Monday, August 5, 2019

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் வைகோ சந்திப்பு!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எம்.பி., அவர்கள்,  பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, இன்று (05.08.2019) நாடாளுமன்ற  வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 11.20 வரை சந்தித்தார் சந்தித்தார். 

பிரதமருக்கு, காஞ்சிப் பட்டு ஆடை அணிவித்தார். 

தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள திருக்குறள், அருட்தந்தை ஜி.யு. போப், அருட்தந்தை ட்ரூ, அருட்தந்தை ஜான் லாசரஸ் ஆகிய மூவரின் மொழிபெயர்ப்பு நூலைத் தந்தார். 

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மேலும் வைகோ அவர்கள், பிரதமரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அதில் அவர் முன்வைத்துள்ள கருத்துகள்,

இந்தியாவில் தயாராகும் ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைத் தொழிலைக் காக்க வேண்டும்;

நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்;

அணை பாதுகாப்பு மசோதா கூடாது;

கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டக்கூடாது;

சோழ வள நாட்டைப் பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுத்தார். அவற்றால் விளையும் விபரீதங்களை, ஆபத்துகளை வைகோ எடுத்துக் கூறினார். 

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதைக் கூறினார்

கர்நாடகத்தில் மேகே தாட்டு அணை கட்டினால், அதன்பிறகு தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்காது. தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். 

இதன் விளைவுகள் கேடாக முடியும். என்னைத் தவறாக நினைக்காதீர்கள். இந்தியாவில் நாம் ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எதிர்காலத் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படும். எனவே மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும். ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அணை பாதுகாப்பு மசோதாவால், இந்தியாவில் பாதிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான். 

அந்தந்த மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என்றால், தமிழ்நாட்டடில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்று கேட்கும் நிலை வரும்.

2010 டிசம்பர் 5 ஆம் தேதி அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து, அணை பாதுகாப்பு மசோதாவை நீங்கள் நிறைவேற்றினால், சோவியத் ரஷ்யா போல இந்தியா தனித்தனி நாடுகள் ஆகும் நிலைமை எற்படும் என்று என் கவலையைத் தெரிவித்தேன்.

அவர் என்னுடைய கவலையை ஏற்றுக்கொண்டு, அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைத்தார். இன்று உங்களிடமும் அதே கருத்தை வலியுறுத்துகின்றேன். இதே நிலைமை நீடித்தால், இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்றபோது, இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்காது. வரப்போகின்ற ஆபத்தைச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை என்பதால் இதைக் கூறுகின்றேன்.

காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தமட்டில் இந்திய அரசியல் சட்டம் 370, 35ஏ பிரிவுகளை மத்திய அரசு திருத்தினால் அதன் விளைவுகள் விபரீதம் ஆகிவிடும். காஷ்மீர் பிரச்சினை, கொசாவா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போல ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டுக்கு உள்ளாக நேரிடும்.

வைகோவின் கருத்துகளை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டார்.

ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைகள் தொழில் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
சென்னை - 8 
‘தாயகம்’
05.08.2019

கடிதங்கள் வருமாறு

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,
வணக்கம்.
நலம். தங்கள் நலன் விழைகின்றேன்.
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்படுவதால், பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்திய ஆயத்த ஆடைகள் தொழில் துறையைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலை வாய்ப்புகளை வழங்குகின்ற இரண்டாவது பெரிய துறை, ஆடைகள் நெசவு ஆகும்.
ஏறத்தாழ 12.90 மில்லியன் (ஒரு கோடியே இருபது இலட்சம்)தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நெசவுத் தொழிலில் வேலைவாய்ப்புகளைப் பெற்று இருக்கின்றனர். இவர்களுள் 65 முதல் 70 விழுக்காட்டினர் பெண்கள்.
மேலும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற 80 விழுக்காடு நிறுவனங்கள் சிறு தொழில்கூடங்கள் ஆகும். அவற்றின் ஆண்டு வரவு செலவுக் கணக்கு 1 முதல் 10 கோடி வரையில் ஆகும்.
ஆயத்த ஆடைகள் தொழில், இந்தியா முழுவதும் பரவலாக நடைபெற்று வருகின்றது. அவற்றுள் திருப்பூர், தில்லி, நொய்டா, குர்காவ்ன், மும்பை, லூதியானா, ஜெய்பூர், பெங்களூரூ,கொல்கத்தா, சென்னை ஆகிய சுற்று வட்டாரப் பகுதிகள் பெருமளவில் வேலை வாய்ப்புகளை வழங்கிக்கொண்டு இருக்கின்றன.
இந்திய ஆயத்த ஆடைகள் தொழில் இப்போது நாட்டின் முதுகு எலும்பாகத் திகழ்கின்றது. இந்தத் தொழிலில் புதிதாகப் பழக வருகின்றவர்கள் இரண்டு மாதப் பயிற்சி பெற்றால், மாதம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும்.
இந்திய ஆயத்த ஆடைகள் நெசவு மற்றும் ஏற்றுமதி, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றது.
ஏற்றுமதி ஆயத்த ஆடைகள் தொழிலில் சீனா அடைந்துள்ள வீழ்ச்சி, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு வளர்ச்சியாக அமைந்து இருக்கின்றது.
அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தடைகளால் நாம் அந்த வளர்ச்சியைப் பெற முடியவில்லை. பின்னல் ஆடைகள், ஆயத்த ஆடைகள் துறையின் வளர்ச்சிக்காக இந்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கின்றது.
2015 - 2020 காலகட்டத்திற்கான அயல்நாட்டு வணிகக் கொள்கையின் முதன்மை நோக்கம், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களை இனம் கண்டு, அவற்றின் உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றது.
இப்போது அந்தத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்வதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அரசு அளிக்கின்ற உதவிகளால்தான் இந்தத் துறையில் அயல்நாட்டு நிறுவனங்களின் போட்டியைச் சமாளித்து, தாக்குப்பிடிக்க முடிகின்றது. அரசு உதவிகளை நிறுத்திக்கொள்ளுமானால், இந்திய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் போகும்.
தமிழ்நாட்டில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னல் ஆடைகள் வணிகம் இந்திய அரசுக்கு பெருமளவு வருவாய் ஈட்டித் தருகின்றது.
தமிழ்நாட்டில் மட்டும் 15 மில்லியன் தொழிலாளர்கள் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற்று இருக்கின்றார்கள்.
இந்த நிலையில், அரசின் உதவிகள் தடைபடுமானால், தமிழகம் பேரிழப்பைச் சந்திக்க நேரிடும். ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னல் ஆடைகள் தொழில் அழிந்து போகும். அதன் விளைவாக பருத்தி விவசாயிகள், நெசவாளர்கள், நுhற்பு ஆலைகள், சாயத் தொழிலாளர்கள், பனியன் தயாரிப்பாளர்கள், தையல் தொழிலாளிகள், பட்டன், ஜிப்புகள், எலாஸ்டிக் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அந்தத் தொழில்களும் முற்றிலும் அழிந்துபோகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து விடுவார்கள். குறிப்பாக பெண்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே இந்தத் துறையில் ஈடுபட்டு இருக்கின்ற பல்வேறு துணைத் தொழில்களுக்கு புதிதாக ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால், பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. அதனால் வங்கதேச ஆயத்த ஆடைகள் ஊடுருவி வருகின்றன. அந்த நாட்டில் தொழிலாளிகளுக்கான கூலி மிகக் குறைவாக உள்ளது. தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்களும் செயல்படுவது இல்லை. சுற்றுப் புறச் சூழல்களைப் பாதுகாப்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை.
இத்தகைய காரணிகளால் அவர்களுடைய ஆயத்த ஆடைகள் உற்பத்திச் செலவு குறைவாக இருக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கதேசத்தின் பின்னல் ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி பெற்று இருக்கின்ற வளர்ச்சி ஒரு பட்டியலாக இங்கே தருகின்றோம். 
(July-June – financial year of Bangladesh)
(Million US $)
Year  Woven  Knit Total
2014-15 81.93 22.32 104.25
2015-16 116.68 35.62 152.30
2016-17 92.36 37.45 129.81
2017-18 207.62 71.06 278.68
2018-19 369.43 129.66 499.09 
இது ஐந்து ஆண்டுகளில், ஐந்து மடங்கு வளர்ச்சி ஆகும்.
இதனால் தமிழ்நாட்டில், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வருகின்ற பெரும்பான்மையான நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
வங்கதேசத்தில் தயாரிக்கப்பட்டது என்ற முத்திரையுடன் இந்தியச் சந்தைகளில் நுழைந்து இருக்கின்ற துணிகள், உண்மையில் அந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை அல்ல. சீனா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வங்கதேசத்தின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தவை ஆகும்.
எனவே, இந்திய ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னல் ஆடைகள், நெசவுத் தொழில்துறையைப் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்
வைகோ



அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு,
வணக்கம்.
நலம். தங்கள் நலன் விழைகின்றேன்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையம் வழங்கி இறுதித் தீர்ப்பையும் மீறி, கர்நாடக அரசு, மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதனால், தமிழகத்தில் காவிரி வடிநிலப் பகுதிகளில் இலட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வு பறிபோகும் நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.
கர்நாடக, மேகேதாட்டு அணையைக் கட்டினால் அதன் பிறகு மேட்டூர் அணைக்குச் சொட்டுத் தண்ணீர் வராது. ஆனால், மேகேதாட்டில் அணை கட்டுவதற்கு நடுவண் அரசின் சுற்றுச் சூழல் துறை அனுமதி அளித்து இருப்பதாக வெளியாகி இருக்கின்ற செய்திகள் தமிழக விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஆகும்.
இந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியாக மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகளை, காவிரிப் படுகையில் நூற்றுக்கணக்கான இடங்களில் தோண்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய அரசுக்கு இலட்சக்கணக்கான கோடிகள் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால், காவிரி படுகை பாலைவனம் ஆகிவிடும். மொத்தம் 35 இலட்சம் ஏக்கர் பரப்பில் நெல் விவசாயம் அழிந்துபோகும். தமிழகம் மற்றொரு எத்தியோபியா ஆகிவிடும்.
மேலும் அதிர்ச்சி என்னவென்றால், வேதாந்தா நிறுவனத்திற்கு இந்த உரிமம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அவர்கள் ஏற்கனவே ஸ்டெர்லைட் தாமிர நச்சு ஆலையை தூத்துக்குடியில் அமைத்து, அந்தப் பகுதியைச் சீரழித்துவிட்டார்கள். இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையை மராட்டிய அரசு வெளியேற்றியது. கோவா, குஜராத் மாநிலங்களில் அமைப்பதற்கு முயற்சித்தார்கள். இரண்டு மாநில அரசுகளும் மறுத்துவிட்டன. ஆனால் தமிழ்நாடு அரசு வேதாந்தா நிறுவனத்தின் கைக் கூலியாகச் செயல்பட்டு, 2018 மே 22 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
அந்த வேதாந்தா நிறுவனத்திற்கும், இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்திற்கும் காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் அளிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு திட்டமிட்டு, காவிரிப் படுகை விவசாயத்தை அழிக்க முயற்சிப்பதாகக் கருதுகின்றேன்.
2019 ஜூன் 23 ஆம் நாள், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுவை மாநிலம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக இராமேஸ்வரம் வரை இலட்சக்கணக்கான தமிழர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள், மாணவர்கள் கைகோர்த்து அணிவகுத்து மனிதச் சங்கிலி அமைத்தனர். இதன் ஒட்டுமொத்த நீளம் 596 கிலோ மிட்டர்.
தமிழர்களின் உள்ளம் எரிமலையாகக் கொதித்து நிற்கின்றது. மத்திய அரசு தன் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும். இது கல்லின் மேல் எழுத்து.
மேலும் ஒரு பிரச்சினையை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
மத்திய அரசு வகுத்துள்ள அணைகள் பாதுகாப்பு மசோதா, தமிழகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். ஏனெனில், கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரேதேசம் ஆகிய மாநிலங்கள் முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு ஆகிய நதிகளில் கட்டப்பட்டுள்ள அணைகள் தங்களுக்கே சொந்தமானது என்று உரிமை கொண்டாடும். அதனால், தமிழகம் பாலைவனமாகும். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?
எனவே, காவிரியின் குறுக்கே கர்நாடாகா அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும், அணைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
அடுத்து, தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில், அம்பரப்பர் மலைக்குன்றை உடைத்து நொறுக்கி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கின்றது. இலட்சக்கணக்கான டன் கடினப் பாறைகளை உடைக்கும்போது ஏற்படும் அதிர்வுகளால், கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணையும், 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியப் பொறியாளர் கர்னல் பென்னிக் குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும்.
இந்த நியூட்ரினோ ஆய்வகம், தமிழ்நாட்டுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சுற்றுச் சூழல் அறிஞர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளைப் பெற்று, அதன் அடிப்படையில் இந்திய அரசு நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
2015 மார்ச் 22 ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்து, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தடை ஆணை பெற்றுள்ளேன்.
பூவுலகு நண்பர்கள் என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொண்டு நிறுவனம், தேசியப் பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வழக்குத் தொடுத்து, தடை ஆணை பெற்றுள்ளது.
நான் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் தமிழ்நாட்டின் எதிர்காலம் அழிக்கப்பட்டுவிடக்கூடாது.
எனவே மேற்கண்ட என்னுடைய கோரிக்கைகளை, கனிவுடன் பரிசீலிக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
அதற்காக நானும் 75 மில்லியன் தமிழ் மக்களும் தங்களுக்கு நன்றி பாராட்டுவோம்.

என்றும் அன்புடன்
வைகோ

No comments:

Post a Comment