பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆகஸ்டு 12 ஆம் நாள், திங்கள் கிழமை சென்னை காமராசர் அரங்கத்தில் நடத்த இருக்கும் திருக்குறள் மாநாடு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத மாநாடு ஆகும்.
தமிழ்நாட்டில் திருக்குறள் மாநாட்டினை முதன் முதலில் மிகப்பெரிய அளவில் நடத்தியவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்தான். அதற்கு முன்னால் ஒன்றிரண்டு மாநாடுகள் நடைபெற்றதாக இராவண காவியம் தீட்டிய புலவர் குழந்தை குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தமிழக மக்கள் உள்ளங்களைக் கவரும் வகையில் பகுத்தறிவுப் பாசறையின் சார்பாக, திருக்குறள் மாநாடுகளைத் தொடர்ந்து நடத்தியவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.
செத்துப்போன வடமொழியை புத்துயிர் கொடுத்துத் திணிக்கவும், இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டவும், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சனாதன சக்திகளின் வட ஆரிய கலாச்சார படையெடுப்பைத் தடுத்து நிறுத்தவும், தமிழ் இனத்தின் தன்னேரிலா பண்பாட்டு விழுமியத்தை உயர்த்தவும் உலகப் பொதுமறையாம் திருக்குறளை முன்னிறுத்துவதுதான் சரியான போர் முறையாகும். அதனைப் பெரியாரிய உணர்வாளர்கள் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், அமைப்புகள் ஒரே இலக்கினை முன்வைத்து ஒன்று சேர்ந்து நடத்துகின்ற இம்மாநாடு, 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் காமராசர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.
செந்தமிழ் மொழிக்கு பொன்மகுடம் சூட்டவும், தமிழ் இனத்துக்கு விடியலைக் காணவும், தமிழ் ஈழ விடியலை நிலைநாட்டவும் உணர்வுகொண்ட தமிழர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்வது தலையாய கடமை ஆகும் என்பதால், தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் தொண்டு செய்யும் ஊழியன் என்ற முறையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் இருகரம் கூப்பி வேண்டுகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 10-08-2019 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment