மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அறிவிக்கக் கோரி இன்று 04.12.2019 மாநிலங்கள் அவையில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கோரிக்கை விடுத்து உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் பல உயர்நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலங்களின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. ஆந்திர பிரதேஷ் உயர்நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றம், கேரளா உயர்நீதிமன்றம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், பஞ்சாப் - ஹரியான உயர்நீதிமன்றம், மத்தியப் பிரதேஷ் உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்படுகின்றன.
ஆகையால், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது மாற்றப்பட்டு, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் வழக்காடு மொழி ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்தும், அதில் மாற்றங்கள் செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் இந்திய அரசியல் சட்டத்தின் 348 ஆவது பிரிவு விவரிக்கிறது.
உத்திரப்பிரதேசத்தில், மத்தியப் பிரதேசத்தில், ராஜஸ்தானில், பீகாரில் ஆங்கிலத்தோடு இந்தியும் நீதிமன்ற மொழியாகச் செயல்படுகிறது.
குஜராத் மாநிலம், கர்நாடகா மாநிலம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் வழக்காடு மொழியாக ஆங்கிலத்தோடு தங்கள் மாநில மொழியும் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன.
உச்சநீதிமன்றமும் இந்த நோக்கத்தோடு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை எல்லாம் மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றது.
தமிழ்நாடு சட்டமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தோடு தமிழும் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று 2006 ஆம் ஆண்டு ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இந்தப் பின்னணியில் உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலத்தோடு அந்தந்த மாநில மொழிகளையும் வழக்காடு மொழிகளாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் வைகோ அவர்கள் 04-12-2019 அன்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment