கேள்வி எண்: 1992
கீழ்காணும் கேள்விகளுக்கு, பிரதமர் விளக்கம் தருவாரா?
(அ) தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?
(அ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
(இ) மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலைக் கெடுக்கும் அந்தத் திட்டத்திற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்களா?
(ஈ) அவ்வாறு இருப்பின், அப்பகுதி மக்களிடம் அரசு கருத்துக் கேட்டு இருக்கின்றதா? இயற்கைச் சூழல் பாதுகாப்பு குறித்து, நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கின்றதா?
(உ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
(ஊ) அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்தத் திட்டம் கைவிடப்படுமா?
மேற்கண்ட கேள்விகளுக்கு, பிரதமரின் சார்பில், அவரது துறைகளுள் ஒன்றான பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள விளக்கம்:
அ, ஆ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம் ஆம். இந்தியத் தளத்தில் இருந்து நியூட்ரினோ துகள்களை ஆய்வு செய்யும் திட்டத்தை, (India Based Neutrino-INO) தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது.
இ முதல் ஊ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:
அந்தத் திட்டத்திற்கு, அந்தப் பகுதியில் உள்ள சில பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே, தேனி, மதுரை மாவட்டங்களில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு, நியூட்ரினோ திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.
2018 ஆம் ஆண்டு, மே மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலும், இது தொடர்பாக தமிழகம், கேரளத்தில் உள்ள நகரங்களில், விழிப்பு உணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் அழைத்து வரப்பட்டு, நியூட்ரினோ வளாகத்தில் தற்போது இயங்கி வருகின்ற 85 டன் எடை கொண்ட, சிறிய அளவிலான, கேஸ்மிக் கதிர்களைக் கண்டு அறிகின்ற கருவியின் இயக்கம் குறித்து விளக்கம் தரப்பட்டது. ஆனால், அது அங்கே 2 கிலோமீட்டர் நீளத்திற்கு கிடைமட்டத்தில் குடையப்படுகின்ற குகைவழியின் ஒரு முனையில் இடம்பெறக்கூடிய ஒரு சிறிய கருவிதான்.
2010 ஜூன் மாதம், தேனி மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறையின் சார்பில், பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில், ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்ட 1200 பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள், நியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்றுவதற்கான, அனைத்து வகையான சட்டத்தேவைகளும், விதிகளும், நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டம் அமைகின்ற பகுதி, கஸ்தூரி ரெங்கன் தலைமையிலான உயர்நிலைக்குழு (High Level Working Group)வரையறுத்து, சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை வெளியிட்டு இருக்கின்ற F-1-4/2012 RE (Pt) நாள் 13.11.2013 வரையறையின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திற்குள் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment