நிலைக் குழு உறுப்பினர் இசைவாணன் குடியரசு அவர்கள் சர்.பிட்டி.தியாகராயர் படத்தினையும், மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர் மல்லிகா தயாளன் அவர்கள் டி.எம்.நாயர் படத்தினையும்  திறந்து வைக்கிறார்கள்.

மாநாட்டு நிதிக்குழு தலைவராக ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்களும், பந்தல் அலங்காரக் குழுத் தலைவராக தென்சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழககுமார், உபசரிப்புக் குழுத் தலைவராக கழக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி அவர்களும் கடமையாற்றுவார்கள்.

கழகக் கொள்கைவிளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம் அவர்கள் தொகுப்புரை வழங்குவார். கழகத் தீர்மானக் குழுச் செயலாளர் ஆவடி இரா.அந்திரிதாஸ் அவர்கள் மாநாட்டுத் தீர்மானங்களை வாசிப்பார்.

அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் உதயம் கோ.இராதா, கழக இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் கோமகன், மாவட்டப் பொறுப்பாளர்கள் - வடசென்னை மேற்கு டி.சி.இராஜேந்திரன், காஞ்சிபுரம் கிழக்கு ஊனை ஆர்.இ.பார்த்திபன், காஞ்சிபுரம் மேற்கு இ.வளையாபதி, காஞ்சிபுரம் வடக்கு மா.வை.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

மாலையில், சொற்பொழிவாளர்கள் உரை நிகழ்த்துகிறார்கள். அதன்பிறகு,

காஷ்மீர் முன்னாள் முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களும், மத்திய முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா அவர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநிலங்கள் அவைக் குழுத் தலைவர் டெரிக் ஓ பிரியன் அவர்களும் உரை நிகழ்த்துகிறார்கள்.

அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் புலவர் சே.செவந்தியப்பன், கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, துரை.பாலகிருஷ்ணன், கழக அவைத் தலைவர் சு.துரைசாமி ஆகியோரும் உரை நிகழ்த்துகிறார்கள்.

நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
காலை 9 மணிக்கு நெல்லை அபுபக்கர் இன்னிசை நிகழ்ச்சியும், மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை ஒரத்தநாடு கோபு மற்றும் ஒரத்தநாடு கணேஷ் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

தென்சென்னை மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சைதை ப.சுப்பிரமணி நன்றியுரை நிகழ்த்துகிறார் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 16-08-2019 தெரிவித்துள்ளார்.

Tuesday, August 13, 2019

நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து தலைமைக் கழக அறிவிப்பு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நியூட்ரினோ எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் 2019 ஆகஸ்ட் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேனி மாவட்டக் கழக ஆலோசனைக் கூட்டம் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மதுரை, அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும், 19.08.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மதுரை, அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டங்களில் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார் என தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 13-08-2019 தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு குறித்து கழக கண்மணிகளுக்கு வைகோ வேண்டுகோள்!

2019 செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு தமிழகம் முழுவதும் மாவட்டக் கழக கூட்டங்கள் ஒன்றிய நகர கழக கூட்டங்கள் நடத்தி மாநாட்டு பணிகளை துரிதப் படுத்த வேண்டும். கழகம் நடத்துகிற இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெற இருக்கிறது.
மாநாட்டுக்கான வாகன ஏற்பாடுகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு நகரம் ஒன்றியம் வாரியாக ஏற்பாடு செய்யப்படும் வாகனங்கள் பற்றிய விவரங்கள், வாகனங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 13-08-2019 அன்று தெரிவித்த்ள்ளார்.

Sunday, August 11, 2019

46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் வைகோ!

தமிழியக்கம் சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் 46 ஆயிரம் தூய தமிழ்ப் பெயர்கள் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் இன்று 11-08-2019 புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி அவர்கள் முதல் நூலை வெளியிட மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் பெற்றுக் கொண்டார். 

விழா மேடையிலேயே 25,000 (இருபத்தி அய்யந்தாயிரம்) செலுத்தி 100 நூல்களைப் கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி அவர்கள்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கருத்தரங்கம்!

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கருத்தரங்கம்  வைகோ தலைமையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராசன் முன்னிலையில் ஆகஸ்ட் 13 சென்னையில் நடைபெறுகிறது.

அனைத்து கட்சிகள், அமைப்புகள் பங்கேற்கின்றார்கள். அனைவரும் கலந்துகொள்க.

ஆசிரியர் கே.எஸ்.லோகையன் நினைவேந்தலில் வைகோ!

மாநில மாணவரணி துணைச் செயலாளர் திருவண்ணாமலை பாசறைபாபு அவர்கள் தந்தை ஆசிரியர் கே.எஸ்.லோகையன் நினைவேந்தல் நிகழ்வு இன்று 11-08-2019 நடந்தது. இந்த நிகழ்வில் தலைவர் வைகோ எம்பி அவர்கள் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

பா.இராமச்சந்திர ஆதித்தனார் திருஉருவப் படத்திற்கு வைகோ மலர் அஞ்சலி!

கதிரவன், மாலைமுரசு; ஏடுகளில் தமிழ் இன உரிமைக் குரலை அஞ்சாது ஒலிக்கச் செய்த பெருமகன் அய்யா பா.இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 85 ஆவது பிறந்த நாளை ஒட்டி, அவரது திருஉருவப் படத்திற்கு சென்னையில் கழகப் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் இன்று 11-08-2019 மலர் அஞ்சலி செலுத்தினார்.

Saturday, August 10, 2019

மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் தீர்மானங்கள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் இன்று 10.08.2019 சனிக்கிழமை, காலை 10.00 மணிக்கும், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் காலை 11.00 மணிக்கும், சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1:

இந்துத்துவ சனாதன சக்திகளின் நீண்ட நாளைய திட்டமான காஷ்மீர் மாநிலத்தின் தனி சிறப்புரிமையைப் பறிக்க வேண்டும் என்பதை பாரதிய ஜனதா கட்சி அரசு நாடாளுமன்றத்தில் பெற்றிருக்கும் மிருக பலத்தின் துணை கொண்டு செயல்படுத்தி இருக்கின்றது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் அம்மாநில நிரந்தர குடிமக்களுக்கு சிறப்புரிமை வழங்கும் சட்டப் பிரிவு 35ஏ ஆகிய இரண்டையும் நரேந்திர மோடி அரசு நாடாளுமன்றத்தில் சட்ட முன்வடிவு கொண்டுவந்து நீக்கி இருக்கின்றது. ஆகஸ்டு 5 ஆம் தேதி, மாநிலங்களவையிலும். 6 ஆம் தேதி மக்களவையிலும் காஷ்மீர் சிறப்புரிமையை ரத்து செய்யும் சட்ட முன்வடிவை பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது.
நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் தொடர்பான சட்ட முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆகஸ்டு 5 ஆம் தேதி மாநிலங்கள் அவையில் இச்சட்ட முன்வடிவு தாக்கல் செய்த சிறிது நேரத்திலேயே அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார் என்று குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துவிட்டது. நாடாளுமன்றத்திற்கு இதைவிட பெரும் அவமதிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.
பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றி உள்ள சட்ட முன்வடிவுகளின் படி காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகக் கூறுபோடப்பட்டுள்ளது. சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீரும், சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் பகுதியும் மாற்றப்படுகிறது.
காஷ்மீர் மக்களின் உணர்வுபூர்வமானப் பிரச்சினைகளை பாரதிய ஜனதா அரசு அணுகி உள்ள முறை காஷ்மீரை - கொசாவா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போன்று மாற்றிவிடும் ஆபத்து நேரிடும் என்று மாநிலங்கள் அவையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மிகச் சரியாக எச்சரிக்கை முழக்கமிட்டுள்ளார்.
இந்தியா விடுதலை அடைந்த பின்னர், காஷ்மீர் சமஸ்தான மன்னர் ஹரிசிங், அங்கு பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதா? பாகிஸ்தானுடன் சேர்ப்பதா? என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார்.
காஷ்மீரை இணைத்துக்கொள்ள விரும்பிய பாகிஸ்தான், தனது இராணுவத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது. மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்திய எல்லையிலிருந்து இந்திய இராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து அந்நாட்டு இராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின.
காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அதனை சுதந்திர காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர்) என்று பாகிஸ்தானும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று இந்தியாவும் கூறி வருகின்றன.
பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய இராணுவம் கைப்பற்றிக்கொண்டது. காஷ்மீர் மீதான உரிமைக்கு இரு நாடுகளும் போட்டியிட்டன.
இந்தப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்குச் சென்றதால் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் 21.04.1948 இல் தீர்மானம் (47) நிறைவேற்றப்பட்டு, இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது நிறைவேறவில்லை.
மேலும் காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஐ.நா.மன்றத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. பண்டித நேரு தலைமையிலான இந்திய அரசு பொதுவாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டது.
ஆனால். பிரதமர் நேரு, ஒப்பந்தப்படி காஷ்மீரத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தாமல், ஐ.நா. ஒப்பந்தத்தை கை கழுவினார். காஷ்மீர் மக்களின் தனித்தன்மையை நிலைநாட்டிட அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ உருவாக்கப்பட்டு, காஷ்மீரத்திற்கு சிறப்புரிமை வழங்கப்பட்டது.
காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கப்பட்ட போதே, ஜனசங்கத் தலைவர் டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி அதனை எதிர்த்தார். தற்போது நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுவிட்ட பாரதிய ஜனதா கட்சி அரசு, தமது இந்துத்துவ மதவாதக் கண்ணோட்டத்தைச் செயல்படுத்தி இருக்கின்றது.
காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நீர்மூலம் ஆக்கிவிட்டு, ‘ஆளுநர் ராஜ்யம்’ நடத்துகின்ற பா.ஜ.க. அரசு, காஷ்மீர் மக்களின் உணர்வுப்பூர்வமான எண்ணங்களைப் பொசுக்கிவிட்டு, அம்மக்களின் கருத்தறியாமல் ஏதேச்சாதிகாரமான முறையில் செயல்பட்டு இருக்கின்றது.
காஷ்மீர் மக்கள் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று கொந்தளிக்கின்ற வேளையில், அங்கு தீவிரவாதம் மேலும் வலுவடையும். இந்தியாவின் பகை நாடுகள் காஷ்மீரத்தைப் பன்னாட்டு விவகாரமாக மாற்றுவதற்கு முயலும். ஐ.நா. மன்றம் தலையிடும் நிலையும் உருவாகி இருக்கின்றது.
வளர்ச்சியின் பெயரால் காஷ்மீர் பள்ளத்தாக்கு இனி பெரும் குழும நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு, எழில் கொஞ்சும் காஷ்மீர் சிதைக்கப்பட்டுவிடும்.
காஷ்மீர் பிரச்சினையில் பா.ஜ.க. அரசு மேற்கொண்ட ‘வரலாற்றுப் பிழை’ மீள முடியாத புதைகுழிக்குள் இந்தியாவைத் தள்ளி இருக்கின்றது என்பதால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.
தீர்மானம் 2:
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆகஸ்டு 5 ஆம் தேதி காலை 11 ம ணி அளவில் நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் சந்தித்து, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கோரிவிட்டு, தமிழகம் எதிர்நோக்கி இருக்கும் பேராபத்துகளையும், பிரதமரின் நேரடி கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
இந்தியாவில் தயாராகும் ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைத் தொழிலைக் காக்க வேண்டும்.
நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்; அணை பாதுகாப்பு மசோதா கூடாது; கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டக் கூடாது; சோழவள நாட்டைப் பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் அளித்தார்.
இத்தகையத் திட்டங்களால் தமிழ்நாடு சந்திக்கப் போகும் விபரீதங்களைக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பிரதமரிடம் விளக்கினார்.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.
கர்நாடகத்தில் மேகேதாட்டு அணை கட்டினால் அதன் பிறகு தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்காது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். இதன் விளைவுகள் கேடாக முடியும். இந்தியாவில் நாம் ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எதிர்காலத் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்பட்டுவிடும். எனவே. மேகேதாட்டு அணை கட்டுமானத்தைத் தடுக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
அணைப் பாதுகாப்பு மசோதாவால் இந்தியாவில் பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான். அந்தந்த மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என்றால். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று கேட்கும் நிலை வரும் என்று தெரிவித்தார்.
2010 டிசம்பர் 5ஆம் தேதி அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை வைகோ சந்தித்து. அணை பாதுகாப்பு மசோதாவை நீங்கள் நிறைவேற்றினால், சோவியத் ரஷ்யா போல இந்தியா தனித்தனி நாடகள் ஆகும் நிலைமை ஏற்படும் என்று தன் கவலையைத் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டு, அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைத்தார். இன்று அதே கருத்தை பிரதமர் மோடியிடமும் வலியுறுத்தினார். இதே நிலைமை நீடித்தால், இந்திய சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்றபோது, இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்காது. வரப்போகின்ற ஆபத்தைச் சொல்ல வேண்டியது தனது கடமை என்றும் பிரதமரிடம் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் குறிப்பிட்டார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப் பிரிவு 370, 35ஏ வழங்கி உள்ள சிறப்பு உரிமையைப் பறித்தால், அதன் விளைவுகள் விபரீதமாகக்கூடும். காஷ்மீர் பிரச்சினை என்பது கொசாவோ, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போல ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டுக்கு உள்ளாக நேரிடும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கருத்தைக் கவனமாகக் கேட்டறிந்த பிரதமர் மோடி அவர்கள், ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைகள் தொழில் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்காக பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து வலியுறுத்திய கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுக்களை உரித்தாக்குகிறது.
தீர்மானம் 3:
மாநிலங்கள் அவையில் இந்திய மருத்துவ ஆணைய மசோதா பற்றிய விவாதம் ஆகஸ்டு 2 ஆம் தேதி நடைபெற்றது. மேற்கு வங்கம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களின் உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்த்தன் விவாதங்களுக்கு இந்தியில் பதில் கூறத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இது மருத்துவம் குறித்த விவாதம். அதில் நுணுக்கமான சொற்களை ஆங்கிலத்தில்தான் சொல்ல முடியும். எனவே, நீங்கள் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றார்.
அமைச்சரும் அதை ஏற்றுக்கொண்டு, ஆங்கிலத்தில் உரையாற்றினார். உடனே, வடநாட்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, அமைச்சர் இந்தியில்தான் பேச வேண்டும் என்று கூச்சல் போட்டனர்.
உடனே வைகோ அவர்கள் இந்தியில் பேசக்கூடாது; உங்களுக்கு இந்தி வேண்டுமா? இந்தியா வேண்டுமா? உங்களுடைய வெறிப்போக்கு இந்தியாவை உடைத்துவிடும் என்று உரத்த குரலில் முழங்கினார்.
வைகோவைப் பார்த்து ஆத்திரத்தோடு இந்தியில் கூச்சல் போட்டார்கள். தேச விரோதி என்றார்கள். நீங்கள் இந்து ராஷ்டிரா வெறியர்கள். உங்கள் கூச்சல்களுக்கு நான் அஞ்சமாட்டேன். இந்தியை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தை எரித்து சிறைக்குப் போனவன் நான் என்று வைகோ பதிலடி கொடுத்தார். மோதல் ஏற்படும் நிலை உருவானது.
மாநிலங்கள் அவையில் இந்தி வெறியர்கள் நூறு பேர் எழுந்து நின்று இந்தியில் கூச்சல் எழுப்பியபோது, “ஒழியட்டும்! ஒழியட்டும்! இந்தி ஆதிக்கம் ஒழியட்டும்! அழியட்டும்! அழியட்டும் இந்தி ஆதிக்கம் அழியட்டும்! ஒழிகவே! ஒழிகவே! இந்தி ஆதிக்கம் ஒழிகவே!” என்று வைகோ அவர்கள் தீரத்துடன் தனி ஒருவராக துணிச்சலுடன் தொடர்ந்து முழக்கமிட்டார்.
அதன்பின்னர் அமைச்சர் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி உரையாற்றினார். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், மொழிப் பிரச்சினையால் இங்கே மோதல் ஏற்பட்டது. இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் இங்கே பேசலாம். இனிமேல் திணிப்பும் இல்லை; எதிர்ப்பும் இல்லை என்றார். 41 ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலங்கள் அவையில் இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர முழக்கமிட்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், அதே உணர்வுடன் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக சிம்மசொப்பனமாக திகழ்வதற்கு இக்கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 4:
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டை செப்டம்பர் 15, 2019 அன்று சென்னையில் முழு நாள் மாநாடாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5:
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை, கழகம் அனுசரிக்கும் சூளுரை நாளான அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்குவது என்றும், கழகத்தின் அமைப்புத் தேர்தல்களை அடுத்த ஆண்டு 2020 ஆகஸ்டு மாதத்திற்குள் நடத்தி முடிப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம் 6:
கரூர் மாவட்டம், புகளூர் விசுவநாதன், மணல் கொள்ளையை எதிர்த்துப் பலப் போராட்டங்களை நடத்தியவர். காவிரி பாதுகாப்புக் கூட்டங்களை புகளூர் விசுவநாதன் நடத்தியபோது, சமூக செயல்பாட்டாளர் முகிலன் அதில் பங்கேற்று இருக்கிறார். தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் முகிலன் வழக்கில் பொய் சான்று அளிக்குமாறு காவல்துறை புகளூர் விசுவநாதனிடம் மிரட்டல் விடுத்திருக்கிறது. அதற்கு அடிபணிய மறுத்ததால், சமூக ஆர்வலர் விசுவநாதனை ஆகஸ்டு 7ஆம் தேதி இரவு அவரது வீட்டுக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அவரை தரதரவென இழுத்து கை கால்களில் காயம் ஏற்படும் அளவுக்கு பலவந்தமாக பலத்தைப் பிரயோகித்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
சட்ட நடைமுறைகளையும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், புகளூர் விசுவநாதனை தீவிரவாதி போன்று சித்தரித்து, பொய் வழக்கில் கைது செய்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
தமிழுக்கும், தமிழ்பண்பாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிய பெருமைமிக்க குடும்பத்தைச் சேர்ந்த விசுவநாதனின் அண்ணன் திரு. இளங்கோ அவர்கள். டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, மொழிப் போராட்டத் தியாகிகளுக்கு ஓய்வூதியம் பெற்றுத் தரக்கோரினார். அதனை கலைஞர் நிறைவேற்றினார். அத்தகைய சிறப்பு வாய்ந்த குடும்பப் பின்னணியும், தமிழ் உணர்வும், சமூக உணர்வும் மிக்க புகளூர் விசுவநாதன் அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெற்று, உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
மேலும், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 38 வழக்குகளைப் போட்டு, ஆதிக்கத்திற்கு எதிரான அவரின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது. சமூக ஆர்வலர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு, அடக்குமுறையை ஏவும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:
தமிழகத்துக்கு வீட்டு வசதி, மகளிர் மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அந்த வகையில் தமிழக அரசுக்கு 14 ஆவது நிதி ஆணையம் 2017-18 ஆம் நிதி ஆண்டில் 5,920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இந்த நிதியை குறிப்பிட்ட கால அளவுக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லையேல், அந்த நிதி மத்திய அரசுக்கு திரும்பச் சென்றுவிடும். தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் 3676 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல், மத்திய அரசுக்கு திரும்பச் சென்றுள்ளது. மத்திய தணிக்கைத் துறை வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் மூலம் தமிழக அரசின் மெத்தனப் போக்கு அம்பலமாகி இருக்கிறது.
கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 194.78 கோடியும், கிராமப் புற தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 97.65 கோடியும், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்ட்ட நிதியில் 247.84 கோடியும் பயன்படுத்தப் படாததால், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மகளிர் மேம்பாட்டுக்கான சுயஉதவிக் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட 23.84 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கு உரிய பங்கீடு வழங்குவது இல்லை என்று தமிழக அரசு கூறி வரும் நிலையில், தமிழகத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3676 கோடி ரூபாயை திரும்ப ஒப்படைத்தது கண்டனத்துக்கு உரியது.
தீர்மானம் 8:
இந்திய ஜவுளித்துறையில் மிக முக்கிய தொழிலாக இருப்பது பருத்தி நூல் தயாரிப்பு ஆகும். தமிழகமும் பருத்தி நூல் தயாரிப்புத் தொழிலில் முன்னணியில் உள்ளது. உலகின் மொத்த பருத்தி நூல் தேவையில் 26 சதவிகிதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. நாட்டின் மொத்த பருத்தி நூல் உற்பத்தியில் 32 சதவிகிதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில், 27 சதவிகிதமாக இது குறைந்துள்ளது. இந்தியாவின் நூலை இறக்குமதி செய்வதில் சீனா முதலிடத்திலும், ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த இடத்திலும் உள்ளன.
இந்திய நூலுக்கு சீனாவில் 3.5 சதவிகிதமும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 4 சதகிவிதமும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொண்டு, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து பருத்தி நூலை அதிகமாக இறக்குமதி செய்கின்றன. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் நூற்பாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்), கடந்த ஆண்டைக் காட்டிலும், பருத்தி நூல் ஏற்றுமதி சுமார் 33 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் பாகிஸ்தானுக்கும் இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், இனி பாகிஸ்தானிலிருந்தும் சீனா தமது தேவைக்கான நூலை கொள்முதல் செய்துகொள்ளும். இதனால், இந்தியாவிலிருந்து சீனாவுக்கான நூல் ஏற்றுமதி மேலும் குறையும்.
கடந்த சில மாதங்களாக நலிந்து வரும் நூற்பாலைகளுக்கு இது மேலும் ஒரு பேரிடியாகும். எனவே, ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகை, வட்டி சலுகை, மத்திய - மாநில அரசுகளுக்கான வரிகளைத் திரும்பப் பெரும் சலுகை, சர்வதேச விலைக்கு நிகராக இந்திய நூலின் விலையைக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதன் மூலம் நூற்பாலைகள் நலிவு அடைவதைத் தடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைமையை தவிர்க்க முடியும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9:
கோவை, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பெரும் மழை பெய்துள்ளது. அவலாஞ்சி பகுதியில் நேற்று காலை 8 மணி அளவில் அதிகபட்சமாக 91 செ.மீ. மழை பதிவானது. இதனால் அவலாஞ்சி, மேல்பவானி, எமரால்டு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவுகளால் நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் கனமழை காரணமாக ஓடைகள், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே, சர்கார்பதி வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 22 குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையிலும் கன மழை கொட்டியதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மீட்புப் பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் 10:
ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற வேலூர் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கதிர்ஆனந்த் அவர்களை வெற்றிபெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.