புத்தாயிரம் ஆண்டுத் தொடக்கம் என்பது போல, ஒரு தலைமுறையைக் குறிக்கின்ற பத்தாவது ஆண்டின் நிறைவு ஆண்டாக மலர்கின்றது 2020. நம்பிக்கையோடு வரவேற்கின்றோம். கடந்து போன ஆண்டின் நிகழ்வுகளும், பதிவுகளும், சந்திக்கப் போகின்ற ஆண்டுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள உதவிடும்.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஆட்சியாளர்கள் அடக்குமுறைப் பாதையில் வேகமாக நடைபோடுகின்றார்கள். அறிஞர்களான நமது முன்னோர்கள் ஆக்கத் தந்த அரசியல் சட்டம் வரையறுத்த, மதச் சார்பு அற்ற நாடு என்ற கோட்பாட்டினைச் சிதைக்கின்ற முயற்சிகளில், ஆட்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றார்கள். சட்டங்களைத் திருத்தி, மக்களைப் பிரித்து ஆள முனைகின்றார்கள். மத அடிப்படையில், ஒரு பிரிவினரை இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்குகின்றார்கள். அறவழிப் போராட்டங்களை, அடக்குமுறையால் ஒடுக்குகின்றார்கள். சர்வாதிகாரப் போக்கு தலை தூக்குகின்றது. காரிருளில் பாயும் மின்னலைப் போல், மாணவர்களும், இளைஞர்களும், ஜனநாயகத்தை, மதச்சார்பு இன்மையைக் காக்க, நாடு முழுமையும் அறவழியில் களம் காணும் நிலைமை உருவாகி இருக்கின்றது.
இலங்கைத் தீவில் கோரமான தமிழ் இனப் படுகொலை செய்த கோட்டபய ராஜபக்சேவின் கொட்டம் அடிக்கும் ஆட்சி நடக்கின்றது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1914 முதல் 1917 வரை துருக்கியர்கள் நடத்திய ஆர்மினியர்கள் படுகொலைகள், இன அழிப்புக் குற்றம்தான் என, இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க நாடாளுமன்றம் அறிவித்து இருக்கின்றது. அதுபோல, சிங்களக் கொலைகாரக் கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தவும், தமிழ் ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும், உறுதி கொள்வோம்.
தமிழகத்தில், மாநில உரிமைகளை மத்திய அரசிடம் காவு கொடுத்துவிட்டு, ஊழல் ஆட்சி கோலோச்சுகின்றது. ஆனால், இந்த நிலைமைகளை மாற்றி, பேரறிஞர் அண்ணா கனவு கண்ட மாநிலமாக ஆக்குவதற்கு, இந்த 2020 ஆம் ஆண்டில் நம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும்.
மதச் சார்பு இன்மையைப் பாதுகாப்போம்; அனைத்து சமயத்தினரிடமும் நல்லிணக்கத்தை வளர்ப்போம்.
எந்நாளும் துன்பத்தில் உழல்கின்ற விவசாயப் பெருமக்களுக்கு, வருகின்ற காலம் துயர் துடைக்கின்ற காலமாக அமையும் என்ற நம்பிக்கையோடு, உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்தை 31-12-2019 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment