Friday, December 20, 2019

விவசாய நகைக் கடன் வட்டி மானியம் இரத்துக்கு வைகோ கண்டனம்!

தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள், தங்க நகை ஈட்டின் பேரில் 7 விழுக்காடு வட்டி விகிதத்தில் மூன்று இலட்சம் ரூபாய் வரையிலான பயிர்க் கடன்களை விவசாயிகளுக்கு அளித்து வருகின்றன. இந்தக் கடன்கள், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் வட்டி மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கான தங்க நகைக் கடன் திட்டத்தின்படி, ஒரு இலட்சம் ரூபாய் வரை நகைகளை ஈடு வைத்துக் கடன் பெற, கையொப்பமிட்டு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் உடனடியாகக் கடன் அளிக்கப்படுகிறது. மூன்று இலட்சம் ரூபாய் வரை கடன் பெற விவசாய நிலங்களின் விவரங்களை வழங்க வேண்டும்.
இந்தக் கடன் திட்டப்படி விவசாயிகளுக்கு நகைக் கடன் 11 விழுக்காடு என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், மத்திய அரசு 4 விழுக்காடு மானியமாக வங்கிகளுக்கு அளிப்பதால் நகைக்கடன் வட்டி என்பது 7 விழுக்காடு மட்டுமே.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க் கடன்களை உரிய கால கட்டத்தில் திருப்பிச் செலுத்துகின்ற விவசாயிகளுக்குக் கூடுதலாக 3 விழுக்காடு வட்டி மானியம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 விழுக்காடு என்ற குறைவான வட்டி விகிதத்தில் நகைக் கடன் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம், தற்போது 4 விழுக்காடு வட்டி மானியத்தைத் திடீரென்று இரத்து செய்திருப்பதால் விவசாய நகைக் கடன் வட்டி 7 விழுக்காட்டிலிருந்து 11 விழுக்காடாக அதிகரித்து விடுகிறது. விவசாய நகைக் கடன் பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல என்று புகார்கள் எழுந்துள்ளதாக மத்திய அரசு இதற்குக் காரணம் கூறுகிறது.
வேளாண் நகைக் கடன் பெற விண்ணப்பிக்கின்றவர்களை ஆய்வு செய்து, கடன் வழங்க வேண்டியது வங்கிகளின் பொறுப்பாகும். உண்மையாகவே அரசின் வட்டி மானியத்தை விவசாயிகள் பெறுகிறார்களா? என்று உரிய முறையில் கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதை விடுத்துவிட்டு விவசாய நகைக் கடன்களுக்கான வட்டி மானியத்தைத் திடீரென்று இரத்து செய்து இருப்பது விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயல் ஆகும். இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
விவசாயிகள் கந்து வட்டிக் கொடுமையில் சிக்கி வாழ்வாதாரத்தையே பறிகொடுக்கும் நிலைமையை அரசே உருவாக்குவது அநீதியாகும்.
விவசாயிகளின் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று கைவிட்டுவிட்ட பா.ஜ.க. அரசு, நகைக் கடன் வட்டி மானியத்தையும் நிறுத்துவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
மத்திய அரசு, வேளாண் துறை அமைச்சகத்தின் உத்தரவை இரத்து செய்து, விவசாயிகளுக்கு நகைக் கடன் வட்டி மானியம் நீடிக்க வழி வகை செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 20-12-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Thursday, December 19, 2019

பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய வைகோ!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களுடைய 19-12-2019 இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
“பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோருக்கு சகோதரனாக, உற்ற துணையாக இயங்கி ஒளி குன்றாத மணிவிளக்காக திராவிட இயக்கத்தைக் கட்டிக் காத்து வருகின்ற அண்ணன் பேராசிரியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினேன்.
அவர் நலமாக இருக்கின்றார்” என்று கூறினார்.

சோ.தர்மனுக்கு வைகோ வாழ்த்து!

சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று அலைபேசியில் பேசினார். மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் இலக்கிய உலகில் புதிய கருதுகோளாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதி, பல விருதுகளைக் குவித்து, கரிசல் மண்ணுக்கும், நெல்லைச் சீமைக்கும் எழுத்தாளர்கள் பெருமை சேர்த்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதற்கு சோ.தர்மன், நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Wednesday, December 18, 2019

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மதிமுக!

அனைத்துக் கட்சி 18-12-2019 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில்  வருகின்ற 23ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் திமுக கூட்டணியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டனப் பேரணி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய பா.ஜ.க. அரசே! குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறுக !

மத்திய பா.ஜ.க. அரசின் கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், இந்தியா கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
வேலைவாய்ப்பின்மையின் சதவிகிதம் கூடிக்கொண்டே போகிறது. தொழில்துறையின் வளர்ச்சி தேக்க நிலையில் இருக்கிறது.
நாட்டின் உயிரோட்டமான வேளாண்மைக்கு ஊக்கமின்றியும், விளை பொருள்களுக்கு உரிய விலை இன்றியும் ஒளி இழந்திருக்கிறது. விலைவாசி விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏழை எளிய நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே போகிறது.
பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.
சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை மிகக் கடுமையான, முன்னெப்போதும் கண்டிராத அளவிலான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் திணிக்கப்பட்டுள்ள சூழலில்; அனைத்தையும் ஆக்கபூர்வமான சிந்தனையாலும் நடவடிக்கையாலும்
சரிசெய்ய வேண்டிய பணியைத் தவிர்த்துவிட்டு, நாட்டின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும், ஆர்.எஸ்.எஸ். வகுத்தளித்துள்ள மதரீதியான அடிப்படைவாதக் கொள்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும், "குடியுரிமை திருத்தச் சட்டம் 2019" -ஐ கடந்த 9-12-2019 அன்று மக்களவையிலும், 11-12-2019 அன்று மாநிலங்களவையிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி உள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.
1955ஆம் ஆண்டே இந்தியாவுக்கான குடியுரிமைச் சட்டம் தெளிவாக நிறைவேற்றப்பட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதப் பிரச்சினையுமின்றி நிலவி வந்த அமைதிக்கு, இப்போது குந்தகம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை மக்கள் வாழ்வு மேம்பாட்டுக்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துவதை விடுத்து, மத்திய பா.ஜ.க. அரசு, பிற்போக்கான காரியங்களிலேயே கவனம் செலுத்துகிறது.
மதவாதக் கண்ணோட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் அவற்றுள் ஒன்று.
இந்தச் சட்டத் திருத்தத்தால் முஸ்லிம் சிறுபான்மை மக்களும், ஈழத்தமிழர்களும் குடியுரிமை பெற இயலாமல், பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து, முத்தலாக் தடைச் சட்டம் - அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, காஷ்மீரில் ஜனநாயகக் குரல்வளையை நெரித்தல் - தற்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் என தொடர்ச்சியாக, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின்மீது தாக்குதல் நடத்தி வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.
இந்தத் திருத்தச் சட்டத்தில் புதைந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து, இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் சக்திகள் அனைத்தும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், அதனை நிராகரித்து, தங்கள் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்தன. ஏகோபித்த இந்த எதிர்ப்பை பா.ஜ.க. அரசு துளியும் மதிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் அடுத்த கட்டமாக, ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அகில இந்திய அளவில் மாணவர் சமுதாயம் எதிர்ப்புக்குரலை எழுப்பி வருகிறது. இயல்பாக எழும் மாற்றுக் குரலைச் சகித்துக் கொள்ளும் தன்மையை மத்திய அரசு இழந்து விட்டது.
டெல்லி ஜாமியா - உத்திரப்பிரதேச அலிகார் பல்கலைக் கழகங்களில் போராடிய மாணவ - மாணவியர் மீது காவல்துறையினரும், காக்கி சீருடையில் அழைத்து வரப்பட்ட சமூக விரோதக் கும்பலும் கொடூரமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டதைக் கண்டு நாடே பதறுகிறது.
மாணவர்களை ரத்த வெள்ளத்தில் தள்ளி, அதன்பிறகும் கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறைக்கும், ஏவிவிட்ட மத்திய அரசுக்கும் அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாடு முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெறும் மாணவர்களின் அறவழிப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதென்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வெளிப்படையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் ஆளுங்கட்சியின் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாகப் பங்கேற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், இந்நாட்டில் பாசிச சக்திக்கெதிராக ஜனநாயக சக்திகள் ஓர் அணியில் சேர வேண்டிய தேவையையும் அவசர - அவசியத்தையும் வலியுறுத்தும் முற்போக்கு அடையாளமாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
“எம்மதமும் சம்மதமே”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற உயர்ந்த சிந்தனைகளின் சிறப்புக் கருவூலமான தமிழ்நாட்டில்; வாழ்ந்துவரும் தொப்புள் கொடி உறவுகளான ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களின் உரிமை செறிந்த எதிர்காலத்தையும், நாடு முழுவதும் இருக்கும் முஸ்லிம் மக்களின் அமைதியான வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி
யிருக்கிறது குடியுரிமைத் திருத்தச் சட்டம்.
பாகிஸ்தான்-பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களைத் தவிர்த்து, இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் இந்தத் திருத்தச் சட்டம் ; இலங்கையிலிருந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதென்பது, பா.ஜ.க. அரசின் மதவாதம் மட்டுமல்ல, அப்பட்டமான தமிழின விரோதப் போக்குமாகும்.
தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற ஈழத்தமிழர்களைப் பாதிக்கும் இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய நிலையில், அதனை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்து நிறைவேற ஒத்துழைத்திருப்பது, ஈழத்தமிழர்களுக்குச் செய்திருக்கும் பச்சைத் துரோகம் என்பதை சரித்திரம் மறக்காது, மன்னிக்காது.
மாநிலங்களவையில் இந்தச் சட்டமசோதா நிறைவேறுவதற்கு அ.தி.மு.க.வின் 11 உறுப்பினர்களும், பா.ம.க.வின் ஒரு உறுப்பினரும் அளித்த வாக்குகள்தான் காரணம் என்கிறபோது, பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக அடிமை அ.தி.மு.க. கூட்டணி செயல்பட்டு வருவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு, "இந்தச் சட்ட மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால், அதன்படி வாக்களித்தோம்" என மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதிலிருந்து, அ.தி.மு.க. எப்படி ஆட்டி வைக்கப்பட்டு வருகிறது, அதிமுகவும் மனமுவந்து எப்படியெல்லாம், தலையாட்டி வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவின் அமைதி சீர்குலைந்து, மத நல்லிணக்கம் சிதைந்து, பயமும் பதற்றமும் அதிகரித்து வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களிலும் தலைநகர் டெல்லியிலும் இன்னும் பல பகுதிகளிலும், மக்களின் அச்ச உணர்வு, போராட்டமாக மாறியுள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெறவிருந்த இந்தியப் பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியா வரவிருந்த வங்கதேச அமைச்சரும், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தனது அருணாசலப்பிரதேசம், மேகாலயா மாநிலங்களுக்கான பயணங்களை ரத்து செய்திருக்கிறார்.
பல நாடுகள், தங்கள் குடிமக்களை "இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்" எனக் கேட்டுக் கொண்டுள்ளன. உலகளாவிய அமைப்புகள் பலவும் மற்றும் 1067க்கு மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர்களும், இந்த மதவாத சட்டத் திருத்தத்திற்கு கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.
"வேற்றுமையில் ஒற்றுமை" என்கிற இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாழ்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசு மேற்கொள்ளவிருக்கும், குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதும், சொந்த மண்ணிலே வாழும் சகோதரர்களை அகதிகளாக்கி, அவர்களை அந்நியப்படுத்திக் கொடுமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளுமாகும்.
ஏற்கனவே அசாமில் நடத்தப்பட்ட குடிமக்கள் பதிவேட்டுக்கான பதிவில், கார்கில் போர் வீரரையே அந்நியராகப் பதிவு செய்து கைது செய்த கொடுமைகள் நடந்துள்ளன. முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல லட்சம் இந்து மக்களும் அசாமில் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கின்றனர்.
இந்நிலையில், மதவாத மற்றும் இனவாதக் கண்ணோட்டத்துடனும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்திடும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்தை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் முதலில் “அமைதி நிலவ வேண்டும்” என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
குடியுரிமைத் திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து, நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கும், அதன் திட்டத்தின்படியே செயல்பட்டு, ஈழத்தமிழர்களுக்கும் - சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் துரோகம் இழைத்த மாநில அ.தி.மு.க. அரசுக்கும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், 23.12.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னையில், “குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி” நடத்திடுவது என அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

Tuesday, December 17, 2019

கேள்வி எண் 603: சிபிஐ க்கு, தன்னாட்சி அதிகாரம் அளிப்பீர்களா? பிரதமரிடம் வைகோ கேள்வி:

இணை அமைச்சர் அளித்துள்ள விளக்கம்
கீழ்காணும் கேள்விகளுக்கு பிரதமர் விளக்கம் அளிப்பாரா?
(அ) சிபிஐ நடத்திய விழா ஒன்றில் பங்கேற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, சிபிஐ அமைப்பு, மக்களால் கூர்ந்து நோக்கப்படுகின்ற அரசியல் வழக்குகளை, முறையாகக் கையாளும் திறமை அற்றதாக இருக்கின்றது; சட்டத் தேவைகளை முறையாக நிறைவேற்ற அவர்களால் முடியவில்லை என்று கூறி இருப்பது உண்மையா?
(ஆ) அப்படியானால், அதுகுறித்து அரசின் கருத்து என்ன?
(இ) கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுமையும் உள்ள சிபிஐ அமைப்பின் பல்வேறு நீதிமன்றங்களில், பதிவு செய்யப்பட்டுள்ள, கவனத்திற்கு உரிய அரசியல் வழக்குகள் எத்தனை?
(ஈ) சிபிஐ அமைப்பை அரசின் பிடியில் இருந்து விடுவித்து, தன்னாட்சி அதிகாரங்களுடன் தனித்து இயங்குகின்ற வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வர, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?
(உ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வு ஊதியம் ஆகிய பிரதமர் துறைகளின்
இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள விளக்கம்.
அ,ஆ ஆகிய இரு கேள்விகளுக்கு விளக்கம்:
2019 ஆகஸ்ட் 13 ஆம் நாள், தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற, டி.பி. கோலி நினைவுச் சொற்பொழிவில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார்.
தீர்ப்பு வழங்குவதில், காவல்துறையினரின் பங்கு அளிப்பை வலுப்படுத்துவது என்ற தலைப்பில் அவரது உரை அமைந்தது. (The Role of Police in strengthening Justice Delivery). அப்போது, சட்டங்களில் உள்ள தெளிவு இன்மை, சிபிஐ அமைப்பின் செயல்திறனைப் பாதிப்பதாக அவர் கூறினார். தற்போது சிபிஐ எதிர்கொள்கின்ற அறைகூவல்கள், எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல் நெறிகள் வகுப்பது குறித்தும், அவர் பேசினார்.
(இ) 2016,2017,2018 மற்றும் 31.10.2019 வரை, அரசுத் துறைகளில் இணைச் செயலாளர் பொறுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள செயலர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் மேலாண்மை அதிகாரிகள், அரசியல் தலைவர்களுக்கு எதிராக, 160 (RC/CE) ஊழல் வழக்குகளை, சிபிஐ பதிவு செய்து உள்ளது. அதன் முழு விவரங்கள், இத்துடன் இணைப்பில் தரப்பட்டு உள்ளன.
ஈ,உ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்: 1946 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தில்லி சிறப்பு காவல்துறை அமைப்புச் சட்டத்தின்படி (Delhi special Police Establishment, 1946), தில்லி சிறப்புக் காவலர்கள் என்ற தகுதியில், சிபிஐ அமைப்பு, குற்ற வழக்குகளைப் புலன் ஆய்வு செய்யும் அதிகாரம் பெற்றது. அவர்கள் மேற்கொள்கின்ற வழக்கு விசாரணைகளில், நடுவண் அரசு தலையிடுவது இல்லை. சிபிஐ அமைப்பிற்குப் போதிய நிதி ஆதாரங்களும், இயக்குநருக்கு மேலாண்மை அதிகாரங்களும் உள்ளன.
இணைப்பு அ
அரசுத் துறைகளில் இணைச் செயலாளர் பொறுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள செயலர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள்:
ஆண்டு வழக்குகள் UI PE converted into RC UT RDA முடிந்தவை
2016 10 5 1 1 - 3
2017 26 14 1 3 3 5
2018 14 12 1 - 1 -
2019 4 4 - - - -
அக்டோபர்31வரை
மொத்தம் 54 35 3 4 4 8

இணைப்பு ஆ
பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள்:
ஆண்டு வழக்குகள் UI PE converted into RC UT RDA முடிந்தவை
2016 12 3 1 2 1 5
2017 15 7 1 4 - 3
2018 16 12 1 1 - 2
2019 7 6 - 1 - -
அக்டோபர்31வரை
மொத்தம் 50 28 3 8 1 10

இணைப்பு இ
அரசியல் தலைவர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள்:
ஆண்டு வழக்குகள் UI PE converted into RC UT RDA முடிந்தவை
2016 11 4 2 4 - 1
2017 18 5 5 3 1 4
2018 13 6 4 2 - 1
2019 14 11 - 2 - 1
அக்டோபர்31வரை
மொத்தம் 56 26 11 11 1 7

Monday, December 16, 2019

குடியுரிமை மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தலைவர் வைகோ!

வைகோ எம்பி அவர்கள், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் குடி உரிமையில் மதத்தை புகுத்தாதே! இலங்கை தமிழருக்கு குடியுரிமையை மறுக்காதே! பிளவுவாத குடியுரிமைச் சட்டத்தை நிராகரிப்போம்! என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அதன் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 16-12-2019 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Sunday, December 15, 2019

தென்றல் நிசார் மகன் திருமணத்தில் வைகோ!

மக்கள் தலைவர் வைகோ எம்பி* அவர்கள் எழும்பூர் பகுதி செயலாளர் அண்ணன் *தென்றல் நிசார்* அவர்களின் மகன் *ரசூல் இப்ராஹீம்-அஃப்ரின் நிஷா திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Saturday, December 14, 2019

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி உண்மைதான்! வைகோ கேள்விக்கு அமைச்சர் ஒப்புதல்!

உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு (Gross Domestice Product-GDP) கடுமையாக வீழ்ச்சி அடைந்து இருப்பது குறித்து, வைகோ எழுப்பி இருந்த கேள்விகளுக்கு, எழுத்து மூலம் அமைச்சர் விளக்கம் அளித்து இருந்தார். அது தொடர்பாக,12.12.2019 அன்று மாநிலங்கள் அவையில், கேள்வி நேரத்தின்போது, வைகோ துணைக்கேள்விகள் எழுப்பினார்: முழு விவரம் வருமாறு:
கேள்வி எண்: 257
கீழ்காணும் கேள்விகளுக்கு, புள்ளி விவரங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) கடந்த ஓராண்டாக, இந்தியாவின் உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு, நாளுக்கு நாள் குறைந்து வருகின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், கடந்த ஆறு ஆண்டுகளில் ஆகக் குறைவாக, ஐந்து விழுக்காடு என்ற நிலைக்கு வந்து இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
(இ) அதை உயர்த்துவதற்காக அரசு மேற்கொண்ட/மேற்கொள்ள இருக்கின்ற நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தருக.
(ஈ) இந்த நிலைமை எப்போது மேம்படும்? பொருள் ஆக்கத்தின் மதிப்பு எப்போது உயரும்?
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றுத் துறை அமைச்சர் இராவ் இந்தர்ஜித்சிங், எழுத்து மூலம் அளித்த விளக்கம்:
(அ மற்றும் (ஆ) ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்.
உள்நாட்டுப் பொருள் ஆக்கம் குறித்த அட்டவணை:
ஆண்டு முதல் கால் ஆண்டு 2 3 4
2014-15 8.0 8.7 5.9 7.2
2015-16 7.6 8.0 7.2 9.1
2016-17 9.4 8.9 7.5 7.0
2017-18 6.0 6.8 7.7 8.1
2018-19 8.0 7.0 6.6 5.8
2019-20 5.0 4.5 - -
கேள்வி (இ) க்கான விளக்கம்:
உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் வளர்ச்சிக்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, 2016 ஆம் ஆண்டு, நலிவுற்ற, கடன் தீர்க்க வகை அற்ற நிறுவனங்கள் ஒழுங்குமுறை (Insolvency and Bankruptcy Code IBC) விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட வரிச் சீர்திருத்தங்கள், எளிதாக்கப்பட்ட நடைமுறைகள், வணிக நடவடிக்கைகளை எளிமை ஆக்கி இருக்கின்றன. தாராளமயக் கொள்கையின் விளைவாக, அயல்நாடுகளில் இருந்து நேரடி முதலீடுகள் பெருமளவில் வந்துகொண்டு இருக்கின்றன. மேலும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, அண்மையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை (Corporate Tax) 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக அரசு குறைத்து இருக்கின்றது. உள்நாட்டில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கான பெருநிறுவன வரி, 15 விழுக்காடு ஆக்கப்பட்டு இருக்கின்றது.
இது, இந்த வகையில், உலகிலேயே மிகக்குறைந்த வரி விகிதங்களுள் ஒன்று ஆகும்.
2019 ஆம் ஆண்டு, கருவூல வங்கி (Reserve Bank), ரெப்போ வட்டியை, 135 புள்ளிகள் குறைத்து இருக்கின்றது. அத்துடன், முதலீட்டாளர்களை ஈர்க்கின்ற வகையில், அவர்கள் போட வேண்டிய முதலீடுகளைக் குறைப்பதற்காக, வங்கிகள் கடன் வட்டியைக் குறைத்து இருக்கின்றன.
கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தைப் போக்குவதற்காக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களைத் தொடர்வதற்காக, ரூ 25000 கோடி முதல், அரசு வழங்கி இருக்கின்றது.
கிராமப்புறங்களில் நுகர்வைக் கூட்டுவதற்காக, பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டங்களில், அனைத்து வகையான விவசாயிகளும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அயல்நாடுகளுக்கான ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பெருநிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகின்றது. (Merchandise Exports from India Scheme -MEIS). உற்பத்தியாளர் கட்டுகின்ற மறைமுக வரியை, விற்பனையாளர் தனது ஜிஎஸ்டி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்; இதனால், ஒவ்வொரு நிலையிலும் வரி கட்டுவது தவிர்க்கப்படுகின்றது; அந்த வரிகள், இறுதியாக நுகர்வோரிடம் இருந்து திரட்டப்படுகின்றது.
ஜிஎஸ்டி வரிக்கணக்குகள் முழுமையும், கணினிகளின் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றது. வரிப்பிடித்தங்களைத் திரும்பத் தருவதும் கணினி வழியாகவே நடைபெறுகின்றது.
2019-20 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்காக, 100 இலட்சம் கோடி நிதி செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலைப் பணிகளும் சீரமைக்கப்பட்டு உள்ளன.
பாரம்பரியத் தொழில்களை மீள் உருவாக்கம் செய்வதற்கும் தரம் உயர்த்துவதற்குமான நிதித் திட்டம் (Scheme of Fund fo Upgradation and Regeneration of Tradional industries) வெற்றிகரமாக, இலாபகரமாக இயங்குவதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி இருக்கின்றது.
(ஈ) மற்றும் (உ) ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
2011-12 நிதி ஆண்டு முதல், கடந்த ஏழு ஆண்டுகளில் உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம்:
2012-13 5.5
2013-14 6.4
2014-15 7.4
2015-16 8.0
2016-17 8.2
2017-18 7.2
2018-19 6.8

எனவே, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, அரசு எத்தனையோ திட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றது. பன்னாட்டு நாணய நிதியம் (Internationa Monetary Fund-IMF), இந்தியப் பொருளாதாரம் குறித்து நேர்மறையான நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றது. இதன் விளைவுகள், உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பை உயர்த்தும்.
இவ்வாறு அமைச்சர் எழுத்துமூலம் விளக்கம் அளித்து இருந்தார்.
இதுதொடர்பாக, 12.12.2019 அன்று மாநிலங்கள் அவையில்,
கேள்வி நேரத்தின்போது, வைகோ துணைக் கேள்விகள் எழுப்பினார்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:

வைகோ: அவைத் துணைத்தலைவர் அவர்களே,
நீங்கள் இருக்கையில் அமர்ந்து இருக்கின்ற வேளையில், இந்தக் கேள்வி நேரத்தில், அமைச்சரிடம் நேரடியாக விளக்கம் கேட்கக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும், இம்முறை உறுப்பினர் ஆனபிறகு, கேள்வி நேரத்தில் இது எனக்கு முதல் வாய்ப்பு.

எழுத்து மூலமாக அமைச்சர் அளித்து இருக்கின்ற புள்ளி விவரங்களின்படி, 2013 மார்ச் மாதத்திற்குப் பிறகு, உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு ஆகக் குறைவாக, 4.5 புள்ளிக்கு வீழ்ச்சி அடைந்து இருப்பதை ஒப்புக்கொண்டு இருக்கின்றார். இந்தச் சரிவில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்க, அரசு வகுத்து இருக்கின்ற குறுகிய காலத் திட்டங்கள், நீண்ட காலத் திட்டங்கள் யாவை? அடித்தட்டு மக்களின் வாங்கும் திறனை உயர்த்துவதற்காக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றுத் துணை இணை அமைச்சர் ராவ் இந்தர் ஜித் சிங்:
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக் கட்டத்தில், இந்திய உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு 4.5 விழுக்காடு என்ற அளவில் இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஆகக் குறைந்த அளவு இதுதான் என்பதும் உண்மை. அதற்காக அச்சம் கொள்ளத் தேவை இல்லை. காரணம், இதற்கு முன்பு, இதேபோல, 4.5 விழுக்காட்டுக்கும் குறைவாகக் கூட வீழ்ச்சி அடைந்து மீண்டு இருக்கின்றது.
எடுத்துக்காட்டாக, 2012-13 முதல் கால் ஆண்டுகளில் இது 4 விழுக்காடாகத்தான் இருந்தது. 2013-14 இல் 4.2 விழுக்காடு ஆக உயர்ந்தது. அடுத்தடுத்த காலகட்டங்களில் 6 விழுக்காடு அளவிற்கு உயர்ந்தது.
இரண்டாவதாக, 2008-09 ஆம் ஆண்டுகளின் மூன்றாவது கால் ஆண்டுக் காலகட்டத்தில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 1.5 விழுக்காடுதான். நான்காவது கால் ஆண்டில், அது வெறும் 0.2 விழுக்காடு மட்டும்தான்.
2008-09 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 3.9 விழுக்காடு அளவில் இருந்து, 2009-10 இல், 8.9 என்கின்ற அளவிற்கு உயர்ந்தது. எனவே, இந்தியப் பொருளாதாரம் என்பது எத்தகைய அதிர்ச்சிக்கும் ஈடு கொடுக்கத் தக்கது. அதுகுறித்து, இந்த அவையின் உறுப்பினர்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. மேலும், அரசு என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கின்றது என உறுப்பினர் கேட்டார்.
அவைத் துணைத் தலைவர் (பொறுப்பு) : உங்களுடைய விளக்க உரையைச் சுருக்கமாக அமைத்துக் கொள்ளுங்கள்.
அமைச்சர் இராவ் இந்தர்ஜித் சிங்: இந்தியப் பொருளாதாரச் சரிவை மீட்க, அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கின்றது? என உறுப்பினர் கேட்டார். அது இந்த அவையில் நான் எழுத்து மூலமாக அளித்து இருக்கின்ற அறிக்கையில் இருக்கின்றது. இருப்பினும், அதை நான் மீண்டும் வாசிக்கின்றேன்.
அவைத்துணைத்தலைவர்: ஆம். அது ஏற்கனவே அறிக்கையில் இருக்கின்றது. எனவே, உறுப்பினர் அடுத்த துணைக்கேள்வியைக் கேட்கலாம்.
வைகோ: ஐயா, அரசு இந்தியாவில் ஆக்குவோம் (Make in India), வணிக நடைமுறைகளை எளிது ஆக்குதல் (Ease of Doing Business) பிரதமரின் விவசாய நலத்திட்டங்கள் எனப் பல திட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றது. ஆனால், அவை எல்லாம் எழுத்துகளில்தான் இருக்கின்றதே தவிர, நடைமுறையில் இல்லை. உண்மையில், முன்னேற்றத்திற்கான எந்தவிதமான அறிகுறிகளும், கண்ணுக்குத் தெரியவில்லை; அரசுத் திட்டங்கள், உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
விசைப்பொறிகளால் இயங்குகின்ற ஊர்திகள், கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலை குறித்து, அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டதா? அந்தத் துறைகளை, வீழ்ச்சியில் இருந்து மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்: தேவைக்கு ஏற்ற வழங்கல் (Demand and Supply system) போதுமானதாக இல்லை. குறிப்பாக, விவசாயப் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து இருக்கின்றது. ஆனால், பன்னாட்டு நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட பலதரப்பட்ட அமைப்புகள், இந்தியப் பொருளாதாரம் குறித்து, நேர்மறையான நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றன. அரசுத் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படுமானால், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட துறைகள் படிப்படியாக வளர்ச்சி பெறும் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

உலக கோப்பை கால்பந்து போட்டியை காண வைகோவுக்கு கத்தார் அழைப்பு!

2020 ஏப்ரல் 6 முதல் 9 வரை கத்தார் நாட்டில் நடைபெறுகின்ற உலக வணிக மாநாட்டு அமைப்பின் தலைவர் யூசுப் அஞ்சாஃபர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று 14-12-2019 தாயகம் வருகை தந்தனர்.

கத்தார் நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்கள் 6 ஆம் தேதி தொடங்கி, நான்கு நாள்கள் நடைபெறவுள்ள, “உலக வர்த்தகர்கள் மாநாட்டில்" International Business Delegation Summit சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை தாயகத்தில் சந்தித்து என அழைப்பு விடுத்தனர்.

மறைந்த கோவி. சுரேசுகண்ணன் அவர்கள் மகளுக்கு மதிமுக இணையதள அணி சார்பாக பொதுச் செயலாளர் வைகோ கல்வி நிதி கையளிப்பு!

மதிமுக இணையதள அணியில் செயல்பட்டுக்கொண்டிருந்த தோழர் கோவி. சுரேசுகண்ணன் சமீபத்தில் உடல் நல குறைவால் மறைந்தார். அவருக்கு புகழஞ்சலி கூட்டம் தாயகத்தில் 14-12-2019 நடந்தது. அதில் அவரது மகள் கல்வி நிதிக்காக இணையதள தோழர்கள் வழங்கிய ரூபாய் 2,55000த்தை அவரது குடும்பத்தாரிடம் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வழங்கி புகழஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.

Friday, December 13, 2019

மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வெற்றிச்சின்னம் பம்பரம் வெல்லட்டும். 2019 உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக் குழு, மாவட்டக் குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு மதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனைப் பெறுவதற்கு, தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைப்படி, "தேர்தல் அறிவிக்கை (Notification) வெளியிடப்பட்ட மூன்று தினங்களுக்குள் தமிழகம் முழுவதும் போட்டியிடும் இடங்கள் குறித்த பட்டியல் அளிக்க வேண்டும்."    

அங்கீகரிக்கப் படாத கட்சியான மறுமலர்ச்சி தி மு க வின் வேட்பாளர் என்றும்,  பம்பரம் சின்னம் கேட்டும்  வேட்புமனுக்களை உரிய காலத்தில் தாக்கல் செய்யலாம். வேட்பு மனு வாபஸ் பெறும் நாளன்று பிற்பகல் 3 மணிக்கு முன்பாக  சின்னம் பெறுவதற்குரிய A, B படிவங்களை வழங்கிட வேண்டும். (இதில் அலட்சியம் கூடாது)  பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கையொப்பமிட்ட  A , B படிவங்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு தாயகத்தில் இருந்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.  கவனமுடன் கடமை ஆற்றி பணி முடிப்போம்.  இயக்கத்தின் மானம் காக்க களங்காணும் மறுமலர்ச்சி சொந்தங்களை வரலாறு வாழ்த்தட்டும்.

கோத்தபாய இராஜபக்சேவுடன் என்ன பேசினீர்கள்? வைகோ கேள்விகளுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 2762.
வைகோ: கீழ்காணும் கேள்விகளுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்காக, இலங்கைக் குடியரசுத் தலைவருடன் அரசு பேசியதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
(இ) இலங்கைக் குடியரசுத் தலைவர் இந்தியா வருகின்றாரா?
(ஈ) அவ்வாறு இருப்பின், இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்ற ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவது குறித்து அவருடன் இந்திய அரசு பேசுமா?
(உ) இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள, தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படுவது குறித்தும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தும் அரசு பேசுமா?
அ முதல் உ வரையிலான கேள்விகளுக்கு,
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அளித்துள்ள விளக்கம்:
பிரதமரின் சிறப்புத் தூதராக, வெளியுறவுத்துறை அமைச்சர், நவம்பர் 19 ஆம் நாள் இலங்கைக்குச் சென்றார். இந்தியாவுக்கு வருகை தருமாறு, இலங்கை குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார்.
நவம்பர் 28-30 ஆகிய நாள்களில், இலங்கை குடியரசுத் தலைவர் இந்தியா வருகை தந்தார். குடியரசுத் தலைவரையும், தலைமை அமைச்சரையும் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து, அனைத்துக் கோணங்களிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
மக்கள் ஆட்சிக் கோட்பாட்டில் பற்றுக் கொண்டுள்ள, பன்முகத்தன்மை வாய்ந்த, மனித உரிமைகளை மதிக்கின்ற, ஒன்றுபட்ட இலங்கைக்குள், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் இணக்கமான ஒரு தீர்வு காண வேண்டும் என்றும்;
அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், இந்திய அரசு வலியுறுத்தியது.
அதற்கு, இலங்கை குடியரசுத் தலைவர், எனக்கு வாக்கு அளித்தவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கு வாக்கு அளிக்காதவர்கள், இனம், மத அடிப்படையிலான அனைத்துத் தரப்பினருக்கும் நான் குடியரசுத் தலைவர். இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் கடமை ஆற்ற நான் உறுதி பூண்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

Wednesday, December 11, 2019

தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி - வைகோ அறிக்கை!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தொகுதி-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய பட்டியலை வெளியிட்டு இருக்கின்றது.  துணை  ஆட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பொறுப்புக்காக நடைபெறுகின்ற இந்தத் தேர்விற்கான நேர்காணல், வருகின்ற டிசம்பர் 23 ஆம் நாள் முதல் நடைபெறுகின்றது.

அதில் கலந்து கொள்பவர்களுடைய மதிப்பு எண்களை, பேனாவால் எழுதக்கூடாது; கண்டிப்பாகப் பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக அறிகின்றேன். மதிப்பு எண்களைத் திருத்தி, தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்வதற்காக, இத்தகைய ஏற்பாடு நடைபெற்று வருகின்றது.  இந்த 21 ஆம் நூற்றாண்டில், கணினிகளின் காலத்தில், வெளிப்படையாக ஒரு மோசடி நடைபெற இருக்கின்றது. அதையும், தமிழக அரசே நடத்தப் போகின்றது என்பது மிகவும் வேதனைக்கு உரியது. கிராமப்புறங்களைச் சேர்ந்த,  ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த, எந்தப் பின்புலமும் இல்லாத, தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற இந்தக் கொடுமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மதிப்பு எண்களைக் கணினியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அனைத்து நேர்காணல்களையும், காணொளிப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இன்று 11-12-2019 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குடிஉரிமை திருத்தச் சட்ட முன்வரைவை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்! மாநிலங்கள் அவையில் வைகோ!

குடி உரிமைத் திருத்தச் சட்ட முன்வரைவின் மீதான விவாதத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 11.12.2019 ஆற்றிய உரை வருமாறு:-
யமுனா நதிக்கரையில் எரிக்கப்பட்ட உலக உத்தமர் காந்தி அடிகளின் எலும்புத் துகள்கள் இன்று இந்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதை அறிந்து நடுங்கி இருக்கும்.
மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரான, வெறுப்பு ஊட்டுகின்ற, அதிர்ச்சி அளிக்கின்ற, முறையற்ற, மன்னிக்க முடியாத, நேர்மை அற்ற, குடி உரிமைச் சட்டத் திருத்த முன்வரைவு, இன்று இந்த மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படுமானால், அது இந்த அவையின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் ஆகி விடும்.
இந்தச் சட்டம், சமூகத்தின் ஒரு பிரிவினரை, எதிரிகளாகக் காட்ட முனைகின்றது. சுருக்கமாக, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள, முஸ்லிம்கள் அல்லாத மக்களுக்கு, இந்தியாவில் குடி உரிமை அளிக்கப்படும் என வரவேற்கின்றது.
ஆனால், நீண்டகாலமாக இந்தியாவில் இருக்கின்ற, இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள், மியன்மர் நாட்டில் இருந்து வந்த ரொகிங்யா முஸ்லிம்கள் ஆகிய அகதிகளின் நிலை குறித்து, இந்தச் சட்டத்தில் எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், அண்டை நாடுகளில் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கின்ற ஷியா மற்றும் அகமதியா முஸ்லிம்கள், இந்தியாவில் குடிஉரிமை கோருவதை, இந்தத் திருத்தம் தடை செய்கின்றது.
இது சமத்துவத்திற்கு எதிரான தாக்குதல்; மதச்சார்பு இன்மைக்கு எதிரான தாக்குதல்; மக்கள் ஆட்சிக் கோட்பாட்டின் மீதான தாக்குதல்.
இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு துறை விற்பன்னர்கள், அறிவியல் ஆராய்ச்சி அறிஞர்கள், இந்தச் சட்டத்திருத்தத்தைக் கண்டித்து இருப்பதுடன், உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த வேண்டுகோளில் கையெழுத்து இட்டு இருப்பவர்கள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். பன்னாட்டு அறிவியல் கோட்பாடுகள் ஆய்வு மைய அறிஞர் ராஜேஷ் கோபகுமார், டாடா ஆய்வு மையத்தின் சந்தீப் திரிவேதி, இராமன் மக்சேசே விருது வென்ற சந்தீப் பாண்டே, எஸ்.எஸ். பட்நாகர் விருது வென்ற ஆதிஷ் தபோல்கர், ருக்மணி பாயா நாயர், சோயா ஹசன், ஹர்பன்ஷ் முகியா உள்ளிட்ட அறிஞர்கள் அந்தக் கோரிக்கை விண்ணப்பத்தில் கையெழுத்து இட்டுள்ளனர்.
கீழ்காணும் கருத்தை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்திய விடுதலைப்போராட்டத்தில் முகிழ்த்த இந்திய நாடு எனும் கருத்து, அரசியல் சட்டத்தால் உருப்பெற்றது. அனைத்து சமய வழிபாட்டு நம்பிக்கை கொண்ட மக்களையும் சமமாகப் பேண உறுதி பூண்டுள்ளது. இங்கே, மதம் என்ற அளவுகோல் கொண்டு வரப்படுமானாமல், அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது ஆகும். இந்தச் சட்டத்திருத்த முன்வரைவில், முஸ்லிம்கள் மட்டும் நீக்கப்பட்டு இருப்பது, இந்த நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என நாங்கள் அஞ்சுகின்றோம். இதுகுறித்து, சட்ட அறிஞர்கள்தான் ஆய்வு செய்து கருத்துக் கூற வேண்டும் என்றாலும், எங்கள் பார்வையில், இது உணர்வுகளை மீறுகின்றது.
ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி, எங்கள் பெண்கள், எங்கள் சகோதரிகள், எங்கள் மக்கள் படுபயங்கரமாக, குரூரமாகக் கொலை செய்யப்பட்டனர். ஏதிலிகளாக வந்த அவர்களைப் பற்றி இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை, அவர்கள் குடி உரிமையைப் பற்றி யோசிக்கக்கூட இவர்களுக்கு மனம் இல்லை. இரத்தம் தோய்ந்த கரங்களோடு வந்த இலங்கை அதிபரோடு கை குலுக்கி, கொஞ்சிக் குலாவத்தான் உங்களுக்கு நேரம் இருந்தது. ஈழத்தமிழர்களைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை.
இந்தச் சட்டத்தை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்.
இவ்வாறு, வைகோ நாடாளுமன்றத்தில் 11-12-2019 அன்று பேசினார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டினர்.

Tuesday, December 10, 2019

முஸ்லிம் பெண்ணின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்ட இந்து சகோதரர்-மணவிழாவில் நல்லிணக்கம்!

8-12-2018 அன்று  மதிமுகவின் வளைகுடா அமைப்பாளர் பஷீர், மனிதநேய ஜனநாயக கட்சியின் பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் ஆகியோரின் சகோதரி நசீபா முனவராவுக்கும், மணமகன் சம்சுதீன் அவர்களுக்கும் நிக்காஹ் எனும் வாழ்க்கை ஒப்பந்த நிதழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின்  பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA  தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.

இதில் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திமுக இலக்கிய அணி செயலர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர்  நிஜாமுதீன், தமிழக மக்கள் ஐனநாயக கட்சி தலைவர் KM ஷெரீப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பிறகு அமைச்சர் காமராஜ் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.

இத்திருமணத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

மணமகள் குடும்பத்தினரான வல்லம் பஷீரும், வல்லம் ரியாசும்  தந்தையை இழந்தவர்கள். 

அவர்களது  குடும்பத்தை , தந்தை ஷேக் தாவூதின்  நண்பர் வடுவூர் ரவி அவர்கள், தன் குடும்பத்தோடு குடும்பமாக அன்பு காட்டி  அரவணைத்து நட்புக்கு மரியாதை செய்து வருகிறார்.

தன் நண்பரின் மகன் வல்லம் பஷீரின் திருமணம் போலவே, அவரது தங்கையின்  திருமணத்தையும் முன்னின்று  நடத்தி கொடுத்துள்ளார்.

தங்கள் தந்தையின் நண்பரை மதிக்கும் வகையில் ,சகோதரர்கள் வல்லம் பஷீரும், ரியாசும் , இஸ்லாமிய வழக்கப்படி,திருமண ஒப்பந்தத்தில் மணமகளின் இரு சாட்சிகளில் ஒருவராக ரவி அவர்களை கையெழுத்திட முடிவு செய்தனர்.

அவ்வாறே  நிக்காஹ் படிவத்தில் கையழுத்திட செய்து அவரை கெளரவப்படுத்தி உள்ளனர்.

வல்லம்  ஜமாத்தும் இந்த நல்லுறவை  பாராட்டும் வகையில், அதை அனுமதித்து சிறப்பித்துள்ளது.

இதை திருமண நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

இது தான் நமது தமிழ் மண்ணின் மதச்சார்பின்மை என தமிமுன் அன்சாரி MLA கூற, இந்த உறவுகளை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்று அதை வழிமொழிந்தார்  தனியரசு MLA .

மணமக்களை நிறைவாக வாழ்த்திய வைகோ அவர்கள்  இந்த நட்பும், உறவும்தான் இத்திருமணம் மூலம் இந்தியாவுக்கு நாம் சொல்லும் செய்தி என்று பூரித்தார்.

தமிழக அரசு பணியாளர் நியமனத்துக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்துவதா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு பணியாளர் தேர்வாணையம் (Staff Sellection Commission-SSC), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personel Selection -IBPS), ரயில்வே தேர்வு வாரியம் (Railway Recuirtment Board -RRBS) போன்ற அமைப்புகள் மூலம் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மத்திய பா.ஜ.க. அரசு தற்போது இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, மத்திய அரசின் பணியாளர் பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் சார்பில், பணியாளர் மற்றும் பயிற்சி நிறுவனம் 2 டிசம்பர் 2019 இல் ஒரே பொதுத் தகுதித் தேர்வு (Common Eligibility Test -CET) நடத்திட அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி மத்திய அரசின் குரூப்-பி கெசட்டட் பணிகள், கெசட்டட் அல்லாத குரூப்-பி பணிகள் மற்றும் குரூப்-சி பணி இடங்களுக்கு ஒரே பொதுத் தகுதித் தேர்வு (செட்) நடத்தப்படும். இதற்காக மத்திய அரசு தனியாக ஒரு முகவாண்மை நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு எழுதுவோர்களின் மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, ஒரு தர வரிசைப் பட்டியல் உருவாக்கப்படும். மத்திய அரசு மற்றும் மாநில அரசின் காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கு மேற்கண்ட தர வரிசைப் பட்டியலில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர்.

மத்திய அரசு உருவாக்கும் முகவாண்மை நிறுவனத்துடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு, மாநில அரசுப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘செட்’ எழுதித் தேர்வு பெற்றவர்களைப் பெறலாம். இனி மாநில அரசுகள் தனியாக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு மத்திய அரசின் பொது அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே கலாச்சாரம்; ஒரே கல்வி; ஒரே குடும்ப அட்டை என்று நாட்டையே ஒரு குடையின் கீழ் கொண்டுவரத் துடிக்கும் பா.ஜ.க. அரசு, மத்திய, மாநில அரசு பணியாளர்கள் தேர்வுக்கும் ஒரே தகுதித் தேர்வு நடத்தத் திட்டமிட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

மாநில அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தகுதித் தேர்வு நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்பும் முறையை ஒழித்துக்கட்டி விட்டு, இனி மாநில அரசு ஊழியர்களாக வட மாநிலங்களில் இருந்துகொண்டு வந்து தமிழ்நாட்டில் திணிப்பதற்கான சதித் திட்டத்தை அரங்கேற்றவே இத்தகைய அறிவிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இரயில்வேத்துறை, என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், சுங்கத்துறை உள்ளிட்டவற்றில் வெளி மாநிலங்களிலிருந்து ஊழியர்கள் பணி நியமனம் பெறும் நிலையும், தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் நிலையும் இருப்பதை மாற்ற வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் 90 விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக தமிழகம் குரல் எழுப்பி வருகிறது.

ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு, ஒரே பொதுத் தகுதித் தேர்வு என்ற பெயரில், மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறித்து, ஒற்றை ஆட்சிமுறைக்கு நாட்டைத் தயார் செய்து வருகிறது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் உள்நோக்கத்தை முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் வேலையற்ற 90 இலட்சம் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசின் சதித் திட்டத்திற்கு அ.தி.மு.க. அர சு துணை போகக்கூடாது. பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள ‘பொதுத் தகுதித் தேர்வு’ அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 08.12.2019 தெரிவித்துள்ளார்.

பாடத் திட்டங்களை மாற்றுகின்றீர்களா? வைகோ கேள்விக்கு அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 567

கீழ்காணும் கேள்விகளுக்கு, மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

(அ) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், (The National Council of Edcuational Research and Training-NCERT), இந்திய அளவில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கத் திட்டம் வகுத்து இருக்கின்றதா? அதற்காக, ஏதேனும் குழு அமைக்கப்பட்டு இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

(ஆ) எந்தெந்த வகைகளில் மாற்றங்கள் செய்யத் திட்டம் வகுக்கப்படுகின்றது?

(இ) தரமான கல்வி, சமத்துவம், சம பங்கு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இணக்கமான பாடத்திட்டத்தை வகுப்பது குறித்துக் கவனம் செலுத்தப்படுகின்றதா?

(ஈ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

(உ) திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சிகள் குறித்து, கவனம் செலுத்தப்படுகின்றதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

மனிதவள ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்து இருக்கின்ற விளக்கம்:

(அ) ஆம். தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 2005 ஆம் ஆண்டு வகுத்த  பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். அதன்படி, மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, அவர்கள், உள்ளக கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி வருகின்றார்கள்.

இதற்கு இடையில், தேசிய கல்விக்கொள்கையை (National Education Policy) வரைவதற்காகப் பொறுப்பு அளிக்கப்பட்டு இருந்த குழு, தனது அறிக்கையை வழங்கி இருக்கின்றது. அதுகுறித்து, அரசு ஆராய்ந்து வருகின்றது. அந்த அடிப்படையில், புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள இருப்பதால், மேற்கண்ட பாடத்திட்டங்களில் மாறுதல் செய்வது குறித்து ஆராய, தனியாக குழு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

(ஆ) கல்வியில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் இனம் காணப்பட்டு உள்ளன.



1. மதிப்புக் கல்வி (Value Education )

2. பண்பாட்டு மரபு வளம். (Cultural Heritage)

3. பயிற்சிகளின் வழி கற்றல் (Experiential learning)

4. உடல்நலம், உடல் இயக்கப் பயிற்சிகள், விளையாட்டு. (Health, Physical Education and Sports)

5. தேசிய அளவில் முன்னுரிமை மற்றும் முயற்சிகள். (National Priorities and initiatives)

6. பள்ளிகளில் தர மதிப்பிடுதல் மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம் (School based Assessment and Examination reform)

7. கல்வி நுட்ப இயல் (Educational Technology)

8. தொழில் பயிற்சிக் கல்வி (Vocational Education)

இ மற்றும் ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:

ஆம். தற்போதைய பாடத்திட்டத்திலேயே, குறுக்கிலும் நெடுக்கிலுமாக,  சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இணக்கமான வகையில், தரமான கல்வி, சமத்துவத்திற்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. அவைதாம், அடித்தளம்; அதன் மீதுதான், பாடத்திட்டம் வகுக்கப்பட்டு இருக்கின்றது.

(உ) ஆம். தொழிற் கல்வியில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழிற் பயிற்சி வகுப்புகள் இடம் பெறும்‌ என 7-12-2019 தாயகம் அறிக்கையில் தெரிவிக்கப்பபட்டுள்ளது. 

Friday, December 6, 2019

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்!

சட்ட மாமேதை, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று 06-12-2019 அன்று, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர்  வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  .

உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், டி.சி.இராஜேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தேனி நியூட்ரினோ திட்டம் குறித்து வைகோ கேள்விகளுக்கு பிரதமர் துறை அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 1992

கீழ்காணும் கேள்விகளுக்கு, பிரதமர் விளக்கம் தருவாரா?

(அ) தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?

(அ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

(இ) மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலைக் கெடுக்கும் அந்தத் திட்டத்திற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்களா?

(ஈ) அவ்வாறு இருப்பின், அப்பகுதி மக்களிடம் அரசு கருத்துக் கேட்டு இருக்கின்றதா? இயற்கைச் சூழல் பாதுகாப்பு குறித்து, நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கின்றதா?

(உ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

(ஊ) அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்தத் திட்டம் கைவிடப்படுமா?

மேற்கண்ட கேள்விகளுக்கு, பிரதமரின் சார்பில், அவரது துறைகளுள் ஒன்றான பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள விளக்கம்:

அ, ஆ  ஆகிய கேள்விகளுக்கு விளக்கம் ஆம். இந்தியத் தளத்தில் இருந்து நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்யும் திட்டத்தை, (India Based Neutrino-INO) தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது.

இ முதல் ஊ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

அந்தத் திட்டத்திற்கு, அந்தப் பகுதியில் உள்ள சில பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே, தேனி, மதுரை மாவட்டங்களில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு, நியூட்ரினோ திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.

2018 ஆம் ஆண்டு, மே மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலும், இது தொடர்பாக தமிழகம், கேரளத்தில் உள்ள நகரங்களில், விழிப்பு உணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் அழைத்து வரப்பட்டு, நியூட்ரினோ வளாகத்தில் தற்போது இயங்கி வருகின்ற 85 டன் எடை கொண்ட, சிறிய அளவிலான, கேஸ்மிக் கதிர்களைக் கண்டு அறிகின்ற கருவியின் இயக்கம் குறித்து விளக்கம் தரப்பட்டது. ஆனால், அது அங்கே 2 கிலோமீட்டர் நீளத்திற்கு கிடைமட்டத்தில் குடையப்படுகின்ற குகைவழியின் ஒரு முனையில் இடம்பெறக்கூடிய ஒரு சிறிய கருவிதான்.

2010 ஜூன் மாதம்,  தேனி மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறையின் சார்பில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

அந்தக் கூட்டத்தில், ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்ட 1200 பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள், நியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்கான, அனைத்து வகையான சட்டத்தேவைகளும், விதிகளும், நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் அமைகின்ற பகுதி, கஸ்தூரி ரெங்கன் தலைமையிலான உயர்நிலைக்குழு (High Level Working Group)வரையறுத்து, சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை வெளியிட்டு இருக்கின்ற F-1-4/2012 RE (Pt) நாள் 13.11.2013 வரையறையின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Thursday, December 5, 2019

சூடான் தீ விபத்து:3 தமிழர்கள் உட்பட 23 பேர் பலி. இந்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்-வைகோ அறிக்கை!

சூடான் நாட்டுத் தலைநகர் கார்டோமில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலையில் பணி செய்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், வெங்கடாசலம், ராஜசேகர் ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும்,ஜெயக்குமார், முகமது சலீம், பூபாலன் உள்ளிட்ட 130 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் ஜெயக்குமார் என்பவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வருகின்ற தகவல்கள் மனதுக்கு மிகவும் வேதனையைத் தருகின்றது.

தீ விபத்தில் சிக்கியவர்களின் நிலையை அறிய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர் என்றும், தீ விபத்து குறித்த தகவல்களைப் பெற சிறப்புத் தகவல் மையமும் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியத் தூதரகம் விரைந்து செயல்பட்டு, தீ விபத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் உடல்களை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்கின்றேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ‌ தனது அறிக்கையில் 05-12-2019 தெரிவித்துள்ளார்.

Wednesday, December 4, 2019

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அறிவிக்க வேண்டும் மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!


மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அறிவிக்கக் கோரி இன்று 04.12.2019 மாநிலங்கள் அவையில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கோரிக்கை விடுத்து உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் பல உயர்நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ஆந்திர பிரதேஷ் உயர்நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றம், கேரளா உயர்நீதிமன்றம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், பஞ்சாப் - ஹரியான உயர்நீதிமன்றம், மத்தியப் பிரதேஷ் உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்படுகின்றன.

ஆகையால், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது மாற்றப்பட்டு, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழி ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்தும், அதில் மாற்றங்கள் செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் இந்திய அரசியல் சட்டத்தின் 348 ஆவது பிரிவு விவரிக்கிறது.

உத்திரப்பிரதேசத்தில், மத்தியப் பிரதேசத்தில், ராஜஸ்தானில், பீகாரில் ஆங்கிலத்தோடு இந்தியும் நீதிமன்ற மொழியாகச் செயல்படுகிறது.

குஜராத் மாநிலம், கர்நாடகா மாநிலம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் வழக்காடு மொழியாக ஆங்கிலத்தோடு தங்கள் மாநில மொழியும் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

உச்சநீதிமன்றமும் இந்த நோக்கத்தோடு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை எல்லாம் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது.

தமிழ்நாடு சட்டமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தோடு தமிழும் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

இந்தப் பின்னணியில் உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்தோடு அந்தந்த மாநில மொழிகளையும் வழக்காடு மொழிகளாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் வைகோ அவர்கள் 04-12-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Tuesday, December 3, 2019

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் மறைவுக்கு இரங்கல்! தடியடி நடத்திய காவல்துறைக்கு கண்டனம் வைகோ அறிக்கை!

அண்மையில் பெய்த பெரு மழையில், கோவை மாவட்டம் - மேட்டுப்பாளையம் ஏ.டி.காலனி, கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இருந்த 80 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவர் இடிந்து, அருகில் இருந்த நான்கு வீடுகளின் மீது சரிந்து விழுந்தது. இதனால் அந்த நான்கு வீடுகளும் சிதைந்து இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
விடியற்காலையில் இந்தக் கொடுமை நடைபெற்றதால், அந்த வீடுகளின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரை இழந்தார்கள் என்ற அதிர்ச்சி தரும் செய்தி நம் அனைவரையும் இடிகொண்டு தாக்குவதைப் போல நிலைகுலையச் செய்துவிட்டது. கனமழை பெய்து இருள் சூழ்ந்த நேரத்தில் ஏற்பட்டுவிட்ட இந்த சோக நிகழ்வு அருகில் உள்ளவர்களுக்கு தெரியவே நெடுநேரம் கடந்துவிட்டது.
தீயணைப்புப் படையினர் அங்கு வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றும்போது மூன்று குழந்தைகள், மூன்று ஆண்கள், 11 பெண்கள் ஆகியோரைச் சடலங்களாக மீட்டது நம் நெஞ்சை பதை பதைக்கச் செய்கிறது. இவர்களை பறிகொடுத்த குடும்ப உறவுகளின் கதறல்கள் மனிதநேயம் கொண்டோரின் இதயங்களில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது.
ஆறுதல் சொல்வதற்கும், தேறுதல் சொல்வதற்கும் வார்த்தைகள் இல்லாமல், இரத்தக் கண்ணீர் வடிக்கும் அவர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆறுதலை, உயிரைப் பறிகொடுத்த பரிதாபத்திற்குரிய உறவுகளுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
துயரத்தில் மூழ்கிக் கிடக்கின்ற அவர்களின் கண்ணீரைத் துடைத்து, தேவையான நிவாரணப் பணிகளை விரைந்து எடுத்து மனிதநேயத்துடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.
இந்திய அரசு இவர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருவதற்கு என்று ஏராளமான திட்டங்களை வைத்துள்ளது. அவைகளை முறையாகப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலில் பாதுகாப்பான நல்ல வீடுகளை கட்டித் தரவும், பொருளாதார நிலையில் அவர்கள் மேம்பட பெருமளவு தொகையினை இழப்பீடாக வழங்கவும், அந்தக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கவும் எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்ட அவர்கள் தேறுதல் பெற்று நிம்மதியாக வாழ்ந்திட உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
விபத்தில் உயிர் இழந்தோரின் சடலங்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யும்போது மருத்துவமனைக்கு வெளியே கிடத்தப்பட்டு இருந்ததையும், கோவை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய கொண்டு செல்ல இருந்ததையும் கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதும், நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் தொடுத்ததும், விபத்து ஏற்பட காரணமான சுற்றுச் சுவர் உரிமையாளர் இதுவரை கைது செய்யப் படாததும் வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என வைகோ தனது அறிக்கையில் 03-12-2019 தெரிவித்துள்ளார்.

Monday, December 2, 2019

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு ஜனநாயகப் படுகொலை - வைகோ அறிக்கை!

உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டிய தேர்தலாகும். ஆனால் தமிழ்நாடு அரசு ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும்.

தேர்தலையே தள்ளிப் போடுவதற்கhக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியாகும் என்பதால், மாநில அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 02-12-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Sunday, December 1, 2019

இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் ஈழத் தமிழ் இனத்தை காவு கொடுத்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. கோவை விமான நிலைய செய்தியாளர்களிடம் வைகோ!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தில்லியிலிருந்து நேற்று (30.11.2019) கோவை விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இடிமேல் இடியாக தமிழினத்தின் தலையில் தாக்குதல்கள் நடக்கின்ற விதத்தில் காரியங்கள் நடக்கின்றன. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி கோத்தபய ராஜபக்சே. அதற்கு சாட்சியங்கள் ஏராளம் உள்ளன. அப்படிப்பட்ட கொலைபாதகனின் பதவியேற்பு விழாவுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சென்று இருந்தார்.
கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு நீங்கள்தான் அழைத்தீர்களா? என்று நாடாளுமன்றத்தில் நான் கேட்டேன். ஆமாம் நான் அழைப்பு விடுத்தேன் என்றார் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்.
இந்தியாவுக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவுடன் நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் பேசியதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது.
இலட்சக்கணக்கான பெண்களைக் கொன்று, பெண்களை பலாத்காரம் செய்து நாசப்படுத்தி, கற்பழித்துக்கொன்று, 90 ஆயிரம் விதவைகள் வேதனையில் தேம்பி அழ, காணாமல் போன பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில், இன்னும் எண்ணற்றவர்கள் சிறையில் வாடி வதங்கும் வேளையில், நான்கு வீட்டுக்கு ஒரு இராணுவ வீரன் என்று ஒவ்வொரு தெருவிலும் நிறுத்தி வைத்து, யாழ்ப்பாணத்தையும், தமிழர் பகுதிகளையும் காவல் கூடங்கள் ஆக்கி வைத்திருக்கின்ற கொலைகாரன் கேட்டான் என்று இலங்கையில் அவர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு 350 கோடி ரூபாயும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு 2800 கோடி ரூபாயும் தரப்போகிறோம். அதுமட்டுமல்லல, வரலாறு, மொழி உறவால் நாம் ஒன்றுபட்டு இருக்கின்ற இலங்கைக்கு எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருப்போம் என்று நரேந்திர மோடி அவர்கள் கூறி இருக்கின்றார்.
சரித்திரம் அறியாதவர் என்று நான் வருத்தப்படுகிறேன். மொழி, இன இரத்த பந்தத்தால் பின்னப்பட்டு இருப்பவர்கள் இங்கே இருக்கும் எட்டரை கோடி தமிழர்கள். எங்கள் இரத்தம்; அது தமிழர்கள் சிந்திய இரத்தம். ஆக மொழியால், இனத்தால், இரத்த பந்தத்தால் ஒன்றுபட்டு இருக்கக்கூடிய இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவிக்கு நீங்கள் இவ்வளவும் அள்ளிக் கொடுத்திருக்கின்றபோது, வேறு நாடுகள் கண்டுகொள்ளாமல் போனால் உலகத்தில் இனி தமிழனுக்கு நாதியே இல்லையா?
இலங்கையின் அதிபர் கொலைகாரன் கோத்தபய ராஜபக்சேவுடன் கை குலுக்குவதற்காக இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் ஈழத் தமிழ் இனத்தை காவு கொடுத்திருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
சமீப காலத்தில் இவ்வளவு மன வேதனையை நான் அனுபவித்தது இல்லை. கொலைகாரப் பாவிக்கு நீங்கள் பட்டம் சூட்டி, பரிசுப் பொருளும் கொடுத்து, இன்னும் எது கேட்டாலும் தருகிறேன் என்று சொல்லி அனுப்பியிருக்கிறீர்கள்.
உலகத் தமிழ் இனத்துக்கு நாதி இல்லை. காரணம், எட்டரை கோடி தமிழர்கள் வாழுகிற இந்திய நாட்டின் அரசே அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறது.
ஏமாற்று வேலைக்கு படகுகளை விடுவிக்கிறேன், பத்தாயிரம் வீடுகள் கட்டித் தருகிறேன் என்று சொல்கிறாரே தவிர, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்களே! அதற்கு என்ன நீதி? நீதி கிடையாதா? தமிழனுக்கு நாதி கிடையாதா? இரக்கமற்றவரே, இதயமற்றவரே இந்தியாவின் தலைமை அமைச்சரே காவு கொடுத்துவிட்டீரே!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ அவர்கள் தமது பேட்டியில் 01-12-2019 அன்று குறிப்பிட்டார்.