மறுமலர்ச்சி தி.மு.க., மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள்/துணை அமைப்பாளர்கள், மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் கூட்டம், 23.08.2019 வெள்ளிக்கிழமை தலைமைக் கழகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.
அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் பொறியாளர் மு. செந்திலதிபன் மற்றும் கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் க. அழகுசுந்தரம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண் 1 :
தலைவர் வைகோ எம்.பி., அவர்களுக்குப் பாராட்டு!
டெல்லி நாடாளுமன்றத்தில் முதன்முதலாக 1978 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் சீரிய முறையில் பணியாற்றினார்.
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்திற்கு சென்று, காஷ்மீர் பிரச்சினை, முத்தலாக் சட்டப் பிரிவு, சட்ட விரோத தடுப்பு மசோதாக்களில் கம்பீரமாக முழக்கமிட்டு வரும் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு கழக மாணவர் அணியின் சார்பில் இக்கூட்டம் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து பெருமை கொள்கிறது.
தீர்மானம் 2:
பத்தாயிரம் மாணவர்கள் பங்கேற்கும் ‘மறுமலர்ச்சி மாணவர் மாநாடு’ நடத்திடுவோம்!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் மறுமலர்ச்சி மாணவர் மன்ற கிளைகளை உருவாக்கி, 2020 ஆண்டு மத்தியில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும், ‘மறுமலர்ச்சி மாணவர் மாநாடு’ நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண் 3 :
கழக மாநாடு ஐந்தாயிரம் பேர் சீருடையில் பங்கேற்பீர்!
செப்டம்பர் 15, 2019 அன்று தலைநகர் சென்னையில் நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்தநாள் விழா மாநாட்டில் கழக மாணவர் அணியினர் ஐந்தாயிரம் பேர் சீருடையுடன் பங்கேற்றுச் சிறப்பிப்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4:
கல்லூரிகளில் தலைவர் வைகோ உரை கேட்போம்!
திராவிடப் பேரியக்கத்தின் பணிகள் மற்றும் சாதனைகள் குறித்தும், தமிழக வாழ்வாதாரங்கள் குறித்தும், தமிழின வரலாறு குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில், மாவட்டத்துக்கு ஒரு கல்லூரியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றுதற்கான ஏற்பாடுகளை மாணவர் மன்ற நிர்வாகிகளைக் கொண்டு மாணவர் அணி செயல்படுத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5:
நீட் தேர்வை ரத்து செய்திடு!
மத்திய பா.ஜ.க. அரசு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியதன் மூலம் சாதாரண எளிய குடும்பப் பின்னணியில் தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகளை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது.
மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வில் உள்ள குளறுபடிகள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் வினாத்தாள், மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள்கூட, பயிற்சி மையத்தில் சேர்ந்தால்தான் நீட் தேர்வில் வெற்றிபெற இயலும் என்ற நிலைமை திட்டமிட்டே உருவாக்கப்பட்டு வருகிறது.
புற்றீசல் போல நீட் பயிற்சி மையங்கள் முளைத்திருப்பதும், மேல்நிலைப் படிப்பு பயில்வது கூட இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதும் கல்வித்துறையின் அவலம் ஆகும்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கேட்டு, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு அலட்சியம் செய்து, குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது. இதனை எதிர்த்து போர்க்குரல் எழுப்ப வேண்டிய ஆளும் அதிமுக அரசும் மௌனம் காத்தது.
இந்த நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்போக்குச் சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமான 10 விழுக்காடு ஒதுக்கீடு முறையை அகற்றிடவும், மருத்துவக் கல்வி பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பு மாணவ - மாணவிகளுக்கும் கிடைக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெற்றிடவும், மத்திய அரசின் பிடியிலிருந்து கல்வியை முழுமையாக மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் கொண்டு வருவதற்காகவும் மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி, தொடர்ந்து போராடுவது என்று இக்கூட்டம் முடிவெடுக்கிறது.
தீர்மானம் 6:
கஸ்தூரி ரங்கன் அறிக்கையை நிராகரித்திடுக!
கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட வரைவு அறிக்கை மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், சமூக நீதிக்கு சவக்குழி எழுப்பும் வகையிலும் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை நாடு முழுவதும் திணிக்கும் வகையிலும் 3, 6, 9 ஆகிய வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு கட்டாய பருவத் தேர்வு இதில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழில் கல்வி பயில வேண்டும் எனும் புதிய குலக் கல்வியை நடைமுறைப்படுத்தும் வகையிலும் உள்ளது.
எனவே இந்தப் புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்திற்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. கல்வியாளர்களுடன் கருத்துக் கேட்காமலும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விவாதிக்காமலும் அவசர அவசரமாக சங் பரிவார் கூட்டத்தின் நிர்பந்தத்துடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டத்தினால் கேடுகளே மிகுதி என்பதால் இதனை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment