கேள்வி எண் 2762.
வைகோ: கீழ்காணும் கேள்விகளுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) இந்திய-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்காக, இலங்கைக் குடியரசுத் தலைவருடன் அரசு பேசியதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
(இ) இலங்கைக் குடியரசுத் தலைவர் இந்தியா வருகின்றாரா?
(ஈ) அவ்வாறு இருப்பின், இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்ற ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவது குறித்து அவருடன் இந்திய அரசு பேசுமா?
(உ) இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள, தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படுவது குறித்தும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தும் அரசு பேசுமா?
அ முதல் உ வரையிலான கேள்விகளுக்கு,
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அளித்துள்ள விளக்கம்:
பிரதமரின் சிறப்புத் தூதராக, வெளியுறவுத்துறை அமைச்சர், நவம்பர் 19 ஆம் நாள் இலங்கைக்குச் சென்றார். இந்தியாவுக்கு வருகை தருமாறு, இலங்கை குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார்.
நவம்பர் 28-30 ஆகிய நாள்களில், இலங்கை குடியரசுத் தலைவர் இந்தியா வருகை தந்தார். குடியரசுத் தலைவரையும், தலைமை அமைச்சரையும் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து, அனைத்துக் கோணங்களிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
மக்கள் ஆட்சிக் கோட்பாட்டில் பற்றுக் கொண்டுள்ள, பன்முகத்தன்மை வாய்ந்த, மனித உரிமைகளை மதிக்கின்ற, ஒன்றுபட்ட இலங்கைக்குள், அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, அனைத்துத் தரப்பினருக்கும் இணக்கமான ஒரு தீர்வு காண வேண்டும் என்றும்;
அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும், இந்திய அரசு வலியுறுத்தியது.
அதற்கு, இலங்கை குடியரசுத் தலைவர், எனக்கு வாக்கு அளித்தவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கு வாக்கு அளிக்காதவர்கள், இனம், மத அடிப்படையிலான அனைத்துத் தரப்பினருக்கும் நான் குடியரசுத் தலைவர். இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்கும் கடமை ஆற்ற நான் உறுதி பூண்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment