இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னர் சிங்கள பௌத்த இனவெறி தலைவிரித்து ஆடுகிறது. இலங்கை விடுதலை நாளில் அந்நாட்டின் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பாடப்பட்டு வந்ததை மாற்றி, இனி தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்று சிங்கள அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்தது தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இலங்கையின் அரசியலமைப்பின் படி, இணை ஆட்சி மொழியாகவும், இணை தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் மொழியைப் புறந்தள்ளி, தமிழர்களை மொழி, இன ரீதியாகத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை கோத்தபய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களையும் அச்சுறுத்தும் செயலில் கோத்தபய ராஜபக்சே அரசு இறங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் - ஜெகதாபட்டினம் துறைமுகத்திலிருந்து டிசம்பர் 27 ஆம் தேதி மூன்று விசைப்படகுகளில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டியதாக இவர்கள் அனைவரையும் இலங்கைக் கடற்படைக் கைது செய்துள்ளது. மேலும் மீன் பிடித் தொழிலுக்குப் பயன்படுத்திய மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்நிகழ்வு தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் நேற்று கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்துள்ளனர். பல இலட்ச ரூபாய் மதிப்பிலான மீன் பிடிக் கருவிகளையும் சிங்களக் கடற்படை சேதப்படுத்தி இருக்கிறது. கோத்தபய ராஜபக்சே அரசு தொடர்ந்து தமிழர்கள் மேல் வெறுப்பை காட்டும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.
ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்தற்காக பன்னாட்டு நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.
ஈழத் தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் வன்மத்தை காட்டி வரும் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு, இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
ஏற்கனவே இலங்கை அரசு எல்லை தாண்டி வரும் மீனவர்களைக் கைது செய்து, மூன்று ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்கவும், படகுகளைப் பறிமுதல் செய்யவும், இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கவும் இலங்கை கடற்தொழிற் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது.
எனவே இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 13 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கும், மீன் பிடிப் படகுகளை மீட்பதற்கும் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 29-12-2019 தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment